உலகத்தைக் கவனித்தல்
ஒளி மங்கிய “முத்து”
“ஒரு சமயம் கத்தோலிக்க சமயத்தின் முத்தாக இருந்த ஸ்பய்ன்” இனிமேலும் “மதசம்பந்தமான நம்பிக்கை மற்றும் பற்றின் பலம் பொருந்திய கோட்டையாக இல்லை” என்பதாக ஜெர்மன் செய்திப் பத்திரிகை டெர் ஸ்பகல் குறிப்பிடுகிறது. “இளைஞர் கத்தோலிக்க சமயத்தை வெறுமென ஒரு பெயர் அட்டையாக மாத்திரமே காண்கிறார்கள்.” இது வெறுமென ஒரு சமுதாய சடங்காக, விவாகங்கள் மற்றும் சவ அடக்கங்கள் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஓர் ‘அலங்கார வரைச்சட்டமாக’ மாறிவிட்டிருப்பதாக கருத்தறிவிப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். “பரம்பரை வழக்கமாகச் செய்யப்பட்டுவரும் புனித வார ஊர்வலங்களும்கூட குறைவாகவே தெய்வ பக்தியின் வெளிக்காட்டாகவும் அதிகமாக ஒருவிதமான பரிசுத்த சடங்கு” போலவும் இருப்பதாகக் கட்டுரை தெரிவிக்கிறது. கீழ்நோக்கிய இந்தச் சரிவை புள்ளி விவரங்களில் காணமுடிகிறது. மரித்துப்போகும் மதகுருமாரில் பாதிக்கும் குறைவானவர்களுடைய இடங்களே புதிய நியமிப்புகளால் நிரப்பப்படுகையில், சமயகுருமார் மத அமைப்பு சுருங்கிவிடுகிறது. பொது ஜனத்தில் மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே ஆராதனைக்கு ஒழுங்காகச் செல்கின்றனர் அல்லது போப் தவறாவரமுடையவர் என்று நம்புகின்றனர். கத்தோலிக்க சமய போதகத்துக்கு எதிர்மாறாக, பெரும்பாலான பெண்கள் கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்துகின்றனர், ஆண்டுதோறும் ஸ்பய்னில் 1,00,000-க்கும் மேற்பட்ட கருச்சிதைவுகளும் 29,000 விவாகரத்துக்களும் செய்யப்படுகின்றன.
இலஞ்சஊழல் அறிக்கை மையங்கள்
அதிகாரிகளை பொறுப்புள்ளவர்களாகவும் நேர்மையுள்ளவர்களாகவும் வைக்கும் முயற்சியில் சீனா, தேசம் முழுவதிலும் இலஞ்ச ஊழல் அறிக்கை மையங்களை நிறுவி வருகிறது. “சட்டத்தின்படி அரசாங்கத்தின் வேலையை சாதாரண மக்கள் கண்காணிப்பதை ஊக்குவிப்பதும், அரசாங்க இலாக்காக்கள் மற்றும் அதிகாரிகளின் அதிகார துர்ப்பிரயோகத்தை வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு ஒரு வழியை அளிப்பதுமே இதன் நோக்கமாகும்” என்பதாக சீனா மீண்டும் உருவாகிறது என்ற பத்திரிகை விளக்குகிறது. “சீன நாட்டவரோ அல்லது அயல்நாட்டவரோ, தேசத்திலுள்ள எவருமே புகார் பதிவு செய்யலாம்.” அண்மைக்கால மாற்றங்கள் அதிகாரிகளுக்குக் கூடுதலான ஊழலுக்கும் குற்ற நடவடிக்கைளுக்கும் வாய்ப்புகளை அளித்திருப்பதால், இந்த மையங்கள் அவசியமானவையாக காணப்பட்டன. புகார் கொடுப்பவர்களுக்கு வழக்கின் முடிவு பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டு பழிவாங்கலைத் தடுப்பதற்காக அவர்களுடைய பெயர்கள் இரகசியமாக வைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட மையங்கள் ஜுன் மாத முடிவுக்குள் தேசத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவப்பட திட்டமிடப்பட்டிருக்கின்றன.
