உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
‘எல்லா விதமான மக்களுக்கும்’ உதவ எளிமையாக்கப்பட்ட அச்சடிப்பு
அக்டோபர் 1, 2025
‘எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை பெற வேண்டும்’ என்று கடவுளாகிய யெகோவா ஆசைப்படுகிறார். (1 தீமோத்தேயு 2:3, 4) ஆனால், நம் சகோதர சகோதரிகளும் சரி, நாம் பிரசங்கிக்கிற ஆட்களும் சரி நூற்றுக்கணக்கான மொழிகள் பேசுகிறார்கள். இந்த மொழிகளில் கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமான பிரசுரங்களை ஒவ்வொரு வருஷமும் நாம் அச்சடிக்கிறோம். நன்கொடையாக கிடைத்த பணத்தை வீணாக்காமல் இவ்வளவு அதிகமான மொழிகளில் பைபிள் பிரசுரங்களை அச்சடிக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம்?
குறைவான அச்சகங்கள், சிறப்பான கருவிகள்
1980-களில் 40-க்கும் அதிகமான நாடுகளில் நாம் பிரசுரங்களை அச்சடித்துக் கொண்டிருந்தோம். அப்போதிலிருந்து, இந்த வேலையை படிப்படியாக ஒருங்கிணைத்து வந்தோம். அதனால், இப்போது வெறும் ஒன்பது நாடுகளில் மட்டுமே அச்சடிக்கிற வேலை நடக்கிறது. அதே காலப்பகுதியில், நாம் தவறாமல் அச்சடிக்கிற பிரசுரங்களையும் ஆறு மடங்கு அதிகமான மொழிகளில் அச்சடிக்க வேண்டியிருந்தது. அச்சகங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் எப்படி இவ்வளவு மொழிகளில் எங்களால் அச்சடிக்க முடிகிறது? அதற்கு முக்கிய காரணம் சிறப்பான அச்சு இயந்திரங்கள்!
புதிய அச்சு இயந்திரங்கள் குறைவான நேரத்தில் அதிகமான பிரசுரங்களை அச்சடிக்க உதவுகின்றன. நம்முடைய பழைய அச்சு இயந்திரங்களில் ஒவ்வொரு பிரசுரத்தையும் அச்சடிப்பதற்காக நாம் அச்சுத் தட்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். அதற்கு நிறைய நேரம் எடுக்கும். ஆனால், இப்போது நம்மிடம் சிறந்த அச்சு இயந்திரங்கள் இருக்கிறது. அதனால் இந்த வேலைகளை நான்கு மடங்கு வேகமாக செய்ய முடிகிறது, நிறைய வேலைகளை ரொம்ப சீக்கிரமாகவும் செய்ய முடிகிறது. அதுவும் கொஞ்சம் பேர் மட்டும் பேசுகிற மொழிகளில் குறைவான அளவில் பிரசுரங்களை அச்சடிக்க முடிகிறது. ஆனால் எப்படி இருந்தாலும், நமக்கு புது அச்சுத் தட்டுகள் தேவைப்படும். சமீபத்தில் எடுத்த 12 மாத கணக்கின்படி, நாம் அச்சுத் தட்டுகளுக்கு மட்டுமே கிட்டத்தட்ட 20 லட்சம் டாலர்களை செலவு செய்திருக்கிறோம்.a சின்னச் சின்ன வேலைகளை செய்வதற்காக நாம் டிஜிட்டல் அச்சு இயந்திரங்களை பயன்படுத்துகிறோம். அதற்கு அச்சுத் தட்டுகள் தேவைப்படாது. இந்த அச்சு இயந்திரங்களிலும் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்குகிற அச்சு இயந்திரங்களிலும் குறைவான அளவில் பிரசுரங்களை அச்சடிக்கிறோம். அதுவும் குறைந்த செலவில், பொருள்களை அதிகமாக வீணாக்காமல்!
