பைபிளின் கருத்து
மரண தண்டனையை கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வேண்டுமா?
“ஒழுக்கரீதியிலும் நெறிமுறைப்படியும் அது தவறானது.” “அது சரியானது, நியாயமானது.” எதிர்மாறான இந்த நோக்குநிலைகள், பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருந்த இரு குருமாரிடமிருந்து வந்தன. இன்று விவாதத்திற்குரிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றை—மரண தண்டனையை—குறித்து அவர்கள் விவாதித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் கூறியதை மேற்கோள் காட்டிய செய்தித்தாள் கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “மரண தண்டனையைக் குறித்து மதத்தலைவர்கள் வாதாடுகையில், தங்கள் நிலைநிற்கையை ஆதரிக்க இருதரப்பினரும் பைபிள் பகுதிகளைக் குறிப்பிடுகின்றனர்.”
மரண தண்டனையானது குற்றமற்றவரைப் பாதுகாத்து, நீதியை முன்னேற்றுவித்து, கடுமையான குற்றச்செயல்களை பின்னடைய வைக்கிறது என்று சிலர் வாதாடுகிறார்கள். அது ஒழுக்கங்கெட்ட காரியம்—வன்முறைக்கு அதிக வன்முறையுடன் பிரதிபலிக்கும் முறை என்றும், குற்றவாளிகளை சீர்திருத்தி அவர்களை சமுதாயத்தின் பயனுள்ள அங்கத்தினர்களாகவைக்கும் மெச்சத்தக்க வேலையைவிட மிகவும் தாழ்வான ஒன்று—என்றும் மற்றவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
ஐக்கிய மாகாணங்களில் அரசியல் வட்டாரங்களில், முக்கியமாக இந்த சர்ச்சை தீவிரமாக இருக்கிறது; மதத் தலைவர்களும் அதில் ஈடுபட்டுக்கொள்ள தயங்கவில்லை. என்றாலும், நீங்கள் யோசிக்கலாம், ‘மரண தண்டனையின் பேரில் சொல்வதற்கு எதையாவது பைபிள் கொண்டிருக்கிறதா?’ உண்மையில், கொண்டிருக்கிறது.
“பட்டயத்தை” மனித அதிகாரங்களுக்கு வழங்குதல்
நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்திற்கு சற்று பின்னர், மனித உயிரின் மதிப்புள்ள தன்மையை யெகோவா உறுதிப்படுத்திக்கூறி, பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்: “மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.” (ஆதியாகமம் 9:6) நிச்சயமாகவே, இது பழிவாங்குவதற்காக வரையறையற்ற உரிமமாக இருக்கவில்லை. மாறாக, சரியாக நியமிக்கப்பட்ட அதிகாரங்கள், மற்றவர்களுடைய உயிரைக் கொன்றவர்களைக் கொல்ல அப்போதிருந்து அனுமதிக்கப்படுவார்கள் என்று அது அர்த்தப்படுத்தியது.
பண்டைய இஸ்ரவேலில் கடவுள் மோசேயின் மூலமாகக் கடத்திய நியாயப்பிரமாணம், குறிப்பிட்ட கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதித்தது. (லேவியராகமம் 18:29) என்றபோதிலும், பாரபட்சமற்ற நியாயத்தீர்ப்பு, கண்கண்ட சாட்சிகளின் வாக்குமூலம், ஊழலுக்கு எதிரான தடைவிதிப்புகள் ஆகியவற்றைக் குறித்தும் நியாயப்பிரமாணத்தில் சட்டங்கள் இருந்தன. (லேவியராகமம் 19:15; உபாகமம் 16:18-20; 19:15) நியாயாதிபதிகள், கடவுள் பற்றுள்ள ஆண்களாக இருந்து, கடவுளுக்குத்தாமே கணக்குக் கொடுக்கவேண்டியவர்களாக இருந்தார்கள்! (உபாகமம் 1:16, 17; 2 நாளாகமம் 19:6-10) இவ்வாறாக மரண தண்டனையைத் துர்ப்பிரயோகம் செய்வதற்கு எதிராக பாதுகாப்புகள் இருந்தன.
பண்டைய இஸ்ரவேல் செய்ததுபோல இன்று பூமியிலிருக்கும் எந்த அரசாங்கமும் உண்மையில் தெய்வீக நீதியை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. ஆனால் அரசாங்கங்கள் ஓரளவுக்கு ஒழுங்கையும் நிலையான தன்மையையும் காத்துக்கொண்டு, அவசியமான பொது சேவைகளை அளிப்பதால், பல வழிகளில் கடவுளுடைய ‘ஊழியராக’ அல்லது ஏஜன்டுகளாக செயல்படுகிறார்கள். அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களை “மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு” கீழ்ப்படியும்படி நினைவுபடுத்திவிட்டு, பின்னர் மேலுமாகக் கூறினார்: “நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் [அரசாங்கம்] விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.”—ரோமர் 13:1-4.
