அரிவாள் செல் சோகை—அறிவே மிகச்சிறந்த தற்காப்பு
நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
கருத்தரங்கு அறையில் 32 பேர், பெரும்பாலும் பெண்களும் பிள்ளைகளும் இருந்தனர். மெலிந்திருந்த, பிங்க் நிற உடை அணிந்திருந்த ஆறு வயது டாப்பி, தன் தாயாரின் அருகே ஒரு மர நாற்காலியில் அமைதலாக உட்கார்ந்திருந்தாள். அந்த வலி வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து அந்த நர்ஸ் அவர்களிடம் சொல்வதை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள்.
டாப்பி வலியைப் பற்றி—பயங்கரமாகவும் திடீரென்றும் வந்து, அது தணிவதற்குள் பல நாட்கள் நீடித்திருக்கும் அந்த வலியைப் பற்றி அறிந்திருந்தாள். ஒருவேளை அந்த வலிதான் அவளை, அவளுடைய வயதுக்கு மீறின யோசனையில் ஆழ்ந்த ஒரு தோற்றத்துடன் இருக்கச் செய்திருக்கலாம்.
“அவள் என்னுடைய முதல் பிள்ளை,” என்றார் அவள் தாய். “தொடக்கத்திலிருந்தே அவள் எப்போதும் சுகமில்லாமல் இருந்தாள். நான் அநேக சர்ச்சுகளுக்குச் சென்றேன், அவளுக்காக ஜெபம் செய்தார்கள். ஆனால் அவள் பின்னும் நோயுற்றாள். கடைசியாக, நான் அவளை மருத்துவமனைக்குக் கொண்டுபோனேன். அவளுடைய இரத்தத்தைப் பரிசோதித்து அவள் ‘அரிவாள் செல் சோகைக்கு இரையானவள்’ என்று கண்டுபிடித்தனர்.”
அது என்ன?
நைஜீரியாவில் பெனின் நகரில், அரிவாள் செல் சோகைக்கான மையத்தில், அரிவாள் செல் சோகை என்பது இரத்தம் சம்பந்தமான ஒரு கோளாறு என்று டாப்பியின் தாய் அறிந்துகொண்டார். மூடநம்பிக்கைகளுக்கு முரணாக, பில்லிசூனியம் அல்லது இறந்தவர்களின் ஆவிகளுடன் அது எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதாக இல்லை. பிள்ளைகள் தங்கள் பெற்றோர் இருவரிடமிருந்தும் அரிவாள் செல் சோகையைச் சுதந்தரித்துக்கொள்கின்றனர். அது தொற்றும் தன்மையற்றது. வேறொருவரிடமிருந்து அந்த நோயை நீங்கள் தொற்றிக் கொள்வதற்கு வழியே இல்லை. நீங்கள் அதோடு பிறக்கிறீர்கள் அல்லது அதின்றி பிறக்கிறீர்கள். நிவாரணம் எதுவும் இல்லை என்றாலும், அறிகுறிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படலாம் என்பதாகவும் டாப்பியின் தாய் அறிந்துகொண்டார். a
அரிவாள் செல் சோகை பெரும்பாலும் ஆப்பிரிக்க மரபுவழியில் வந்தவர்களிலேயே ஏற்படுகிறது. அரிவாள் செல் சோகை மைய இயக்குநர் டாக்டர் ஐ. யூ. ஆமாயிக்கி, விழித்தெழு!-விடம் சொன்னார்: “மற்ற எந்தத் தேசத்திலும் இருப்பதைவிட மிக அதிகமான கறுப்பினத்தவர்கள் நைஜீரியாவில் இருக்கின்றனர்; ஆகவே எந்தத் தேசத்தையும்விட அதிகமாக அரிவாள் செல் சோகை உடையவர்கள் அங்கு இருக்கிறார்கள். அது இந்த நாட்டை உலகின் அரிவாள் செல் தலைநகராக்குகிறது.” லாகோஸின் டெய்லி டைம்ஸ் சொல்லுகிறபடி, சுமார் பத்து லட்ச நைஜீரியர்கள் அரிவாள் செல் சோகையைக் கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு வருடமும் 60,000 பேர் அதன் காரணமாக சாகின்றனர்.
