ஆர்எஸ்டி-யுடன் சமாளிப்பதற்கான என்னுடைய போராட்டம்
நான் என்னுடைய ஆரம்ப 40–களில், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அலுவலக வேலையில் முழுநேர வாலண்டியராக வேலைசெய்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; இதனால் வலி என்றால் எப்படிப்பட்டது என்று நான் அறிந்திருப்பதாக நினைத்தேன். எனவே, ஜனவரி 1994-ல் இடது மணிக்கட்டு மூட்டில் இருந்த நரம்பணுமுண்டு நீர்ப்பைக் கட்டிக்காக (ganglion cyst) அறுவைசிகிச்சை செய்யப்படவேண்டும் என்றானபோது, கொஞ்சம் வேதனையையும் அசௌகரியத்தையும்தான் நான் எதிர்பார்த்தேன்—ஆனால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாத எதையுமல்ல.
வெற்றிகரமாக முடிந்த என்னுடைய அறுவை சிகிச்சைக்குப்பிறகு, ஒருசில வாரங்களுக்குள்ளாகவே, என்னுடைய இடதுகையில் கடுமையான வலியை நான் உணரத் தொடங்கினேன். அது வீங்கியும் நிறமாற்றம் அடைந்துக் கொண்டுமிருந்தது. என்னுடைய நகங்கள் பெரிதாக, எளிதில் உடைவதாய் இருந்தன. ஆனால் வலியின் காரணமாக அவற்றை என்னால் வெட்ட முடியவில்லை. தூக்கமும் சுத்தமாகப் போய்விட்டது. முதலில், டாக்டர்களும் சிகிச்சை வல்லுநர்களும் (therapist) குழப்பமடைந்தனர், ஆனால் அறிகுறிகள் மோசமானபோது, எனக்கு நாள்பட்ட மண்டல வலி நோய்க்குறித்தொகுப்பு (Chronic Regional Pain Syndrome) என்பதாகவும் அறியப்படும் ஆர்எஸ்டி (Reflex Sympathetic Dystrophy) இருப்பதாக அறுவை மருத்துவர் புரிந்துகொண்டார். அதற்குள்ளாக, அறுவைசிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
ஆர்எஸ்டி எப்படிப்பட்டது
நான் ஆர்எஸ்டி-யைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் அது எப்படிப்பட்டது என்பதை என்னுடைய உடலிலிருந்து புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்—வலி. உள்ளதிலேயே மிகவும் மோசமான வலி. என்னுடைய கை முழுவதுமாக தீராத வலி. என்னுடைய கை எப்போதுமிருக்கும் அளவைவிட மூன்று மடங்கு ஊதிவிட்டது போன்ற வலி. எப்பவும் எரிந்துகொண்டிருப்பதைப் போன்று உணரச்செய்த வலி. எரிந்துகொண்டிருக்கும் ஒரு வீட்டில் இருப்பதைப் போன்றும் அதிலிருந்து தப்பிக்க வழியில்லாதது போன்றும் உணர்ந்தேன். நான் மிகைப்படுத்திச் சொல்லிக்கொண்டில்லை! அது எனக்கு, நினைத்துப்பார்க்க முடியாத மோசமான, எப்பவும் தீராத வலியாக இருந்தது. வித்தியாசப்பட்ட அளவிலுள்ள பலதரப்பட்ட வலிகளை நான் அனுபவித்தேன். சிலசமயங்களில், அந்த வலி தேனீக்களின் கூட்டம் கொட்டுவதைப்போல இருந்தது. வேறு சமயங்களில், ஒரு கொறடு என்னை நசுக்குவதைப்போலவும், ரேசர் பிளேடுகளால் கிழிப்பதைப்போலவும் இருந்தது. என்னுடைய நீளமான தலைமுடி என் மேல் விழுவதைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை—அப்படி அது விழுந்தபோது முட்கள் எனக்குள் குத்தி ஊடுருவுவதைப்போல இருந்தது. இந்த கடும்வலியிலிருந்து கொஞ்சம் நிம்மதியாவது கிடைக்காதா என்று நான் ஏங்கினேன்.
