உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 11/8 பக். 24-27
  • எட்ரூரியர்கள்—தொடரும் ஒரு புதிர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எட்ரூரியர்கள்—தொடரும் ஒரு புதிர்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • புதிர்மிக்க வழித்தோன்றல்கள்
  • அவர்கள் செழித்தோங்கி வாழ்ந்ததெப்படி
  • எட்ரூரியர்களின் இன்பமிக்க வாழ்க்கைமுறை
  • வினோதமான மத நம்பிக்கைகள்
  • கைப்பற்றப்படுதலும் அழிவும்
  • நிலைத்து நிற்கும் சொத்து
  • நரகத்தின் மூல தோற்றம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • பகுதி 5: ஏறக்குறைய பொ.ச.மு 1000–31 யோக்கியதை இல்லாத பழங்கதைக் கற்பனைக் கடவுட்கள்
    விழித்தெழு!—1990
  • பகுதி 3 காலவரிசை
    கடவுளின் கைப்பிடித்து தைரியமாக நடங்கள்
  • ஆறாவது உலக வல்லரசு—ரோம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
விழித்தெழு!—1997
g97 11/8 பக். 24-27

எட்ரூரியர்கள்—தொடரும் ஒரு புதிர்

பிரான்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்

“எட்ரூரியாவின் செல்வாக்கு அந்தளவுக்கு இருந்ததால், அதன் புகழ் உலகம் முழுவதிலும் பரவியது.”—லைவி, முதல் நூற்றாண்டு சரித்திராசிரியர்.

எட்ரூரியர் என்ற மக்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். இருப்பினும், நீங்கள் பேசும் மொழியில் லத்தீன் எழுத்துக்களைப் பயன்படுத்துகிறீர்களென்றால், நீங்கள் உங்களை அறியாமலேயே எட்ரூரியர்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறீர்கள். எட்ரூரியர்கள் இருந்திருக்கவில்லையென்றால், லத்தீன் எழுத்துக்கள், எ, பி, ஜி (a, b, g) என்ற எழுத்துக்களைக் கொண்டு (கிரேக்க எழுத்துக்களான ஆல்ஃபா, பீட்டா, காமா [alpha, beta, gamma] என்பதைப்போன்றோ அல்லது எபிரெய எழுத்துக்களான அலஃப், பேத், கிம்மல் [aleph, beth, gimel] என்பதைப்போன்றோ) தொடங்கியிருந்திருக்கும். இருப்பினும், எட்ரூரிய எழுத்துக்கள் எ, பி, சி (a, b, c) என்ற எழுத்துக்களுடன்தான் தொடங்கின என்பதை மொழிநூல் வல்லுநர்கள் அறிந்திருக்கிறபோதிலும், எட்ரூரியர்களின் மொழி புரிந்துகொள்வதற்கு இன்றும் கடினமானதாகவே இருக்கிறது. இது எட்ரூரியரைப் பற்றிய புரியா புதிரின் ஒரு அம்சம்தான்.

சரித்திர ஆசிரியர்கள் மிகவும் குறிப்பிடத்தக்க இந்த நாகரிகத்தின் ஆரம்பத்தைக் குறித்து நூற்றாண்டுகளாக ஊகித்திருக்கிறார்கள். பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில், புகழின் உச்சியில் இருந்த எட்ரூரியர்கள், 12 நாடுகளின் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவோடு தங்களுடைய வாணிகத்தொடர்பை பரந்தளவில் வைத்திருந்தார்கள். இருப்பினும், நான்கே நூற்றாண்டுகளுக்கு பின்பு மேலெழும்பிய ரோம ஆதிக்கத்தால் முற்றிலுமாக அமிழ்த்தப்பட்டார்கள். ஆனால் எட்ரூரியர்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும், அவர்களைப் பற்றிய புதிர் ஏன் தொடருகிறது?