இரத்தத்தில் ஒரு பிரச்சினை
இந்தக் கோளாறைப் புரிந்துகொள்வதற்கு, இரத்தம் என்ன செய்கிறது என்றும் உடலுக்குள் அது எவ்வாறு சென்றுகொண்டிருக்கிறது என்றும் நாம் அறிந்துகொள்வது அவசியம். ஒரு உதாரணம் உதவியாக இருக்கிறது. நாட்டுப்புற கிராமங்களில் வாழும் மக்களுக்கு உணவளிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட உணவைச் சார்ந்திருக்கிற ஒரு நாட்டைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். தலைநகருக்கு ட்ரக்குகள் வருகின்றன, அங்கு அவற்றில் உணவு ஏற்றப்படுகிறது. அவை பெரிய நெடுஞ்சாலைகள் வழியாக நகரை விட்டுச் செல்கின்றன; ஆனால் அவை நாட்டுப்புற பகுதிகளுக்குள் நுழைந்ததும், சாலைகள் இடுக்கமாக இருக்கின்றன.
எல்லாம் நல்லபடியாக இருந்தால், அந்த ட்ரக்குகள் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைந்து, அவர்களுடைய உணவுப் பொருட்களை அங்கு விட்டுவிட்டு, பின்னர் அடுத்த முறை வழங்குவதற்காக மேலுமான உணவு பொருட்களை எடுத்துவர நகரத்திற்குத் திரும்புகின்றன. என்றபோதிலும், அநேக ட்ரக்குகள் ஓடாமல் நின்றுவிட்டால், அந்த உணவு கெட்டுப்போகிறது, மற்ற ட்ரக்குகளும் கடந்துசெல்லாதபடி பாதை தடைபடுகிறது. பின்னர் அந்தக் கிராமங்களிலுள்ள மக்கள் சாப்பிடுவதற்குக் கொஞ்சமே கிடைக்கிறது.
அதேவிதமாக, இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் நுரையீரலுக்குச் சென்று, அங்கிருந்து—உடலுக்கு உணவாகிய—ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்றன. பின்னர் அவை நுரையீரலை விட்டு பெரும் தமனிகள் வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் வேகமாகச் செல்கின்றன. முடிவில், அந்தச் சிவப்பணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு வரிசையில் மட்டுமே, சிறிய இரத்த நாளங்கள் வழியாக செல்லுமளவிற்கு அந்தச் “சாலைகள்” அவ்வளவு சிறிதாகிவிடுகின்றன. அங்கேதான் அவை தாங்கள் ஏற்றி வந்த ஆக்ஸிஜனை இறக்குகின்றன; அவை உடலின் செல்களுக்கு உணவாகின்றன.
சாதாரணமான ஒரு சிவப்பணு ஒரு நாணய காசைப் போல உருண்டையாக இருந்து, மிகச் சிறிய இரத்த நாளங்களினூடேயும் மிகவும் சுலபமாகச் செல்கிறது. ஆனால் அரிவாள் செல் சோகை உடையவர்களில், இரத்த அணுக்கள் நின்றுவிடுகின்றன. அவை அவற்றின் உருண்டை வடிவத்தை இழந்து, ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு விவசாயி பயன்படுத்தும் கருவியாகிய அரிவாளின் வடிவத்தைப் பெறுகின்றன. அரிவாள் வடிவம் பெற்ற இந்த இரத்த அணுக்கள், சேற்றில் புதைந்துகொள்ளும் ட்ரக்கைப் போல உடலின் சிறிய சிரைகளில் ஒட்டிக்கொண்டு, மற்ற சிவப்பு இரத்த அணுக்களைக் கடந்துசெல்ல விடாமல் தடைசெய்கின்றன. உடலின் ஒரு பாகத்துக்குச் செல்லும் இரத்த போக்கு குறைவுபடும்போது, ஆக்ஸிஜன் வழங்கீடு துண்டிக்கப்பட்டு, வேதனைமிக்க திடீர் வலியின் தாக்குதலில் விளைவடைகிறது.