கடவுளிடம் நெருங்கிப்போகவா?
ரோமில் 452 அடி உயரமுள்ள சிலுவையையுடைய தூய பீட்டரின் நெடுமாடக் கோயில் இனிமேலும் உலகிலுள்ள மிகப்பெரிய “கிறிஸ்தவக்” கட்டிடமாக இருக்காது. அதனுடைய முதலிடத்தை எடுத்துக் கொண்டிருப்பது கோட்டி டெலவோரிலுள்ள யமசுக்ரோவின் சமாதான ராக்கினி ஆலயமாகும். இது 4,000 வித்தியாசமான வண்ணங்களில் நிறமூட்டப்பட்டக் கண்ணாடியையும், பண்டைய கிரேக்க கட்டிடக் கலையைச் சேர்ந்த 272 தூண்களையும் 7.4 ஏக்கர் பளிங்குக்கல்லாலான மாபெரும் மேடையையும் கொண்டது. கட்டி முடிக்கப்படும்போது, அதன் சிலுவை 489 அடி உயரத்தில் நிற்கும். நெடுமாடக் கோயில் மாத்திரமே நீளத்தில் 623 அடியாக—தூய பீட்டரினுடையதைவிட சுமார் 20 அடி நீளமானதாக இருக்கும். 8,000 பேர் உள்ளே உட்கார வசதியுள்ள இக்கோயில் குளிர்சாதனம் செய்யப்பட்டதாயுமிருக்கும். நெடுமாடக் கோயில் கட்டிடத் தொகுதியின் மொத்த நீளம் 1,525 அடிகளாகும். இதற்கிடையில், காசபிளான்காவிலுள்ள மொராக்கோவின் ராஜா இரண்டாம் ஹசான் விண்ணில் 500 அடிக்கு மேலாக உயர்ந்திருக்கும் பள்ளிவாயில் தூபியைக் கொண்ட, உலகிலேயே மிகப்பெரிய மசூதியைக் கட்டிவருகிறார். (g89 5/8)
மொசாம்பிக்கில் மத சுதந்திரம்
மொசாம்பிக்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு 1988-ல் ஓரளவு மத சுதந்திரம் வழங்கப்பட்டதாக ஆப்பிரிக்க செய்தி அறிவிக்கிறது. அரசியல் கோஷங்களைத் திரும்பக்கூறும், பைபிளால்-பயிற்றுவிக்கப்பட்ட இவர்களுடைய மனச்சாட்சிக்கு விரோதமானச் செயலைச் செய்ய மறுத்தக் காரணத்துக்காக 1975-ல் இவர்களில் ஆயிரக்கணக்கானோரை அரசாங்கம் ஒதுக்கமாயிருந்த தூர வட மாநிலங்களுக்கு நாடு கடத்தி தண்டனை அளித்தது. அங்கே அவர்கள் 1986 வரையாக ஒதுக்கமாக வாழ்ந்துவந்தனர். அந்தச் சமயம் மொசம்பிக் அரசாங்கத்தை எதிர்த்த கலக கும்பல்கள் இவர்களைத் தாக்கவும், பெண்களை அடிமைகளாக்கி, அநேகரை கொல்லும் சேனையின் ஒரு பகுதியின் மூலமாக கொலை செய்யவும் ஆரம்பித்தனர். அவர்கள் அருகிலிருந்த மலாவிக்கு ஓட, மலாவி இவர்களைத் தேசத்திலிருந்து வெளியேற்ற ஐக்கிய நாடுகளின் உதவியை நாடியது. பின்னர், மொசம்பிக் அரசாங்கம் சாட்சிகளை நாடு கடத்தியிருந்த தடைகளை விலக்கிக் கொள்ளவும் 14 ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் விட்டுச்சென்ற வீடுகளுக்குத் திரும்பவும் அனுமதி வழங்கியது. அவர்கள் இன்னும் உண்மையுடன் தங்கள் கிறிஸ்தவ நடுநிலையைக் காத்து வருகின்றனர். தற்போது அரசாங்கம் அவர்களை அமைதியோடு வாழவும் வணங்கவும் அனுமதித்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.
