எமது வாசகரிடமிருந்து
டிஸ்லெக்ஸியா “டிஸ்லெக்ஸியாவின் மனமுறிவை மேற்கொள்ளுதல்” (ஆகஸ்ட் 8, 1996) என்ற கட்டுரைக்காக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க இதை எழுதுகிறேன். “பிள்ளைகளில் டிஸ்லெக்ஸியாவை எப்படி கண்டுகொள்வது” என்ற தலைப்பில் அந்தப் பெட்டியில் போடப்பட்டிருந்த விஷயத்தை வாசித்த பிறகு, நானும் என் கணவரும் சேர்ந்து எங்களுடைய பத்து வயது பையனைப் பரிசோதித்துப் பார்த்தோம். அவனுக்கு டிஸ்லெக்ஸியா இருந்ததைக் கண்டுபிடித்தோம்; வீட்டிலும் பள்ளியிலும் அவனுக்குத் தேவைப்படுகிற உதவியைச் செய்வதற்கு இப்போது நாங்கள் முயன்றுவருகிறோம். அவனுக்கு நிறைய அறிவு இருக்கிறது என்றும், அவனோ அதைப் பயன்படுத்தத் தவறுகிறான் என்றும் அடிக்கடி அவனுடைய ஆசிரியர்கள் எங்களிடம் சொல்லியிருக்கின்றனர். அப்படியென்றால், இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருப்பதற்காக நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருப்போம் என்பதை நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்.
ஜே. எஸ்., ஸ்காட்லாந்து
டிஸ்லெக்ஸியாவால் சிரமப்படும் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாக இருக்கும் நான், இந்தக் கட்டுரையை வாசித்து மகிழ்ந்தேன். இந்தக் குறைபாடு எவ்வளவு உண்மையானது என்பதைப் பற்றியும் இந்தக் குறைபாடு உடையவர்களுக்கு இதனால் எவ்வளவு சிரமம் இருக்கும் என்பதைப் பற்றியும் பிறருக்கு மிக நன்றாய்க் கல்வி புகட்டினது இந்தக் கட்டுரை. சாலைக்குறியீடுகளை வாசிக்க முடியாமல் இருப்பதை, அல்லது உணவுப் பட்டியல் ஒன்றில் உள்ள அயிட்டத்தை வாசிக்கத் தெரியாமல் அதைத் தருவிப்பதைப் பற்றி உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா? இந்தக் குறைபாட்டால் அவதிப்படுபவர்கள் இந்தக் கட்டுரையில் வெளிவந்துள்ள தகவலை நன்றாக பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன்.
எம். கே., ஐக்கிய மாகாணங்கள்
அருகிவரும் உயிரினங்கள் “அருகிவரும் உயிரினங்கள்—கவலை கொள்ளவேண்டியது ஏன்?” (ஆகஸ்ட் 8, 1996) என்ற தொடர்கட்டுரைக்காக என் மனமார்ந்த நன்றி. உண்மையில், ஒரு பொக்கிஷத்தை இழக்கும் அபாயத்தில் நாம் இருந்துவருகிறோம். விலங்குகள், மறைந்துபோகும் பயமுறுத்தலின்றி வாழமுடிந்த இடமாகிய, கடவுளால் வாக்குக்கொடுக்கப்பட்டுள்ள புதிய உலகில் வாழும் என் ஆவலை குன்றாமல் பார்த்துக்கொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவினது.
டி. ஐ., அல்பேனியா
அகதிகள் அவலம் நான் ஒரு புருண்டி அகதி; “அகதிகள் அவலம்—எப்போதாவது முடிவடையுமா?” (ஆகஸ்ட் 22, 1996) என்ற தொடர்கட்டுரைக்காக என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் யெகோவாவின் நோக்குநிலை என்ன என்பதைப் பற்றியும், பண்டைய காலங்களில் தம்முடைய ஜனங்கள் அகதிகளை அன்பார்ந்த கனிவுடன் எவ்வாறு நடத்த வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார் என்பதைப் பற்றியும் கற்றுக்கொள்கையில் எனக்கு மிகவும் உற்சாகமாய் இருந்தது. இந்தக் கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி; அவை நிஜமாகவே என்னைத் தேற்றின.