அரிவாள் செல் திடீர் வலியின் தாக்குதல், எலும்புகளிலும் மூட்டுகளிலும் கடும் வேதனையில் விளைவடைகிறது. வலியின் தாக்குதல்கள் முன்னறிவிக்கப்பட முடியாதவை; அவை அரிதாக வரலாம் அல்லது மாதந்தோறும் வரலாம். அவை வரும்போதோ, பிள்ளைக்கும் பெற்றோருக்கும் வேதனை தருபவையாய் இருக்கின்றன. இஹுடி என்பவர் அரிவாள் செல் மையத்தில் பணி புரியும் ஒரு நர்ஸ். “அரிவாள் செல் சோகைக்கு இரையான ஒரு பிள்ளையை சமாளிப்பது சுலபமானதல்ல. எனக்குத் தெரியும், ஏனென்றால் என்னுடைய மகளுக்கு இந்தக் கோளாறு இருக்கிறது. அந்த வலி திடீரென்று வருகிறது. அவள் அழுது, கூச்சலிடுகிறாள், நானும் அழுகிறேன். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகே, அல்லது ஒரு வாரத்திற்குப் பிறகே, அந்த வலி தணிகிறது,” என்கிறார் அவர்.
அறிகுறிகள்
குழந்தை ஆறு மாதங்களை அடைந்ததும், பெரும்பாலும் அறிகுறிகள் தோன்றுகின்றன. முதல் அடையாளங்களில் ஒன்று, கைகளில் அல்லது பாதங்களில் அல்லது இரண்டிலும் வலியுடன்கூடிய வீக்கம். குழந்தை அடிக்கடி அழுதுகொண்டும், அதிகம் சாப்பிடாமலும் இருக்கக்கூடும். கண்களின் வெள்ளை பகுதிகள் மஞ்சளாகக் காணப்படக்கூடும். நாக்கு, உதடுகள், மற்றும் உள்ளங்கைகள் வழக்கமாக இருப்பதைவிட வெளிறிப்போயிருக்கக்கூடும். இந்த அறிகுறிகளைக் காண்பிக்கும் பிள்ளைகள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும்; அவர்களுடைய பிரச்சினை அரிவாள் செல் சோகைதானா என்பதை அங்கு ஓர் இரத்தப் பரிசோதனை காண்பித்துவிட முடியும்.
அரிவாள் வடிவம் பெற்ற செல்கள் இரத்த நாளங்களை அடைக்கும்போது, சாதாரணமாக பெரும்பாலும் வலியானது மூட்டுகளைப் பாதிக்கிறது. கடுமையான வலியின் தாக்குதல், மூளை, நுரையீரல், இருதயம், சிறுநீரகங்கள், மண்ணீரல் ஆகியவற்றின் செயல்பாட்டைக் கெடுத்துவிட முடியும்—சில சமயங்களில் உயிர்சேதமூட்டும் நிலையிலும் விளைவடையலாம். கணுக்கால் பகுதியில் கட்டிகள் வருடக்கணக்காகத் தொடர்ந்திருக்கக்கூடும். பிள்ளைகளுக்கு வலிப்புகள் அல்லது உறுப்புகளில் உட்கசிவுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. அரிவாள் செல் சோகை உடையவர்கள், குறிப்பாகத் தொற்றுநோய்களைத் தொற்றிக்கொள்ளும் சாத்தியமுள்ளவர்கள் ஏனென்றால், அந்தக் கோளாறு, இயல்பான தற்காப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்துகிறது. நோய்த் தொற்றுதல்தானே மரணத்திற்கான ஒரு பொது காரணமாக இருக்கிறது.
