தத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 8: ஏறக்குறைய பொ.ச.மு. 563 முதல் விடுதலையை வாக்களித்த ஒரு மெய்யறிவு
“ஒரு மதம் அல்லது தத்துவத்திற்குப் பரிசோதனை அது விளக்கமுடிந்த அநேக காரியங்களாகும்.”
அமெரிக்காவைச் சேர்ந்த 19-வது நூற்றாண்டு கவிஞன் ரால்ஃப் வால்டோ எமர்சன்
அவரைப் பற்றி நிச்சயமான காரியங்கள் ஏதாவது தெரிந்திருக்கிறது என்றால், சிறிதளவே தெரிந்திருக்கிறது. அவருக்கு சித்தார்த்த கெளதமர் என்ற பெயர் வழங்கப்பட்டது என்றும், ஒரு ராஜ குமாரன் என்றும், வட இந்திய சாக்கிய சாம்ராஜ்யத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறய 600 ஆண்டுகட்கு முன் பிறந்தார் என்றும் பாரம்பரியம் உரைக்கிறது. அவர் சாக்கியமுனி (சாக்கிய குலத்து முனிவர்) என்றும் நிச்சயமான ஒரு பொருளற்ற டாதகாட்டா என்றும் அழைக்கப்பட்டார். அநேகமாய் அவர் நன்கு அறியப்பட்ட பெயராகிய புத்தர் என்பதுதான் உங்களுக்குப் பழக்கமாயிருக்கக்கூடும்.
கெளதமர் அரண்மனைச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டார். ஆனால் 29-வது வயதில் அவர் திடீரென்று தன்னைச் சூழ்ந்திருந்த பரிதபிக்கத்தக்க நிலையை உணர்ந்தார். துன்மார்க்கமும், துன்பமும் ஏன் இருக்கிறது என்று இன்று வாழும் மக்கள் உண்மையிலேயே யோசிப்பது போன்று இவற்றிற்கு அவர் ஒரு விளக்கத்தை நாடினார். தன்னுடைய மனைவியையும் குழந்தையாயிருந்த மகனையும் விட்டுவிட்டு பாலைவனத்திற்கு ஓடி, அங்கே அவர் ஆறு ஆண்டுகள் துறவு பூண்டார். அவர் முட்களில் படுத்தார், ஒரு சில நாட்களுக்கு அவர் ஒரே ஒரு அரிசி சாப்பிட்டு தன் நாட்களைக் கடத்தினார். ஆனால் இது அவருக்கு மெய்யறிவைக் கொண்டுவரவில்லை.
இப்போது 35 வயதாகிய கெளதமர் ஒரு மிதமான வாழ்க்கைப் பாதையை மேற்கொண்டார். அதனை அவர் இடைநிலைப் பாதை அல்லது மார்க்கம் என்று அழைத்தார். அவர் மெய்யறிவு பெறும் வரை ஓர் போதி மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் சபதத்தை மேற்கொண்டார். கடைசியில் கனவுகள் மிகுந்திருந்த ஓர் இரவுக்குப் பின்னர் தன்னுடைய தேடும் முயற்சி பலனளித்ததாக உணர்ந்தார். அதுமுதல் அவர் புத்தர் என்று அறியப்பட்டார். அதன் அர்த்தம் “மெய்யறிவு பெற்றவர்” என்பதாகும். அந்தப் பெயர் தனக்கே உரியது என்று கெளதமர் உரிமைப்பாராட்டவில்லை. ஆகையால் அது எப்போதுமே ஒரு சுட்டிடைச் சொல்லால் ஒரு புத்தர் அல்லது இந்தக் கெளதமர் என்று பயன்படுத்தப்படவேண்டும்.
