அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியம்—ஓர் அடிப்படைத் தேவை
மருத்துவ விஞ்ஞானம் குறிப்பிடத்தக்க விதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த காலங்களில் தொல்லைத் தந்தப் பெரிய தொற்று நோய்களுக்கான காரணங்கள் இனிமேலும் புரியாதப் புதிராக இல்லை. வியப்புக்கேதுவான முன்னேற்றங்கள் நவீன மருத்துவ அருஞ்செயல்களுக்கு வழிநடத்தியிருக்கிறது.
இருந்தபோதிலும் உடல்நலப் பிரச்னைகள் மனதை இன்னும் தடுமாறச் செய்வதாகவே இருக்கின்றன. அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்பின் பேரில் 1978 சர்வ தேச மாநாடு நடைபெற்ற சமயத்தில் உலகிலுள்ள கிராமிய மற்றும் ஏழ்மையிலுள்ள நகர்புற வாசிகளில் 80 சதவிகிதத்தினர் உடல் நலம் பேணும் எந்த ஒரு பொதுநலச் சேவையையும் இதுவரை பயன்படுத்திக்கொள்ள வழி இல்லாதவர்களாகவே இருந்தனர். அந்த ஆண்டில் ஐந்து வயதிற்குட்பட்ட 31 பிள்ளைகளில் 30 பிள்ளைகள் சாகும் நிலையிலேயே இருந்தனர். “வளர்ச்சியடைந்த” தேசங்களில் சுற்றுப்புறச் சூழல் நாசமடைதலும், தூய்மைக்கேடும், தீங்கிழைக்கும் கழிவுப் பொருட்களும் உயிருக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் கோட்ட அலுவலகம் 2000 ஆண்டுக்குள் அனைவருக்கும் நோயற்ற நிலையை அல்ல, ஆனால் அந்தச் சமயத்துக்குள் ஒரு சாத்தியமான நெருக்கடியையே காண்கிறது. 1983-ல் இது பீட்டர் ஓநீல் எழுதிய உடல்நல நெருக்கடி 2000 என்ற ஒரு புத்தகத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொண்டது. இப்புத்தகம், நாகரீகமடைந்துள்ள உலகினுள் நுழைந்துவிட்டிருக்கும் “நடுக்க உணர்வை ஏற்படுத்தும்” ஏராளமான “புதிய நோய்களைக்” கண்கூடாக காண்பதைப் பற்றி பேசியது. இவை யாவை? சுற்றுப்புறச் சூழல் உண்டுபண்ணும் புற்றுநோய், இருதயநோய், போதை மருந்துக்கு அடிமையாதல், மனநோய் பாலுறவினால் கடத்தப்படும் நோய்கள், “தன்னையே அழித்துக்கொள்ளும் புகைப்பிடிப்பவரின் மற்றும் குடிக்காரனின் தூண்டுதல்,” மற்றும் “நம்முடைய உயிரைச் சூறையாடி நம்முடைய பொருளாதார வளங்களை இழக்கச்செய்யும் ‘சாலை விபத்து’ கொள்ளைநோய்.” “வளமான சமுதாயங்களின் இந்த நோய்கள்” ஏழ்மையிலுள்ள தேசங்களுக்குள்ளும்கூட பரவி வருகிறது.
தற்காலப் பிரச்னைகள்
இந்தத் தற்காலப் பிரச்னைகளில் சிலவற்றை நாம் சிந்திப்போமாக:
புற்றுநோய் ஐக்கிய மாகாணங்களில் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணமாக இருக்கிறது. அமெரிக்க நாட்டவரில் ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவரை இது தாக்குகிறது. உலகம் முழுவதிலும் 400 லட்சம் பேர் இந்த நோயினால் அவதியுறக்கூடும். புற்றுநோயை உண்டுபண்ணும் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன.
தூய்மைக்கேடு. கெடுதியை விளைவிக்கும் பொருட்களும் தீங்கிழைக்கும் கழிவுப் பொருட்களும் சுற்றுப்புறச் சூழலை அசுத்தப்படுத்திவிடுகின்றன. பூச்சுக்கொல்லிகள் உணவுப் பொருட்களில் காணப்படுகின்றன. ஆறுகளும் கடலும் நச்சுப்படுத்தப்பட்டிருக்கிறது. சில இடங்களில் கேணிகளிலிருந்து எடுக்கப்படும் நிலத்துக்கு அடியிலுள்ள தண்ணீரும்கூட நச்சுப்படுத்தப்பட்டிருக்கிறது.
போதை மருந்துக்கு அடிமையாதல். போதை மருந்துக்கு அடிமையாவதைப் “படிப்படியாக நரகத்தை நோக்கிச் செல்லுதல்” என்பதாக உடல் நல நெருக்கடி 2000 அழைக்கிறது. “இளம் மனதும் உடலும் படிப்படியாக அழிவது அத்தனை பயங்கரமானதாகவும், மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பது நோயாளிக்கும் உதவி புரிவோருக்கும் நீண்ட காலமெடுப்பதாயும் கடினமானதாயும் இருப்பதால், இது விசேஷமான ஆய்வுக்குத் தகுதியுள்ளதாக இருக்கிறது.”