நிச்சயமாகவே, அரிவாள் செல் சோகையுடைய அனைவருமே இந்த எல்லா அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை. சிலர் தங்களுடைய பருவ வயதின் பிற்பட்ட வயதடையும் வரையாகப் பிரச்சினைகளை அனுபவிப்பதில்லை.
சிகிச்சை
தங்கள் பிள்ளைகளுக்குக் குணப்படுத்துதலை வாக்குறுதி செய்த சிகிச்சைகளை நாடி அநேக பெற்றோர் நேரத்தையும் பணத்தையும் வீணாக்கி இருக்கிறார்கள். ஆனால் அரிவாள் செல் சோகைக்குத் தற்போது எந்த நிவாரணமும் இல்லை; அது வாழ்நாள் முழுதும் நீடித்திருக்கிற ஒரு கோளாறாகும். என்றாலும், திடீர் வலியின் தாக்குதல்கள் சம்பவிக்கும் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு எளிய காரியங்கள் செய்யப்படலாம்; மேலும் அவை சம்பவிக்கும்போது அவற்றைக் கையாளுவதற்கான முறைகளும் இருக்கின்றன.
திடீர் வலியின் தாக்குதல் ஏற்படும்போது, பெற்றோர் தங்கள் பிள்ளை குடிப்பதற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். மென்பதமாகச் செயல்படுகிற வலிநீக்கும் மருந்தையும் கொடுக்கலாம். கடுமையான வலி இருந்தால், கூடுதலான வீரியமுள்ள மருந்துகள் தேவைப்படக்கூடும்; அவற்றை ஒரு மருத்துவரிடமிருந்து மட்டுமே பெறலாம். என்றாலும், வருத்தகரமாக, சில நேரங்களில் சக்திவாய்ந்த மருந்துகள்கூட குறைந்த அளவிலேயே வலியைத் தணிக்கின்றன. என்றபோதிலும், பயப்பட வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலும் எல்லா நிகழ்வுகளிலும், ஒருசில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு, அந்த வலி தணிந்து, அந்த நோயாளி குணமடைகிறார்.
இந்தக் கோளாறுக்குச் சிகிச்சை செய்வதற்கு உதவும்படி அறிவியலாளர்கள் மருந்துகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, ஹைட்ராக்ஸியூரீயா என்ற மருந்து அரிவாள் செல் நோயாளிகளில் வேதனையுள்ள திடீர் வலியின் தாக்குதல்கள் ஏற்படும் நிகழ்வுகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தன என்பதாக 1995-ன் ஆரம்பத்தில், ஐக்கிய மாகாணங்களின் தேசிய இதய, நுரையீரல், மற்றும் இரத்த நிறுவனம் அறிவித்தது. சிவப்பு இரத்த அணுக்கள் தங்கள் வடிவத்தில் மாற்றத்தை அடைவதிலிருந்தும் இரத்த நாளங்களை அடைத்துவிடுவதிலிருந்தும் தடுப்பதன் மூலம் அது இதைச் செய்வதாக எண்ணப்படுகிறது.
அப்படிப்பட்ட மருந்துகள் எங்கும் உடனடியாகக் கிடைப்பவையாகவும் இல்லை; எல்லா நிலைமைகளிலும் அவை உதவுகிறவையாகவும் இல்லை. நன்கு அறியப்பட்ட அபாயங்களின் மத்தியிலும், ஆப்பிரிக்காவிலும் மற்ற இடங்களிலுமுள்ள மருத்துவர்கள், அவசர நிலைமைகளில் அரிவாள் செல் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய நிலையாக இரத்தமேற்றுகிறார்கள்.