புதிர்மிக்க வழித்தோன்றல்கள்

வெகு காலமாகவே சரித்திர ஆசிரியர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், பன்மொழி வல்லுநர்களும் எட்ரூரியர்களின் ஆரம்பத்தைக் குறித்து சிந்தித்திருக்கிறார்கள். ஹிரோடடஸ் கூறியபடி, அவர்கள் ஆசியா மைனரிலுள்ள லிடியா மாகாணத்திலிருந்து வந்து குடியேறினவர்களா அல்லது பொ.ச.மு. முதல் நூற்றாண்டில் ஹாலகர்னாஸஸைச் சேர்ந்த டையனிஷியஸ் உரிமைபாரட்டியபடி அவர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்களா? அவர்கள் வித்தியாசப்பட்ட வழிமூலத்திலிருந்து வந்திருக்கக்கூடுமோ? பதில் எதுவாயினும், அவர்களுக்கும், அவர்களுக்கு அருகில் வாழ்ந்த மற்ற மக்களுக்கும் இடையே இன மற்றும் கலாச்சார வித்தியாசங்கள் வெகு அதிகமாக இருந்ததால், இப்போது நாம் அவர்களுடைய தொடக்கத்தைக் குறித்து உறுதியாக எதையும் சொல்லமுடியாது.

இருந்தபோதிலும், ஏறக்குறைய பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து எட்ரூரியர்கள் மத்திய இத்தாலி முழுவதுமாக செழித்தோங்கியிருந்தார்கள் என்பது நமக்கு தெரியும். ரோமர்கள் இவர்களை டூஸ்கி (Tusci) அல்லது ஏட்ரூஸ்கி (Etrusci) என்று அழைத்தனர்; வடக்கே ஆர்னோ ஆற்றுக்கும் தெற்கே தைபர் ஆற்றுக்கும் இடையே இவர்கள் வாழ்ந்த பகுதி தஸ்கனி என்று அறியப்படலாயிற்று. ஒரு சமயத்தில் எட்ரூரிய நாகரிகம் பண்டைய இத்தாலிய மக்களின் சுமார் 50 வகையினர் மீது ஆதிக்கம் செலுத்தியது.

எட்ரூரியர்களின் மொழி, அடிப்படையில் கிரேக்க எழுத்துக்களின் ஆரம்ப வடிவத்தை பயன்படுத்துவதால் அதன் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பது எளிதானதாக தோன்றினாலும், உண்மையில் அது அறியப்பட்டிருக்கும் மற்ற எந்த மொழிகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமாக உள்ளது. எட்ரூரியர்களுடைய சொல் அகராதியின் பெரும் பகுதி மொழிபெயர்ப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. இருப்பினும், அவர்களுடைய கலாச்சாரத்தில் புத்தகங்கள், குறிப்பாக மத சம்பந்தமான புத்தகங்கள் முக்கியப் பங்கை வகித்ததால் அவர்களுடைய இலக்கியங்கள் ஏராளமாக இருந்தன. கல்லறைகள், மலர்க்குவளைகள், வெண்சலவைக்கல் சவப்பெட்டிகள் போன்றவற்றில் இன்றும் எட்ரூரியர்களின் எழுத்துப் பொறிப்புகளுக்கு ஆயிரக்கணக்கான உதாரணங்கள் காணப்பட்டாலும்கூட, இவை மிக குறைவான எழுத்துக்களையே கொண்டிருக்கின்றன; எனவே, எட்ரூரிய வார்த்தைகளின் மூலத்தையும் அர்த்தத்தையும் விளக்குவதற்கு இவை சிறிதளவு உதவியையே அளிக்கின்றன.

அவர்கள் செழித்தோங்கி வாழ்ந்ததெப்படி

எட்ரூரிய மக்கள், முதலில் அரசர்களாலும் பின்பு ஆட்சித் தலைவர்களாலும் ஆளப்பட்ட சுய ஆட்சி நகரங்களில் ஒழுங்கமைக்கப்பட்டனர். இத்தகைய நகரங்கள் எட்ரூரிய கூட்டமைப்பில் இணைக்கப்பட்டன; மத, பொருளாதார அரசியல் ரீதியில் இது அதிக கண்டிப்பற்ற சங்கமாக திகழ்ந்தது. சில எட்ரூரியர்களின் வீடுகள் தண்ணீர் வசதியுடனும், பொது சாக்கடைகளுடனும் தளம் பாவப்பட்ட தெருக்களில் அமைக்கப்பட்டன. வடிகால்கள் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டன. எட்ரூரிய அரசர்களால், கிராம மக்களின் ஒரு தொகுதியாக இருந்த ரோம்தானே ஒரு நேர்த்தியான, மதில் சூழ்ந்த, கிளைகிளையாக பிரிந்துசென்ற பொதுசாக்கடைகள் அமைக்கப்பட்ட பட்டணமாக மாற்றியமைக்கப்பட்டது; அவர்கள் அமைத்த க்லோஆக்கே மாக்ஸிமா சாக்கடை இன்றும்கூட ரோமில் காணப்படுகிறது.

