பல் மருத்துவத்தில் பலமான முன்னேற்றங்கள்
உங்கள் பற்களில் ஏற்பட்டிருக்கும் குழிவுகளைச் சீராக நிரப்பிட பல் மருத்துவர் பயன்படுத்தும் துளைக்கருவி உங்களை ஏங்கவும் புலம்பவும் வைக்கக்கூடும், ஆனால் துளைக்கருவி அதிகமாகப் பயன்படுத்தப்படாமலேயே உங்கள் பல்லைச் சீர்செய்வது என்ற செய்தி உங்கள் செவிகளுக்கு இன்னிசையாக இருக்கக்கூடும். அதுபோல பற்களைச் சீர்படுத்த கம்பிகளை அணிதல், பல்செட்போட்டுக்கொள்ளுதல் அல்லது பல் கட்டுதல் போன்ற காரியங்கள் உங்களுக்கு நல்ல அனுபவமாக இல்லாதிருந்தால் அண்மையில் பல் மருத்துவத்தில் ஏற்பட்டிருக்கும் பலமான முன்னேற்றங்கள் உங்களுக்கு இனிமையான இசையாகத் தொணிக்கக்கூடும்.
◻ அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் பாட்ஸனிலிருந்து வந்த அசோசியேட்டட் பிரஸ் அறிக்கைபடி, பல்லிலிருக்கும் சொத்தை முழுவதையும் மிக எளிதாக எடுத்துவிடும் ஒரு திரவம் (கேரிடெக்ஸ்) இப்பொழுது பல்நோய் மருத்துவரிடம் உண்டு. “இந்தத் திரவம் பற்சொத்தையின்மேல் உடனடியாகச் செயல்படுகிறது, இது சுண்ணகப் பொருட்களில் அல்லது ஆரோக்கியமான பற்களில் செயல்படாது. ஆனால் சுண்ணகப்படிமானம் இல்லாத பொருட்களில் தான் செயல்படக்கூடியது,” என்று அந்தக் கட்டுரை விளக்குகிறது. இந்தத் திரவப் பொருளின் உபயோகத்தை ஐக்கிய மாகாணங்களின் அரசு அங்கீகரித்திருக்கிறது. இது பற்களில் துளைபோடுதலை 80 சதவிகிதத்திற்குக் குறைக்கக்கூடும். அப்படியென்றால், வேதனையும் குறைகிறது, மற்றும் பற்களில் துளைபோடுவார்கள் என்ற எதிர்பார்ப்பினாலும் துளைபோடுவதாலும் ஏற்படும் பயமும் மன அழுத்தமுங்கூட மறைகிறது.
◻ கனடாவில் டொரான்டோவின் தி சன்டே ஸ்டர், பற்குழிவுகளை நிரப்புவதற்கு ஒரு புதிய “இயல் முறையைக்” குறித்து கூறுகிறது. அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் மேரிலாண்டில்தான் இந்தப் புதிய முறையை அபிவிருத்தி செய்த நிபுணர்கள் இருக்கின்றனர். இது “உடலின் உயிருள்ள திசுக்களுடன் இயல்பாகச் சேர்ந்துகொள்ளும் தன்மை வாய்ந்தது,” என்று அவர்கள் கூறுகின்றனர். நீரகமும் உயிரகமும் சுண்ணகத்துடன் சேர்ந்து சொத்தையை மாற்றி “பல்லின் ஒரு பாகமாகிவிடுகிறது” என்று அவர்கள் உரிமைபாராட்டுகின்றனர். இந்தப் பொருள் இன்னும் ஐந்து வருடங்களில் பொதுமக்கள் உபயோகத்திற்காக அரசு அங்கீகாரம் பெற்றுவிடும் என்று அமெரிக்க பல்நல ஆதாரக் கழகத்தின் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
◻ பற்களுக்கிடையே சந்து அல்லது இடைவெளி மற்றும் உடைந்ததும், தெரித்ததும், நிறம் மாறியதும் முறுக்கியதுமான பற்களை உடையவர்களுக்கு மற்ற முன்னேற்றங்கள் அக்கறையூட்டுவதாய் இருக்கக்கூடும். ஒரே சந்திப்பில்—பற்குழிவைத் துளைத்து அந்த ஒரு பல்லை நிரப்பும் நேரத்தில்—பற்களுக்கிடையே இருக்கும் சந்துகளை அல்லது இடைவெளிகளை அடைப்பதற்கான நேரத்தில்—தற்போது ஜக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு ஒப்பனைப் பிணைப்பு முறையில் அந்தச் சந்துகள் அடைக்கப்படலாம். பெரும்பாலும் கம்பிக்கட்டுகள் தேவைப்படுவதில்லை. நிறமிழந்த அல்லது உடைந்த பற்களை சீர்படுத்துவதற்கும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இப்படியாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அதிக செலவையும் நேரத்தையும் உட்படுத்தும் பல் சிகிச்சை முறைகள் அதிகமாக வரவேற்கப்படுவதும் உடனடியாக மேன்மையான தோற்றத்திற்கு ஏதுவானதுமான சிகிச்சை முறையால் மாற்றப்படக்கூடும்.
◻ கடைசியாக, விபத்தாலோ அல்லது ஈறுகள் நோய்ப்படுவதாலோ தங்களுடைய சில பற்களை அல்லது எல்லாப் பற்களையுமே இழந்துவிடும் ஆட்களுக்கு அல்லது தாடை எலும்புகள் வயதால் சுருங்கும்போது செயற்கைப் பல் கட்டிக்கொள்ள முடியாத ஆட்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஓர் அறிக்கை லீடர்ஸ் என்ற பத்திரிகையில் காணப்படுகிறது. அதுதான் எலும்பிணைப்பு முறை (Osseointegration) என்றழைக்கப்படும் ஒரு முறை, அதாவது உயிருள்ள ஓர் எலும்பை வேதியல் விளைவுகளற்ற கரும்பொன்ம உலோகத்துடன் இணைக்கும் முறையாகும்.” அறுவை சிகிச்சையின் மூலம் பதிக்கப்படும் கரும்பொன்ம உலோகத்தின் “வேர்களும்” எலும்பும் மூன்று அல்லது ஆறு மாதங்களில் இணைந்து “பல்லில்லா தாடையை அதன் பழைய நிலைக்குக் கொண்டுவந்துவிடுகிறது.”
இதைத் தொடருவதுதான் “வாயை அழுத்தி மூடுதல், கடித்தல், பல் தேர்ந்தெடுப்பு மற்றும் பால இணைப்புகள் ஆகியவற்றிற்காக பல் மருத்துவரை சந்திக்கச் செல்லுதல். இவையனைத்தும் முடிந்தவுடன் அந்தப் பல் நோயாளி தன்னுடைய நிரந்தரமான, உறுதியான பற்களைப் பெறுகிறார்,” என்று அந்தக் கட்டுரை சொல்கிறது. ஒரு தரமான பல்லடுக்கு போட்டுக்கொள்வதற்கு உட்படும் அதே செலவுதான் இதிலும் உட்படுத்துகிறது. 1984-ல் ஏறக்குறைய 300 அமெரிக்க மக்களும், 1985-ல் 700 பேரும் இந்தப் பற்சிகிச்சையைப் பெற்றனர். இந்த பற்சிகிச்சை முறை “பாதுகாப்பானது, நிரந்தரமானது” என்று விவரிக்கப்படுகிறது. (g86 11/22)