விடுதலைக்கு வழி
இந்துக்களின் கடவுட்களாகிய இந்திரனும் பிரம்மனும் புத்தரை அவர் புதிதாய்க் கண்டறிந்த உண்மைகளை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்று வருந்திக் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் அப்படியே செய்யப் புறப்பட்டார். எல்லா மதங்களுமே நன்மதிப்புடையவை என்ற இந்து மதத்தின் சகிப்புத்தன்மை கொண்ட மனப்பான்மையைத் தக்க வைத்துக்கொண்ட போதிலும், புத்தர் அதன் ஜாதி ஒழுங்குமுறையிலும் மிருக பலிகளில் அதன் வலியுறுத்தலிலும் கருத்து வேறுபாடுடையவராக இருந்தார். இந்து வேதங்கள் தெய்வீக ஊற்று மூலத்திலிருந்து வந்த வேதங்கள் என்ற உரிமைப்பாராட்டலை அவர் நிராகரித்தார். கடவுள் இருக்கக் கூடும் என்பதை மறுதலிக்காமல் இருந்தபோதிலும், கடவுள் ஒரு சிருஷ்டிகர் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்டாகுதல் என்ற விதிமுறைக்கு ஆரம்பம் இருக்க முடியாது என்று அவர் விவாதித்தார். இவர் இந்து மதத்தையும் ஒரு படி கடந்து, தன்னுடைய முதல் பிரசங்கத்தில் இப்படியாக வாக்களித்தார்: “துறவிகளே, இது இடை வழியாக இருக்கிறது. இதைப் பற்றிய அறிவு . . . உட்பார்வைப் பெற்றிடுவதற்கு வழிநடத்துகிறது. இது ஞானத்திற்கு வழிநடத்துகிறது, இது அமைதியில், அறிவில், பரிபூரண மெய்யறிவில், நிர்வாணாவில் விளைவடைகிறது.”
“நிர்வாணா என்றால் என்ன?” என்று நீங்கள் ஒருவேளை கேட்கக்கூடும். சரித்திர ஆசிரியர் வில் டுரன்ட் சொல்லுகிறார்: “இந்தக் கேள்விக்கு ஒரு தவறான விடையைக் கண்டுபிடிப்பது கடினம், ஏனென்றால் எஜமானர் கருத்தைத் தெளிவுபடுத்தாமல் விட்டுவிட்டார், அவரைப் பின்பற்றுபவர்கள் சூரினுக்கு கீழே அவ்வார்த்தைக்குக் கொடுக்க முடிந்த சகல அர்த்தத்தையும் கொடுத்துவிட்டார்கள்.” “ஒரு தனிப்பட்ட புத்த மதக் கருத்து என்று சொல்வதற்கில்லை,” என்று மத என்சைக்ளோபீடியா (The Encyclopedia of Religion) ஒப்புக்கொள்கிறது. “ஏனென்றால் அது கலாச்சாரம், சரித்திரக் காலப்பகுதி, மொழி, பள்ளி, மற்றும் தனிப்பட்டவர்கள் காரியத்திலும் வித்தியாசப்படுகிறது.” ஓர் எழுத்தாளர் அதை “ஆசை முற்றும் துறந்த நிலை, வெறுமையின் எல்லையற்ற வரம்பின் நித்தியம் . . . , மறுபிறப்பில்லாத மரண அமைதியின் நித்தியம்,” என்று அழைக்கிறார். மற்றவர்கள் “அணைத்துவிடுவது” என்ற அதன் சமஸ்கிருத அடிப்படை அர்த்தத்தை வைத்து, அது எரிபொருள் தீர்ந்துவிடும் நெருப்பு ஜுவாலையைப் போன்று இருக்கிறது என்கிறார்கள். எப்படியிருந்தாலும், நிர்வாணா விடுதலையை வாக்களிக்கிறது.