எட்ரூரியர்கள், தங்களுடைய ஆதிக்கத்திலிருந்த பகுதிகளில் கிடைத்த ஏராளமான தாதுப்பொருட்களினாலும், அருகிலிருந்த எல்பா தீவின் இரும்பு சுரங்கங்கள் போன்றவற்றினாலும் செழிப்புடன் திகழ்ந்தனர். எட்ரூரியர்கள் உலோகங்களின் மேலிருந்த தங்களுடைய ஆசையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக இரும்பு, வெள்ளி, செம்பு முதலியவற்றை தயாரித்ததோடு, பிரிட்டிஷ் தீவுகளிலிருந்து தகரத்தை இறக்குமதியும்கூட செய்தனர். இத்தகைய செல்வங்களோடுகூட, அவர்கள் குடியேறிய பகுதிகள் செழிப்பான விவசாயப்பகுதிகளாகவும் மேய்ப்பு நிலங்களாகவும் திகழ்ந்தன; இவற்றில் தானியங்களையும், ஒலிவ மரங்களையும், திராட்சைத்தோட்டங்களையும் கட்டிடவேலைக்கான மரங்களையும் விளைவித்தார்கள். இத்தகைய இயற்கை வளங்களும் அதோடுகூட விரிந்துபரந்திருந்த உள்நாட்டு மற்றும் கடல்கடந்த வியாபாரங்களும் எட்ரூரியர்களுக்கு செழிப்பான பொருளாதாரத்தைக் கொடுத்தன.

எட்ரூரியர்கள் புகழ்பெற்ற கப்பலோட்டிகளாக இருந்தனர். பொ.ச.மு. 540-ல் எட்ரூரிய மற்றும் கார்தேஜீனிய கப்பல்களின் ஒன்றிணைந்த கப்பற்படை, கிரேக்கர்களை வீழ்த்துவதன்மூலம், எட்ரூரியர்களுடைய கடல்கடந்த வாணிகத்தை பாதுகாத்துக் கொண்டது. தாக்கு முகப்புடைய போர்க்கப்பலை கண்டுபிடித்தபிறகு, அவர்கள் போர் புரிய ஆயத்தமாக இருந்தார்கள். பிரபலமான புகாரோ (கருப்பு மண்பாண்டங்கள்) போன்ற தயாரிப்புகள் தொலைதூர இடங்களான ஸ்பெய்ன், எகிப்து ஆகியவற்றுக்கு கடல்மார்க்கமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. உள்ளூர் வியாபார நெடுஞ்சாலைகளின் மூலமாக, எட்ரூரியர்கள் கால் (பிரான்ஸ்) மற்றும் ஜெர்மனியாவிற்கு (ஜெர்மனி) திராட்சைமதுவை ஏற்றுமதி செய்தார்கள்; இதன் மூலமாக தங்களுடைய புகழையும் பரவச் செய்தார்கள்.

எட்ரூரியர்களின் இன்பமிக்க வாழ்க்கைமுறை

எட்ரூரியர்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி மூலங்களில் மிகவும் நீடித்து நிற்பவையும் அதிக தகவலளிப்பவையும் அவர்களுடைய கலைப்பொருட்களே. ஆடம்பரத்தை விரும்பிய மக்களாக, எட்ரூரியர்கள் காதணிகள், புரூச்சுகள், பதக்கங்கள், பிரேஸ்லெட்டுகள், நெக்லஸ்கள் போன்றவை உட்பட்ட தங்க ஆபரணங்களை கணக்குவழக்கில்லாமல் தயாரித்தார்கள். மெல்லிய பொன் கம்பிகளையும் சின்னஞ்சிறு பொன் மணிகளையும் கொண்டு ஆபரணங்களை நுணுக்கமான வடிவங்களில் கைத்திறனுடன் அவர்கள் செய்தமுறை இன்றும் புரியா புதிராகவே இருக்கிறது. பிடியில்லாத கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள், டின்னர் செட்டுகள் போன்றவற்றை வெள்ளியிலும் அநேக விலையுயர்ந்த உலோகங்களிலும் செய்ததோடில்லாமல், தந்தத்தைப் போன்ற மிகவும் மதிப்புவாய்ந்த பொருட்களையும் உபயோகித்து சிற்பங்கள் செதுக்கினார்கள்.