டி. எம்., கென்யா
பஸ் விபத்தின் அவலம் “யெகோவாவின் பலத்தால் அவலத்தை மேற்கொள்ளுதல்” (ஆகஸ்ட் 22, 1996) என்ற கட்டுரையை வாசிக்கையில், அழுவதைத் தவிர வேறொன்றும் என்னால் செய்யமுடியவில்லை; ஏனெனில் அது என்னைத் தனிப்பட்ட விதத்தில் பாதித்தது. என்னுடைய மிக நெருங்கிய தோழியோடு செல்கையில் நானும் ஒரு விபத்துக்குள்ளானேன்; பலத்த காயம் அடைந்ததால், சில மணிநேரங்களுக்குப் பிறகு அவள் இறந்துவிட்டாள். அவள் இறந்துவிட்டாளே, நான் மட்டும் பிழைத்துக்கொண்டேனே என நினைத்து நினைத்து, கவலையும் குற்றவுணர்வும் அதிகரிக்கவே, அந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றைச் சமாளிக்க இன்னும் ஐந்தாண்டு காலம் எடுத்தது. என் அன்புத் தோழியை யெகோவா நினைவுகூருவார் என்று அவரில் நம்பிக்கை வைக்கிறேன். ஸ்பெய்னில் நடந்த இந்த விபத்தில் தங்களுக்குப் பிரியமானவர்களை இழந்துவிட்டவர்களுக்காகவும் நான் இரங்கல் தெரிவிக்கிறேன்.
ஜே. டி., ஐக்கிய மாகாணங்கள்
திக்குவாய் “திக்குவாயருடைய நாவும் பேசும்” (ஆகஸ்ட் 22, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. பீட்டர் குன்ட்ஸின் அனுபவம் என்னை வெகுவாய் பலப்படுத்தினது. நானும் ஒரு திக்குவாயன். பைபிள் பேச்சு ஒன்றைக் கொடுப்பதற்கு முன்பு, சொல்லவந்த விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல எனக்கு உதவும்படி நான் எப்பொழுதுமே யெகோவாவிடம் ஜெபம் செய்கிறேன்.
எம். எம்., இத்தாலி
எனக்கு 20 வயதானபோது, மற்றவர்களிடம் பேசுவதும், யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திலுள்ள மேடையிலிருந்து பேசுவதும் எனக்குக் கஷ்டமாக இருந்தது. பேச்சு நியமிப்பு ஒன்றைப் பெற்றதும், எனக்கு வியர்த்து விறுவிறுத்துவிடும்; அதோடு, மிகவும் களைப்பாகிவிடும். இப்படிப்பட்ட பிரச்சினையின் மத்தியிலும் யெகோவாவைச் சேவித்துவரும் ஓர் உடன் கிறிஸ்தவருடைய அனுபவத்தைப் பற்றி வாசிப்பது உண்மையிலேயே எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது. நான் எதையுமே நம்பிக்கையான மனநிலையுடன் பார்க்க இது எனக்கு உதவியிருக்கிறது.
எம். எஸ்., ஜப்பான்
இந்த அனுபவத்தைப் பிரசுரித்திருப்பதற்காக உங்களுக்கு நன்றிசொல்ல நான் உந்துவிக்கப்படுகிறேன். சிறுபிள்ளையிலிருந்தே எனக்கும் இதே பிரச்சினை இருந்துவந்திருக்கிறது. பீட்டரைப் போன்றே, நானும் சபையில் ஒரு மூப்பராகச் சேவித்துவருகிறேன்; என் நியமிப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான சக்திக்காகவும் யெகோவாவையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இப்போது, மற்றவர்களுடைய பேச்சுக்களில் அவர்களுக்கு உதவும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியை நான் நடத்திவருகிறேன்.
என். ஓ. என்., நைஜீரியா