விடுதலை அடைவதற்குத் தேவையை புத்தர் நான்கு உயர்ந்த உண்மைகளில் முடிக்கிறார்: வாழ்க்கை வேதனையும் துன்பமும் கொண்டது; இவை இரண்டுமே உயிரோடிருக்க வேண்டும் என்ற விருப்பத்தாலும் ஆசைகளை நுகரவேண்டும் என்பதாலும் ஏற்படுகிறது; இந்த விருப்பத்தை அடக்குவதே ஞானமான வழி. இதை எண்வகை வழிகளைக் கடைப்பிடிப்பதால் அடையலாம். இவ்வழிகளுள் அடங்கியவை: நன்நம்பிக்கை, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல் வாழ்க்கை, நன்முயற்சி, நற்சிந்தனை, நல் தியானம்.
வெளிநாடுகளில் வெற்றி, உள்நாட்டில் தோல்வி
ஆரம்பத்திலிருந்தே பெளத்த மதத்துக்கு நல்ல பிரதிபலிப்பு இருந்தது. அந்தச் சமயத்திலிருந்த சார்வாகாஸ் (Charvakas) என்ற பொருள்வாதக்காரர் இதற்கு ஏற்கெனவே வழி வகுத்திருந்தனர். அவர்கள் இந்துமத புனித எழுத்துக்களை நிராகரித்தனர், கடவுள் பேரில் நம்பிக்கை என்ற கருத்தை எள்ளினர், பொதுவாக மதத்தை மறுதலித்தனர். அவர்களுடைய செல்வாக்கு கணிசமாக இருந்தது. டியூரன்ட் சொல்லுகிற பிரகாரம், அது “ஒரு புதிய மதம் வளருவதற்கேதுவான ஒரு வெற்றிடத்தை உருவாக்க உதவிபுரிந்தது.” இந்த வெற்றிடமும், “பழைய மதத்தின் புத்திக்கூர்மை மழுங்கிய நிலையும்” ஒன்று கூடி அந்த நாளின் இரண்டு பெரும் சீர்திருத்த இயக்கங்களாகிய புத்தமதமும் ஜைன மதமும் உதயமாகச் சகாயம் செய்தது.
பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் மன்னன் அசோகனின் பேரரசு இந்தியத் துணைகண்டத்தின் பெரும் பகுதியைத் தழுவியிருந்தது, புத்த மதத்தைப் பிரபலமாக்க அவன் அதிகமாகப் பாடுபட்டான். மிஷனரிகளை இலங்கைக்கும் கூடுமானவரை மற்ற நாடுகளுக்கும் கூட அனுப்புவதன் மூலம் அவன் அதன் மிஷனரி நிலையை வலுப்படுத்தினான். பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டுகளின் போது புத்த மதம் சீனா முழுவதும் பரவியது. அங்கிருந்து அது கொரியா வழியாக ஜப்பானுக்கு பரவிற்று. பொ.ச. ஆறாவது, ஏழாவது நூற்றாண்டுகளின்போது, அது கிழக்கு, தென் கிழக்கு ஆசியாவின் எல்லாப் பாகங்களிலும் காணக்கூடியதாக இருந்தது. இன்று உலகம் முழுவதும் 30 கோடிக்கு மேல் புத்த மதத்தினர் இருக்கிறார்கள்.
மன்னன் அசோகனின் நாட்களுக்கு முன்பேகூட புத்த மதம் பரவிக் கொண்டே இருந்தது. “பொ.ச. நான்காவது நூற்றாண்டின் கடைசியில் புத்த மிஷனரிகள் ஏதென்ஸில் காணப்பட்டார்கள்,” என்று E.M. லேமன் எழுதுகிறார். அவர் தொடர்வதாவது, கிறிஸ்தவ மதம் ஸ்தபிக்கப்பட்ட பிறகு அதன் பூர்வ மிஷனரிகள் சென்றவிடமெல்லாம் பெளத்தமதக் கொள்கையால் எதிர்க்கப்பட்டார்கள். உண்மையில், கத்தோலிக்க மிஷனரிகள் முதலாவதாக ஜப்பானுக்குச் சென்றபோது அவர்கள் ஒரு புது புத்த மதப் பிரிவினர் என்று தவறாகக் கருதப்பட்டனர். இது எப்படி இருக்க முடியும்?
