ஐரோப்பாவில் ஏன் ஒரு சர்வதேச நீதிமன்றம்?
நெதர்லாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்
நெதர்லாந்தின் வட பாகத்தில் வாகன பழுதுபார்ப்பு நிலையம் ஒன்றின் சொந்தக்காரர் ஒருவருக்கு, நீர்மமாக்கப்பட்ட வளிமத்தை விற்பதற்கான அனுமதி வழங்க மறுக்கப்பட்டபோது, நீர்மமாக்கப்பட்ட வளிமத்தை எரிப்பதற்கு ஏற்றவாறு ஆட்டோமோபைல் எஞ்சின்களை மாற்றுவதற்கும் அவர் அனுமதிக்கப்படவில்லை என்று அர்த்தப்பட்டது; அவ்வாறு மறுக்கப்பட்டபோது, தேசத்தால் சுமத்தப்பட்ட இந்தக் கட்டுப்பாட்டை நீக்குவதற்காக பல்வேறு நீதிமன்றங்களில் நீண்ட சட்டப்பூர்வ போரைத் தொடுத்தார். அவ்வாறு செய்கையில், அவர் நொடித்துப்போனார்.
நெதர்லாந்திலுள்ள நீதிமன்றங்களால் அவருக்கு நியாயம் தர மறுக்கப்பட்டதாக உணர்ந்து அவர் ஸ்ட்ராஸ்பர்க்கிலிருக்கும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார். 1985-ல் ஐரோப்பிய நீதிமன்றம் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. அந்த நிலையத்தின் சொந்தக்காரர் அந்த நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஒழுக்கம்சார்ந்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதினார், ஏனென்றால், அவர் சொல்லுகிறபடி, ‘இத்தனை காலமும் அவர் சரியான பக்கத்திலிருந்தார் என்பதை அது நிரூபித்தது.’
கடந்த பத்தாண்டுகளின்போது மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு தங்கள் மேல்முறையீடுகளை எடுத்துச் சென்றிருக்கும் எண்ணற்ற ஐரோப்பிய நாட்டு குடிமக்களில் இவர் ஒருவரே. ஐரோப்பாவிற்குள்ளிருக்கும் தனி நபர்களின் முறையீடுகளைக் கேட்பதற்கு மட்டுமல்லாமல், அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை என்பதாகக் கருதப்படுகையில் நாடுகளுக்கு விரோதமாக மற்ற நாடுகளுக்கு இருக்கும் முறையீடுகளைக் கேட்பதற்கும் இந்த நீதிமன்றம் இருக்கிறது. சர்வதேச நீதிமன்றங்களின் முன் நிகழும் நீதிமன்ற வழக்குகளின் அதிகரிப்பு, நீதிக்காக குடிமக்கள் மற்றும் சில அரசாங்கங்களின் ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம்
1950-ல், ஐரோப்பிய பேரவையில் ஐக்கியப்படுத்தப்பட்டு, ரோமில் ஒன்றுகூடிய பல ஐரோப்பிய நாடுகளும், தங்கள் குடிமக்களுக்கும் தங்கள் நீதி வழங்கும் ஆதிக்கத்தின் கீழ் குடியிருக்கும் அயல்நாட்டினருக்கும், குறிப்பிட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கேதுவாக ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கத் தீர்மானித்தனர். பின்னர் மற்ற உரிமைகளும் சேர்க்கப்பட்டன; அதே நேரத்தில் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் பாதுகாக்கப்படும் நோக்கில் அதிகரிக்கும் எண்ணிக்கையான ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒப்பந்தத்தில் சேர்ந்துகொண்டனர். இந்த உரிமைகளில் சில, உயிர் பாதுகாப்பு, சித்திரவதை தடுப்பு ஆகியவற்றோடும், இன்னும் மற்றவை குடும்ப வாழ்க்கையோடும் மத சுதந்திரம், தன்னை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம், கருத்து சுதந்திரம், கூடிவருதல் மற்றும் கூட்டுறவுக்கான சுதந்திரம் ஆகியவற்றோடும் தொடர்புடையவையாக இருக்கின்றன. இந்த மனித உரிமை மீறுதல்களுக்கு பலியானவர்கள் அந்த நாட்டுக்கு எதிராக ஐரோப்பிய பேரவையின் பொதுச் செயலரிடம் முறையீட்டைத் தொடுக்க முடியும்.
அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டதிலிருந்து 20,000-க்கும் மேற்பட்ட முறையீடுகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. எந்த வழக்குகள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அந்த நீதிமன்றம் எப்படி தீர்மானிக்கிறது? முதலாவதாக, சமரசம் செய்துவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. அந்த முயற்சி தோல்வியுற்று, அந்த முறையீடு நியாயமானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாய் இருந்தால், ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு முன் அது எடுத்துச்செல்லப்படுகிறது. அந்த முறையீடுகளில் சுமார் 5 சதவீதமானவையே நீதிமன்றம் வரையாகச் செல்கின்றன. 1995-ன் கடைசி வரையாக, அந்த நீதிமன்றம் 554 தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. ஒரு தனிநபரின் முறையீட்டைப் பொறுத்தவரையில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அந்த நபரின் நாடு கட்டுப்பட்டதாய் இருந்தாலும், ஒரு நாடு அல்லது நாடுகளால் ஒரு முறையீடு தொடுக்கப்படுகையில் அது சாதாரண விஷயமாக இருப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமையில், எந்த நாட்டுக்கு விரோதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதோ அந்த நாடு அந்த ஒப்பந்தத்தின் தேவைகளுக்கு இசைந்து செல்வதற்கு மாறாக அரசியல்ரீதியில் நன்மைபயக்கும் ஒரு போக்கைத் தெரிந்துகொள்ளுவதற்கான சாத்தியமே இருக்கிறது. தி ஹேக்கிலுள்ள சர்வதேச நீதிமன்றம், நாடுகளுக்கு இடையிலுள்ள பூசல்களை மட்டுமே கையாளுகையில், ஐரோப்பிய நீதிமன்றமானது குடிமக்களுக்கும் நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் குறித்த விஷயங்களிலும் தீர்ப்புகளை வழங்குகிறது.
ஐரோப்பாவில் வணக்க சுதந்திரத்திற்கு சாதகமாக வெற்றிகள்
1993-ல் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம், வணக்க சுதந்திரத்தின் சாதகமாக இரண்டு முக்கியமான தீர்மானங்களை எடுத்தது. முதல் வழக்கு, கிரேக்க குடிமகனாகிய மீனாஸ் காக்கினாக்கிஸை (Minos Kokkinakis) உட்படுத்தியது. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக அவர் 1938 முதல் 60-க்கும் அதிகமான தடவைகள் கைது செய்யப்பட்டும், 18 தடவைகள் கிரேக்க நீதிமன்றங்களுக்கு முன்பாக வரவைக்கப்பட்டும், ஆறு வருடங்களுக்கும் அதிகமாக சிறையில் செலவிட்டும் இருந்தார்.
மே 25, 1993-ல், அப்போது 84 வயதாக இருந்த மீனாஸ் காக்கினாக்கிஸின் மத சுதந்திர உரிமையை கிரேக்க அரசாங்கம் மீறியதாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அவருக்கு நஷ்ட ஈட்டுத்தொகையாக $14,400 வழங்கியது. தங்களுடைய மதத்தைப் பற்றி மற்றவர்களிடம் கலந்துபேசுகையில், காக்கினாக்கிஸும் யெகோவாவின் சாட்சிகளும் கட்டாயப்படுத்தும் சூழ்ச்சிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்ற கிரேக்க அரசாங்கத்தின் வாதத்தை அந்த நீதிமன்றம் நிராகரித்தது.—கூடுதலான தகவலுக்கு, காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1993, பக்கங்கள் 27-31-ஐக் காண்க.
இரண்டாவது வழக்கில், ஆஸ்திரியாவைச் சேர்ந்த இங்க்ரிட் ஹாஃப்மானுக்கு சாதகமாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் திருமணத்திற்கு பின் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானதால், அவருடைய மணவிலக்கிற்குப் பின் அவருடைய இரண்டு பிள்ளைகளின் காப்புரிமை அவருக்குக் கொடுக்கப்படவில்லை. முதலில், கீழ் நீதிமன்றங்கள் அவருக்குக் காப்புரிமையை அளித்தன; ஆனால் தலைமை நீதிமன்றம் அந்த உரிமையை அவரது முந்தின கத்தோலிக்க கணவருக்கு அளித்தது. பெற்றோர் இருவரும் தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ள ஒத்துக்கொண்டாலொழிய, அவர்கள் திருமணமாகும்போது கத்தோலிக்கராக இருந்திருந்தால், பிள்ளைகள் கத்தோலிக்க மதத்திலேயே வளர்க்கப்பட வேண்டும் என்று சொல்லுகிற ஆஸ்திரிய சட்டம் ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்தது. அவர் இப்போது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானதால், இயல்பான, முழுநிறைவான வகையில் பிள்ளைகளை அவரால் வளர்க்க முடியாதென அவரது முந்தைய கணவர் வலியுறுத்திக் கூறினார். திருமதி ஹாஃப்மானின் மதத்தின் காரணமாக ஆஸ்திரியா அவரிடம் வேறுபாட்டுணர்வைக் காண்பித்து, தன் குடும்பத்தைக் கவனிப்பதற்கான அவருடைய உரிமையை மீறியிருக்கிறது என்று ஜூன் 23, 1993 அன்று, ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.—கூடுதலான தகவலுக்கு, ஆங்கில விழித்தெழு! அக்டோபர் 8, 1993, பக்கம் 15-ஐக் காண்க.
மத சுதந்திரத்தையும் தன்னை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தையும் நேசிக்கும் எல்லா மக்களையும் இந்தத் தீர்ப்புகள் பாதிக்கின்றன. சர்வதேச நீதிமன்றங்களிடம் மேல்முறையீடு செய்தல், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உதவி அளிக்கலாம். நீதி வழங்கும் அமைப்புகளின் வரையறைகளை உணர்ந்துகொள்வதும் ஞானமான காரியமாக இருக்கும். உலகிலேயே மிகச் சிறந்த உள்நோக்குகளை உடையவையாய் இருந்தாலும், நிரந்தரமான சமாதானத்தையும் மனித உரிமைகளுக்கு முழுமையான மரியாதையையும் அவற்றால் உறுதியளிக்க முடியவில்லை.