பாலுறவினால் கடத்தப்படும் நோய்கள். ஒழுக்கச் சீர்குலைவின் காரணமாக மேக நோய்கள் மிகப் பரவலாகக் காணப்படும் தொற்றுநோய் என்றழைக்கப்படும் அளவுக்குப் பரவியிருக்கின்றன. மக்களிடையே நோய் பரவுதல் அத்தனை சாதாரணமாக இருப்பதால், பாலுறவில் சுறுசுறுப்பாக ஈடுபடும் ஒரு நபர் (ஒன்றுக்கு மேல் பல துணைவர்களைக் கொண்டிருக்கும் ஒரு நபர்) நோய் நுண்மங்களைக் கடத்தக்கூடிய சாத்தியம் அதிகம் இருக்கிறது” என்பதாக உலக சுகாதாரம் பத்திரிகை கூறுகிறது.
மதுபானத் துர்ப்பிரயோகம் அநேக இடங்களில், பெண்களும் வளரிளமைப் பருவத்திலுள்ளவர்களும், இளம் பிள்ளைகளும்கூட மதுபானத் துர்ப்பிரயோகம் செய்பவர்களின் பட்டியலில் அதிகமாக இடம் பெறுகிறார்கள். சாலை விபத்துக்களில் 40 சதவிகிதத்துக்குக் காரணம் மதுபானமே என்பதாகச் சொல்லப்படுகிறது. எப்போதாவது குடிக்கும் பழக்கமுள்ள ஒருவரும்கூட, மோட்டார் வண்டியை ஓட்டிச் செல்கையில், தன் திறமயைக் காட்ட முற்படும்போது ஒரு குடும்பத்தையே கூட நாசமாக்கிவிடக்கூடும்.
தற்காலப் பிரயாணம். தற்காலப் பிரயாண வசதிகள், தொற்று நோய்கள் உலகம் முழுவதிலும் பரவுவதைச் சாத்தியமானதாக்கிவிட்டிருக்கிறது. ஏய்ட்ஸ் நோயும் பென்சிலினுக்குப் பணிய மறுக்கும் மேக வேட்டை நோயும் உலகம் முழுவதிலும் பிரயாணிகளால் பரப்பப்பட்டு வந்திருக்கிறது. இந்த நோய்கள், “இருபதாம் நூற்றாண்டின் தனித்தன்மையான மக்கள் தொகையின் குறிப்பிடத்தக்க இடப்பெயர்ச்சியை அனுகூலப்படுத்திக் கொண்டிருப்பதாகச்” சொல்லப்படுகிறது.
மக்கள்தொகை. மக்கள்தொகை வெடிப்பும், கிராமவாசிகள் ஏற்கெனவே மக்கள்தொகை அதிகமாயுள்ள நகரங்களுக்குள் இடம் பெயர்ந்து செல்வதும் உலகினுடைய உடல்நலப் பிரச்னைகளை மேலுமாக சிக்கலாக்கிவிட்டிருக்கிறது. 1983-ல் 26 நகரங்கள் ஐம்பது லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருந்தன. 2000 ஆண்டுக்குள், இப்படிப்பட்ட நகரங்களின் எண்ணிக்கை 60 ஆக இருக்கக்கூடும். அப்பொழுது 100 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், “நகரங்களில் உச்ச அளவு வறுமை நிலையில் வாழ்வார்கள்” என்பதாக உலக சுகாதாரம் பத்திரிக்கை சொல்கிறது. உலக வங்கியின் முன்னாள் தலைவரான ராபர்ட் மக்னமாரா பின்வருமாறு எச்சரித்தார்: “நகரங்கள் வறுமையை அதிக ஆக்கப்பூர்வமாகக் கையாள ஆரம்பிக்காவிட்டால், வறுமை நகரங்களை அழிக்க ஆரம்பித்துவிடும்.”
இதன் காரணமாகவே, கடினமாகவும் முழு ஈடுபாடுடனும் வேலை செய்பவர்களுடைய முயற்சிகளின் மத்தியிலும், “எல்லோருக்கும் நோயற்ற நிலை” என்ற இலக்கு எட்டமுடியாத அளவு தூரத்திலிருப்பதாகத் தெரிகிறது. உண்மையில் இந்தக் கோஷத்தைச் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ள முடியாது. அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் குறைந்த பட்சம் அடிப்படை உடல்நல பராமரிப்பு வசதி எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்பதே இதன் பொருளாக இருக்கிறது. நோய்களையும் இயலாமையையும் வராமல் தடுத்து, துன்பத்தைத் தணிப்பதற்கு “உடல் ஆரோக்கியத்துக்கான வள ஆதாரங்களை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளித்து . . . இன்றியமையாத உடல்நலப் பராமரிப்பு அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகச் செய்து இப்பொழுது அவர்கள் செய்வதைவிட மேம்பட்ட அணுகுமுறைகளை மக்கள் பயன்படுத்தச் செய்வதே இலக்காக இருக்கிறது” என்பதாக உலக சுகாதார அமைப்பின் ஒரு சிறு புத்தகம் குறிப்பிடுகிறது. (g87 5⁄8)