ஒரு சமயத்தில், விடாப்பிடியான, கடுமையான வலியால் நான் அதிகமாக அவதிப்பட்டபோது, குளியலறையில் கையை வெட்டி எரிந்துவிடலாமா என்றும்கூட எனக்கு தோன்றியது. இந்த இம்சையை ஒழித்துக்கட்ட எத்தனை தடவை வெட்டவேண்டியிருக்குமோ என்றும் நான் யோசித்தேன். (வெட்டுவது பிரச்சினையைத் தீர்த்துவிடாது என்று டாக்டர்கள் பின்பு என்னிடம் கூறினர்.) சிக்கிக்கொண்ட காலைக் கடிப்பதன்மூலம் விடுதலையைத் தேடும் பொறியிலகப்பட்ட நரியைப் போல உணர்ந்தேன்.
கடைசியில் கொஞ்சம் விடுதலை!
கடைசியில், இறுதித் தீர்வாக, வலிக்கென்றே இருந்த மருத்துவ மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டேன். அங்கே நான் நியூ யார்க்கிலுள்ள புரூக்லின் ஹைட்ஸில் பிராக்டிஸ் செய்து வரும் வலிக்கான மருத்துவ நிபுணரும், மயக்கமருந்து மருத்துவருமான டாக்டர் மேத்யூ லெஃப்கோவிட்ஸை சந்தித்தேன். அவர் மிகுந்த இரக்கமும் புரிந்துகொள்ளும் தன்மையும் உடையவராக இருந்தார். என்னுடைய நோயையும் சிகிச்சைமுறையையும் குறித்து நான் புரிந்துகொள்ளத் துவங்கியபோது, வலிக்கென்றே இருந்த அம்மருத்துவமனை, விசேஷமாக எனக்கு ஒரு புகலிடமாக ஆனது.
டாக்டர் லெஃப்கோவிட்ஸ் வலியை மரத்துப்போகச்செய்யும் சிகிச்சையுடன் ஆரம்பித்தார்—என்னுடைய கழுத்திலுள்ள நரம்பிற்குள் ஒழுங்கானரீதியில் ஊசி போட்டார்; அது வலியுண்டாக்கும் நரம்பு அலையைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்துகிறது. அவர் விளக்கியபடி, பரிவுநரம்பு மண்டலம் வலியை உண்டாக்குகிறது. இதுவே காயம் அல்லது அறுவைசிகிச்சைக்கு மூளையின் இயல்பான பாதுகாப்பு எதிர்ச்செயலாக இருக்கிறது. கோட்பாட்டின்படி, இந்த மண்டலம் ஒரு நுழைவாயிலாக செயல்பட வேண்டும். நரம்பு உணர்வுகள் காயம் ஆறிக்கொண்டிருக்கையில் மட்டுமே இவ்வழியாக செல்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், மூளை இனிமேலும் நரம்பு உணர்வலைகளை அனுப்பாதபோது, அந்த நுழைவாயில் மூடப்பட்டு வலி மறைந்துபோகிறது. ஆர்எஸ்டி-யில் அந்த நுழைவாயில் மூடுவதில்லை. பரிவுநரம்பு மண்டலம் ஒருபோதும் அமைதியாகிறதில்லை. அந்தப் பகுதியில் காயம் இன்னும் இருப்பதைப்போல அது தொடர்ந்து செயல்படுகிறது. எந்த சமயத்தில் வலி கடுமையாக ஆனாலும் உடனே மருத்துவமனைக்கு வரும்படி டாக்டர் என்னிடம் சொன்னார். இவ்விதமாக, சில காலங்களாகவே, வலி தடுக்கும் ஊசிகளுக்காக நான் தவறாமல் சென்றுவந்திருக்கிறேன்.
