உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 2/22 பக். 4-9
  • நுண்ணுயிரிகள் பழிவாங்குதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நுண்ணுயிரிகள் பழிவாங்குதல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வெற்றி உறுதியளிக்கப்பட்டதாகத் தோன்றியது
  • பழைய நோய்கள் திரும்பிவருகின்றன
  • பாழாக்கும் புதிய நோய்கள்
  • புதிய நோய்கள் ஏன் தோன்றுகின்றன?
  • மருத்துவ அறிவியலின் வரையறைகள்
  • காரியங்களின் இன்றைய நிலைமை
  • இருபதாம் நூற்றாண்டில் கொள்ளைநோய்
    விழித்தெழு!—1997
  • எதையும் தாக்குப்பிடிக்கும் கிருமிகள்—மீண்டும் பிரவேசிப்பது எப்படி
    விழித்தெழு!—2003
  • நோயை ஒழிப்பதில் வெற்றியும் தோல்வியும்
    விழித்தெழு!—2004
  • நோயற்ற ஓர் உலகம்
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 2/22 பக். 4-9

நுண்ணுயிரிகள் பழிவாங்குதல்

இந்த 20-ம் நூற்றாண்டு, நவீன மருத்துவத்தில் மகத்தான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக, சாவுக்கேதுவான நுண்ணுயிரிகளின் கொடுமைக்கு எதிரில், மனிதர் உண்மையில் உதவியற்றவராக இருந்திருக்கின்றனர். ஆனால், நோய் தொற்றப்பட்டவரைக் கடுமையாகப் பாதிக்காமல் பாக்டீரியாவை முறியடிக்கக்கூடிய முதல் பொருளான ஸல்ஃபனிலமைட்டை அறிவியலாளர்கள் மத்திப 1930-களில் கண்டுபிடித்தபோது காரியங்கள் மாற ஆரம்பித்தன.a

அதைப் பின்தொடர்ந்த வருடங்களில், தொற்றுநோய்களுடன் போராடுவதற்கு சக்தி வாய்ந்த புதிய மருந்துகளை—மலேரியாவைத் தாக்குவதற்கு க்ளோரோகுயின், மேலும் நுரையீரல் அழற்சி, செங்காய்ச்சல், காசநோய் ஆகியவற்றை மேற்கொள்ள நுண்ணுயிர் எதிர் மருந்துகள் (antibiotics) போன்றவற்றை—அறிவியலாளர்கள் உண்டுபண்ணினார்கள். 1965-ற்குள், 25,000-க்கும் அதிகமான வித்தியாசப்பட்ட நுண்ணுயிர் எதிர் மருந்து பொருட்கள் உண்டாக்கப்பட்டிருந்தன. பாக்டீரியாக்களால் வரும் நோய்கள் அக்கறைக்குரியவையாகவோ ஆராய்ச்சி ஆர்வத்திற்குரியவையாகவோ இனிமேலும் இல்லை என்று அநேக அறிவியலாளர்கள் முடிவுசெய்தனர். எப்படியும், விரைவில் இனிமேலும் இல்லாததாக ஆகப் போகும் நோய்களைக் குறித்து ஏன் ஆராய வேண்டும்?

உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில், புதிய தடுப்பு மருந்துகள், மணல்வாரி அம்மை, பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் தட்டம்மை ஆகியவற்றின் பலியாட்களுடைய எண்ணிக்கையில் திடீர் குறைவை ஏற்படுத்தி இருக்கின்றன. இளம்பிள்ளை வாத தடுப்பு சம்பந்தமாக 1955-ல் பெரியளவில் நடத்தப்பட்ட பிரச்சாரம் ஒன்று, எந்தளவுக்கு வெற்றிகரமாக இருந்ததென்றால், மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் அந்த வருடம் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,000 என்பதிலிருந்து 1967-ல் 1,000-க்கும் குறைவாக திடீரென்று குறைந்தது. பெரிய அம்மை என்ற பெரிய உயிர்க்கொல்லி நோய் உலகெங்கும் அடியோடு அழிக்கப்பட்டது.

மின்னணு நுண்ணோக்கியின் கண்டுபிடிப்பையும் இந்த நூற்றாண்டு கண்டிருக்கிறது; மனிதனின் விரல் நகத்தைவிடவும் பத்து லட்ச தடவை சிறியதாக இருக்கும் அதிநுண்ணுயிரிகளை (வைரஸ்கள்) பார்ப்பதற்கு அறிவியலாளர்களுக்கு உதவத்தக்க அவ்வளவு ஆற்றல் வாய்ந்த ஒரு கருவி அது. அப்படிப்பட்ட நுண்ணோக்கிகள், மற்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களுடனும்கூட, முன்னொருபோதும் இராத வகையில் தொற்று நோய்களைக் குறித்துப் புரிந்துகொள்வதையும் அவற்றுடன் போராடுவதையும் சாத்தியமாக்கி இருக்கின்றன.

