உலகத்தைக் கவனித்தல்
மரணத்தை விளைவிக்கின்ற சமாதான தூதுக்குழுக்கள்
இன்றுவரையாக, ஐக்கிய நாடுகளின் சமாதான தூதுக்குழுக்களை அமர்த்துகையில், ஓராயிரத்திற்கும் அதிகமான ஆட்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று ஜெர்மனின் செய்தித்தாள் ஃப்ராங்க்ஃபுர்ட்டர் ஆல்ஜெமைன ட்ஸைட்டுங் அறிவிக்கிறது. இந்த எண்ணிக்கையில் வளைகுடா போர் போன்றவற்றில், ஐநா-வின் போர் தூதுக்குழுக்களில் உயிர் இழந்தவர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த 1,000 மரணங்களில், 200-க்கும் மேற்பட்டவை, 1993-ல் மட்டும் நிகழ்ந்தன. ஏன் இத்தனை அநேகம்? ஐக்கிய நாடுகள் தற்போது வேறுவகையான போர்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக அந்தச் செய்தித்தாள் விளக்கியது. இதற்கு மாறாக, ஐக்கிய நாடுகள் முன்பெல்லாம், நாடுகளுக்கு இடையே நடந்த சண்டைகளை இடைநின்று, அதற்கான தீர்வை ஒழுங்கமைத்தது. இப்பொழுதோ, இந்த அமைப்பு ஈடுபட்டிருக்கும் “உள்நாட்டுப் போர்களில், மாநிலத்தின் அதிகாரம் பிளவுபடுகிறது மற்றும் போரில் ஈடுபட்டிருக்கும் தரப்பினர்களும்கூட ஐநா பணியாளரை காப்பாற்றத் தவறிவிடுகின்றனர்.”
பிள்ளைகளுக்கிடையே மனநோய்
தி சன்டே டைம்ஸ் பிரகாரம், கிரேட் பிரிட்டனின் பள்ளிகளில் 10 வயதுக்கும் குறைவான 1,000-க்கும் அதிகமான பிள்ளைகளும் 10 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 1,200-க்கும் அதிகமானோரும் மனநோய், கடும் மனச்சோர்வு அல்லது ஒழுங்கற்ற உணவுப்பழக்கங்கள் ஆகியவற்றிற்காகச் சிகிச்சை அளிக்கப்பட்டனர்; தற்கொலை விகிதமும் அவ்வண்ணமே உயருகிறது, ஆறே வயதான இளம் பிள்ளைகளும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதாக பயமுறுத்துகிறார்கள். பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை இல்லாததும் ஒரு காரணம் என்று சில மனநல நிபுணர்கள் நினைக்கிறார்கள். தொலைக்காட்சி ஆக்கிரமிப்பு செய்யும் வீட்டுச் சூழலில் பல பிள்ளைகள் வாழ்வதை அவர்கள் கவனிக்கிறார்கள். இதன் விளைவாக, பிள்ளைகள் தங்கள் கவலைகளை பெற்றோரிடத்தில் பகிர்ந்துகொள்ள இயலாமல் இருக்கிறார்கள். பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே பேச்சுத்தொடர்பின்மை, “கவலைகளைக் குவித்து, ஒரு மகிழ்ச்சியற்ற பிள்ளை என்னும் உச்சநிலையை அடைவதில் விளையக்கூடும்,” என்பதாக ஒரு நிபுணர் கவனித்தார்.
விளக்குகளை அசட்டைசெய்தல்
போனஸ் அயர்ஸ் செய்தித்தாள் கிலாரின் பிரகாரம், அர்ஜன்டினாவில், 1994-ல் 7,700 பயங்கரமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்தன. இந்த விபத்துக்கள் 13,505 ஆட்கள் பயங்கரமாக காயம் அடைவதிலும், 9,120 பேர் மரிப்பதிலும் விளைவடைந்தன. சாலை விபத்துக்கள் அனைத்திலும் 90 சதவிகிதம் ஓட்டுநர்களும் நடந்து செல்பவர்களும் போக்குவரத்து விதிகளை மீறியதால் ஏற்பட்டவை என்று அரசாங்க ஏஜன்ஸியால் நடத்தப்பட்ட சுற்றாய்வு வெளிக்காட்டியது. பக்கவாட்டிலிருந்து வந்து ஒன்றோடொன்று மோதும் விபத்துக்களே நகரத்தில் அடிக்கடி நிகழ்பவை. இது சிகப்பு போக்குவரத்து விளக்கை அலட்சியப்படுத்திவிட்டுச் செல்வதால் ஏற்படுகிறது. மற்ற நாடுகளில் சிகப்பு போக்குவரத்து விளக்கை அலட்சியம் செய்தல் என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாதபோது, அர்ஜன்டினாவில் “அது அடிக்கடி நிகழ்வது மாத்திரமல்ல, ஆனால் அவ்வாறு செய்வதில் பெருமைப்படுவோரும் இருக்கிறார்கள்,” என்று ஒரு அரசாங்க அதிகாரி எட்வார்டோ பெர்ட்டொடீ கூறினார்.