திடீர் வலியின் தாக்குதல்களைத் தடுத்தல்
“திடீர் வலியின் தாக்குதல்களைத் தவிர்க்க உதவும்படி நிறைய தண்ணீர் குடிக்கும்படி நோயாளிகளிடம் நாங்கள் சொல்லுகிறோம்,” என்பதாக அந்த அரிவாள் செல் மையத்திலுள்ள மரபணுவியல் ஆலோசகர் ஆலுமானா சொல்கிறார். “உடலிலுள்ள நாளங்களில் இரத்தம் செல்வதை தண்ணீர் சுலபமாக்குகிறது. அரிவாள் செல் சோகையுடைய பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பிள்ளைகள் குறைவாகவே குடிப்பார்கள். அரிவாள் செல் சோகை உடைய பிள்ளைகள், பள்ளிக்குத் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டுபோகும்படி நாங்கள் கற்பிக்கிறோம். இந்தப் பிள்ளைகள் கழிப்பறை செல்வதற்காக மிக அடிக்கடி அனுமதி கேட்கக்கூடும் என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கோளாறு இல்லாதவர்களைவிட இந்தப் பிள்ளைகள் அடிக்கடி தங்கள் படுக்கைகளை நனைத்துவிடக்கூடும் என்பதைப் பெற்றோர் அறிந்திருக்க வேண்டும்.”
நோயானது ஓர் அபாயகரமான வலியின் தாக்குதலை ஏற்படுத்தலாம் என்பதால், அரிவாள் செல் சோகை உள்ளவர்கள் நல்ல உடல் நலத்தைக் காத்துக்கொள்ள முயற்சி எடுப்பது அவசியம். தனிப்பட்ட சுத்தத்தைக் காத்துக்கொள்வதன் மூலமும், நீண்டநேரத்திற்கு கடின வேலை செய்வதைத் தவிர்ப்பதன் மூலமும், நல்ல உணவுபொருட்களாலான சமவிகித உணவைச் சாப்பிடுவதன் மூலமும் அவர்கள் இதைச் செய்யலாம். அந்த உணவுடன் மல்டிவிட்டமின்களையும் ஃபாலிக் அமிலத்தையும் சேர்த்துக்கொள்ளும்படியும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மலேரியா பொதுவாக இருக்கிற பகுதிகளில், அரிவாள் செல் சோகை உடையவர்கள், கொசு கடிகளைத் தவிர்ப்பதன் மூலமும் நோயிலிருந்து பாதுகாக்க மருந்துகளைச் சாப்பிடுவதன் மூலமும் தங்களைத்தாங்களே பாதுகாத்துக்கொள்வது ஞானமாக இருக்கிறது. மலேரியா, சிவப்பு இரத்த அணுக்களை அழிப்பதால், அரிவாள் செல் சோகையுடைய ஒருவருக்கு அது குறிப்பாக ஆபத்தானதாக இருக்கும்.
அரிவாள் செல் சோகை உள்ளவர்கள் ஒழுங்காக மருத்துவ பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். எந்த நோய்த் தொற்றுகளும், சுகக்கேடும், அல்லது காயங்களும் உடனடியான மருத்துவ கவனிப்பைப் பெற வேண்டும். அப்படிப்பட்ட வழிகாட்டும் குறிப்புகளைக் கவனமாகப் பின்பற்றுவதன் மூலம், அரிவாள் செல் சோகையுடைய அநேகரால் வழக்கமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடிகிறது.
