ஆர்எஸ்டி—குழப்பமூட்டும் வலிமிகுந்த ஒரு நோய்
கனடாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
அனிச்சை பரிவுநரம்புக் கோளாறு (REFLEX SYMPATHETIC DYSTROPHY [RSD]) “மருத்துவத்திலுள்ள மிகவும் குழப்பமூட்டும் நோய்க்குறித்தொகுப்பில் ஒன்றாகவும், அதிக வலிமிகுந்த ஒன்றாகவும், ஆற்றலை ஒடுக்கக்கூடியதாகவும் உள்ளது” என்று வின்னிபெக் ப்ரீ ப்ரெஸ் என்ற செய்தித்தாளில் அலசன் பிரே என்பவர் எழுதினார். ஆர்எஸ்டி-யை “நன்கு புரிந்துகொள்ளாதிருப்பதுதானே மருத்துவ ரீதியில் அதை அடிக்கடி கண்டறிய முடியாமல் போகிறதற்கான காரணம்” என்பதாக பிரிட்டிஷ் மருத்துவ இதழில் (ஆங்கிலம்) அன்னா அலெக்ஸாண்டர் என்ற நோயாளி குறிப்பிட்டார். ஆர்எஸ்டி பெரும்பாலும் பிள்ளைகளிடத்தில் சரியாக கண்டுபிடிக்கப்பட முடியாததாக உள்ளது என்று அதே இதழ் குறிப்பிட்டது. இந்த வலி மனதோடு தொடர்புடையதாக, உணர்ச்சி பாதிப்பினால் வருகிறது என்பதாகக்கூட டாக்டர்கள் அநேக ஆண்டுகளாக நினைத்தனர்.
இந்தப் புதிரான நோயால் துன்பப்படுகிறவர்கள் கடுமையான வலியை கொண்டிருக்கின்றனர். மேலும் சிலருடைய விஷயத்தில் இந்த வலி வருவதற்கு காரணமான ஏதோவொன்றை செய்துவிட்டதாக அரிதாகவே அவர்களுக்கு நினைவிருக்கிறது. “அதிகமாக நரம்புகள் முடிவடையும் கை, கால் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட காயமே இந்த நோய்க்கான காரணமாக உள்ளது. இந்தக் காயம் ஊசி குத்துவதைப்போல சிறியதாகவோ அல்லது அறுவை சிகிச்சையைப்போல சிக்கலானதாகவோ இருக்கலாம். காயத்தையும்விட, அதிக கடுமையான, அதிக காலம் நீடிக்கும் வலியே இந்த நோயின் முதல் அறிகுறி. ஒரு குறிப்பிட்ட பகுதியில் எரிச்சலுடன்கூடிய கடுமையான வலி, சீதோஷணத்திற்கும் வெளிச்சத்திற்கும் அளவுக்குமீறிய கூருணர்வு, முடியிலும் நகங்களிலும் மாற்றம் ஏற்படுதல் மற்றும் தோலின் நிறமாற்றம் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கின்றன” என்று சேரா ஆர்னல்ட் என்பவர் வாழ்வில் கவனம் செலுத்துதல் என்ற ஆங்கில பத்திரிகையில் எழுதுகிறார்.
இந்த நோய் அநேக கட்டங்களைக் கடந்து செல்கிறது. ஆரம்பத்தில், பாதிக்கப்பட்ட பகுதி வீங்கியும் சிவந்தும் இருக்கிறது; மேலும் முன்பு முடியில்லாத இடங்களிலும்கூட முடி வளருகிறது. இது ஒன்றிலிருந்து மூன்று மாதங்கள் வரை நீடிக்கிறது. அடுத்து, அந்தப் பகுதி நீலமாக மாறி குளிர்ந்தும் விடுகிறது; அதோடு வலி அதிகரித்து மூட்டுகளும் பிணையங்களும் விறைப்பாகிவிடுகின்றன. ஆஸ்டியோபோரோஸிஸ் நிலைபெற ஆரம்பிக்கலாம். இறுதியாக, பாதிக்கப்பட்ட தசைகள் மெலிந்து, தசைநாண்கள் சுருங்கி, சேதமடைந்த அங்கம் அழிவுறத் தொடங்குகிறது.
