சாவுக்கேதுவான நுண்ணுயிரிகள் பரவுதல்
லண்டனிலிருந்து நியூ யார்க்கிற்குச் செல்லும் விமானத்தில் ஏறியபின், எலவிஸுக்கும் அவரது சக பயணிகளுக்கும் உடல்நல எச்சரிக்கை அறிவிப்பு அட்டை ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது மே 1995-ஆக இருந்தது. அந்த அட்டையின் முன்பக்கம் இவ்வாறு வாசித்தது:
“பயணிக்கு: இந்த அட்டையை உங்களுடைய சிறு பையில் அல்லது பர்ஸில் 6 வாரங்களுக்கு வைத்திருங்கள். இந்தக் காலப்பகுதியில் நீங்கள் நோய்வாய்ப்பட்டால், இந்த அட்டையை உங்கள் மருத்துவரிடம் கொடுத்து, சமீபத்தில் நீங்கள் ஐக்கிய மாகாணங்களுக்கு வெளியே பயணப்பட்டிருந்ததைக் குறித்து அவரிடம் சொல்லுங்கள்.
“ஐக்கிய மாகாணங்களை வந்தடையும் முன்னர், தொற்றக்கூடிய ஒரு நோயின் தாக்குதலுக்கு நீங்கள் இலக்காகி இருந்திருக்கலாம்; இதைக் குறித்து அறிந்திருப்பது, நோயைக் கண்டறிவதில் உங்கள் மருத்துவருக்கு உதவியாக இருக்கக்கூடும்.”
ஜயரில் எண்ணற்ற மக்களைக் கொன்றுகொண்டிருந்த, ஒரு வைரஸால் ஏற்படுத்தப்பட்ட நோயாகிய இபோலா திடீரென்று தோன்றி பரவுவதை விளக்கிய செய்தித்தாள்களையும் உடன்செல்லும் பயண ஊழியர்கள் கொடுத்தார்கள்.
கொடியதும் சாவுக்கேதுவானதுமான நோயாகிய இபோலாவைப் பற்றி எலவிஸ் வாசித்தார். நோய் தொற்றப்பட்ட நோயாளிகள் முதலாவது, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி ஆகியவற்றையும், அதைத் தொடர்ந்து விரைவில் வாந்தி, வயிறு வலி, மற்றும் பேதியையும் அனுபவித்தார்கள். அடுத்ததாக, பேரளவில், கட்டுப்படுத்தப்பட முடியாத இரத்தப்போக்கு உள்ளேயும் புறம்பேயும் ஏற்பட்டது. 10 நோயாளிகளில் 9 பேருடைய காரியத்தில் சீக்கிரத்தில் மரணம் ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்னர், விநோதமானதும் சாவுக்கேதுவானதுமான மற்ற நோய்களைக் குறித்து அறிக்கைகள் செய்யப்பட்டன: உதாரணமாக, இந்தியாவில் பிளேக். வேறுசில இடங்களில் “மாம்சம்-தின்னும் கிருமி” என்பதாகத் தகவல் தொடர்பு சாதனம் அழைத்த ஒன்றிலிருந்து ஒருசில மணிநேரங்களுக்குள் மக்கள் செத்திருந்தார்கள்.
எலவிஸ் தன் கையிலிருந்த அட்டையைத் திருப்பினார். மறுபக்கம் இவ்வாறு வாசித்தது:
“மருத்துவருக்கு: இந்த அட்டையை அளிக்கும் நோயாளி சமீபத்தில் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார்; ஆகவே ஐக்கிய மாகாணங்களில் பொதுவாகக் காணப்படாத, தொற்றக்கூடிய ஒரு நோயின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம். அசாதாரணமான தொற்றுநோய் ஒன்று (வாந்தி பேதி, இரத்தப்பெருக்கினால் ஏற்படும் காய்ச்சல், மலேரியா, மஞ்சள் காய்ச்சல், போன்றவை) இவரில் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், தயவுசெய்து உடனடியாக உங்கள் நகர, மாவட்ட, அல்லது மாகாண சுகாதார அதிகாரியிடமும், (தொலைபேசி மூலம்—அவர்களால் கட்டணம் செலுத்தப்படும் ஏற்பாட்டில்) நோய் அடைவுக்கால ஒதுக்கல் பிரிவு, நோய் கட்டுப்பாட்டு மையங்கள், அட்லான்டா, ஜார்ஜியா . . . . -வுக்கும் அறிவியுங்கள்.”
சாவுக்கேதுவான நுண்ணுயிரிகள்—ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள், மற்றும் வைரஸ்கள்—பரவுதல் குறித்து சர்வதேச அளவில் அதிகரிக்கும் அக்கறையை அந்த அட்டை பிரதிபலித்தது; அவ்வுயிரிகள் பூமியில் ஓரிடத்தில் ஒரு கொள்ளைநோயைத் தொடங்கி வைத்தப் பின்னர், உள்ளூரில் பரவுவது போல விரைவாகப் பரவக்கூடும். எலவிஸ் மற்றும் அவரது சக பயணிகள் செய்வதுபோல், நுண்ணுயிரிகள் ஒரு பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்வதுமில்லை, தேசிய எல்லைகளை மதிப்பதுமில்லை. நோய் தொற்றப்பட்டிருக்கும் ஒருவருக்குள், அவை உணர முடியாத வகையில் அசாத்தியமான சகஜத்துடன் நகர்ந்து செல்கின்றன.
உடல்நல எச்சரிக்கை அறிவிப்பு அட்டையை அவர் தன் பர்ஸுக்குள் பத்திரமாகச் செருகி வைக்கையில், எலவிஸ் யோசித்தார், ‘இந்த உயிர்க்கொல்லி நோய்கள் எங்கிருந்து வருகின்றன? நவீன மருத்துவ அறிவியல் ஏன் அவற்றை முறியடிக்க முடியாததாய் தோன்றுகிறது?’ ஒருவேளை நீங்களும் இதைக் குறித்து யோசித்திருக்கலாம்.