இந்த ஊசிகள், பாதிக்கப்பட்ட கையின் செயல்பாட்டுக்கும் ஆர்எஸ்டி-க்கும் அதிக உதவியாக உள்ள உடற்பயிற்சி சிகிச்சையை தாங்கிக் கொள்வதற்கு எனக்கு உதவியது; காலம் செல்லச்செல்ல, புயம், கை இரண்டையுமே பயன்படுத்தி எளிமையான வேலைகளை செய்யத் தொடங்கினேன். அது நம்பிக்கையான ஒரு தொடக்கமாயிருந்தது.
விளைவுகள் எவையாக இருக்கலாம்?
இந்த தொடர்ச்சியான வலி பல விதங்களில் என்னைப் பாதித்தது. நான் ஆட்களிடமிருந்து விலகி, எப்போதும் தனியாக இருக்கவே விரும்பினேன்; ஆனால் நான் எங்கெல்லாம் சென்றேனோ அங்கெல்லாம் இந்த வலி என்கூடவே வந்தது. எனவே, அது எனக்கு நிவாரணமாக இருக்கவில்லை. என்னுடைய கை, என் வாழ்க்கையையும் திருமணத்தையும் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த ஒரு தனிப்பட்ட வஸ்துவாக எனக்குத் தோன்றியது. என்னுடைய கணவர் பாசத்தோடு தொடுவதற்கும்கூட துணியவில்லை. அவர் உண்மையில் பொறுமையாகவும் இரக்கத்துடனும் இருந்தார். எதையும் செய்வதற்கு தகுதியற்ற, ஒற்றைக்கை மனைவியாக நான் ஆகிவிட்டேன். என்னுடைய இடதுகையால் ஒரு துண்டுப்பேப்பரை எடுக்க முயலுவதும்கூட கடும்வேதனையாக இருந்தது.
இதுவரையிலுமாக, ஆர்எஸ்டி-க்கு எந்தவிதமான நிவாரணமும் இல்லை; இருந்தாலும் சிலசமயங்களில் அது தானாகவே திடீரென தணிகிறது. கடைசி கட்டங்களில், ஆஸ்டியோபோரோஸிஸ் நிலைபெற ஆரம்பித்து, அந்த உறுப்பு செயலிழக்கிறது. அதனால் தான் கடுமையான உடற்பயிற்சி மருத்துவம் அதிக உதவியாக இருக்கிறது. சந்தோஷகரமாக, நான் அந்தக் கட்டத்தில் இல்லை.
நான் எப்படி சமாளிக்கிறேன்
இன்னும் எனக்கு வலி இருக்கிறபோதிலும், முன்பிருந்த மோசமான நிலையைப்போல அவ்வளவு கடுமையானதாக இல்லை. இருந்தபோதிலும், ஊசிகள் போடாமல், என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. தாங்கிக்கொள்ள எது எனக்கு உதவியுள்ளது? சில டாக்டர்கள், சிகிச்சை வல்லுநர்கள் மற்றும் நண்பர்களின் நம்பிக்கையான மனநிலையே. சமாளிக்கும் திறமைகளையும்கூட நான் கற்றிருக்கிறேன். என்னுடைய தன்மதிப்புக்காக, என்னுடைய இயல்பற்ற நிலையின் மத்தியிலும், என்னுடைய வாழ்க்கையை கொஞ்சம் இயல்பாக வைத்துக்கொள்வது எனக்கு அவசியமாயிருந்தது. என்னைப் பாரப்படுத்தாமல், ஆதரவாயிருந்த உடன்வேலைசெய்பவர்களின் மத்தியில் இருந்தது, நான் இன்னும் பயனுள்ள வேலையைச் செய்யமுடியும் என்று எனக்கு உறுதியளித்தது. காதுக்கு இனிமையான இசையும், புத்துணர்ச்சி அளிக்கும் மூச்சுப் பயிற்சிகளும் எனக்கு உதவி செய்தன, இன்று வரையாகவும் செய்கின்றன என்று நான் கண்டுகொண்டேன். சௌகரியமான நிலையில் படுத்துக்கொண்டு வானத்தையும் கடந்துசெல்லும் மேகங்களையும் பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த காரியங்களில் ஒன்றாக இருந்தது. அப்போது நான் தியானிக்கவும் மகிழ்வளிக்கிற இடங்களுக்கு கற்பனையில் பயணம் செய்யவும் தொடங்குவேன். சிரிப்பு எப்போதுமே மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது, அதைப்போலவே நம்பிக்கையான மனநிலையும்—குடும்பம் மற்றும் நண்பர்களின் அன்பான ஆதரவு உங்களுக்கு இருக்கிறது என்று அறியவருவது அதைவிட இன்னும் அதிகமாக உதவுகிறது. ஆர்எஸ்டி-யால் உங்களை வீழ்த்திவிட முடியாது என்பதை புரிந்துகொள்வது அவசியமானது. இந்த போராட்டத்தில் நீங்கள் வெற்றிபெறுவதற்கு சிறந்த மருத்துவ வல்லுநர்களால் உதவிசெய்ய முடியும்.