பருவவயதினரின் வன்முறை
புகார் செய்யப்பட்ட பயங்கரமான குற்றச்செயல்களின் எண்ணிக்கை கீழ்நோக்கி செல்வதன் பயனை, ஐக்கிய மாகாணங்கள் தொடர்ந்து மூன்று வருடங்களாக அனுபவிக்கின்றன. ஆயினும் குற்றச்செயலுக்குக் காரணமான பருவவயதினரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, விசேஷமாக 14 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. பருவவயதினரின் எண்ணிக்கை பெருகப் பெருக, கொடூரமான குற்றச்செயலும் கிடுகிடுவென்று உயரும் என்பதாக சில நிபுணர்கள் கணிக்கிறார்கள். “ஐக்கிய மாகாணங்களில், அடுத்த சில ஆண்டுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரிக்கும், 2005-க்குள் 23 சதவிகித பருவவயதினர் மேலும் அதிகரிப்பார்கள்,” என்று பாஸ்டனில் உள்ள நார்த்தீஸ்ட்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குற்றவியல் நீதி கல்லூரியின் நிபுணர் ஜேம்ஸ் அலன் ஃபாக்ஸ் குறிப்பிட்டார் என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. “நம் பிள்ளைகள் இன்னும் சிறுவர்களாகவும் பிறர் கருத்தை ஏற்கிறவர்களாகவும் இருக்கும் இந்தத் தறுவாயில் நாம் செயல்படாவிட்டால், 2005-ம் வருடத்திற்குள் நாம் பருவவயதினரின் வன்முறை என்னும் இரத்த ஆற்றில் ஒருவேளை உண்மையில் நீராடுவோம்,” என்று ஃபாக்ஸ் எச்சரிக்கிறார்.
மரித்தோரின் முழுக்காட்டுதலை ரத்துசெய்தல்
யூதப் படுகொலையிலிருந்து தப்பிவந்தோர், தங்களுடைய உறவினரில் சிலர், அவர்களின் மரணத்திற்குப் பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு மார்மன்களாக முழுக்காட்டப்பட்டு இருந்தார்கள் என்பதை சமீபத்தில் அறிந்தபோது அதிர்ச்சியடைந்தார்கள். இந்தப் பழக்கத்தைப்பற்றி தி நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது, “இதில் உயிருடன் இருக்கும் சர்ச் அங்கத்தினர்கள் மரித்துவிட்டவர்களுக்காக பதிலாட்களாக மாற்றீடு செய்யப்பட்டு, மார்மன்களாக முழுக்காட்டப்படுகிறார்கள்.” சித்திரவதை முகாம்களில் மரணமடைந்த அல்லது படுகொலையின்போது பலியானவர்களில் சுமார் 3,80,000 யூதர்களின் பெயர்களை மார்மன்கள் பெற்றுக்கொண்டனர். பிறகு, சில காலம் சென்ற பின், அவர்களை சடங்காச்சாரத்துடன் முழுக்காட்டினார்கள், அதில் மரித்தோரின் பெயர்கள் வாசிக்கப்படுகையில், பதிலாட்களாக இருக்கும் சர்ச் அங்கத்தினர் தண்ணீரில் முழுக்காட்டப்பட்டனர். இந்த முறைக்கு சில யூத அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக, அவர்களுடைய முழுக்காட்டுதல் பெற்ற மார்மன்களின் பட்டியலிலிருந்து, அத்தகைய சடங்குகள் நடத்தப்பட்ட யூதப் படுகொலையின்போது பலியானோரின் பெயர்களை அகற்றிவிட மார்மன் தலைவர்கள் ஒத்துக்கொண்டனர்.