தெளிவாகவே இந்த இரண்டு மதங்களுக்கும் பொதுவான காரியம் அதிகம் இருந்தன. சரித்திர ஆசிரியர் டுரன்டின் படி, “புனிதமான பண்டைய பொருட்களைப் பூஜிப்பது, பரிசுத்த ஜலத்தை உபயோகிப்பது, மெழுகுவர்த்திகள், தூபவர்க்கம், ஜெபமாலை, குருமார்களின் விசேஷ கால ஆடைகள், சர்ச்சின் தினசரி சடங்குக்காகப் புழக்கத்தில் இல்லாத பாஷை, துறவிகள், கன்னியாஸ்திரீகள், மடாலய முடிவாங்கும் சடங்கு மற்றும் பிரம்மச்சாரியம், பாவ அறிக்கை, உபவாச நாட்கள், மரித்தவர்களுக்குப் பிரார்த்தனை போன்றவைகளை உபயோகிப்பது பொதுவாக நடைமுறயில் இருந்தது.” மேலும் அவர் கூறுவதாவது, இந்தக் காரியங்கள் “முதலாவதாக புத்த மதத்தில் தோன்றியிருக்கலாம்.” உண்மையிலே புத்த மதம் “ரோமன் சர்ச்சைவிட இரண்டு மதங்களுக்கும் பொதுவாக இருக்கும் கண்டுபிடிப்பிலும் எல்லாச் சடங்குகளையும் வடிவங்களையும் உபயோகிப்பதில் ஐந்து நூற்றாண்டுகள் முன்னதாகவே இருந்தது.”
இந்த ஒற்றுமைகள் எப்படி விருத்தியடைந்தன என்று விவரிக்கும்போது, எழுத்தாளர் லேமன் ஒரு பொது ஆரம்பத்தைக் குறிப்பாகச் சொல்லுகிறார். அவர் எழுதுவதாவது: “கிறிஸ்தவ சகாப்தத்தின் காலத்திலே . . . புறமத செல்வாக்கு புத்த மத வணக்கத்தின் வடிவங்களில் இருப்பது தெளிவாகிறது. . . . புறமத செல்வாக்குகள் கிறிஸ்தவ சர்ச்சில் விருத்தியான சில ஆராதனைப் பழக்கங்களுக்கும் பொறுப்புள்ளதாக இருந்தது.”
அதன் அழுத்தம் உலக முழுவதும் இருந்த போதிலும் புத்தமதம், உள்நாட்டிலே தீவிரமானத் தோல்வியை அனுபவித்தது. இன்று இந்தியாவின் ஜனத்தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவாகப் புத்தமதத்தினர் இருக்கிறார்கள். 83 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள். அதன் காரணம் தெளிவற்றதாக இருக்கிறது. புத்த மதம் மிகுந்த சகிப்புத்தன்மையுடையதாக இருந்ததால் அது சுலபமாகவே அதிக சம்பிரதாயத்தோடுகூடிய இந்து மதத்தில் திரும்பவும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். அல்லது புத்த பிட்சுக்கள் பாமர மக்களைப் பராமரிப்பதில் தளர்ந்திருக்க வேண்டும். இருந்த போதிலும் ஒரு முக்கியமான உண்மை என்னவெனில், இந்தியாவிற்குள் இஸ்லாம் நுளைந்ததேயாகும். இது முஸ்லீம் ஆட்சிக்குக் கொண்டு சென்றது. அதன் கீழ் அநேக மக்கள் முக்கியமாக வட இந்தியாவில் இஸ்லாமுக்கு மதம் மாறினார்கள். உண்மையிலே 13-ம் நூற்றாண்டின் முடிவில் ஜனத்தொகையில் கால் பங்கினர் முஸ்லீம்களாக இருந்தனர். இதற்கிடையில் அநேக புத்தர்கள் இந்து மதத்திற்குத் திரும்ப மாறிக்கொண்டிருந்தார்கள். இது முஸ்லீம்களின் தாக்குதலை சமாளிப்பதற்குச் சரியான விதத்தில் ஆயத்தப்படுத்திக் கொள்வதாக இருக்கிறதென்று கண்டார்கள். அதன் சகிப்புத்தன்மைக்கு ஏற்றார்போல், இந்து மதம் அவர்களை அன்பான தழுவுதலோடு திரும்ப வரவேற்றது, புத்தர் ஒரு கடவுள், விஷ்ணுவின் அவதாரம் என்று பிரகடனப்படுத்துவதனால் அவர்கள் திரும்ப வருவதை சுலபமாக்கினார்கள்!
