சமாதானத்துக்கான ஜெபங்கள்—அவற்றுக்கு செவிகொடுப்பது யார்?
இறகுகளாலான தலைப்பாகை அணிந்திருந்த அந்த அமெரிக்க இந்தியன், ஒரு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மதகுருவைப் போல அதே மேடையில் என்ன செய்துகொண்டிருந்தார்? புத்தமத டெலைலாமா ஏன் கேன்டர்பரி தலைமைப் பேராயருடன் அமர்ந்திருந்தார்? ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைமைக் குருவுக்கும் யூத மத ரபீக்கும் இடையே பொதுவாக என்ன இருக்கக்கூடும்? அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் போப் ஜான் பால் II ஏன் தலைமைத்தாங்கக்கூடும்?
உலகின் பிரதான மதங்களின் தலைவர்களுடன் ஒரே ஜெப மேடையில் பங்குபெறுவது என்பது அண்மைக் காலமட்டும் எண்ணிப் பார்க்கவும் முடியாததாயிருந்திருக்கும். என்றபோதிலும் 1986-ம் ஆண்டின் பிற்பகுதியில், அஸிஸி என்ற இத்தாலி நகரில், “சமாதானத்துக்கான உலக ஜெப தினத்தைக் கொண்டாடுவதில் அவர் இந்த மற்ற மதங்களுடன் கலந்துகொண்டார். இந்தக் கூட்டம் போப் பாலால் சிபாரிசு செய்யப்பட்டது. இது 1986-ஐ சர்வதேச சமாதான ஆண்டாக நிர்ணயித்த ஐக்கிய நாட்டு சபையின் நோக்கத்திற்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அஸிஸியில் சமாதானத்துக்காக வித்தியாசப்பட்ட ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு செவிகொடுத்தது யார்? கிறிஸ்தவ மண்டலத்தின் திரித்துவக் கடவுளா? யூதர்களின் கடவுளா? முகமதியரின் அல்லாவா? ஆன்மவாதிகளின் மகா பெருவிரலும் முழங்கிடும் இடி தெய்வமுமா? இந்தக் கடவுட்களில் யாரேனும் இந்த ஜெபங்களுக்குச் செவிகொடுத்தனரா? அஸிஸி தொழுகைக் கூட்டம் நிறைவுபெற்று சில காலம் கடந்துவிட்டதால், விடைகள் தெளிவாயிருக்கின்றன.
என்ன நிகழ்ந்தது?
அந்த மதத் தலைவர்களின் ஜெபங்கள், அக்டோபர் 27 அன்று மத்திய இத்தாலியில் அஸிஸியில் நடைபெற்ற சர்வதேச ஜெப தினத்தின் உச்சக் கட்டமாக அமைந்தது. ஒரு பெரிய மேடை ஏற்பாடு செய்யப்பட்டு அதின் பின் திரையில் “சமாதானம்” என்ற வார்த்தை 14 மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. ஒரு பெரிய அரைவட்ட வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்க, அவற்றின் மத்தியில் போப் அமர்ந்திருந்தார். பிரதான மதங்களைச் சேர்ந்த 60 மதத் தலைவர்களுக்கும் அதிகமானவர்கள் ஜெப மேடையிலிருந்து ஒருவர் மாறி ஒருவராக ஜெபித்தார்கள். இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சி நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பினர். இதனை உலகமுழுவதும் ஏறக்குறைய 50 கோடி மக்கள் கண்டதாகச் சொல்லப்படுகிறது.
புத்த மதத்தினர்தான் முதலாவதாக ஜெபித்தனர். அவர்கள் “மகிழ்ச்சிப் பெருங்கடலுக்காக” ஜெபித்தனர். அடுத்து இந்து மதத்தினர் ஜெபித்தனர். “அனைத்து உயிரினத்துக்கும் அமைதி” வேண்டினர். “சர்வலோகத்துக்கும் ஆண்டவராகிய தேவனுக்கு ஸ்தாத்திரம்,” என்று முகமதியர் ஜெபித்தனர்.
“எமக்கு சமாதானத்தை அருளுவீராக,” என்று ஆப்பிரிக்க ஆன்மவாதிகள் தங்கள் தெய்வங்களிடம் விண்ணப்பித்தனர். அமெரிக்க இந்தியர் தங்கள் புகைபிடிக்கும் சமாதானக் குழாயை ஊதிக்கொண்டு, “அந்த மகா ஆவிக்கு, பூமாதேவிக்கு புகைபிடிக்குங் குழாயை அற்பணிக்கிறோம்” என்றனர். “பூமிக்கு சமாதானத்தை அருளுவீராக,” என்று யூதர்கள் விண்ணப்பித்தனர்.