வெற்றி உறுதியளிக்கப்பட்டதாகத் தோன்றியது

இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக, மருத்துவ சமுதாயம் நம்பிக்கை நிறைந்ததாக இருந்தது. தொற்றுநோய்க்குரிய நுண்ணுயிரிகள் நவீன மருத்துவத்தால் முறியடிக்கப்பட்டு வந்தன. நிச்சயமாகவே, நுண்ணுயிரிகள்மீது அறிவியலின் வெற்றி விரைவானதாக, தீர்வானதாக, முழுமையானதாக இருக்கும்! குறிப்பிட்ட ஒரு நோய்க்கான நிவாரணம் ஏற்கெனவே கிடைக்கக்கூடியதாக இல்லையென்றால், சீக்கிரத்தில் அது கிடைக்கும்.

1948-லேயே, எல்லா தொற்றுநோய்களின் மீதான வெற்றியும் அண்மையில் இருப்பதாக ஐ.மா. ஸெக்ரட்டெரி ஆஃப் ஸ்டேட், ஜார்ஜ் சி. மார்ஷல் பெருமை பாராட்டினார். விரைவில், ஆசியாவிலுள்ள மலேரியா “பெரும் முக்கியத்துவம் வாய்ந்த” நோயாக “இனிமேலும் இருக்காது” என்று மூன்று வருடங்களுக்குப் பின்னர், உலக சுகாதார அமைப்பு (World Health Organization [WHO]) உறுதியாகக் கூறியது. தொற்றுநோய்களைப் பற்றி கவலை கொள்வதை நிறுத்துவதற்கான சமயம் வந்துவிட்டது என்று ஐ.மா. ராணுவ சேவையிலுள்ள தலைமை மருத்துவ அதிகாரி சுகாதார அதிகாரிகளிடம் சொல்லுமளவிற்கு மத்திப 1960-களுக்குள், கொடிய தொற்றுநோய் மற்றும் கொள்ளைநோயின் சகாப்தம் கடந்துசென்றுவிட்டது என்ற நம்பிக்கை பரவியிருந்தது.

பழைய நோய்கள் திரும்பிவருகின்றன

என்றபோதிலும், தொற்றுநோய்களைப் பற்றி கவலை கொள்வதை நிறுத்துவதற்கான சமயம் எவ்விதத்திலும் வந்துவிட்டதாக இல்லை. மருந்துகளையும் நோய் தடுப்பு மருந்துகளையும் அறிவியல் கண்டுபிடித்துவிட்டது என்பதற்காக நுண்ணுயிரிகள் இந்தக் கிரகத்திலிருந்து மறைந்துவிடவில்லை. முறியடிக்கப்படுவதற்கு முற்றிலும் மாறாக, நன்கறியப்பட்ட உயிர்க்கொல்லி நுண்ணுயிரிகள் பழிவாங்கும் வேகத்துடன் திரும்பிவந்தன! அதோடுகூட, சாவுக்கேதுவான மற்ற நுண்ணுயிரிகள்—மருத்துவர்களால் முன்னர் அறியப்படாத நுண்ணுயிரிகள்—தென்பட ஆரம்பித்தன. இவ்வாறாக, பழையவையும் புதியவையுமான நுண்ணுயிரிகள் விரைவாக இங்குமங்குமாகத் திரிந்து, உலகெங்கும் எண்ணிலடங்காத கோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்தி, அல்லற்படுத்தி, அல்லது கொன்றுகொண்டு இருக்கின்றன.

கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக எண்ணப்பட்டிருந்த உயிர்க்கொல்லி நோய்கள், ஒருபோதும் இல்லாத அளவுக்கு சாவுக்கேதுவானவையாகவும் மருந்துகளால் சிகிச்சையளிப்பதை அதிக கடினமாக்குபவையாகவும் மீண்டும் மேலெழும்பி இருக்கின்றன. காசநோய் (TB) அதற்கொரு உதாரணம். சமீபத்தில் WHO இவ்வாறு குறிப்பிட்டது: “1944 முதற்கொண்டு, ஜப்பான், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் TB தொற்றியவர்கள் மற்றும் அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையை உடனடியாக குறைப்பதற்காக TB மருந்துகள் விரிவாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. என்றபோதிலும், குறைந்தளவு வளர்ச்சி அடைந்திருக்கும் நாடுகளில் TB கட்டுப்பாட்டு முயற்சிகள் அசட்டை செய்யப்பட்டிருக்கின்றன, . . . இது இன்னும் அதிக ஆபத்தானதும், பல மருந்துகளுக்கு எதிர்ப்பை வளர்த்துக்கொண்டதுமான வகைகளில், செல்வச்சிறப்புள்ள நாடுகளுக்கு இந்த நோயை இது மீண்டும் திரும்ப வைத்திருக்கிறது.” நுரையீரலில் குடிகொள்ளுகிற பொதுவாகக் காற்றால் பரவும் பாக்டீரியாவால் உருவாக்கப்படும் TB இன்று சுமார் 30 லட்சம் மக்களை ஒவ்வொரு வருடமும்—ஒரு நாளைக்கு 7,000-க்கும் அதிகமானோரை—கொல்லுகிறது. 2005-ம் வருடத்திற்குள், ஒவ்வொரு வருடமும் 40 லட்சம் என்பதாக மரண எண்ணிக்கை உயர்ந்துவிடலாம்.

முன்னாள் உயிர்க்கொல்லிகளாக இருந்த மற்ற நோய்களும் அதிகரிப்பில் இருக்கின்றன. ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பல பகுதிகளில் காலராவும் இப்போது மிகப் பரவலாக உள்ளது; அதுவும் அதிகரிக்கும் எண்ணிக்கையானோரை அல்லற்படுத்தி கொல்லுகிறது. முற்றிலும் புதியதோர் வகை ஆசியாவில் உருவாகி இருக்கிறது.

ஏடிஸ் இஜிப்டி கொசுவால் பரப்பப்படும் டெங்கேயும் விரைவில் அதிகரித்து வருகிறது; அது உலகெங்கிலும் 100-க்கும் அதிகமான நாடுகளிலிருக்கும் 250 கோடி மக்களை தற்போது அச்சுறுத்துகிறது. 1950-கள் முதற்கொண்டு, அந்த நோயின் சாவுக்கேதுவான, இரத்தப்போக்கை ஏற்படுத்தும் புதிய வகை ஒன்று உருவாகி, வெப்பமண்டலப் பகுதியெங்கும் பரவுகிறது. ஒவ்வொரு வருடமும் அது சுமார் 20,000 மக்களைக் கொல்லுவதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதிநுண்ணுயிரிகளால் ஏற்படுத்தப்படும் பெரும்பாலான நோய்களைப் போலவே, அந்த நோய்க்கு எதிராகப் பாதுகாக்கக்கூடிய தடுப்பு மருந்து எதுவும் இல்லை, அதைக் குணப்படுத்தும் மருந்தும் எதுவும் இல்லை.

அடியோடு அழித்துவிடலாம் என்று அறிவியல் ஒருகாலத்தில் நம்பிக்கை வைத்திருந்த மலேரியா, தற்போது சுமார் 20 லட்சம் மக்களை ஒவ்வொரு வருடமும் கொல்லுகிறது. மலேரியா ஒட்டுண்ணிகளையும் அவற்றைக் கொண்டுசெல்லும் கொசுக்களையும் கொல்லுவது வரவர கடினமாகிக்கொண்டிருக்கிறது.

பாழாக்கும் புதிய நோய்கள்

மனிதவர்க்கத்தை வருத்தும்படி சமீபத்தில் உருவாகியிருக்கும் புதிய நோய்களில் மிகவும் நன்கு அறியப்பட்டிருப்பது சாவுக்கேதுவான எய்ட்ஸாக ஒருவேளை இருக்கலாம். சுமார் 12 வருடங்களுக்கு முன்பு அறியப்படாத ஒரு வைரஸால், இந்த குணப்படுத்த முடியாத நோய் ஏற்படுத்தப்படுகிறது. இருந்தாலும், 1994-ன் பிற்பகுதிக்குள், உலகெங்கும் இந்த வைரஸால் தொற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கை 130 மற்றும் 150 லட்சத்திற்கு இடையில் இருக்கிறது.