அது எப்படி பிள்ளைகளுக்குக் கடத்தப்படுகிறது
பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு நோய் எப்படி கடத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இரத்தத்தின் மரபுசார் வடிவங்களைப் பற்றி நாம் அறிந்திருப்பது அவசியம். இரத்த மரபுசார் வடிவம் என்பது ஓர் இரத்த வகையிலிருந்து வித்தியாசப்பட்டதாகும்; மரபுசார் வடிவம் என்பது மரபணுக்களுடன் சம்பந்தப்பட்டதாகும். பெரும்பாலானவர்கள் AA என்ற மரபுசார் வடிவத்தைக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோரில் ஒருவரிடமிருந்து A மரபணுவையும் மற்றவரிடமிருந்து S மரபணுவையும் சுதந்தரிப்பவர்கள் AS என்ற இரத்த மரபுசார் வடிவத்தைக் கொண்டிருக்கிறார்கள். AS இரத்தத்தை உடையவர்கள், அரிவாள் செல் சோகையைக் கொண்டிருப்பதில்லை, ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைக்கு அந்தக் கோளாறைக் கடத்த முடியும். பெற்றோரில் ஒருவரிடமிருந்து S மரபணுவையும் மற்றவரிடமிருந்து வேறொரு S மரபணுவையும் பெற்றுக்கொள்பவர்கள், அரிவாள் செல் சோகைக்கான மரபுசார் வடிவத்தை, SS இரத்த மரபுசார் வடிவத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறாக, ஒரு பிள்ளை SS வகையான இரத்தத்தைச் சுதந்தரிக்க வேண்டுமானால், அவன் அல்லது அவள், குறைபாடுள்ள அந்த S மரபணுவை ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் பெற வேண்டும். ஒரு குழந்தையைப் பிறப்பிப்பதற்கு எப்படி இருவர் தேவைப்படுகிறார்களோ அதேபோலவே அரிவாள் செல் சோகையைக் கடத்துவதற்கும் இருவர் தேவைப்படுகின்றனர். வழக்கமாக, பெற்றோர் இருவரும் AS வகையான இரத்தம் உடையவர்களாய் இருந்தால் அந்தக் கோளாறு கடத்தப்படுகிறது. AS வகை இரத்தமுள்ள ஒருவர், AS வகை இரத்தமுள்ள வேறொருவரைத் திருமணம் செய்யும்போது, அவர்களுக்குப் பிறக்கும் எந்தக் குழந்தைக்காவது SS வகை இரத்தம் இருப்பதற்கான வாய்ப்பு 4-க்கு 1 என்ற வீதத்தில் இருக்கிறது.
அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தால், ஒன்றுக்கு அரிவாள் செல் சோகை இருக்குமென்றும் மற்ற மூன்றுக்கும் இருக்காது என்றும் இது அர்த்தப்படுத்துவதில்லை. நான்கில் ஒன்று SS-ஆக இருக்கக்கூடும் என்றாலும், இரண்டு, மூன்று, அல்லது நான்கு பேருமே SS-ஆக இருக்கவும்கூடும். அந்தப் பிள்ளைகளில் ஒருவருமே SS-ஆக இல்லாமலும் இருக்கக்கூடும்.
திருமணத்திற்கு முன்னரே அறிவூட்டப்பட்ட தீர்மானங்கள்
ஆப்பிரிக்க மரபுவழியில்வந்த மக்கள் தங்கள் திருமணத்தைக் குறித்துச் சிந்திப்பதற்கு வெகு முன்னரே தங்கள் இரத்த மரபுசார் வடிவம் என்ன என்று கண்டுபிடிப்பது ஞானமாக இருக்கும். இது ஓர் இரத்தப் பரிசோதனையின் மூலமாக செய்யப்படலாம். AA இரத்தமுடையவர்கள், தாங்கள் யாரைத் திருமணம் செய்தாலும் தங்கள் பிள்ளைகளில் எவருக்கும் அரிவாள் செல் சோகை வராது என்று நிச்சயமாக இருக்கலாம். AS இரத்தத்தை உடையவர்கள், AS இரத்தத்தை உடைய ஒரு நபரைத் திருமணம் செய்தால், அரிவாள் செல் சோகையை உடைய ஒரு பிள்ளையைப் பிறப்பிக்கும் பேராபத்துக்குள் தங்களை உள்ளாக்குகிறார்கள்.