அச்சுத் தட்டுகளை மாற்றுவது
கடந்த மூன்று வருஷத்தில், உலகம் முழுவதும் நம்முடைய அச்சு இயந்திரங்களையும் பைண்டிங் இயந்திரங்களையும் மேம்படுத்துவதற்காக ஒரு கோடி டாலருக்கும் அதிகமான பணத்தை நாம் செலவழித்திருக்கிறோம். பைபிளை தயாரிக்க சில இயந்திரங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம். முன்பு பைபிளை அச்சடித்த பிறகு ஒரு புத்தக வடிவில் ஆக்குவதற்கு 40-க்கும் அதிகமான வேலைகளை செய்ய வேண்டியிருந்தது. அதாவது தைப்பது, வெட்டுவது, ஓரங்களை வெட்டுவது, மென்மையாக்குவது, முலாம் பூசுவது போன்ற வேலைகளை செய்ய வேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, இந்த ஒவ்வொரு வேலைக்காகவும் பைபிள்களை கையிலேயே எடுத்துக் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் அடுக்கி வைக்க வேண்டியிருந்தது. இப்போது நாம் பயன்படுத்துகிற புதிய இயந்திரங்கள், இந்த வேலைகளை எல்லாம் ஒன்று சேர்த்ததால் வெறும் பத்து வேலைகளை செய்தாலே போதுமானதாக இருக்கிறது. அதோடு, ஒரு வேலை முடிந்ததும், கன்வேயர் இயந்திரங்களே அடுத்த வேலைக்காக பைபிளை வேறொரு இடத்துக்கு கொண்டுபோகிறது. அதனால் பைபிளை தயாரிப்பதற்கு நாம் செய்துகொண்டிருந்த வேலை அப்படியே பாதி அளவுக்கு குறைந்துவிட்டது. ஜப்பான் கிளையில் உள்ள பைண்டரியில், ஒவ்வொரு எட்டு மணி நேரமும் 2,000 பைபிள்களை தயாரித்தோம். இப்போது அதே நேரத்தில் கிட்டத்தட்ட 35,000 பைபிள்களை தயாரிக்கிறோம்.
பைபிளின் ஒவ்வொரு பகுதியை அடையாளம் காணவும் ஒன்றுசேர்க்கவும் பிரித்து வைக்கவும் பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன
குறைந்த கையிருப்பு, குறைந்த செலவு
மேலே சொல்லப்பட்ட மாற்றங்களை செய்ததால் நன்கொடை பணத்தை எங்களால் மிச்சப்படுத்த முடிந்திருக்கிறது. உதாரணத்துக்கு, இப்போது நாங்கள் குறைவான அளவில் அச்சடிப்பதாலும் அடிக்கடி அச்சுத் தட்டுகளை மாற்றுவதாலும் ஒவ்வொரு அச்சகங்களிலும் சேமித்து வைக்கிற பிரசுரங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஐக்கிய மாகாண கிளையில் சேவை செய்கிற கேரி என்ற சகோதரர் இப்படி சொல்கிறார்: “குறைவான அளவில் அடிக்கடி பிரசுரங்களை அச்சடிப்பது எப்படி ஒரு நல்ல ஐடியாவாக இருக்க முடியும் என்று ஆரம்பத்தில் நாங்கள் யோசித்தோம். அதுக்கு பதிலா அதிகமான பிரசுரங்களை அப்பப்போ அச்சடிச்சா நல்லா இருக்குமே என்று நினைத்தோம். குறைவான அளவில் அடிக்கடி அச்சடிக்கிற வேலையை ஆரம்பித்த முதல் வருஷத்தில் அச்சுத் தட்டுகளுக்கும் வீணாகிற பேப்பர்களுக்கும் செலவழித்த பணம் 60,000 டாலர்களாக அதிகரித்தது. இருந்தாலும் அந்த வருஷத்தில், எங்களால் 15 லட்சம் டாலர்களுக்கு அதிகமாக சேமிக்க முடிந்தது. ஏனென்றால், பேப்பர்களையும் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும் சேமித்து வைப்பதற்காக ஆகிற செலவுகள் குறைந்துவிட்டது.” அப்படி சேமிக்கிற பணத்தை ராஜ்ய மன்றங்களை கட்டுவது... நிவாரண உதவிகள் செய்வது... போன்ற மற்ற முக்கியமான தேவைகளுக்காக செலவு செய்கிறோம்.
பிரசுரங்களை சேர்த்து வைக்கிற அளவு குறைந்ததால் சில கிளை அலுவலகங்களில் நமக்கு நிறைய இட வசதி கிடைத்திருக்கிறது. அதனால் அந்த இடங்களை பெத்தேலில் இருக்கிற மற்ற தேவைகளுக்காக பயன்படுத்த முடிகிறது. அதுமட்டுமல்ல, அச்சடிக்கிற வேலை செய்கிற கிளைகளின் எண்ணிக்கையை நாம் குறைத்ததால் புதிய கிளைகளை அதற்கேற்ப வடிவமைக்க முடிகிறது. உதாரணமாக, 2018-ல் இருந்து பிரிட்டன் கிளையில் நடந்த அச்சடிக்கிற வேலையை, மத்திய ஐரோப்பா கிளையும் மற்ற இடங்களில் இருக்கிற அச்சகங்களும் செய்ய ஆரம்பித்தன. இதனால் இங்கிலாந்தில், செம்ஸ்ஃபோர்ட்டில் இருக்கிற புதிய கிளையை கட்டுவதற்கான செலவில் லட்சக்கணக்கான டாலர்களை நம்மால் மிச்சம் பிடிக்க முடிந்தது.
