சூதாட்டம்—’90-களின் அடிமையாதல்
வண்ண ஃபிலிம் போடப்பட்ட ஒரு காமிரா கண்ணைக் கவருகிறது. ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளின் இரண்டு பக்கங்கள் முழுவதும் படம் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட கண் காணும்மட்டும், பிரமாண்டமான பண்டகசாலை பிங்கோ நிலையமாக மாற்றப்பட்டது, அதனுடைய ஆயிரக்கணக்கான சதுர மீட்டர் அளவுள்ள இடம், பல்வேறு வயதையுடைய, பல்வேறு நிறத்தையுடைய சூதாட்ட வாடிக்கையாளர்களால் சுறுசுறுப்பாக இருக்கிறது. மணிக்கணக்கில் இடைவிடாமல் விளையாடியதன் அடையாளங்களான அவர்களுடைய களைத்துப்போன முகங்களையும் இரத்தசிகப்பேறிய கண்களையும் பார்க்கிறீர்களா? அடுத்த எண் அறிவிக்கப்படுவதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள், அந்த வெற்றியே கிட்டாத இரவில், கடைசியிலாவது ஜெயிப்பார்கள் என்று நம்பக்கூடும்.
செய்தித்தாளின் பக்கங்களைத் திருப்புங்கள். சீட்டுக்களால் நிறைந்திருக்கும் கைகளை, ஆட்டத்தில் தோல்வியடையப்போகும் பயத்துடன் இருக்கும் கவலை தோய்ந்த ஆட்களின் முகங்களைப் பார்க்கிறீர்களா? பல சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கான டாலர்கள் கடைசி சீட்டு எடுக்கப்பட்டதால் ஜெயிக்கப்படுகின்றன மற்றும் தோற்கப்படுகின்றன. படங்களையும் தாண்டி கற்பனைசெய்து பாருங்கள். நடுங்கும் கைகளின் வியர்க்கும் உள்ளங்கைகளை உங்களால் பார்க்கமுடிகிறதா? வேகமான இருதயத் துடிப்பையும் ஒருவர்மாறி அடுத்தவர் தோற்கிறதையும், அடுத்த சுற்றில் நல்ல சீட்டு வரவேண்டும் என்று அமைதியாகச் சொல்லும் ஜெபங்களையும் கேட்கமுடிகிறதா?
ஆடம்பரமான ஹோட்டல்கள், படகுகள் ஆகியவற்றில் அமைந்துள்ள சொகுசான சீட்டாட்ட அரங்கங்களின் உள்ளே செல்லுங்கள். பளிச்சென்று சாயம்பூசப்பட்ட ஸ்லாட் இயந்திரங்களின் சுற்றிச்சுற்றி செல்லும் பாதை ஒன்றில் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? அவற்றின் கைப்பிடிகளை இழுப்பதனால் உண்டாகும் சத்தத்தினாலும் வேகமாக சுழலும் சுழல்வட்டுக்களின் சத்தத்தினாலும் நீங்கள் செவிடானதுபோல் உணர்கிறீர்களா? ஜெயித்தாலும் சரி தோற்றாலும் சரி, சுழல்வட்டின் சத்தம், விளையாடுவோரின் காதுகளுக்கு இனிய இசையாக ஒலிக்கிறது. “அவர்களுக்கு உள்ள குதூகலம் என்னவென்றால், ஸ்லாட் இயந்திரத்தின் கைப்பிடியை அடுத்ததாக இழுக்கும்போது என்ன நேரிடும் என்னும் கிளர்ச்சியே ஆகும்,” என்று சீட்டாட்ட அரங்கம் ஒன்றின் தலைவர் கூறுகிறார்.
ரூலட் மேஜைகளைச் சூழ்ந்துள்ள ஜனக்கூட்டத்தின் ஊடே நீங்கள் செல்லுங்கள். சக்கரத்தை சுழற்றும்போது, அதனுடைய சிகப்பு கறுப்பு கட்டங்கள் உங்கள் கண்களின்முன் சுழலும்போது, நீங்கள் வசியமாகலாம். காய் விழும் சத்தம் வசிகரத்தை இன்னும் கூட்டுகிறது. அது சுழன்றுசுழன்று செல்கிறது, அது எங்கு நிற்கிறதோ, அதுதான் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வேறுபாடு. ஒரே ஒரு சுற்றில் ஆயிரக்கணக்கான டாலர்கள் அடிக்கடி இழக்கப்படுகின்றன.
