இடம் மாறிச்செல்வதன் விளைவை சீர்தூக்கிப் பாருங்கள்!
தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! நிருபர்
வேறொரு நாட்டுக்கு இடம் மாறிச்செல்வதைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? அதனால் வரும் விளைவைச் சீர்தூக்கிப் பார்த்திருக்கிறீர்களா? வெறுமனே பணச்செலவை மட்டும் நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. மொத்தத்தில், பெரும்பாலானோர் பொருளாதார பாதுகாப்புக்காகவே இடம் மாறிச்செல்வதைப் பற்றி நினைத்துப்பார்க்கிறார்கள். உண்மையில், இடம் மாறிச்சென்ற பிறகு மட்டுமே தெரியவரும், மறைந்திருக்கும் விளைவுகளை நாங்கள் அர்த்தப்படுத்துகிறோம். பொதுவாக, அப்படிப் போய்விட்டபிறகு, நீங்கள் மறுபடியும் உங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிவருவதைப் பற்றி நினைத்துப்பார்ப்பதில் பிரயோஜனமில்லை. பின்வரும் குறிப்புகள் உங்களை பயமுறுத்தும் நோக்கத்தோடு கொடுக்கப்படாமல், சீர்தூக்கிப் பார்ப்பதற்கேற்ற வகையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன:
“ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு மனத்தாழ்மையும் முயற்சியும் தேவை. ஒரு பெரியவர், தான் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாத சிறுவர்களும்கூட அவரை ஒருமாதிரி பார்க்கும்போது, தன்னையே நொந்துகொள்ள நேரிடுகிறது. நீங்கள் தொடர்ந்து தப்புந்தவறுமாகப் பேசும்போதும், அதே சமயத்தில் உங்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டி தொடர்ந்து நீங்கள் கேலிசெய்யப்படும்போதும், உங்களுடைய சுயமதிப்பு சோதனைக்குள்ளாகிவிடுகிறது. உள்ளூர் மொழியைப் பேசமுடியாத அயல்நாட்டினருக்கு, அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் தனிமையுணர்வைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.”—ரோஸ்மேரி, ஜப்பானிலுள்ள ஒரு மிஷனரி.
ஒருவேளை, சமாளித்துக்கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு அந்த மொழி தெரிவதாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், இடம் மாறிச்சென்றதைப் பற்றி சந்தோஷப்படும் அளவுக்கு, உங்கள் முழு குடும்பமும் அந்த மொழியை ஓரளவாவது தெரிந்திருக்கிறார்களென்று நீங்கள் நிச்சயமாயிருக்கிறீர்களா?
உங்கள் குடும்ப உறுப்பினரில் சிலரைத் தாஜா பண்ணி இடம் மாறிச்செல்வதற்கு இணங்க வைப்பதனால், உங்கள் குடும்பத்தின்மீது அது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்? “[மெக்ஸிகோவிலிருந்து வரும்] சில பெண்கள், இவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களின்போது வாய் திறக்கவே முடியவில்லை; ஐக்கிய மாகாணங்களுக்கு இடம் மாறிச்செல்லவோ, இடம் மாறிச்சென்றபிறகு அங்குத் தொடர்ந்து வசிக்கவோ அவர்களுக்குப் பிடிக்கவில்லை” என்று சைக்காலஜி ஆஃப் விமன் குவார்ட்டர்லி பத்திரிகை கூறுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், வற்புறுத்தி இடம் மாறிச்செல்ல வைப்பது, குடும்ப ஒற்றுமையைக் குலைக்கக்கூடும். ஆனால், கணவர் மட்டுமே இடம் மாறிச்செல்வதைப் பற்றியென்ன?
ஆப்பிரிக்காவில் ஜனத்தொகையும் இடமாற்றமும், நகர்மயமாக்குதலும் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமப் பகுதியில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட “வயதுவந்த ஆண்கள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தங்கள் நாட்டில் இருப்பதில்லை” என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு இல்லாமற்போவது, அந்தக் குடும்பம் திருப்தியாகவும் நிலையாகவும் இருப்பதிலிருந்து அதைத் தடைசெய்யக்கூடும். திருமணத்துணைவர்கள் எளிதாக ஒழுக்கக்கேட்டில் விழுந்துவிடும் சாத்தியத்தையும் அது அதிகரிக்கிறது. ஆகவே, ஒரு குடும்பத்தினர், தாங்கள் இடம் மாறிச்சென்றாலும் சரி, செல்லாவிட்டாலும் சரி, ஒன்றாக சேர்ந்திருப்பது எவ்வளவு சிறந்தது! குடும்ப ஒற்றுமையை விலைகொடுத்து வாங்க முடியாது.
அதோடு, தப்பெண்ணத்தைச் சமாளிக்க வேண்டிய பாரமான சுமையும் இருக்கிறது. “இங்கிலாந்துக்கு இடம் மாறிச்செல்லும்வரையில், ‘நிறப் பிரச்சினையைப்பற்றி’ நான் எண்ணிப்பார்க்கவேயில்லை” என்று இடம் மாறிச்சென்ற ஓர் இந்தியர் நினைவுகூருகிறார். “அந்த [உணர்வு] மிகக் கொடியது. கசப்பான ஓர் அதிர்ச்சி அது. அவையெல்லாவற்றிலுமிருந்து தப்பிச்செல்வதற்காக, நான் இந்தியாவுக்குத் திரும்பிப்போய்விட நினைத்தேன்.”—தி அன்-மெல்ட்டிங் பாட்.
ஆகவே, இடம் மாறிச்செல்வதற்கு முன்பு, உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வேறு என்ன வழிகள் இருக்கின்றன? இங்கேயே நாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ள முடியாதா? இன்னொரு நாட்டுக்கு இடம் மாறிச்செல்வது உண்மையிலேயே பயனுள்ளதாய் இருக்குமா?’ இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்; ஆனால் நீங்கள் தீர்மானிப்பதற்கு முன், இயேசுவின் பின்வரும் நடைமுறையான புத்திமதியை எண்ணிப்பாருங்கள்: “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, . . . அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?”—லூக்கா 14:28, 30.