AS உடையவர்கள் AS உடையவர்களைத் திருமணம் செய்வதைத் தடுக்கும்படி மருத்துவர்கள் பலமாகப் பேசினாலும், அரிவாள் செல் மையத்திலுள்ள ஆலோசகர்கள், மக்கள் தங்கள் சொந்த தீர்மானங்களை எடுக்கும்படிவிடுகிறார்கள். டாக்டர் ஆமாயிக்கி சொல்லுகிறார்: “மக்களைப் பயமுறுத்துவதோ அவர்கள் யாரைத் திருமணம் செய்ய வேண்டும் அல்லது யாரைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்வதோ எங்கள் வேலை அல்ல. AS தம்பதிக்குப் பிறந்த பிள்ளைகள் SS இரத்தத்தைக் கொண்டிருப்பார்கள் என்று எவராலும் முன்னறிவிக்க முடியாது, ஏனென்றால் அது தற்செயல் நிகழ்வாக இருக்கிறது. அவர்கள் ஒரு SS பிள்ளையைக் கொண்டிருந்தாலும்கூட, அந்தப் பிள்ளை அத்தனை அநேக பிரச்சினைகளின்றி அந்தக் கோளாறைச் சகித்துக்கொள்ளக்கூடும். ஆனால் மக்கள் தங்களுடைய மரபுசார் வடிவம் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களுக்கு SS பிள்ளைகள் பிறந்துவிட்டால், அதிர்ச்சியூட்டுவதாக இராதபடிக்கு, என்ன சம்பவிக்கலாம் என்பதை மக்கள் அறிந்திருப்பதற்கு நாங்கள் முன்கூட்டியே உதவ முயலுகிறோம். அவ்வாறு செய்கையில், அவர்கள் உண்மைகளைப் பற்றிய அறிவின் பேரில் தீர்மானங்களை எடுக்கும் நிலையில் மட்டுமல்லாமல், அந்தத் தீர்மானங்களின் விளைவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள தங்களைத் தயாராக வைத்துக்கொள்ளும் நிலையிலும் இருக்கிறார்கள்.”
[அடிக்குறிப்பு]
a ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கான இரத்தத்தின் திறனை பாதிக்கிற, சுதந்தரிக்கப்பட்ட மற்ற அரிவாள் செல் கோளாறுகள் எவையென்றால், ஹீமோகுளோபின் C நோயும் அரிவாள் பீட்டா தலசீமியாவும் ஆகும்.
[பக்கம் 24-ன் பெட்டி]
அன்பின் முக்கியத்துவம்
தன்னுடைய 20-களின் ஆரம்பத்தில் இருக்கும் ஜாய், அரிவாள் செல் சோகையால் அவதிப்படுகிறாள். அவள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக இருப்பதால் ஒருபோதும் இரத்தமேற்றுதலை ஏற்கவில்லை. அவளுடைய தாயார், ஆலா சொல்கிறார்: “ஜாய் தன்னுடைய இரத்த அளவை அதிகரித்துக்கொள்ள உதவும்படி நல்ல உணவைக் கொண்டிருப்பதை நான் எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்வேன். பெற்றோரின் அன்பான கவனிப்பும் மிக முக்கியம் என்று நான் நம்புகிறேன். அவளுடைய வாழ்க்கை, என்னுடைய மற்ற எல்லா பிள்ளைகளுடையதையும் போலவே, எனக்கு மிகவும் அருமையானதாக இருக்கிறது. நிச்சயமாகவே, எல்லா பிள்ளைகளுக்கும் அன்பு தேவை, ஆனால் ஒரு நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு இன்னும் எவ்வளவு அதிகமாகத் தேவைப்படுகிறது!”
[பக்கம் 23-ன் படங்கள்]
டாப்பிக்கு, அந்த அம்புக்குறிகளால் காட்டப்பட்டிருப்பவை போன்ற அரிவாள் செல்கள் இருக்கின்றன
[பக்கம் 23-ன் படங்கள்]
Sickle Cells: Image 1664 from the American Society of Hematology Slide Bank. Used with permission