கண்டெடுக்கப்பட்டுள்ள அநேக சிற்பங்கள், கலைப்பொருட்கள், சுவர் சித்திரங்கள் போன்றவை இன்பமிக்க வாழ்க்கைமுறையில் எட்ரூரியர்களுக்கு இருந்த அளவுகடந்த நாட்டத்தை வெளிப்படுத்துகின்றன. இரதங்களை உபயோகித்து நடத்தும் போட்டிகள், குத்துச்சண்டைகள், அணி விளையாட்டுகள் மல்யுத்தப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை அவர்கள் அனுபவித்து மகிழ்ந்தார்கள். அரசன் ஒருவேளை தந்தத்தால் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொண்டு, சுற்றிலும் தான் சிறைப்பிடித்திருந்த அடிமைகளின் புடைசூழ இவற்றை கண்டு களிப்பான். அவனுடைய ராஜ பதவியை அடையாளங்காட்டிய ஊதா நிற நீண்ட அங்கி, பின்பு ரோமர்களால் பின்பற்றப்பட்டது. வீட்டில், உணவுவேளைகளில் அடிமைகள் உணவைப் பரிமாற, தன்னுடைய மனைவியின் அருகே அமர்ந்து ஒருபக்கமாக ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு, புல்லாங்குழல் இசையில் திளைத்தவாறும் நடனத்தை ரசித்தவாறும் சாப்பிடுவான்.

கிரேக்கர்களையோ ரோமர்களையோ போலல்லாமல் எட்ரூரிய சமுதாயத்திலிருந்த பெண்கள், சமுதாயத்தில் சம அந்தஸ்தை அனுபவித்தார்கள். அவர்களால் சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்க முடிந்தது; அவர்கள் பொது நிகழ்ச்சிகளையும் அனுபவித்துக்களித்தார்கள். எட்ரூரியப் பெண்களுக்கு தங்களுடைய சொந்த பெயரும், சட்டப்பூர்வமாக தங்களுக்கிருந்த உரிமைகளை கோருவதற்கு ஆதாரமான ஒரு குடும்பப் பெயரும் இருந்தன.

வினோதமான மத நம்பிக்கைகள்

“தங்களுடைய மதசம்பந்தமான சடங்குகளுக்காக மற்ற எவரைக்காட்டிலும் அதிகமாக தங்களை அர்ப்பணித்த மக்கள்” என்று முதல் நூற்றாண்டு சரித்திர ஆசிரியர் ஒருவர் எட்ரூரியர்களை அழைத்தார். எட்ரூரியர்கள் எண்ணிலடங்கா கடவுட்களை வணங்கினர்; திரித்துவ கடவுட்களின் மேலிருந்த வாஞ்சையால், அவர்களை கனப்படுத்துவதற்காக மூன்றாக பகுக்கப்பட்ட, அல்லது மூன்று மண்டபங்களைக் கொண்ட கோயில்களைக் கட்டினர். ஒவ்வொரு மண்டபத்திலும் ஒரு விக்கிரகம் இருந்தது. எட்ரூரிய நாகரிகம் மறைமுகமாக பாபிலோனிய கருத்துக்களைச் சுற்றி சுழன்றது. இறப்புக்கு பின்னுள்ள வாழ்க்கையும், கீழ் உலகமும் இவற்றில் முதன்மையாக இருந்த நம்பிக்கைகள். சடலங்களை புதைக்கவோ, எரிக்கவோ செய்தனர். அவை எரிக்கப்பட்டால், அதன் சாம்பல் வித்தியாசமான உருவங்களிலோ, வடிவங்களிலோ, தாழிகளில் போட்டுவைக்கப்பட்டன. அத்தாழி, கீழ் உலகத்தில் வாழ்வதற்கு தேவையானவையாக கருதப்பட்ட எல்லாவற்றுடனும், சடங்குகள், காணிக்கைகள், படையல் பானத்துடனும்கூட, கல்லறைகளில் வைக்கப்பட்டது. செல்வந்தர்களின் கல்லறைச் சுவர்களில் பல்வேறு காட்சிகளை வண்ண ஓவியங்களாக தீட்டி அலங்கரித்தனர்; அச்சித்திரங்கள் சிலசமயங்களில் பேய்கள் அல்லது பயமுறுத்தும் காட்டுவிலங்குகளின் கதம்ப ஓவியமாக இருந்தன. “எட்ரூரியர்கள் கொடூர உருவங்கொண்ட விலங்குகளை எப்போதுமே நேசித்தனர்” என்று ஒரு பத்திரிகை சொல்கிறது.