இந்த அனுபவம் வலியால் துன்பமனுபவித்துக் கொண்டிருக்கும் எவரிடமும் அதிக ஒற்றுணர்வுடன் நடந்துகொள்ளவும், மற்றவர்களிடம் உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கும்படியும் என்னைத் தூண்டியுள்ளது. என்னுடைய மதசம்பந்தமான நம்பிக்கைகள் மிகப் பெரிய உதவியாக இருந்திருக்கின்றன. இது ஏன் எனக்கு ஏற்பட்டது என்று எனக்கு தெரியும். நான் விசேஷமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பலியாள் அல்ல. கடவுள் குற்றம்சாட்டப்படுவதற்கில்லை. வலி எவருடைய வாழ்க்கையில் வேண்டுமானாலும் நேரும் இடையூறுகளில் ஒன்றாக இருக்கிறது. ஊக்கமாக ஜெபிப்பது எனக்கு பேருதவியாக இருந்திருக்கிறது. வலி ஒருபோதும் இல்லாமல் போகும் ஒரு காலம் வருமென்று கடவுள் மீது விசுவாசமும் இருக்கிறது. நான் தொடர்புகொள்ளும் மற்றவர்களுடன் இந்தக் கருத்தைப் பகிர்ந்துகொள்வதன்மூலம் நான் உதவிசெய்யப்பட்டிருக்கிறேன். ஆர்எஸ்டி எனக்கு இன்னும் ஒரு சவாலாக இருந்துவரும்போதிலும்கூட, நான் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 21:1-4)—கேரன் ஆர்ஃப்பால் என்பவரால் சொல்லப்பட்டது.
[பக்கம் 22, 23-ன் பெட்டி]
ஒரு டாக்டரின் கருத்து
இந்த சிகிச்சையைப் பற்றிய விளக்கவுரைக்காக டாக்டர் லெஃப்கோவிட்ஸை விழித்தெழு! பேட்டி கண்டது. அவர் விளக்கினார்: “நாங்கள் ஆர்எஸ்டி-க்கு மட்டுமல்ல, எல்லாவித வலிக்கும் சிகிச்சையளிக்கிறோம். மிகவும் பொதுவான வலிமிகுந்த நோய் கீழ் முதுகு (lower-back) வலி. அது அடிக்கடி அதிக வலிமிகுந்த இடுப்புப்பிடிப்புக்கு வழிநடத்துகிறது. வலி தெளிவாகவே உடல்சம்பந்தமான காரணத்தைக் கொண்டிருந்தாலும், அடிக்கடி மனசம்பந்தமான பாதிப்புகளும்கூட பங்குவகிக்கிறது.”
விழித்தெழு!: ஆர்எஸ்டி எல்லா வயதினரையும், இருபாலாரையும் பாகுபாடில்லாமல் பாதிக்குமா?