பேராசை மரங்களை அழிக்கிறது
இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலம், 1952 முதற்கொண்டு அதன் விலைமதிப்பில்லா காடுகளில் சுமார் பாதியை இழந்துவிட்டிருப்பது—வெறும் மரங்களை வெட்டியதினால் மாத்திரமல்ல. மரப்பிசினுக்காகச் சட்டத்துக்கு மாறாக தேவதாரு மரங்களில் துளையிட்டு பிசினை வடியவிடுவது பெரும்பாலான சேதத்தை உண்டுபண்ணுவதாக இந்தியா டுடே அறிக்கைச் செய்கிறது. மரங்களை சேதப்படுத்தாது எவ்விதமாக துளையிட்டு வடியவிடுவது என்பது பற்றி காட்டிலாக்கா ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறது. ஆனால் இதுவரையாக அது ஆணைகளை அமுல்செய்ய இயலாமலே இருந்திருக்கிறது. இதற்கிடையில், ஜனங்கள் இந்த மரங்களை, வரப்போகிற வருடங்களில் மரப்பிசினை உண்டுபண்ணுகிறவையாக அவற்றை பயனற்றதாக்கிவிடுவது மட்டுமல்லாமல் புயல்காற்று வீசுகையில் எளிதில் வீழ்ந்துவிடும் வகையில் பேராசையோடு இந்த மரங்களை துளையிட்டு வடியவிடுகிறார்கள். சிலர் உலர்ந்துபோகும் வரை துளையிட்டு வடியவிட்டுவிட்ட மரங்களைத் தங்கள் முறைகேடான செயலின் அத்தாட்சியை மறைத்துவிடுவதற்காக, அவற்றை எரித்தும்கூட விடுகிறார்கள். இது காட்டுத் தீக்கு காரணமாயிருக்கிறது. “பொன்முட்டையிடும் வாத்தை கொன்றுவிடுகின்ற கதையாக இது இருக்கிறது” என்கிறது இந்தியா டுடே.
1988-ன் போர்கள்
போர் தொடர்ந்து அதன் கொடிய பிணங்களின் அறுவடையை செய்து கொண்டிருக்கிறது. 1988-ம் ஆண்டு, உலகம் முழுவதிலும் 22 போர்களையும் மதிப்பீடு ஒன்றின்படி 4,16,000 பேர் கொல்லப்படுவதையும் கண்டிருக்கிறது. அ.ஐ.மா., மீசோரியில் சேய்ன்ட் லூயிஸிலுள்ள லென்ட்ஸ் சமாதான ஆராய்ச்சி ஆய்வுகூடத்தின் இயக்குநரின்படி போர்களுக்கு முக்கிய காரணம் இனக் கலவரமாக இருக்கிறது. சுமார் ஏழு போர்களுக்கு இதுவே காரணமாயிருந்திருக்கிறது. அரசியல் வலது அல்லது இடது சாரிகளின் கலவரங்கள், ஒன்றையொன்று எதிர்க்கின்ற மத சம்பந்தமான உட்கட்சிகளுக்கிடையே அதிகாரப் போரட்டங்கள், எல்லை சம்பந்தப்பட்ட மோதல்கள், “சுதந்திரத்துக்கான” போரட்டங்கள் மற்ற காரணங்களாக இருந்தன. ஆனால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போர் வீரர்கள் அல்ல, அவர்கள் படைத்துறை சாராதவர்களே.