முன்பு கண்டுணரப்படாத மற்ற தொற்றுநோய்களில் ஹான்டாவைரஸ் நுரையீரல்சார்ந்த நோய்க்குறித் தொகுப்பு உட்பட்டிருக்கிறது. வயல் எலிகளால் கடத்தப்பட்டு, இது தென்மேற்கு ஐக்கிய மாகாணங்களில் தோன்றி, நோய் தொற்றியிருப்பதாக அறிக்கை செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேலானோரை உயிரிழக்கச் செய்தது. இரத்தப்போக்கினால் ஏற்பட்ட காய்ச்சல்களில் இரண்டு வகைகளும்—இரண்டுமே புதியதும், இரண்டுமே உயிரிழக்கச் செய்வதுமானவை—தென் அமெரிக்காவில் உருவாயின. அச்சுறுத்தும் மற்ற நோய்களும் தோன்றியிருக்கின்றன—விநோதமான, புதுமையான பெயர்களை உடைய வைரஸ்கள்—லாசா, ரிஃப்ட் வாலி, ஆராபூஷ், ரோஸி, க்யூ. க்வானாரிடோ, வீ, குரங்கு அம்மை, சிக்குங்குன்யா, மாகால, டூஃபன்ஹாக்க, லடான்டெக், கியாஸனுர் ஃபாரஸ்ட் மூளை வைரஸ், ஸெம்லிகி ஃபாரஸ்ட் ஏஜன்ட், க்ரிமியன் காங்கோ, ஆனியாங்னியாங், சின்ட்பிஸ், மார்பர்க், இபோலா.

புதிய நோய்கள் ஏன் தோன்றுகின்றன?

நவீன மருத்துவ அறிவியலின் எல்லா அறிவு மற்றும் நன்மைகளுடனும்கூட, உயிர்க்கொல்லி நுண்ணுயிரிகளை முறியடிப்பது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது? இன்றைய சமுதாயம் அதிகப்படியாக இடம் விட்டு இடம் பெயர்வதே ஒரு காரணம். நவீன போக்குவரத்து, உள்ளூர் கொள்ளைநோய் ஒன்றை விரைவில் உலகளாவியதாக ஆக்க முடியும். சாவுக்கேதுவான நோய் ஒன்று, தொற்றப்பட்டிருக்கும் ஒருவருக்குள் குடிகொண்டிருந்து உலகின் ஒரு பகுதியிலிருந்து உலகின் மற்றொரு பகுதிக்கு ஒருசில மணிநேரங்களுக்குள் சென்றுவிடுவதை ஜெட் பயணம் சுலபமாக்குகிறது.

உலக மக்கள்தொகை விரைவில் அதிகரித்து வருவது—குறிப்பாக நகரங்களில்—நுண்ணுயிரிகளுக்கு சாதகமாக இருக்கிற இரண்டாவது காரணம். நிச்சயமாகவே, நகரங்களில் குப்பை உருவாகிறது. அப்போது பெய்த மழை நீரால் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கலங்களும் டையர்களும் குப்பையில் இருக்கின்றன. வெப்பமண்டல பகுதிகளில், அவை கொசுக்கள் பெருகுவதில் விளைவடைகின்றன; மலேரியா, மஞ்சள் காய்ச்சல், டெங்கே போன்ற உயிர்க்கொல்லி நோய்களைக் கொண்டுசெல்லும் ஏதுக்கள் அந்தக் கொசுக்களே. மேலுமாக, ஓர் அடர்ந்த காடு நெருப்பு பரவுவதைத் தீவிரப்படுத்தலாம் என்பதுபோல, காசநோய், இன்ஃபுளூயன்சா, மேலும் காற்றால் பரவும் மற்ற நோய்கள் விரைவாகப் பரவுவதற்கு உயர்-அடர்த்தியான மக்கள்தொகை ஏற்ற சூழலை அளிக்கிறது.

மனித நடத்தையில் மாற்றங்கள், நுண்ணுயிரிகள் திரும்பி வருவதற்கான மூன்றாவது காரணம். 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கே உரியதாக இருந்திருக்கிற பல-துணை பாலுறவுகள் எதிர்பாராத அளவில் சம்பவிப்பதன் விளைவாக பாலின உறவுகள் மூலமாகக் கடத்தப்பட்ட நுண்ணுயிரிகள் செழித்தோங்கி பரவியிருக்கின்றன. எய்ட்ஸ் பரவியிருப்பது இதற்கு ஒரு உதாரணம் மட்டுமே.b