ஈரலைப் பார்த்து குறிசொல்லுதல் (hepatoscopy) அதாவது, ஒருவகை குறிபார்த்தலுக்காக ஈரலைப் படிக்கும் எட்ரூரியர்களின் பழக்கம் பாபிலோனில் துவங்கியது. (எசேக்கியேல் 21:21-ஐ ஒப்பிடுக.) அவர்களுடைய வாழ்க்கை, எடுத்த தீர்மானம் ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சங்களும் கடவுட்களைச் சுற்றியே அமைந்திருந்தன. மக்கள் சகுனம் பார்க்க பூமியையோ வானத்தையோ நோக்கினர். குறிபார்த்தல் அந்தளவு சாதாரணமாக இருந்ததால், இந்த இயல்பான பழக்கங்கள் டிஸ்கிப்ளினா எட்ரூஸ்கா, எட்ரூரியர்களின் சாஸ்திரம் என்று அறியப்படலாயிற்று.

கைப்பற்றப்படுதலும் அழிவும்

பொ.ச.மு. 509-ல் நூறு ஆண்டுகளாக ரோமை ஆண்டுவந்த எட்ரூரிய முடியாட்சி முடிவுக்கு வந்தது. இதுவே வரவிருந்த காரியங்களுக்கான முன்னறிகுறியாக இருந்தது. வடக்கில் எட்ரூரியர்களுக்கு கெல்ட்டியர்களின் அச்சுறுத்தல் இருந்தது; இவர்களுடைய அதிரடித்தாக்குதல் அப்பகுதியில் எட்ரூரியர்களின் அதிகாரப்பிடியைத் தளர்த்தியது. தெற்கே, இத்தாலிய மக்களுடன் தொடர்ந்த எல்லைத் தகராறுகள் அவர்களுடைய அதிகார அடித்தளத்தை அரித்தெடுத்து, உள்ளூர் சமுதாய பதட்டநிலையை வளர்த்தன.

பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குள்ளாக, எட்ரூரியர்களின் பிரதேசம் ரோமர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இவ்விதமாக, ரோம கலாச்சார செல்வாக்கின் வளர்ச்சி அல்லது ரோம மயமாக்கப்படுதலின் சகாப்தம் தொடங்கியது. கடைசியாக, பொ.ச.மு. 90-ல் இத்தாலிய மக்கள் அனைவருக்கும் ரோம குடியுரிமை வழங்கப்பட்டபோது, எட்ரூரிய தனித்துவங்களின் கடைசி தடயங்களும் மறைந்துபோயின. எட்ரூரியர்கள் லத்தீன் மொழி பேசும்படியாக உத்தரவிடப்பட்டு, ரோம உலகின் பாகமாக்கப்பட்டனர். ரோம வல்லுநர்களில் சொற்பமான ஆட்களே எட்ரூரிய இலக்கியங்களை மொழிபெயர்க்கவோ பாதுகாக்கவோ முயற்சி எடுத்ததாகத் தெரிகிறது. இவ்விதமாக, எட்ரூரிய நாகரிகம் சரித்திரத்தில் ஒரு புதிரை விட்டுச்சென்றுள்ளது. ஆனால் அது ஒரு சொத்தையும் விட்டுச்சென்றுள்ளது.