பூர்வீக வேளாண்மை இரகசியங்கள்
பல நூற்றாண்டுகளாக மறைந்துவிட்டிருக்கும் பெரு நாட்டு வேளாண்மை உத்திகள் நவீன முறைகளைக் காட்டிலும் அதிகப் பயனுள்ளதாக இருக்கக்கூடும் என்பதாகப் புதைப்பொருள் ஆய்வாளர்கள் கற்றறிந்திருக்கிறார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையாக டிட்டிக்காகா ஏரியைச் சுற்றிய சமவெளியில் பொதுவான பழக்கம் எளிதாகவே இருந்தது: வயல்வெளிகள், 13-லிருந்து 33 அடி அகலமும், 3 அடி உயரமும், 33-லிருந்து 330 அடி நீளத்துக்கு மண்ணால் அமைக்கப்பட்ட உயரமான மேடைகளாக இருந்தன. இந்த மேடைகளுக்கிடையே அதே அகலத்தையும் ஆழத்தையும் கொண்ட கால்வாய்கள் ஒன்றுவிட்டு ஒன்றாக அமைக்கப்பட்டிருந்தன. வறண்ட காலங்களில் கால்வாய் அடிப்பரப்பிலிருந்து கடற்பாசி பயிர்களுக்கு ஊட்டமளிப்பதற்காக மேடைகள் மீது மண்வாரியால் அள்ளிப் போடப்பட்டது. தண்ணீர் உஷ்ணத்தைத் தக்க வைத்துக்கொள்வதன் காரணமாக கால்வாய்கள் பனி காலத்தில் பயிர்களை வெப்பமாக வைக்க உதவியது. உயரமாக அமைக்கப்பட்ட வயல்வெளிகள் சாதாரணமான வயல்வெளிகளைவிட வெள்ளத்தையும் வறட்சியையும் தப்பிவிடுகிறது. தற்கால சோதனைகளில், பூர்வீக முறைகள் நடைமுறையில் இருந்துவரும் வேளாண்மையில் கிடைப்பதைவிட பத்து மடங்கு அதிகமாக உற்பத்தியைக் கொடுத்தது—அதுவும் இயந்திரங்கள் மற்றும் உரச் செலவுகள் இல்லாமலேயே.
விண்வெளியில் குப்பை
மனிதவர்க்கத்தின் தூய்மைக் கேட்டுத் துயரங்கள் தொடர்ந்து பரவிக் கொண்டு—விண்வெளிக்குள்ளும்கூட பரவி வருகிறது. பின்விட்டுவரும் குப்பையைப் பற்றி சிந்தியாமல் பல ஆண்டுகளாக இயந்திர சாதனங்களைக் கோள் பாதையினுள் அனுப்பிவைத்திருப்பது ஒரு விலையைக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. புதிய விண்வெளிக் கலங்களை அனுப்பி வைக்க திட்டமிடும் விஞ்ஞானிகள், இப்பொழுது, நொடிக்கு சுமார் ஏழு மைல்கள் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்வெளி சிதைவுப் பொருட்களிலிருந்து அவைகளைப் பாதுகாக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும். இத்தகைய வேகத்தில் கோலி உருண்டை அளவு சிதைவு பொருள் “ஒரு கைத்துப்பாக்கியின் வெடிக்கும் ஆற்றலை விடுவிக்கக்கூடும்” என்பதாக தி நியு யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. விண்வெளியிலுள்ள சிதைவுப் பொருட்களை சின்னாபின்னமாக்கிக் கீழேத் தள்ளுவதற்கு சுற்றிவரும் இயந்திர மனித விண்வெளிக் காவலர் ஒருவரையும்கூட பொறியாளர் ஒருவர் வடிவமைத்திருக்கிறார். ஆனால் விண்வெளிக் குப்பையைச் சமாளிப்பது எளிதல்ல. நூறாயிரக்கணக்கான துண்டுகள் பூமியிலிருந்து கண்டுபிடிப்பதற்கு மிகச் சிறியவையாக ,இருக்கின்றன; என்றபோதிலும் அவை நாசம் விளைவிக்க போதிய அளவு பெரியதாக இருக்கின்றன; டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விஞ்ஞானி சொன்னது போல: “சுத்தமாக இருக்க வேண்டிய சுற்றுப்புறச்சூழல் அழுக்கடைந்திருப்பதும் அது இன்னும் மோசமாகிக் கொண்டுவருவதும் குறித்து ஏமாற்றமும் வெறுப்பும் இருந்துவருகிறது.”