ஹாங்காங்கிலே அழுத்தம்
சமீப சுற்றாய்வு ஒன்றில், 16 பல்வேறு தேசங்களிலிருந்து 5,000 ஆட்களை பேட்டி கண்டபோது, ஹாங்காங்தான் உலகிலேயே மிகவும் அழுத்தம் நிறைந்த நகரம் என்ற மதிப்பீட்டைப் பெற்றிருப்பதை வெளிக்காட்டியது என்று தி மெடிக்கல் போஸ்ட் அறிவிக்கிறது. பலருக்கு, அழுத்தம் வேலையோடு தொடர்புடையதாயிருக்கிறது. “உலகளவில் 54% ஆட்களுடன் ஒப்பிடுகையில், ஹாங்காங்கைச் சேர்ந்த சுமார் 70% ஆண்களும் 64% பெண்களும் வேலையில் இருக்கும் அழுத்தத்தை குறை கூறினர்,” என்று இங்கிலாந்தின் யூனிவர்ஸிட்டி ஆஃப் ரீடிங்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டேவிட் வார்பெர்டன் குறிப்பிடுகிறார். பேட்டி காணப்பெற்றவர்களில், மற்ற தேசங்களின் 14 சதவிகிதத்தினருடன் ஒப்பிடுகையில் ஹாங்காங்கின் 41 சதவிகிதத்தினர் தங்களுடைய வேலை சலிப்புத்தட்டுவதாக உணர்ந்தனர். “ஹாங்காங்கில் ஐந்து பேரில் ஒருவர் (உலகம் முழுவதும் ஒப்பிடுகையில் 10-ல் ஒன்றுக்கும் குறைவு) தங்களுடைய முதலாளியைப் பிடிக்காததுதான் வேலையின் அழுத்தத்திற்கான முக்கிய காரணமாகக் கூறினார்கள்,” என்று போஸ்ட் மேலும் கூறுகிறது.
சந்தேகத்திற்குரிய மின் கருவிகள்
ஐ.மா. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் பத்திரிகை எஃப்டிஏ கன்ஸ்யூமர் பிரகாரம், மருத்துவக் கருவியை செல்லுலார் ஃபோன் போன்றவற்றிற்கு மிக அருகில், மின் காந்த குறுக்கிடுதலுக்கு உட்படுத்தப்படும்போது சரிவர இயங்காமல் போகலாம். “சில ஐரோப்பிய மருத்துவமனைகள் ஏற்கெனவே, செல்லுலார் ஃபோன்களை அவற்றின் கட்டிடங்களிலிருந்து ரத்துசெய்துவிட்டன, ஒருவேளை ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தால், அத்தகைய நடவடிக்கையை எடுக்கும்படி, ஐக்கிய மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளை எஃப்டிஏ ஊக்கமூட்டுகிறது,” என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது. மின் காந்த குறுக்கிடுதல், எண்ணற்ற விபத்துக்களில் சந்தேகிக்கப்படுகின்றன, அவற்றில் உயிர்காக்கும் மருத்துவக் கருவிகளான பேஸ்மேக்கர்ஸ், அப்னியா மானிட்டர்ஸ் போன்றவை சரிவர இயங்கவில்லை. எஃப்டிஏ கன்ஸ்யூமர் எச்சரிக்கிறது: “எளிதில் தூண்டுதலுக்கு உட்படும் மருத்துவக் கருவிகளைத் தொடர்ந்து உபயோகிக்கும் நோயாளிகளும் டாக்டர்களும், இந்தப் பிரச்சினையைக் குறித்து அறிந்திருக்க வேண்டும், கருவியிடமிருந்து செல்லுலார் ஃபோனை தூரமாக வைக்க சிந்திக்க வேண்டும்.” கம்பியில்லா கம்ப்யூட்டர் இணைப்புக்கள், நுண் அலை சமிக்கைகள், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்பிகள், பீப்பர்கள் மற்றும் மற்ற மின் கருவிகள் போன்றவையும் மின்காந்த குறுக்கிடுதலை விளைவிக்கலாம். இந்தப் பயத்தைக் குறைப்பதற்கான வழிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்கிறார்கள்.
விடுபட்டுப்போன இணைப்பின் கட்டுக்கதை
மனிதக் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்னும் பரிணாமக் கோட்பாட்டை நிரூபிக்க, பரிணாமவாதிகள் நீண்டகாலமாக புதைப்படிவங்களின் அத்தாட்சியை நாடியுள்ளனர். ஆயினும், வளர்ச்சியடைந்த மனிதப் பண்புடைய மிருகத்தின் (humanoid) எலும்புக்கூட்டின் மீதமுள்ள பகுதி என்று தொல்லுயிரியலாளர்கள் நம்பியதைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொடர்ச்சியான 90 எலும்புகள் எதியோபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு “மனிதன் தோன்றியதன் பேரிலுள்ள கோட்பாடுகளை” அசைத்திருக்கிறது என்று பாரிஸ் செய்தித்தாள் லே மான்டு கூறுகிறது. தொல்லுயிரியலாளர்களின்படி பிரச்சினையானது, இந்தப் புதிய புதைப்படிவங்கள், மனிதனுக்கும் மனிதக்குரங்குக்கும் இடையேயுள்ள இணைப்பு என்று காட்டுவதற்காக முயற்சிக்கும் எந்தக் கோட்பாடுகளிலும் பொருந்தவில்லை. அதற்கு மாறாக இந்தப் புதைப்படிவங்கள் பதிலளித்ததைக் காட்டிலும் அதிகமான கேள்விகளைத்தான் எழுப்பியுள்ளன. மனிதனுக்கும் மனிதக்குரங்கிற்கும் இடையே உள்ள விடுபட்டுப்போன இணைப்பு என்று பெயரளவில் அழைக்கப்பட்டது “ஒரு கட்டுக்கதை தவிர, வேறொன்றுமில்லை” என்ற முடிவுக்கு சில ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர் என்று லே மான்டு கூறுகிறது.