டாக்டர் லெஃப்கோவிட்ஸ்: ஆம், இந்த நோய்க்கு எந்தவித பாகுபாடும் இல்லை. இருந்தபோதிலும், யார் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று நம்மால் முன்னறிய முடியாது. எனக்குத் தெரிந்தவரை ஆண்களைவிட, பெண்கள் பொதுவாக வலியை நன்றாகத் தாங்கிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு வலியை தாங்கிக்கொள்ளும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது.
விழித்தெழு!: வலிக்கு என்ன சிகிச்சைகளை நீங்கள் சிபாரிசு செய்கிறீர்கள்?
டாக்டர் லெஃப்கோவிட்ஸ்: வலி தோன்றுமிடம் மற்றும் அதன் கடுமையைச் சார்ந்து வித்தியாசப்பட்ட முறைகளை நாம் பயன்படுத்தலாம். வலி என்றாலே அவஸ்தைதான், அந்த துன்பத்தை நாம் இலேசாக்க வேண்டியது அவசியமாயுள்ளது. சிலருடைய விஷயங்களில், ஆஸ்பிரின், மற்றும் அதன் வகைகளைப் போன்ற ஸ்டிராய்டுகளில்லாத மாத்திரைகளைப் பயன்படுத்துகிறோம். கேரனைப் போன்ற மற்றவர்களுடைய விஷயங்களில், குறிப்பிட்ட பகுதியில் நரம்பு அடைப்பு மருந்தைப் பயன்படுத்துகிறோம். மிதமிஞ்சிய சமயங்களில் அபின் கலந்த மயக்கமருந்தைப் பயன்படுத்துவோம். அதற்கு அடிமையாகிவிடும் சாத்தியம் இதிலுள்ள குறைபாடாக உள்ளது. அதைக் குறித்து நாம் கவனமாயிருக்க வேண்டும்.
விழித்தெழு!: ஆர்எஸ்டி அதனுடைய வளர்ச்சியின் எல்லா கட்டங்களையும் கடந்துசெல்லவேண்டும் என்பது தவிர்க்க முடியாததா?
டாக்டர் லெஃப்கோவிட்ஸ்: இல்லை, அப்படியில்லை. அதனுடைய ஆரம்பக்கட்டத்திலேயே அதை கண்டுபிடித்துவிட்டால், அதன் செயல்முறையை நாம் தடுத்துவிடலாம். உதாரணத்துக்கு கேரனை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் அதனுடைய இடைக்கட்டத்தில் இருப்பதால், உறுப்பு செயலிழந்து போகும் அந்தக் கடைசிகட்டம் வரையாக அவள் செல்லவேண்டியதில்லை.
விழித்தெழு!: இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு நோயாளிகளுக்கு நீங்கள் என்ன ஆலோசனையைக் கொடுக்கிறீர்கள்?
டாக்டர் லெஃப்கோவிட்ஸ்: கேரன் என்ன செய்தார்களோ அதையேதான். மகிழ்வளிக்கிற எண்ணங்களிலும் கற்பனை உருவங்களிலும் தன்னுடைய மனதை திசைத்திருப்புவதன்மூலம் வலியை மனசம்பந்தமான நிலையில் கையாண்டிருக்கிறார். அவர் உடற்பயிற்சி மருத்துவத்தையும் பயன்படுத்துகிறார். அவர்களுடைய விசுவாசம் மிகப்பெரிய உதவியாக இருந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த நிலையை நம்பிக்கையான விதத்தில் காண்பதற்கு அது அவர்களுக்கு உதவியிருக்கிறது. ஆம், உண்மையில் விசுவாசம் முக்கியமான பங்கை வகிக்கிறது.
விழித்தெழு!: பொறுமையோடு எங்களுடன் இவ்வளவு நேரம் செலவழித்ததற்காக நன்றி.
[பக்கம் 23-ன் படங்கள்]
டாக்டர் லெஃப்கோவிட்ஸுடன் அவருடைய மருத்துவமனையில்