உலகளாவிய விதத்தில், படங்களையும் காட்சிகளையும் பல பத்தாயிர மடங்குகளாகவும், ஆடுவோரை எண்ணற்ற லட்சக்கணக்கிலும், அமைந்திருக்கும் இடங்களை ஆயிரக்கணக்கிலும் பெருக்குங்கள். அவர்கள் தங்களுடைய சூதாட்ட மோகத்தைத் தணித்துக்கொள்ள, உலகத்தின் பல பாகங்களிலிருந்து விமானம், இரயில், பஸ், கப்பல் மற்றும் கார் மூலம் வருகிறார்கள். “சூதாட்ட வெறி: மறைந்துள்ள ஒரு வியாதி, ’90-களின் அடிமையாதல்,” என்று அழைக்கப்படுகிறது. “உலகமுழுவதிலும் சூதாட்டத்தை சட்டரீதியாக்கும் வரலாற்று புகழ்பெறும்காலம் 1990-கள் என்று நான் முன்னறிவிக்கிறேன்,” என்பதாக கூறினார் ஆராய்ச்சியாளர் டூரான்ட் ஜேகப்ஸ், சூதாட்ட நடத்தையின் தேசிய அதிகாரி.
எடுத்துக்காட்டாக, ஐக்கிய மாகாணங்களில் 1993-ல் முக்கிய பந்தாட்ட நிகழ்ச்சிக்காக தளப் பந்தாட்ட அரங்கங்களில் வருகைதருவதைக் காட்டிலும், சூதாட்ட அரங்கங்களுக்கு அதிக அமெரிக்கர்கள் சென்றார்கள்—9.2 கோடியாட்கள். புதிய சூதாட்ட அரங்கங்கள் கட்டுவது முடிவிலா ஒன்றென தோன்றுகிறது. கிழக்கு கடற்கரையோரத்தில் இருக்கும் ஹோட்டல்கள் சிறப்பாக செயல்படுகின்றன. “சூதாட்ட அரங்கிற்கு நாள் ஒன்றுக்கு வருகை தருவோரின் கணக்கிடப்பட்ட எண்ணிக்கை 50,000. இவர்களுக்கு இடவசதி செய்துகொடுக்குமளவிற்கு கிட்டத்தட்ட போதுமான அறைகள் இல்லை.”
கொஞ்சக் காலத்திற்குமுன் தென்மாகாணங்களில் சூதாட்டம் ஒரு பாவமான செயலாகக் கருதப்பட்டது, இப்போது, 1994-ல் அது இருகரம் நீட்டி வரவேற்கப்படுகிறது, இரட்சகராகக் கருதப்படுகிறது. “பைபிள் பெல்ட் என்று அழைக்கப்பட்டதை இன்று பிளாக்ஜாக் பெல்ட் என்று பெயர்மாற்றம் செய்யலாம். மிஸ்ஸிஸிபி, லூசியானா முழுவதிலும் மிதக்கும் சூதாட்ட அரங்கங்கள் மற்றும் தரை சூதாட்ட அரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. அதிகமானவற்றிற்கு ஃப்ளாரிடா, டெக்ஸஸ், அலபாமா, அர்கான்ஸாஸ் ஆகிய இடங்களில் அதிகம் கட்டப்படுவதற்கும் திட்டமிடுகிறது,” என்பதாக யு.எஸ்.நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் கவனித்துள்ளது. சில மதத் தலைவர்கள் சூதாடுவது பாவமானது என்ற தங்களுடைய எண்ணத்திலிருந்து இப்போது 180-டிகிரி திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, நியூ அர்லியன்ஸ், லூசியானா ஆகியவற்றின் நகர அதிகாரிகள், அந்நகரத்தின் முதல் மிதக்கும் சூதாட்ட அரங்கத்தை மிஸ்ஸிஸிபி ஆற்றில் 1994-ல் திறந்துவைத்தபோது, ஒரு பாதிரியார் ஜெபம்செய்து, “விளையாடும் திறமை: ஒரு நற்குணம்,” என்று கடவுளுக்கு நன்றி செலுத்தி, “அதனால் நகரத்தை ஆசீர்வதித்தீர்,” என்று சொன்னார்.