சரிசெய்யப்பட முடியாத சேதங்கள் தவிர்க்கப்படலாம் என்பது வின்னிபெக்கிலுள்ள உடல்நல அறிவியல் மையத்தின் வலிக்கான மருத்துவமனையின் டைரக்டர் டாக்டர் ஹூவர்ட் இன்ட்ரேடர் என்பவரின் குறிப்பாக உள்ளது. பரிவுநரம்புகள் (sympathetic nerves) வலி மின்துடிப்புகளை அனுப்புவதிலிருந்து தடைசெய்யப்பட வேண்டும். a “சிகிச்சைகள், மின்தூண்டல், இருதய அடிரிலிலை உறிஞ்சுவதைத் தடைசெய்யும் மருந்துகள் (Beta-blockers), கடினவுறையின்மீது வைக்கப்படும் ஊக்கிகள் ஆகியவற்றிலிருந்து (பாதிக்கப்பட்ட இடத்தை தூண்டுவிப்பதற்காக தண்டுவடத்தின்மீது ஒரு மின்வாய் பொருத்தப்படும்) பரிவுநரம்புகளை ஊசிகளின் மூலமாக தடைசெய்வது வரையாக வேறுபடுகிறது” என்று வின்னிபெக் செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. வலியைக் குறைப்பதற்கும் அசைவை முன்னேற்றுவிப்பதற்கும் உடற்பயிற்சி மருத்துவ முறையோடுகூட அக்குபஞ்சர் சிகிச்சையும் பயன்படுத்தப்படுகிறது. “மின் நரம்பு தூண்டுகை, பரிவு நரம்பை இரசாயனத்தால் தடுத்தல், உளவியல் மருத்துவம், மற்றும் கடுமையான உடற்பயிற்சி மருத்துவம் போன்ற திறம்பட்ட சிகிச்சைமுறை உள்ளடக்குகிறது” என்று பிரிட்டிஷ் மருத்துவ இதழ் கூறுகிறது.
நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது தெளிவாகவே அனுகூலமானதாகும். இருப்பினும், ஆறு மாதத்திற்கு குறைவாகவோ, அல்லது 6-லிருந்து 12 மாதங்கள் வரையாகவோ, அல்லது 12 மாதங்களுக்கும் மேலாகவோ இந்த அறிகுறிகளைக் கொண்டிருந்த நோயாளிகளை சோதித்துப் பார்த்தபோது, விளைவுகள் “பெரும்பாலும் ஒன்றுபோலவே இருந்தன.” “சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு நோய்க்கான அறிகுறி ஒரு வருடத்திற்கும் அதிகமாக இருப்பது சாதகமற்ற முன் அறிகுறி என்ற தற்போதைய கருத்துடன் இந்தக் கண்டுபிடிப்பு முரண்படுகிறது” என்பதாக த அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற பத்திரிகையில் மருத்துவர்கள் எழுதியிருக்கின்றனர்.
மருத்துவ அறிவு அதிகமாகும்போது, ஆர்எஸ்டி-ன் புதிர் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்படும், இன்னும் அதிக திறம்பட்ட சிகிச்சைக்கும் வழிவகுக்கும் என்பதாக நம்பப்படுகிறது.
[அடிக்குறிப்பு]
a வலி என்ற பொருளின் விளக்கமான கலந்தாராய்வைப் பெற, “வலி இல்லாத வாழ்க்கை சாத்தியமா?” என்ற தலைப்பிலான தொடர் கட்டுரைகளை ஜூன் 22, 1994, விழித்தெழு!-வில் காண்க.