புத்தரின் பல முகங்கள்
கிரேக்கர்களால் புத்தருடைய முதல் உருவங்கள் வடிக்கப்பட்டது என்று E.M. லேமன் எழுதுகிறார். பெளத்தர்கள், இந்தச் சிலைகள் வணங்கப்படவில்லை, ஆனால் அவை வணக்கத்திற்கு உதவிகளாக மட்டுமே பெரிய போதகருக்கு மரியாதைக் காட்டுவதற்காகவே திட்டமிடப்பட்டது என்று உரிமைபாராட்டுகிறார்கள். சில சமயங்களில் புத்தர் நின்று கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது, ஆனால் பெரும்பாலும் அவர் கால்களைக் குறுக்காக மடக்கி உட்கார்ந்திருக்கிறார். அவருடைய பாதங்கள் மேற்புறமாக இருக்கிறது. அவருடைய கைகள் ஒன்றின்மேல் ஒன்று இருக்கும்போது அவர் தியானத்தில் இருக்கிறார்; அவருடைய வலதுகை தாடை வரை உயர்த்தப்பட்டிருக்கும்போது அவர் ஆசீர்வதிக்கிறார்; அவருடைய வலதுகரத்தின் பெருவிரல் ஆள்காட்டி விரலைத் தொட்டுக்கொண்டிருக்கும்போது அல்லது இரண்டு கைகளும் மார்புக்கு முன்னால் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும்போது அவர் போதிக்கிறார். படுத்திருக்கும் சாயல், அவர் நிர்வாணாவிற்குள் செல்லும் தருணத்தைக் காட்டுவதாக இருக்கிறது.
அவருடைய தேகம் நிற்கும் முறையில் வெவ்வேறான வித்தியாசங்கள் இருப்பதைப் போல் அவருடைய கொள்கையிலும் வேற்றுமைகள் இருக்கின்றன. அவர் இறந்து 200 ஆண்டுகளுக்குள் 18 வித்தியாசமான புத்த மத கருத்துக்கள் ஏற்கெனவே இருந்தனவென்று சொல்லப்படுகிறது. இன்று கெளதமர் கண்ட மெய்யறிவிலிருந்து 25 நூற்றாண்டுகள் கடந்துவிட்டன, எப்படி நிர்வாணாவை அடைவதென்பதற்கு புத்த மதத்தின் அர்த்தங்கள் அநேகம் இருக்கின்றன.
நெதர்லாந்து லீடன் பல்கலைக்கழகத்தின் எரிக் ஜுர்க்கெர் என்பவர் “புத்தமதத்திற்குள் மூன்று அடிப்படைத் தீர்மானங்கள் இருக்கின்றன, ஒவ்வொன்றும் அதன் சொந்த கொள்கையின் கருத்துகளுடன் மத அனுசரணை வழக்கங்களையும், புனித வேதங்களையும், தரையில் உருவப்படம் வரையும் பாரம்பரியங்களையும் கொண்டது” என்று விவரிக்கிறார். இந்த இயக்கங்கள் வாகனங்கள் என்று புத்த கலைச்சொற்களில் அழைக்கப்படுகிறது. ஏனெனில் சிறு தோனிகள் போன்று அவை ஒரு நபரை விடுதலை என்ற கரை சேரும்வரை ஜீவ நதியின் குறுக்கே சுமந்து செல்கின்றன. பிறகு அந்த வாகனத்தைப் பாதுகாப்பாக விட்டுவிடலாம். பிரயாண முறை—வாகன வகை—ஒரு பொருட்டல்ல என்று புத்த மதத்தினன் உங்களிடம் சொல்லுவான். அங்கு போய் சேருவதே முக்கியக் காரியமாக இருக்கிறது.