2000 வருடத்திற்குள், அமெரிக்கரில் 95 சதவீதத்தினர், சூதாட்ட அரங்கத்தை 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் சென்றடையும்படி வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பழங்குடியினர்கள்கூட சூதாட்டத்தில் பெரும்பங்கை அடைந்துள்ளனர். இவ்வாறாக, ஐ.மா. அரசாங்கம் 225 சூதாட்ட அரங்கங்களுக்கும், அதிக பணம்கட்டும் பிங்கோ அரங்கங்களுக்கும் தேசம் முழுவதிலும் இயங்க அனுமதியளித்தது என்று யு.எஸ்.நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் அறிவித்தது.
இதில் சீட்டாட்ட அறைகளும், விளையாட்டுப் போட்டிகளில் பந்தயம் வைத்தல், குதிரை, நாய் ஆகியவற்றின் ஓட்டப்பந்தயம், சர்ச்சு பிங்கோ போன்றவற்றையும் சேர்த்தால், 1993-ல் எவ்வாறு அமெரிக்கர்கள் $39,400 கோடியை சட்டரீதியாக சூதாடி தோற்றார்கள் என்பது தெளிவாகிறது. அது முந்தைய ஆண்டைவிட 17.1 சதவீத அதிகரிப்பாகும். சூதாட்டத்தை எதிர்ப்பவர்கள் திகைத்து நிற்கிறார்கள். “மக்களுக்கு நாம் உதவுவதில் மிகப்பெரியவை எவையெனில் சர்ச்சுகளும் கோயில்களும் அரசாங்கங்களும் ஆகும்,” என்று கவுன்சில் ஆன் கம்பல்ஸிவ் கேம்பிலிங்கின் தலைமை நிர்வாக இயக்குனர் கூறினார். “அவை அனைத்தும் சூதாட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளன.” ஒரு அமெரிக்க செய்தித்தாள் ஐக்கிய மாகாணத்தை ஒரு “சூதாட்ட தேசம்,” என்று அழைத்து, சூதாட்டம் “அமெரிக்காவின் உண்மையான தேசிய பொழுதுபோக்கு,” என்று கூறியது.
இங்கிலாந்து, தன்னுடைய முதல் லாட்டரியை 1826-ல் துவங்கியது, வியாபாரம் தீவிரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அது பிங்கோ வளர்ச்சியையும்கூட மிகுதியாக அனுபவிக்கிறது என்று தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கிறது. “தற்போது, மாஸ்கோ சுறுசுறுப்பான சூதாட்ட அரங்கங்களால் பின்னப்பட்டுள்ளது. லெபனான் சூதாட்டக்காரர்கள், மேற்கு பெய்ரூட் சூதாட்ட அரங்கிற்கு செல்ல தங்கள் உயிரை உண்மையிலேயே ஆபத்துக்குள்ளாக்குகிறார்கள், அவை படைவீரர்களாலும், மத அடிப்படைவாதிகளாலும் தாக்கப்படுகின்றன. பெரிய தொகையை ஜெயிப்பவர்கள் அவர்களின் வீடுவரை சூதாட்ட அரங்கின் காவலாளிகளால் இயந்திர துப்பாக்கிகளுடன் பாதுகாப்பாக கூட்டிச்செல்லப்படுகின்றனர்,” என்பதாக டைம்ஸ் அறிவித்தது.