பிலிப்பீன்ஸில் இழிச்செயலுக்கு உட்படுத்தப்படும் பிள்ளைகள்
பிலிப்பீன்ஸிலுள்ள ஒரு சிறியப் பட்டணத்தில் பிள்ளைகளை இழிச்செயலுக்கு உட்படுத்துவது முனைப்பாக நடைபெற்றுவருவதாக தி நியு யார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது. 1988-ல் 22 அயல்நாட்டவர் இத்தகைய இல்லங்களை நடத்தி வருவதற்காகக் கைதுசெய்யப்பட்டனர். இவைகளில் ஒன்றில் உள்ளூர் பையன்களுடைய ஆபாசப் படங்கள் அவர்களுடைய பெயர்களோடும் பதிவுகளோடும் ஆயிரக்கணக்கில் இருந்தன. பிள்ளைகள் பாதுகாப்புக்கான குடிமக்களின் குழு என்ற ஓர் உள்ளூர் அமைப்பு இந்த அருவருப்பான வியாபாரத்தை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டுவந்திருக்கிறது. ஆனால் இவர்கள் கடுமையான எதிர்ப்பை—பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்தும்கூட எதிர்ப்பட்டு வந்திருக்கிறார்கள்! பணக்காரரான அவர்களுடைய அயல்நாட்டு வாடிக்கையாளர்கள் பையன்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் விலையேறப்பெற்ற பரிசுகளை வாரி வழங்கியிருக்க வேண்டும். பட்டணத்திலுள்ள பிள்ளைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதாக இந்த அமைப்பு மதிப்பிடுகிறது. “வலிமை மிகுந்த ரோமன் கத்தோலிக்க சர்ச் செயற்கைக் கருத்தடைக்கு எதிராக எடுத்திருக்கும் அதன் எதிர்ப்பான நிலைநிற்கைக்கு எதிர்மாறாக . . . இழிச்செயலுக்கும் பயன்படுத்தப்படும் இவ்விஷயத்தைக் குறித்து எதுவும் சொல்வதில்லை” என்ற டைம்ஸின் கருத்து குறிப்பிடத்தக்கது.
ஆவிக்குரிய மரணம்?
மனீர்பா என்ற சிறிய இத்தாலிய ஏரிக்கரை நகரத்தில், அண்மையில் அதனுடைய விளம்பரப் பலகையில் அசாதாரணமான மரண அறிக்கை ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. சோகமான கருப்புநிற கரைபோட்ட விளம்பரத்தின் ஒரு பகுதி இவ்விதமாக வாசித்தது: “சுற்றுலாவும் சோர்வும் விலகியிருத்தலும் ஏற்படுத்தியுள்ள நெடுநாளைய மற்றும் படிப்படியான நோய்க்குப் பின்னர் மனீர்பா நகரத்தின் ஆவிக்குரிய மரணத்தை மத குருவின் மாவட்டக் கிளை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. மரணமடைந்தவர்கள் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பதன் காரணமாக சவஅடக்கம் நடத்தப்படாது. ஞாயிறு ஆராதனைக்கு செல்கிற சிறுதொகையான எண்ணிக்கையினருக்கும் எதிர்காலத்தில் அவ்விதமாகச் செய்ய எண்ணியிருப்போருக்கும் ஒருவர் நன்றி சொல்ல வேண்டும்.” இதன் பேரில் கருத்து தெரிவிப்பதாய் எல் கார்நேல் டி பிரஸ்யா செய்தித்தாள் குறிப்பிட்டதாவது: “ஒவ்வொரு கோடயின் முடிவிலும் மதப்பற்றுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு, உறுப்பினர்கள் குறைவது கவலைக்குரிய சம்பவமாக இருக்கிறது.” விளம்பர அறிவிப்பு செய்த உள்ளூர் மத குரு மரியோ ஃபிலிப்பி மேலுமாகச் சொன்னார்: “கார்டா [ஏரி] மீதுள்ள மற்ற நகரங்களின் நிலைமையும் இதுவே என்பது எனக்குத் தெரியும். இந்நிலை மிகப்பரவலாயுமிருக்கலாம்.” (g89 5/22)