பவுல் குறிப்பிட்ட ‘பட்டயம்,’ குற்றவாளிகளை—மரணத்தால்கூட—தண்டிப்பதற்கான அரசாங்கத்தின் உரிமையை அடையாளப்படுத்துகிறது. கிறிஸ்தவர்கள் அந்த உரிமையை மதிக்கிறார்கள், ஆனால் அது எப்படி செலுத்தப்பட வேண்டும் என்பதில் அவர்கள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கலாமா?
‘பட்டயம்’ தவறாகப் பயன்படுத்தப்பட்டிருத்தல்
அநேக சமயங்களில் நிச்சயமாகவே மனித அரசாங்கங்கள் நீதிக்காக “பட்டயத்தை” பயன்படுத்தியிருக்கின்றன. ஆனால் அவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பதற்கும் குற்றமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒத்துக்கொள்ளப்பட வேண்டும். (பிரசங்கி 8:9) கடவுளுடைய குற்றமற்ற ஊழியர்களுக்கு எதிராக கொலை தீர்ப்பு வழங்குகிற விதத்தில் “பட்டயத்தை” பயன்படுத்தியதற்கு பண்டைய ரோம அரசாங்கம் குற்றவுணர்வுள்ளதாக இருந்தது. முழுக்காட்டுபவராகிய யோவான், யாக்கோபு, இயேசு கிறிஸ்துவும்கூட அந்தப் பலியாட்களுக்குள் அடங்குவர்.—மத்தேயு 14:8-11; மாற்கு 15:15; அப்போஸ்தலர் 12:1, 2.
நவீன காலங்களில் அதையொத்த காரியம் நடந்திருக்கிறது. பல்வேறு நாடுகளில் யெகோவாவின் குற்றமற்ற ஊழியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்—சுடும் படைகள் மூலம், தலையை வெட்டும் இயந்திரம் மூலம், தூக்கிலிடுவதன் மூலம், விஷ வாயு அறைகள் மூலம்—இவை அனைத்தும், கிறிஸ்தவத்தை ஒடுக்குவதற்காக முயலும் அரசாங்கங்களால் “சட்டப்பூர்வமாக” செய்யப்பட்டன. தங்கள் அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்யும் அனைத்து அதிகாரங்களுமே கடவுளுக்குக் கணக்குக் கொடுக்கும். அவையனைத்தும் எப்பேர்ப்பட்ட பயங்கரமான இரத்தப்பழியை சுமக்கின்றன!—வெளிப்படுத்துதல் 6:9, 10.
யெகோவா தேவனுக்கு முன்பாக இரத்தப்பழியை சுமக்கும் எண்ணமே உண்மை கிறிஸ்தவர்களை நடுங்க வைக்கிறது. இதன் காரணமாக, “பட்டயத்தை” செலுத்துவதற்கான ஒரு அரசாங்கத்தின் உரிமையை அவர்கள் மதித்தாலும், அது எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து அவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். துன்புறுத்தலுக்கான ஒரு கருவியாக அது சேவித்திருக்கிறது; மேலும் சிலருக்கு எதிராக தப்பெண்ணம் கொண்டிருந்ததால் கடுமையாகவும், சிலரிடமாக பொருத்தமற்ற விதத்தில் தயவு காண்பித்தும் சில வேளைகளில் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.a ஆகவே மரண தண்டனையைக் குறித்த சர்ச்சைக்கு கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்? அவர்கள் அதில் ஈடுபட்டு, மாற்றத்திற்காக உந்துவிக்கிறார்களா?
கிறிஸ்தவ நடுநிலை வகிப்பு
தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட அந்த மதக் குருக்களைப்போல் இல்லாமல், உண்மை கிறிஸ்தவர்கள் ஒரு முக்கியமான நியமத்தை மனதில் வைத்துக்கொள்ள முயலுகிறார்கள்: இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களை ‘உலகத்தின் பாகமாக இருக்க வேண்டாம்’ என்று சொன்னார்.—யோவான் 15:19; 17:16.