“கனடா நாட்டவர் தாங்கள் ஒரு சூதாட்ட தேசத்தார் என்பதை உணர்ந்து கொள்வதில்லை” என்று கூறுகிறார் மாநில விளையாட்டு ஒழுங்கமைப்பாளர். “ஒருவேளை சில அம்சங்களில், சூதாட்டத்தின் உச்சநிலை ஐ.மா.-வில் இருப்பதைக்காட்டிலும் கனடாவில் அதிகமாக இருக்கிறது” என்று அவர் மேலும் கூறினார். “கடந்தாண்டில் சட்டப்பூர்வமான சூதாட்டங்களிலும் பந்தயங்களிலும் கனடா நாட்டவர் $1,000 கோடிக்கும் மேலாக செலவழித்தனர். இது அவர்கள் திரைப்படங்களுக்குச் சென்று செலவழிப்பதைக்காட்டிலும் கிட்டத்தட்ட 30 மடங்காகும்,” என்று தி க்ளோப் அண்ட் மெய்ல் செய்தித்தாள் அறிக்கை செய்தது. “பிங்கோ தொழில் ஐ.மா.-வில் எப்போதும் இருந்ததைக்காட்டிலும் கனடாவில் மிகவும் உயர்ந்தளவில் வளர்ச்சியடைந்துள்ளது. லாட்டரி தொழில் மிக அதிகளவில் கனடாவில் வளர்ச்சியடைந்துள்ளது. இது குதிரைப் பந்தயத்திற்கும் பொருந்துவதாய் இருக்கிறது,” என்று அந்தச் செய்தித்தாள் கூறியது.
“தென் ஆப்பிரிக்காவில் எத்தனை சூதாட்ட அடிமைகள் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் குறைந்தபட்சம் ‘ஆயிரக்கணக்கானோர்’ இருக்கிறார்கள்” என்று தென் ஆப்பிரிக்காவின் செய்தித்தாள் எழுதியது. ஸ்பெய்ன் அரசாங்கம் இந்தப் பிரச்சினையையும் வளர்ந்துவரும் சூதாட்டக்காரர்களின் எண்ணிக்கையையும் பற்றி நன்றாகவே அறிந்துள்ளது. அதனுடைய 3.8 கோடி மக்கள் தொகையில், பலர் சூதாடி ஒரு வருடத்தில் $2,500 கோடி தோற்றதாக அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது உலகத்தில் உயர்ந்தளவு சூதாடும் இடங்களில் ஸ்பெய்னையும் சேர்க்கிறது. “ஸ்பெய்ன் நாட்டவர் வேரூன்றிய சூதாட்டக்காரர்கள்,” என்று சூதாட்டக்காரர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட கூட்டமைப்பின் நபர் ஒருவர் கூறினார். “அவர்கள் எப்போதுமே அப்படிதான். . . . குதிரைப் பந்தயம், கால்பந்தாட்டம், லாட்டரி ஆகியவற்றின் மீது சூதாடுகிறார்கள். அதுமட்டுமல்ல ரூலட், போக்கர், பிங்கோ மற்றும் அந்தக் கொடுமையான பணம்விழுங்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் மீதும் சூதாடுகிறார்கள்.” வெகு சமீப ஆண்டுகளில்தான் சூதாட்ட வெறி ஒரு உளநோய் வேதனை என்று ஸ்பெய்னில் உணரப்பட்டுள்ளது.
இத்தாலியும்கூட இந்தச் சூதாட்ட காய்ச்சலால் தாக்கப்பட்டுள்ளது என்பதை கிடைத்துள்ள அத்தாட்சி காட்டுகிறது. லாட்டரியிலும் விளையாட்டு நிகழ்ச்சியில் பந்தயங்கட்டுதல் இவற்றில் மட்டுமின்றி, பிங்கோ பாணி செய்தித்தாள் போட்டிகள், சூதாட்ட மேசைகளில் கோடிக்கணக்கில் கொட்டப்படுகின்றன. “சூதாட்டம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியுள்ளது,” என்று அரசாங்க-நிதி ஆராய்ச்சிக் குழுவிடமிருந்து வரும் அறிக்கை கூறியது. இன்று “சூதாட்டத்தின் அளவு முன்னோருபோதும் கற்பனைசெய்யாத அளவை எட்டிவிட்டது. அரசாங்க அதிகாரிகளிலிருந்து சர்ச் பாதிரிமார்கள்வரை பணத்தை அடைவதற்காகப் பந்தயத்திடமாக ஓடுகிறார்கள்,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் எழுதியது.
எவ்வளவு உண்மையானது! பல சந்தர்ப்பங்களில், பின்வரும் கட்டுரைகள் காட்டப்போகிறபடி சூதாட்டமானது மனிதனுடைய ஒவ்வொரு வாழ்க்கையின் அம்சங்களையும் பாதிக்கிறது.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
ஒரு காலத்தில் பாவமான செயல் —இப்போது ஒரு “இரட்சகர்”
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
சூதாட்ட தொற்றுநோய் உலகளவில் பரவுகிறது