கம்ப்யூட்டர் ஆபாசம் பிள்ளைகளுக்கு கிடைக்கிறது
ஆஸ்திரேலியாவின் பள்ளிக்கூடங்கள் இன்டர்நெட் உலகத் தகவல் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஒழுக்கத்திற்கு கேடுவிளைவிக்கும் கண்ணிவெடி வயல்களோடுகூட இணைக்கின்றன. தி சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தித்தாளின் பிரகாரம், “X-முத்திரை பதிக்கப்பட்ட பிள்ளைகளின் நிர்வாணமான ஆபாச புகைப்படங்கள், மிதமிஞ்சிய பாலுறவு கேளிக்கைகள், கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட விபச்சார விடுதிகளின் வீடியோ படங்கள், மிருகங்களுடன் பாலுறவு கொள்வதற்கு விரும்பும் ஆட்களுக்கு ‘மூல உரிமைகள் மசோதா’ (bill of rights) ஒன்று, ‘சாட்-லைன்’ (chat-line) மூலம் எவ்வாறு தற்புணர்ச்சி செய்யவேண்டும் என்ற தகவல்” ஆகியவற்றுடன் அவர்களால் தொடர்புகொள்ள இயலும். அந்தக் கட்டுரை மேலும் கூறுகிறது: “இரகசிய சொற்களோ (passwords), வயது அத்தாட்சியோ தேவையில்லை, வெறும் சாதாரண சுழற்றும் (dial-up) இணைப்புத்தான்.” நெட்வொர்க்கை தணிக்கை செய்யவே முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், “ஏனென்றால், அதன் கட்டமைப்பு . . . அணு யுத்தத்தில் தப்பிக்கும்படி ஐமா பாதுகாப்புத் துறையால் வடிவமைக்கப்பட்டது.” தகவல் ஒரேவொரு இடத்தில் ஒழுங்காக அமைக்கப்படவில்லை, ஆனால், உலகமுழுவதிலும் ஆயிரக்கணக்கான விவரத்தொகுப்புகளில் காணப்படுகின்றன. வெறுமனே நான்கே பயன்படுத்துவோர் குழுக்களிடமிருந்து, ஒரே வாரத்தில், 5,651 தகவல்களை அல்லது சிறுபிள்ளையின் ஆபாசம் சம்பந்தமான பதிவுகளை சமீபத்தில் சுவீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எண்ணினார்.
அலைக்கழிக்கப்படும் பாதிரிமார்கள்
“உளநோய் தொந்தரவுகளுக்காக என்னிடம் சிகிச்சைக்காக வரும் ஐம்பது சதவிகித பாதிரிமார்கள், பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறார்கள்,” என்று குறிப்பிடுகிறார் இத்தாலியைச் சேர்ந்த பிரபல கத்தோலிக்க உளநோய் மருத்துவர்களுள் ஒருவரான வலேர்யோ ஆல்பீசெட்டீ, லா ரேப்பூப்ளிக்கா என்ற செய்தித்தாளின் பிரகாரம். மற்றவை எதைக்காட்டிலும், பாலியல் வேட்கை மற்றும் தந்தையாக வேண்டும் என்னும் தேவை ஆகிய காரியங்கள்தான் இந்த மனிதர்களை அலைக்கழிக்கின்றன, அவர்கள் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டியதன் உத்தரவாதத்தை சமீபத்தில் இரண்டாம் ஜான் பாலால் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டது. குருத்துவத்திற்கு சேரும் ஆண்களை வயதில் அதிக முதிர்ச்சியடைந்தபின் சேரும்படி அவர்களை ஊக்குவிப்பது மற்றும் குருகுலங்களில் நுழைவு வயதை உயர்த்துவது போன்ற ஆலோசனைகளை ஆல்பீசெட்டீ எடுத்துரைக்கிறார். தன்னுடைய வளரிளமைப் பருவத்தில் “பெண்ணே இல்லாத அமைப்புமுறையில் வாழ்வது எதிர்கால பாதிரியின் மன ஆரோக்கியத்திற்கும் உளவியல் சமநிலைக்கும் மிகவும் கேடு விளைவிக்கும்,” என்று அவர் எடுத்துரைக்கிறார். பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளை அடுத்து, “பாதிரிமார் மனச்சோர்வு, மிதமிஞ்சிய மனக் கோளாறு மற்றும் பசிநோய் ஆகியவற்றால் அடிக்கடி துன்புறுகிறார்கள்,” என்று ஆல்பீசெட்டீ குறிப்பிடுகிறார்.