ஒரு கிறிஸ்தவன் அந்தத் தடைக்கட்டளைக்கும் கீழ்ப்படிந்துகொண்டு, மரண தண்டனையைப் பற்றிய சர்ச்சையிலும் சேர்ந்துகொள்ள முடியுமா? தெளிவாகவே முடியாது. என்னவாயினும், இது ஒரு சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சினை. ஐக்கிய மாகாணங்களில், அரசியல் பதவிக்கு நிற்கும் வேட்பாளர்கள், மரண தண்டனை குறித்த அவர்களது நிலைநிற்கையை—அதை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பதை—தங்கள் பிரச்சார கோட்பாட்டு அடிப்படைகளில் ஒரு முக்கிய கொள்கைதிட்டமாக பயன்படுத்துகிறார்கள். அந்தப் பொருளின்பேரில் அவர்கள் வைராக்கியமாக விவாதித்து, உணர்ச்சிப்பூர்வ தீவிரத்தையும் காண்பிப்பதால், இந்தப் பொருளானது, பொதுவாக வாக்களிப்பவர்களை அவர்களுடைய கொள்கையின் பக்கமாகச் சாய்வதற்குத் தூண்டியெழுப்பும் ஒரு கருவியாகிறது.
ஒரு கிறிஸ்தவன் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி ஒருவேளை இதுவாக இருக்கலாம்: இந்த உலகின் அரசாங்கங்கள் எப்படி “பட்டயத்தை” செயல்படுத்துகின்றன என்ற சர்ச்சையில் இயேசு தன்னை உட்படுத்தி இருப்பாரா? அவருடைய நாட்டினர் அவரை அரசியலில் ஈடுபடுத்த முயன்றபோது, இயேசு “மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்,” என்பதை நினைவில் வையுங்கள். (யோவான் 6:15) அப்படியானால், இந்த விஷயத்தை கடவுள் வைத்த இடத்தில்—அரசாங்கத்தின் கைகளில்—அவர் விட்டிருப்பார் என்பதற்கே அதிக சாத்தியம் இருப்பதாகத் தோன்றுகிறது.
அதைப்போலவே இன்றும், இந்தப் பொருளின் பேரிலான வாதங்களில் ஈடுபடாமல் இருக்க கிறிஸ்தவர்கள் கவனமுள்ளவர்களாய் இருப்பார்கள் என்றே ஒருவர் எதிர்பார்ப்பார். தங்கள் விருப்பப்படி செயல்படுவதற்கான அரசாங்கங்களின் உரிமையை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் உலகின் பாகமாக இராத கிறிஸ்தவ ஊழியர்களாக அவர்கள் ஒருபோதும் மரண தண்டனைக்கு ஆதரவைத் தெரிவிக்கவுமாட்டார்கள், அதன் ஒழிப்பை மேம்படுத்திக் கூறவும் மாட்டார்கள்.
மாறாக, அவர்கள் பிரசங்கி 8:4-ன் வார்த்தைகளை மனதில் கொள்ளுவார்கள்: “ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?” ஆம், இந்த உலகின் ‘ராஜாக்கள்’ அல்லது அரசியல் ஆட்சியாளர்கள், தங்கள் சொந்த விருப்பத்தைச் செயல்படுத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் குற்றஞ்சாட்டுவதற்கு எந்தக் கிறிஸ்தவனுக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் யெகோவாவால் அதைச் செய்ய முடியும். அவர் அதை செய்வார். இந்தப் பழைய உலகில் இருக்கும் குற்றச்செயல் ஒவ்வொன்றிற்கும் ‘பட்டயத்தின்’ துர்ப்பிரயோகம் ஒவ்வொன்றிற்கும் முடிவான நியாயத்தீர்ப்பைக் கடவுள் கொண்டுவரும் நாளை நாம் எதிர்நோக்கியிருக்க விடுகிறது பைபிள்.—எரேமியா 25:31-33; வெளிப்படுத்துதல் 19:11-21.
[அடிக்குறிப்பு]
a உதாரணமாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒவ்வொரு வருடமும் 2 சதவீதத்துக்குக் குறைவானவர்களைக் கொன்றுவருவதற்காக ஐ.மா. சிறை அமைப்பு குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்படுவதைவிட இயல்பான காரணங்களாலேயே இறந்துவிடுகின்றனர். தப்பெண்ணங்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகளும் இருந்திருக்கின்றன—புள்ளிவிவரங்கள் உணர்த்துகிறபடி, ஒரு பலியாள் கறுப்பினத்தவராய் இராமல் வெள்ளை இனத்தவராய் இருந்தால், அந்தக் கொலையாளி மரண தண்டனையைப் பெறுவதற்கான சாத்தியம் அதிகம்.
[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]
The Bettmann Archive