மனிதன் வனங்களையும் மழைக் காடுகளையும் ஆக்கிரமித்திருப்பது, நுண்ணுயிரிகளை முறியடிப்பது அவ்வளவு கடினமாக இருப்பதற்கான நான்காவது காரணம். வெப்பமண்டலம் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் நூலாசிரியராகிய ரிச்சர்ட் ப்ரெஸ்டன் குறிப்பிடுவது என்னவென்றால், “எய்ட்ஸ், இபோலா, மற்றும் மழைக் காடுகளில் தோன்றும் நோய் உருவாக்கும் ஏதுக்கள் அத்தனையும் வெளித்தோன்றியிருப்பது, வெப்ப உயிர்மண்டலம் நாசமாக்கப்பட்டதன் இயல்பான விளைவாகத் தோன்றுகிறது. வெளித்தோன்றும் வைரஸ்கள், சூழலியல்ரீதியில் சேதமாக்கப்பட்ட பூமியின் பகுதிகளிலிருந்து வருகின்றன. சிதைவுற்ற வெப்பமண்டல மழைக் காட்டின் விளிம்புகளிலிருந்து அவற்றின் பெரும்பாலானவை வருகின்றன . . . வெப்பமண்டல மழைக் காடுகளே, உலகின் பெரும்பாலான தாவர மற்றும் விலங்கு இனங்களைக் கொண்டிருக்கும் இந்தக் கிரகத்தின் ஆழமான உயிர்த் தேக்கங்களாக இருக்கின்றன. உயிருள்ளவை அனைத்தும் வைரஸ்களைக் கொண்டிருப்பதால், மழைக் காடுகளே உலகின் மிகப் பெரிய வைரஸ் தேக்கங்களாகவும் இருக்கின்றன.”

இவ்வாறாக வைரஸ்கள் கேடுவிளைவிக்காமல் அவற்றிற்குள் குடியிருந்து, இனப்பெருக்கம் செய்து, இறந்தும் போயிருக்கிற பூச்சிகள் மற்றும் சூடான இரத்தமுடைய விலங்குகளுடன் மனிதர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்திருக்கின்றனர். ஆனால் ஒரு வைரஸ், விலங்கிலிருந்து மனிதனிடம் “தாவும்” போது, அந்த வைரஸ் சாவுக்கேதுவானதாகிவிடக்கூடும்.

மருத்துவ அறிவியலின் வரையறைகள்

தொற்றுநோய்கள் மீண்டும் திரும்பி வருவதற்கான மற்ற காரணங்கள் மருத்துவ அறிவியலுடனேயே தொடர்புடையவை. பல பாக்டீரியாக்கள், முன்பு தங்களைக் கொன்ற நுண்ணுயிர் எதிர் மருந்துகளை இப்போது எதிர்க்கின்றன. எதிர்பார்ப்புக்கு முரணாக, நுண்ணுயிர் எதிர் மருந்துகள்தாமே இந்த நிலைமையை உருவாக்க உதவியிருக்கின்றன. உதாரணமாக, தொற்றப்பட்டிருக்கும் ஒருவரில் இருக்கும் கேடு விளைவிக்கும் பாக்டீரியாவில் 99 சதவீதத்தை மட்டுமே நுண்ணுயிர் எதிர் மருந்து ஒன்று கொல்லுகிறதென்றால், அந்த நுண்ணுயிர் எதிர் மருந்தை எதிர்த்துத் தப்பிப்பிழைத்திருக்கிற ஒரு சதவீதம், புதிதாக உழப்பட்ட நிலத்தில் வளரும் அதிக பலமுள்ள வகையான களைகளைப் போல, இப்போது வளர்ந்து பெருகலாம்.

மருத்துவரால் எழுதிக்கொடுக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர் மருந்தின் அளவை முழுமையாக உட்கொள்ளாமல் இருக்கும்போது நோயாளிகள்தாமே பிரச்சினையை அதிகரிக்கிறார்கள். முன்பு இருந்ததைவிட பரவாயில்லை என்று உணர ஆரம்பித்ததும் நோயாளிகள் மருந்துகளை உட்கொள்ளுவதை நிறுத்திவிடக்கூடும். மிகவும் பலவீனமான நுண்ணுயிரிகள் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்றாலும், மிகவும் பலமுள்ளவை தப்பிப்பிழைத்து அமைதியாகப் பெருகும். ஒருசில வாரங்களுக்குள், அந்த நோய் மீண்டும் திரும்புகிறது; ஆனால் இந்த முறை, மருந்துகளை வைத்து குணமாக்குவது மிக கடினமானதாக அல்லது சாத்தியமற்றதாக ஆகிறது. மருந்தை எதிர்க்க வல்ல இந்த நுண்ணுயிரி வகைகள் மற்ற மக்களை தாக்கும்போது, கடுமையான பொது சுகாதார பிரச்சினை விளைகிறது.

WHO-விலுள்ள நிபுணர்கள் சமீபத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “[நுண்ணுயிர் எதிர் மருந்துகளுக்கும் மற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு ஏதுக்களுக்குமான] எதிர்ப்பு, பல நாடுகளில் பரவியிருக்கும் நிலையாக இருக்கிறது; மேலும், பல மருந்துகளுக்கான எதிர்ப்பு, அதிகரித்துவரும் எண்ணிக்கையான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் உண்மையில் திட்டமிட்டுச் செயல்பட எந்த வழியையும் விட்டுவைப்பதில்லை. மருத்துவமனைகளில் மட்டும், உலகெங்கும் ஒவ்வொரு நாளும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகள் பத்து லட்சம் என கணக்கிடப்படுகின்றன; இவற்றில் பெரும்பாலானவை மருந்துகளை எதிர்ப்பவையே.”

இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு அதிகப்படியாகப் பயன்படுத்தப்பட்ட இரத்தமேற்றுதல்களும் தொற்றுநோய்களைப் பரப்புவதற்கு உதவியாய் இருந்திருக்கின்றன. இரத்தத்தை சாவுக்கேதுவான நுண்ணுயிரிகளின்றி வைப்பதற்கான அறிவியலின் முயற்சிகள் இருந்தபோதிலும், கல்லீரல் அழற்சி, சைட்டோமெகலோவைரஸ், நுண்ணுயிர் எதிர் மருந்துகளை எதிர்க்கும் பாக்டீரியா, மலேரியா, செங்காய்ச்சல், சாகாஸ் நோய், எய்ட்ஸ், மற்றும் பல அச்சுறுத்தும் நோய்கள் பரவுவதற்கு இரத்தமேற்றுதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் காரணமாக இருந்திருக்கின்றன.

காரியங்களின் இன்றைய நிலைமை

இந்த நூற்றாண்டின்போது, மருத்துவ அறிவியல், அறிவில் ஓர் திடீர் பெருக்கத்தைக் கண்டிருக்கிறபோதிலும், இன்னும் பல புதிர்கள் இருக்கின்றன. அமெரிக்காவின் முதன்மையான பொது சுகாதார ஆய்வகமாகிய நோய்க் கட்டுப்பாட்டு மையங்களில் சி. ஜே. பீட்டர்ஸ், ஆபத்தான நுண்ணுயிரிகளை ஆராய்கிறார். மே 1995-ல் ஒரு பேட்டியில், அவர் இபோலாவைக் குறித்து சொன்னார்: “அது ஏன் மனிதனின் எதிர்ப்பாற்றல் அமைப்புகளையும் மீறி கடுமையாகத் தாக்குகிறது என்று நமக்குத் தெரியாது; இந்தக் கொள்ளைநோய்களைத் தோற்றுவிக்காமல் இருக்கையில் அது என்ன செய்கிறது [அல்லது] எங்கே இருக்கிறது என்றும் நமக்குத் தெரியாது. அதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. வேறெந்த வைரஸ் குடும்பத்தைக் குறித்தும் . . . நாம் அந்த அளவுக்கு ஆழ்ந்த அறிவில்லாதவர்களாக இல்லை.”

நோய்க்கெதிராகப் போராடுவதற்கு பயன்தரத்தக்க மருத்துவ அறிவு, மருந்துகள், தடுப்பு மருந்துகள் ஆகியவை இருக்கிறபோதிலும்கூட, தேவையிலிருப்பவர்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவதற்குப் பணம் அவசியம். கோடிக்கணக்கானோர் வறுமையில் வாழ்கின்றனர். WHO-வின் உலக சுகாதார அறிக்கை 1995 (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிடுகிறது: “குழந்தைகள் ஏன் தடுப்பூசி குத்தப்படாமல் இருக்கிறார்கள், சுத்தமான தண்ணீரும் ஆரோக்கியகரமான வசதிகளும் ஏன் செய்யப்படவில்லை, குணப்படுத்தும் மருந்துகளும் மற்ற சிகிச்சைகளும் ஏன் கிடைப்பவையாய் இல்லை என்பதற்கு வறுமையே முக்கிய காரணம் . . . வளர்முக நாடுகளில் ஒவ்வொரு வருடமும் 5 வயதுக்கு கீழுள்ள 1 கோடியே 22 லட்சம் பிள்ளைகள் சாகின்றனர்; ஒரு பிள்ளைக்காக ஒருசில ஐமா சென்ட்டுகளை மட்டும் செலவிட்டால் தவிர்க்கக்கூடிய காரணங்களாலேயே அவர்களில் பெரும்பாலானோர் சாகின்றனர். உலகில் அதிகப்படியானோருடைய அலட்சியத்தின் காரணமாகவே அவர்கள் பெரும்பாலும் சாகிறார்கள், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் ஏழைகளாய் இருப்பதால் சாகிறார்கள்.”