இந்த வாகனங்கள் தேரவாடா புத்தமதத்தை உட்படுத்துகிறது. அது தெளிவாகவே புத்தர் என்ன பிரசாரம் செய்தாரோ அதற்கு ஏறக்குறைய நெருங்கியதாக இருக்கிறது. அது முக்கியமாக பர்மா (மியான்மார்), இலங்கை, லாவோஸ், தாய்லாந்து, கம்பூச்சியா, (முன்பு கம்போடியா) ஆகிய இடங்களில் வலுப்பெற்றிருக்கிறது. மஹாயானா புத்தமதம் முக்கியமாக சீனா, கொரியா, ஜப்பான், திபேத்து, மங்கோலியா ஆகிய இடங்களில் குறிப்பாக பலமாக இருக்கிறது. அது தாராளப் போக்கைக் கொண்டது, அது தன் போதனைகள் மக்களை எட்டும்படி மாற்றிக்கொண்டது. அதன் காரணத்தால் அது சிறிய வாகனமாகிய தேரவாடாவுக்கு நேர்மாறாக பெரிய வாகனம் என்று அழைக்கப்படுகிறது. வைர வாகனமாகிய வஜ்ராயனா, பொதுவாக மர்மமான கொள்கையுடைய புத்த மதம் என்று அறியப்படுகிறது. இது யோகசனத்துடன் சடங்காச்சாரங்களை ஒன்று சேர்க்கிறது, அது ஒருவர் நிர்வாணாவின் வழியில் முன்னேறுவதைத் துரிதப்படுத்துகிறது.
இந்த மூன்று இயக்கங்களும் அநேக பள்ளிகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் சில அடிப்படை ஆதாரப் பொருட்களை விளக்குவதில் அடிக்கடி வித்தியாசப்படுகிறது. ஏனெனில் புத்த வேதங்களின் சில பிரிவுகளில் பிரத்தியேக வலியுறுத்தலைக் கொடுப்பதால்தான். ஜுர்க்கெர் கூறுகிறபடி, அது எங்கே சென்றாலும் “புத்த மதம் வித்தியாசமான அளவுகளில் உள்ளூர் நம்பிக்கைகளிலும், பழக்கவழக்கங்களிலும் செல்வாக்கடைகிறது,” இந்த மதப்பள்ளிகள் விரைவில் எத்தனை எண்ணிக்கையுள்ள உள்ளூர் மதப் பிரிவுகளையும் முன்னின்று ஆதரித்தது. கிறிஸ்தவ மண்டலம் குழப்பத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான மதப் பிரிவுகளையும் உட்பிரிவுகளையும் கொண்டிருப்பதைப் போல், அடையாள அர்த்தத்துடன் குறிப்பிடவேண்டுமானால், புத்தர் பல முகங்களை அணிந்திருக்கிறார்.
