பல்வகைப் பயன்தரும், வண்ணமிகு பயிர்
டீஸல், கால்நடை தீவனம், சோப்பு, மார்கரைன் ஆகியவை எதைப் பொதுவில் கொண்டிருக்கின்றன? சில நாடுகளில் இந்த எல்லா பொருட்களும் பிரகாசமான மஞ்சள் நிற பூவுடைய ரேப் செடியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
கடுகு குடும்பத்தைச் சேர்ந்த இந்த வண்ணமிகு செடிவகை, ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் சில பாகங்களில் வளர்க்கப்படுகிறது. இது, எண்ணெய் மிகுந்த அதன் விதைகளுக்காக முக்கியமாய் மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ரேப்விதையின் 40 சதவீதம், பல்வகைப் பயன்தரும் எண்ணெய்யால் ஆனது.
பெரும்பான்மையான ரேப்விதை எண்ணெய்—ஒருவேளை 90 சதவீதத்தின் அளவுக்கு—உணவு உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. அது மார்கரைன், பிஸ்கட்டுகள், சூப்புகள், ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்புகளை செய்வதில் உபயோகிக்கப்படுகிறது. ஆனால் ரேப்விதை எண்ணெய், குறைவான தூய்மைக்கேட்டை உண்டுபண்ணும் டீஸலைத் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படலாம். இவ்வாறு சுற்றுச்சூழலுக்கு குறைந்த சேதத்தையே விளைவிப்பதாய் உள்ளது. சுத்திகரிக்கப்பட்டிருக்கும்போது, இந்த எண்ணெய் நுட்பமான இயந்திரங்களுக்கு உராய்வை தடுக்கும் எண்ணெய்யாகவும்கூட பயன்படுத்தப்படலாம்; அது பிரித்தெடுக்கப்பட்ட பிறகு, பயிரின் சக்கை புண்ணாக்காக பிழிந்தெடுக்கப்படலாம். அதிக புரதச் சத்துள்ள அது, மிருகங்களின் தீவனத்திற்காக பயன்படுத்தப்படலாம்.
பல்வகைப் பயன்தரும் என்னே ஒரு பயிர்! உண்மையில், சங்கீதக்காரன் சொன்ன விதமாகவே நாமும் சொல்ல முடியும்: “யெகோவாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கின்றன! அவற்றையெல்லாம் ஞானத்தால் நீர் படைத்திருக்கிறீர்.”—சங்கீதம் 104:24, NW.