1995-ற்குள், தொற்றுநோய்களும் ஒட்டுண்ணிகளும் ஒவ்வொரு வருடமும் 164 லட்சம் மக்களின் உயிர்களை அழித்து, உலகின் மிகப் பெரிய உயிர்க்கொல்லிகளாக இருந்தன. வருந்தத்தக்க விதத்தில், சாவுக்கேதுவான நுண்ணுயிரிகள் தோன்றுவதற்கும் பரவுவதற்கும் ஏற்றதாகவுள்ள சூழ்நிலைகளில் எண்ணற்ற கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். இன்றிருக்கும் கவலைக்குரிய நிலைமையை எண்ணிப்பாருங்கள். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கொடிய வறுமையில் இருக்கின்றனர். உலக மக்கள்தொகையில் பாதிபேர், மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான மருந்துகளை ஒழுங்காகப் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். மாசுபடுத்தப்பட்ட பெரிய நகரங்களின் தெருக்களில் லட்சக்கணக்கான கைவிடப்பட்ட பிள்ளைகள் அலைந்து திரிகின்றனர்; அவர்களில் பலர் போதை மருந்துகளுள்ள ஊசிகளைக் குத்திக்கொண்டும், விபசாரம் செய்துகொண்டும் இருக்கின்றனர். காலரா, சீதபேதி, இன்னும் மற்ற நோய்களின் மத்தியில் ஆரோக்கியமற்ற முகாம்களில் லட்சக்கணக்கான அகதிகள் வாடுகின்றனர்.

மனிதனுக்கும் நுண்ணுயிரிக்கும் இடையிலான போரில், நிலைமைகள் நுண்ணுயிரிக்கே அதிக சாதகமாக இருந்திருக்கின்றன.

[அடிக்குறிப்புகள்]

a ஸல்ஃபனிலமைட் என்பது ஒரு படிகவடிவ கூட்டுப்பொருள்; ஆய்வகத்தில் ஸல்ஃபா மருந்துகள் அதிலிருந்து உண்டாக்கப்படுகின்றன. ஸல்ஃபா மருந்துகள், பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடை செய்து, உடலின் சொந்த தற்காப்பு இயக்க ஏற்பாடுகள் பாக்டீரியாக்களைக் கொல்லும்படி அனுமதிக்கின்றன.

b பால்வினை நோய்களுக்கு வேறு உதாரணங்கள்: உலகெங்கும் டிரைகோமோனியாஸிஸால் சுமார் 23.6 கோடி பேரும், க்ளமீடிய தொற்றுகளால் சுமார் 16.2 கோடி பேரும் நோய் தொற்றப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் புதிதாக சுமார் 3.2 கோடி பேர் பிறப்புறுப்பு மருக்களால், 7.8 கோடி பேர் வெட்டை நோயால், 2.1 கோடி பேர் பிறப்புறுப்புச் சிற்றக்கிகளால், 1.9 கோடி பேர் மேகநோயால், 90 லட்சம் பேர் மென்கிரந்தியால் தாக்கப்படுகின்றனர்.

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

“மருத்துவமனைகளில் மட்டும், உலகெங்கும் ஒவ்வொரு நாளும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகள் பத்து லட்சம் என கணக்கிடப்படுகின்றன; இவற்றில் பெரும்பாலானவை மருந்துகளை எதிர்ப்பவையே.” உலக சுகாதார அமைப்பு

[பக்கம் 7-ன் பெட்டி]

நுண்ணியிரிகள் எதிர்த்து போராடும்போது

பாக்டீரியம் என்ற ஒரு சிறிய நுண்ணுயிரி “0.00000000001 கிராம் என்ற அளவுக்கு அவ்வளவு குறைவான எடையுள்ளது. ஒரு நீல திமிங்கலம் சுமார் 10,00,00,000 கிராம் எடையுள்ளது. இருந்தாலும் ஒரு பாக்டீரியம் ஒரு திமிங்கலத்தைக் கொல்ல முடியும்.”—பெர்னார்ட் டிக்ஸன், 1994.

மருத்துவமனைகளில் காண்பவற்றில் மிகவும் அஞ்சத்தக்க பாக்டீரியாக்களில் மருந்தை எதிர்க்கிற ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரியஸ் வகைகள் இருக்கின்றன. இந்த வகைகள் நோய்வாய்ப்பட்டவர்களையும் பலவீனமானவர்களையும் தாக்கி, இரத்தத்தில் சாவுக்கேதுவான தொற்றுகளையும், நுரையீரல் அழற்சியையும், நச்சு அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. ஒரு கணக்கீட்டின்படி, ஐக்கிய மாகாணங்களில், ஸ்டெஃபைலோகாக்கஸ் சுமார் 60,000 மக்களை ஒவ்வொரு வருடமும் கொல்லுகிறது—கார் விபத்துக்களில் சாகிறவர்களைவிட இவர்கள் அதிகம் பேர். பல வருடங்கள் சென்றபோது, பாக்டீரியாக்களின் இந்த வகைகள், நுண்ணுயிர் எதிர் மருந்துகளுக்கு அவ்வளவு எதிர்ப்புள்ளவையாய் ஆகிவிட்டிருப்பதால், 1988-ற்குள் அவற்றிற்கு எதிராக வாங்கமைஸன் என்ற ஒரே ஒரு நுண்ணுயிர் எதிர் மருந்து மட்டுமே இருந்தது. என்றபோதிலும், விரைவில், வாங்கமைஸன்-எதிர்ப்பு வகைகளும் தோன்றுவதாக உலகெங்கிலுமிருந்து அறிக்கைகள் வந்தன.