புத்த மதமும் அரசியலும்
யூத மதத்தைப் போலவும் பேர் கிறிஸ்தவத்தைப் போலவும் புத்த மதம் தன்னை மத நடவடிக்கைகளுக்கு மட்டும் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை, ஆனால் அரசியல் கருத்தையும் நடத்தையையும் உருவமைத்திட உதவியிருக்கிறது. “புத்த மதத்தின் அரசியல் நடவடிக்கையின் முதல் கலப்பு [மன்னன்] அசோகாவின் ஆட்சியில் வந்தது,” என்று ஆசிரியர் ஜெரல்டு ஷெக்டர் கூறுகிறார். புத்த மதத்தின் அரசியல் நடவடிக்கை நம் நாள் வரைத் தொடருகிறது. 1987-ன் பிற்பகுதியில் சீனர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றதால், லாசாவில் 27 திபெத்திய புத்த பிட்சுக்கள் கைது செய்யப்பட்டனர். 1960-ன் வியட்னாம் போரில் புத்தமதம் உட்பட்டிருந்ததானது, ஷெக்டர் இந்த வார்த்தைகளை முடிவாகக் கூறிடச் செய்தது: “மத்திய வழியின் சமாதானப் பாதை தெரு ஆர்ப்பாட்டத்தின் புது வன்முறைக்குள் இணைக்கப்பட்டிருக்கிறது. . . . ஆசியாவிலுள்ள புத்த மதம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஒரு மதமாக இருக்கிறது.”
மேற்கிந்திய உலகின் வருந்தத்தக்க அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் ஒழுக்க நிலைகளினால் அதிருப்தியடைந்த சில மக்கள் புத்தமதம் உட்பட கிழக்கத்திய மதங்களுக்கு, விளக்கத்திற்காகத் திரும்புகிறார்கள். ஆனால் “விசுவாசத்தில் கொழுந்துவிட்டு எரியும்” மதம் விடைகளைக் கொடுக்கக்கூடுமா? நீங்கள் எமர்சனின் திட்டமான அளவையை, அதாவது “ஒரு மதத்தைச் சோதிப்பதற்கு வழி அது விளக்கக்கூடிய நிறைய காரியங்கள்” என்பதைப் பொறுத்துவது கெளத்தமரின் மெய்யறிவை எப்படி எடைப்போடுவீர்கள்? “சரியான பாதையைத் தேடிக்கொண்டிருக்கும்” ஆசிய மதங்களில் வேறுசில இதில் சிறந்து விளங்குமா? விடைக்கு எமது அடுத்த இதழின் தொடரைப் படியுங்கள். (g89 4/22)
[பக்கம் 26-ன் பெட்டி]
அதன் சில மக்கள், இடங்கள், பொருட்கள்
ஆதாமின் சிகரம் இலங்கையில் பரிசுத்தமாக நோக்கப்படும் ஒரு மலை; அங்கு ஒரு கல்லில் காணப்படும் ஒரு பாதக்குறி, புத்தமதத்தினரால் புத்தரின் பாதத் தடயம் என்றும், முகமதியரால் ஆதாமின் பாதத் தடயம் என்றும் இந்துக்களால் சிவனின் பாதத் தடயம் என்றும் சொல்லப்படுகிறது.
போதி மரம் என்கிற அரச மரத்தடியில் கெளதமர் புத்தராக மாறினார், “போதி” என்றால் மெய்யறிவு என்று அர்த்தம்; தாய் மரத்தின் ஒரு கிளை இன்றும் இருப்பதாகச் சொல்லப்பட்டு இலங்கையில் அனுராதபுரத்தில் அது வணக்கத்துக்குரியதாக்கப்பட்டிருக்கிறது.
புத்தப் பிட்சுகள் அவர்களுடைய தனித்தன்மை கொண்ட அங்கிகளால் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள். அவர்கள் புத்த மதத்தின் பிரதான ஆதாரப் பொருளின் உருவாக இருக்கிறார்கள். அவர்கள் நேர்மையாக இருப்பதாக, மனிதர்களிடமும் மிருகத்தினிடமும் கருணையுடன் இருப்பதாக, வாழ்க்கைத் தேவைக்கு யாசிப்பதாக, பொழுதுபோக்குகளை வெறுப்பதாக, கற்போடு வாழ்வதாக வாக்களிக்கிறார்கள்.