“நீங்க என்னை கூட ஞாபகம் வச்சிருக்கீங்க!“
மிக முக்கியமாக, நம்முடைய அச்சடிக்கும் வேலை எளிமையாக்கப்பட்டதால் இப்போது நிறைய மக்களால் யெகோவாவிடம் நெருங்கி வர முடிகிறது. ஏனென்றால் நாம் நிறைய மொழிகளில் அச்சடிக்கிறோம், வெறும் நூற்றுக்கணக்கான பிரசுரங்கள் தேவைப்பட்டாலும் அச்சடிக்கிறோம். உதாரணத்துக்கு, நியூ கேலிடோனியா, வாலிஸ், ப்யூட்டுனா ஆகிய தீவுகளில் இருக்கிற மக்களில் வெறும் 35,000 பேர் மட்டும்தான் வேலிஸ்யன் மொழி பேசுகிறார்கள். ஆனால், ஆகஸ்ட் 2024-ல் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் முழு பதிப்பை வேலிஸ்யன் மொழியில் நாம் வெளியிட்டோம். அந்த மொழி பேசுகிற செலஃபினா என்ற சகோதரி இப்படி சொல்கிறார்: “பிரெஞ்சு மொழி எனக்கு அவ்வளவா புரியாது. இருந்தாலும், கடமைக்காக அதை வாசிப்பேன். வேலிஸ்யன் மொழி பைபிள் என் கையில கிடைச்ச உடனே நான் சந்தோஷத்தில் அழுதுட்டேன். ‘நீங்க என்னை கூட ஞாபகம் வச்சிருக்கீங்க! உங்ககிட்ட பாரபட்சம் இல்லவே இல்ல’ அப்படின்னு யெகோவா கிட்ட ஜெபம் செய்தேன்.”
வேலிஸ்யன் மொழியில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் முழுமையான பதிப்பு இப்போது கிடைக்கிறது
காங்கோ ஜனநாயகக் குடியரசில் 5,00,000-க்கும் குறைவான ஆட்கள்தான் சாங்கா மொழியை பேசுகிறார்கள். ஆனால், அந்த மொழியில் இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகம் முழுமையாக கிடைக்கிறது. சாங்கா மொழி சபையை சேர்ந்த ஜோஸ்வா என்ற சகோதரர் இப்படி சொல்கிறார்: “முன்பெல்லாம் சில வார்த்தைகளை பைபிள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். அப்படி சொல்லிக் கொடுத்தாலும் கூட, அந்த புத்தகத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று அவர்களுக்கு புரியாது. ஆனால் இப்போது சாங்கா மொழியிலேயே அந்த புத்தகம் கிடைத்தபோது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இப்போதெல்லாம் என்னுடைய மாணவர்களுக்கு நான் ஒவ்வொரு வார்த்தையையும் ரொம்ப நேரம் விளக்க வேண்டியதில்லை. அதை அவர்கள் படிச்சவுடனே புரிந்துகொள்கிறார்கள்.”
ஹோண்டுராசில், 1,20,000 மக்கள் பேசுகிற காரிஃபூனா மொழியில் இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை வைத்து பைபிள் படிப்பு நடத்தப்படுகிறது
இதுவரைக்கும் இல்லாத அளவு அதிகமான மொழிகளிலும் அதிகமான மக்களுக்காகவும் நாம் பைபிள் பிரசுரங்களை தயாரித்து வெளியிடுகிறோம். donate.jw.org மூலமாகவும் மற்ற வழிகளிலும் நீங்கள் தாராளமாக கொடுக்கிற நன்கொடைகளே இதை செய்ய எங்களுக்கு உதவியிருக்கிறது. அதற்காக நாங்கள் ரொம்ப நன்றி சொல்கிறோம்!
a இந்தக் கட்டுரையில் வரும் டாலர்கள் அனைத்தும் அமெரிக்க டாலர்கள்.