நிலைத்து நிற்கும் சொத்து

எட்ரூரியர்கள் விட்டுச்சென்ற சொத்து ரோமில் இன்றும்கூட காணப்படுகிறது. ரோமர்கள், ஜூப்பிட்டர், ஜூனோ மற்றும் மினர்வா என்ற தங்களுடைய திரித்துவ கடவுட்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காபிடலைன் கோயில், அவர்களுடைய மூன்றாக பகுக்கப்பட்ட கோயில்கள், அவர்களுடைய முதல் நகரச்சுவர்கள், அவர்களுடைய பொது அங்காடியின் பொதுசாக்கடை ஆகியவற்றிற்காக எட்ரூரியர்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறார்கள். ரோமர்களின் சின்னமான காபிடலைன் பெண் ஓநாயும்கூட (Lupa Capitolina), எட்ரூரியர்களின் மூலத்திலிருந்து வந்ததுதான். இதோடுகூட, ரோமர்கள் எட்ரூரியர்களின் அநேக பழக்கவழக்கங்களை பின்பற்றினார்கள்; அவற்றுள் சாகும்வரை சண்டையிடுவது, மிருகங்களுடன் போராடுவது போன்ற விளையாட்டுக்களும் அடங்கும். (ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 15:32, NW.) தன்னுடைய உவமைகள் ஒன்றில் பவுலின் மனதில் இருந்த வகையான வெற்றி பவனியும்கூட சந்தேகமில்லாமல் எட்ரூரிய மூலத்திலிருந்து வந்ததுதான்.—2 கொரிந்தியர் 2:14, பொ. மொ.

எட்ரூரியர்களின் சின்னங்களும்கூட வெகு விரிவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேய்ப்பனின் கையிலிருக்கும் வளைகோலுக்கு ஒத்த ஒரு கோலை எட்ரூரிய மதகுருக்கள் வைத்திருந்தனர்; இது கிறிஸ்தவ மண்டல பிஷப்புகள் பயன்படுத்தும் புனித செங்கோலின் மூலத்தை அடையாளம் காட்டுகிறது. எட்ரூரியர்களின் சலாகைக் கட்டுச்சின்னம் (fasces [கோடாரியைச் சுற்றி இரும்புக் கம்பிகளைக் கட்டுதல்]) ரோமர்களின் அதிகாரச் சின்னமாகவும், பிரஞ்சு புரட்சியில் 20-ம் நூற்றாண்டில் இத்தாலிய பாஸிஸ கட்சியின் சின்னமாகவும் பயன்படுத்தப்பட்டது.

கடந்தகாலத்தை அறிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த ஒன்றுபட்ட முயற்சியின் மத்தியிலும்கூட, எட்ரூரியர்களின் ஆரம்பமும், அவர்களுடைய வாழ்க்கையின் அநேக அம்சங்களும் இன்றும் ஒரு புரியா புதிராகவே இருக்கின்றன. அவர்களுடைய சரித்திரத்தின் சில பகுதிகள் இன்றும் இருந்துகொண்டு, கால ஓட்டத்தால் சிதைவுறாமலிருப்பதாய் தோன்றினாலும்கூட, புதிர் தீர்க்கப்படாததாகவே இருக்கிறது.

[படத்திற்கான நன்றி]

பொற்பலகைகள்: Museo Nazionale di Villa Giulia, Roma; கல்லால் செய்யப்பட்ட சவப்பெட்டியும் ஜாடியும்: Musée du Louvre, Paris

[பக்கம் 25-ன் பெட்டி]

1. பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்ரூரிய வெண்கலத்தாலான காபிடலைன் பெண் ஓநாயின் மாதிரிப்படிவம்: இதுவே ரோம நகரத்தின் சின்னம்

2. எட்ரூரிய மொழியிலும் (வலது) பினீசிய மொழியிலும் (இடது) பொறிக்கப்பட்ட இந்தப் பொற்பலகைகள் யூனிக்கு (அஸ்தரோத்) அர்ப்பணிக்கப்பட்டதாகக் காட்டுகிறது

3. ஒரு தம்பதியின் கல்லால் செய்யப்பட்ட எட்ரூரிய சவப்பெட்டி

4. பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எட்ரூரிய வளைவுவாயில். ரோமர்கள் வளைவுகளை கட்டுவதற்கு எட்ரூரியர்களிடமிருந்தே கற்றனர்

5. திராட்சரசத்தைக் கலப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டைய எட்ரூரிய ஜாடியும் ஆதாரத்தண்டும்

[பக்கம் 24-ன் படம்]

எட்ரூரியா

இத்தாலி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்