“நம்முடைய கர்த்தராகிய தேவனிடம் சமாதானத்தோடு ஒன்று சேர்ந்து மன்றாடுவோமாக” என்பது கத்தோலிக்கர், ஆங்கிலிக்க பிரிவினர், லூதரன் மற்றும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மதத்தினர் ஆகியோரின் ஜெபம். சீக்கியரும், ஸொரஸ்டியரும், ஷின்டோயிஸ்ட்ஸ் மற்றும் சமண மதத்தினருங்கூட சர்வலோக சமாதானத்துக்காக ஜெபித்தனர்.
நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
உலக மதங்களின் உயர்மட்ட குருவர்க்கத்தினர் ஜெபிப்பதற்காக ஒரே இடத்தில் ஒன்றுகூடியிருப்பது இதுதான் முதல்முறை என்று செய்திக் குறிப்புகள் காண்பித்தன. எனவேதான் இந்தக் கூட்டம் “சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த” ஒன்று என்று அழைக்கப்பட்டது.
அவ்விடத்தில் பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவு கண்டது என்றும் சிலர் நம்பினர். அஸிஸி ஒரு மலைமீது அமைந்திருப்பதால், அது மீகா 4-ம் அதிகாரம் 2-ம் வசனத்தின் அடையாள அர்த்தமுள்ள மலை என்பதாகக் கருதினார்கள். அஸிஸி கூட்டம் “2,700 ஆண்டுகளுக்கு முன்பு மீகா தீர்க்கதரிசி முன்னறிவித்த ஒரு கூட்டம்,” என்பதாக ஓர் அறிக்கை கூறியது: “கடைசி [காலத்திலே] கர்த்தருடைய ஆலயம் நிற்கும் அந்த மலைதான் மிக உயர்ந்ததாயிருக்கும் . . . அதன் அடிவாரத்தில் அனைத்து மக்களும் ஒன்றுகூடி: ‘கர்த்தருடைய மலைக்குப் போவோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் நமக்குப் போதிப்பார்.’”—Vocedelle Contrade.
இல் சபாட்டோ என்ற பத்திரிகை உற்சாக தொனியில் கூறியதாவது: “பாபேல் கோபுரம் கட்டப்பட்டது முதல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். வானங்களை எட்டிட வேண்டும் என்ற அவர்களுடைய ஆசையின் காரணத்தால் அன்று அம்மனிதர் பிரிந்தனர். இன்றோ கடவுளுடைய ஈவாகிய சமாதானத்தினிடமாக அவர்களை வழிநடத்தும் மத உணர்ச்சிகள் என்ற பெயரில் மனிதர் ஒன்றுசேர்ந்திருக்கின்றனர்.”
ஆழ்ந்த கவனத்திற்குரிய கேள்விகள் எழுப்பப்பட்டன
அந்த நிகழ்ச்சி கண்களுக்கு விருந்தாயிருந்தது என்பதில் சந்தேகமில்லை. என்றபோதிலும் அது தகுதியான கேள்விகளை எழுப்பியது. லா நாஸியோன் என்ற தினசரி பின்வரும் கேள்விகளை எழுப்பியது: “அந்தச் செய்தி அதன் நோக்கத்தை நிறைவேற்றியதா? அது அந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஐம்பது கோடி மக்களின் இருதயங்களை எட்டியிருக்குமா? இந்த உலகத்தின் எதிர்கால முடிவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிர்ணயித்து அதனிடமாக வழிநடத்திடுவோரின் கற்பாறை போன்ற நிலைநிற்கையில் ஒரு வெடிப்பை ஏற்படுத்தியிருக்குமா?
சிந்திக்கும் மக்கள் இன்னும்சில சிந்தனையைத் தூண்டிடும் கேள்விகளைக் கேட்கின்றனர்: எப்படிப்பட்ட வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டாலும் கடவுள் எல்லா ஜெபங்களையும் ஏற்றுக்கொள்கிறாரா? ஒரு காரியத்தின் பேரில் கடவுளுடைய நோக்குநிலையை நிச்சயப்படுத்திக்கொள்ளாமலேயே ஜெபித்தால், அது போதுமா? இந்தக் கூட்டத்தினால் மக்கள் சமாதானத்திற்காக செயல்பட ஊக்குவிக்கப்பட்டிருக்கின்றனரா? கடந்துபோன காலம் கற்பிப்பது என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக, உலக சமாதானம் எப்படி சாதிக்கப்படும் என்பது குறித்து வேத வசனங்கள் என்ன சொல்லுகின்றன?
அதே சமயத்தில் நாம் பின்வரும் கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும்: அஸிஸியில் கூடிய இந்த உலக மதங்களின் கூட்டம் உண்மையில் ஒரு நவீன கால பாபேல் கோபுரமா? (g87 6⁄8)