நுண்ணுயிர் எதிர் மருந்துகள், அவற்றின் கடமையை செய்கிறபோதிலும்கூட, மற்ற பிரச்சினைகள் எழும்பக்கூடும். மத்திப 1993-ல், ஜோன் ரே, வழக்கமான ஒரு அறுவை சிகிச்சைக்காக ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றார். ஒருசில நாட்களுக்குள்ளேயே வீடு திரும்பிவிடலாம் என அவர் நினைத்திருந்தார். மாறாக, குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்பட்ட தொற்றுகள் காரணமாக 322 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. வாங்கமைஸன் உட்பட நுண்ணுயிர் எதிர் மருந்துகளை பெரும் அளவுகளில் பயன்படுத்தி மருத்துவர்கள் அந்தத் தொற்றுகளுடன் போராடினார்கள், ஆனால் அந்த நுண்ணுயிரிகள் எதிர்த்துப் போராடின. ஜோன் சொன்னார்: “என்னால் என் கைகளைப் பயன்படுத்த முடியவில்லை. என் கால்களையும் பயன்படுத்த முடியவில்லை. . . . வாசிப்பதற்காக ஒரு புத்தகத்தை எடுக்கக்கூட என்னால் முடியவில்லை.”

மாதக்கணக்கில் நுண்ணுயிர் எதிர் மருந்துகளை உட்கொண்ட பின்னரும் ஜோன் ஏன் நோயுற்றவராக இருக்கிறார் என்று கண்டுபிடிக்க மருத்துவர்கள் கடுமையாக முயன்றனர். ஸ்டெஃபைலோகாக்கஸ் தொற்றுடன்கூட ஜோனுக்குள் வேறொரு வகையான பாக்டீரியாவும்—அதாவது, வாங்கமைஸனை எதிர்க்கவல்ல என்டெரோகாக்கஸ்—இருந்ததென்று ஆய்வக பரிசோதனை காண்பித்தது. அந்தப் பெயர் தெரிவிக்கிறபடி, இந்த பாக்டீரியா வாங்கமைஸனால் பாதிக்கப்படவில்லை; மற்றெந்த நுண்ணுயிர் எதிர் மருந்துக்கும் அது தடைக்காப்புள்ளதாய் இருந்ததாகவும் தோன்றியது.

பின்னர் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஏதோவொன்றை அவர்கள் கண்டறிந்தார்கள். அந்த பாக்டீரியா, அதைக் கொல்ல வேண்டிய மருந்துகளை எதிர்த்தது மட்டுமல்லாமல், அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக, அது உண்மையில் பிழைத்திருப்பதற்கு வாங்கமைஸனைப் பயன்படுத்திக்கொண்டது! தொற்றுநோய் நிபுணராகிய ஜோனின் மருத்துவர் சொன்னார்: “[அந்த பாக்டீரியா] பெருகுவதற்கு வாங்கமைஸன் தேவைப்பட்டது, அது கிடைக்கவில்லையென்றால் அவை வளர்ச்சி அடையாது. ஆகவே, ஒரு விதத்தில், அவை வாங்கமைஸனை உணவாக பயன்படுத்துகின்றன.”

ஜோனுக்கு வாங்கமைஸன் கொடுப்பதை மருத்துவர்கள் நிறுத்தியபோது, அந்த பாக்டீரியா செத்துவிட்டது; ஜோனும் ஆரோக்கியமடைந்து வந்தார்கள்.

[பக்கம் 9-ன் படம்]

இரத்தமேற்றுதல்கள் சாவுக்கேதுவான நுண்ணுயிரிகளை பரப்புகின்றன

[பக்கம் 8-ன் படம்]

நோயாளிகள் நுண்ணுயிர் எதிர் மருந்துகளை சரியற்ற விதத்தில் பயன்படுத்தும்போது நுண்ணுயிரிகள் செழித்தோங்குகின்றன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்