தலாய் லாமா, திபெத்தின் மதம் சாராதவற்றிற்கும் மதம் சார்ந்தவற்றிற்கும் தலைவர், புத்தரின் அவதாரம் என்று புத்த மதத்தினரால் நோக்கப்படுகிறவர். இவர் 1950-ல் நாடுகடத்தப்பட்டார். “தலாய்” என்பது “சமுத்திரம்” என்பதற்குரிய மங்கோலிய வார்த்தையாகும், இது பரந்த அறிவைக் குறிக்கிறது; “லாமா” ஓர் ஆத்மீகப் போதகரைக் குறிக்கிறது (சமஸ்கிருத குருவைப் போல்). செய்தி அறிக்கைகளின்படி, 1987-ன் திபேத்திய ஆர்ப்பாட்டங்களின்போது தலாய் லாமா “சமூக கீழ்ப்படியாமைக்குத் தன் ஆசியை அருளினார், ஆனால் வன்முறையைக் கண்டனம் செய்தார்,” இப்படியாக அவர் விருந்தினராக வந்திருந்த இந்திய நாடு, அரசியல் அறிவிப்புகள் அவர் தங்கியிருப்பதைக் கஷ்டமாக்கிவிடும் என்று அவருக்கு நினைவு படுத்தவேண்டியதாயிருந்தது.
பல் ஆலயம், இலங்கையில் கண்டியிலுள்ள புத்தர் ஆலயம், புத்தரின் ஒரு பல்லைப் பரிசுத்த நினைவுச் சின்னமாகக் கொண்டிருக்கும் புகழைப் பெற்றிருக்கிறது.
[பக்கம் 27-ன் பெட்டி]
தேனீரும் புத்தமதத்தினரின் “ஜெபமும்”
காரியங்கள் ஒத்திருப்பினும், புத்த மதத்தினரின் “ஜெபம்” மிகச் சரியாகவே “தியானம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியமாக சுய கட்டுப்பாட்டையும், ஆழ்ந்த தியானத்தையும் வலியுறுத்தும் ஒரு வடிவானது ஜென் புத்த மதமாகும். அது பொ.ச. 12-வது நூற்றாண்டில் ஜப்பானுக்குக் கொண்டுவரப்பட்டது. அது சான் என்று அறியப்படும் சீன வடிவான புத்த மதத்தின் அடிப்படையில் இருக்கிறது. அது போதிதர்மா என்ற பெயர்கொண்ட ஓர் இந்திய துறவியின் காலத்தைச் சேர்ந்தது. அவர் சீனாவுக்கு பொ.ச. ஆறாவது நூற்றாண்டில் சென்றார். சான் மதத்தை உருவாக்க அவர் சீன டாவோயிசத்திலிருந்து பெருமளவு கொள்கைகளைக் கடன்வாங்கினார். அவர் ஒரு சமயம் தியானத்தில் இருந்தபோது, தூங்கினதற்காக கோபாவேசத்தில் அவருடைய கண் இமைகளை வெட்டினார் என்று சொல்லப்படுகிறது. அவை பூமியில் விழுந்து, வேர் கொண்டு முதல் தேனீர் தாவரத்தை உண்டாக்கியதாம். தியானம் செய்யும் போது விழித்திருப்பதற்காக ஜென் துறவிகள் தேனீர் பருகுவதற்கு இந்தப் பழங்கதை ஒரு பாரம்பரிய ஆதாரமாக சேவிக்கிறது.
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
தாய்லாந்து, பாங்காக்கிலிருக்கும் பளிங்குக்கல் ஆலயம் போன்ற புத்த ஆலயங்கள் அதிகக் கவர்ச்சியானவை
மேலும் ஒரு பெளத்த மதப் பூதம் ஆலயத்தைக் காவல்செய்கிறது, கீழே ஒரு புத்தர் சிலை. இவை பெளத்த மதம் இருந்துவரும் தேசங்களில் எங்கும் காணப்படும் காட்சிகள்