பைபிளில் வரும் பெண்கள்—நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
பைபிளின் பதில்
பைபிளின் பக்கங்களைப் புரட்டும்போது நிறைய பெண்களைப் பற்றி படிக்கிறோம். அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து முத்து முத்தான பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். (ரோமர் 15:4; 2 தீமோத்தேயு 3:16, 17) இந்தக் கட்டுரையில் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற சில பெண்களைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம். நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் நாம் எப்படி நடந்துகொள்ள கூடாது என்றும் கற்றுக்கொள்வோம்.—1 கொரிந்தியர் 10:11; எபிரெயர் 6:12.
அபிகாயில்
அவள் யார்? நாபாலுடைய மனைவி. நாபால் ரொம்ப பணக்காரன், ஆனால் முரடன். அபிகாயிலோ அப்படி இல்லை. அவள் ஒரு புத்திசாலி, மனத்தாழ்மையான பெண். அவளிடம் அழகுக்கு பஞ்சமே இல்லை, கடவுளுக்கு பிடித்த நல்ல நல்ல குணங்களுக்கும் குறைவே இல்லை.—1 சாமுவேல் 25:3.
என்ன செய்தாள்? புத்திசாலித்தனமாக நடந்து ஒரு பேராபத்தை தடுத்தாள். அப்படி என்ன நடந்தது? நாபாலும் அபிகாயிலும் வாழ்ந்துகொண்டிருந்த இடத்துக்கு பக்கத்தில்தான் இஸ்ரவேலின் வருங்கால ராஜாவான தாவீது ஒளிந்து நாடோடியாக வாழ்ந்துகொண்டிருந்தார். அந்த சமயத்தில், நாபாலுடைய ஆட்டு மந்தைகளை கொள்ளையர்கள் கொள்ளையடிக்காமல் தாவீதும் அவருடைய ஆட்களும் பாதுகாத்தார்கள். ஆனால், நாபாலிடம் உணவு கேட்டு தாவீது ஆட்களை அனுப்பியபோது நாபால், ‘கொடுக்க முடியாது’ என்று சொல்லி அவர்களை அவமானப்படுத்தி துரத்திவிட்டான். அதைக் கேட்டதும் தாவீது கோபத்தில் கொதித்தெழுந்தார்! நாபாலையும் அவனுடைய குடும்பத்தில் இருக்கிற எல்லாரையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தன்னுடைய ஆட்களோடு கிளம்பினார்.—1 சாமுவேல் 25:10-12, 22.
தன் கணவர் செய்த காரியத்தை கேட்டதும் அபிகாயில் உடனடியாக களத்தில் இறங்கினாள். தாவீதிடமும் அவருடைய ஆட்களிடமும் கொடுக்க சொல்லி தன்னுடைய வேலைக்காரர்களிடம் கூடை கூடையாக உணவுப் பொருள்களை கொடுத்தனுப்பினாள். இரக்கம் காட்ட சொல்லி தாவீதிடம் கெஞ்சுவதற்காக அபிகாயிலும் பின்தொடர்ந்து போனாள். (1 சாமுவேல் 25:14-19, 24-31) அவள் கொடுத்த பொருள்களை தாவீது பார்த்தார். அவளுடைய மனத்தாழ்மையை கவனித்தார். அவள் சொன்ன நல்ல ஆலோசனைகளை கேட்டார். தன்மேல் கொலைப்பழி விழாமல் தடுக்க யெகோவாதான் அபிகாயிலை அனுப்பினார் என்பதை தாவீது புரிந்துகொண்டார். (1 சாமுவேல் 25:32, 33) அதன் பின்பு கொஞ்ச நாட்களிலேயே நாபால் இறந்துவிட்டான். தாவீது அபிகாயிலை கல்யாணம் செய்துகொண்டார்.—1 சாமுவேல் 25:37-41.
என்ன பாடம்? அபிகாயிலிடம் அழகும் பணமும் கொட்டிக் கிடந்தாலும் அவள் தன்னையே பெரிய ஆளாக நினைக்கவில்லை. தன்மேல் தவறு இல்லை என்றாலும் கூட சமாதானத்தை காப்பதற்காக மன்னிப்பு கேட்க தயாராக இருந்தாள். பதட்டமான சூழ்நிலையை நிதானமாக... பக்குவமாக... தைரியமாக... புத்திசாலித்தனமாக... சமாளித்தாள்.
▸ அபிகாயிலைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “புத்திசாலியாக நடந்துகொண்டாள்“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
அன்னாள்
அவள் யார்? எல்க்கானாவின் மனைவி. பூர்வ இஸ்ரவேலில் இருந்த முக்கியமான தீர்க்கதரிசிகளில் ஒருவரான சாமுவேலின் அம்மா.—1 சாமுவேல் 1:1, 2, 4-7.
என்ன செய்தாள்? குழந்தைபாக்கியம் இல்லாத அன்னாள் ஆறுதல் கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்தாள். அவளுடைய கணவருக்கு பெனின்னாள் என்ற இன்னொரு மனைவியும் இருந்தாள், அவளுக்கு குழந்தைகள் இருந்தார்கள். ஆனால் அன்னாளுக்கு கல்யாணமாகி ரொம்ப வருஷங்கள் ஆகியும் குழந்தைகளே இல்லை. பெனின்னாள் அதை பற்றி குத்திக்காட்டி அவள் மனதை நோகடித்துக்கொண்டே இருந்தாள். அதனால் ஆறுதலுக்காக அன்னாள் கடவுளிடம் ஜெபம் செய்தாள். அதுமட்டுமல்ல, தனக்கு ஒரு மகனைக் கொடுத்தால் அவனை வழிபாட்டுக் கூடாரத்தில் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய அர்ப்பணிப்பதாக கடவுளிடம் நேர்ந்துகொண்டாள். வழிபாட்டுக் கூடாரம் என்பது கடவுளை வழிபட இஸ்ரவேலர்கள் பயன்படுத்திய கூடாரம். இதை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோக முடிந்தது.—1 சாமுவேல் 1:11.
அன்னாள் கேட்டதை கடவுள் கொடுத்தார். அவளுக்கு சாமுவேல் பிறந்தான். அன்னாள் நேர்ந்துகொண்டபடியே சாமுவேல் ரொம்ப சின்ன பையனாக இருந்தபோதே வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்வதற்காக அவனை கொண்டுபோய் விட்டுவிட்டாள். (1 சாமுவேல் 1:27, 28) வருஷா வருஷம், கையில்லாத அங்கியை அவனுக்கு தைத்துக் கொண்டுபோய் கொடுத்தாள். கடவுள் அவளுக்கு இன்னும் ஐந்து பிள்ளைகளை, மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும், கொடுத்து ஆசீர்வதித்தார்.—1 சாமுவேல் 2:18-21.
என்ன பாடம்? மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி ஜெபம் செய்தது கஷ்டங்களை சகிக்க அன்னாளுக்கு உதவியது. நன்றி சொல்லி அன்னாள் செய்த ஜெபம் 1 சாமுவேல் 2:1-10-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஜெபம், அன்னாளுக்கு கடவுள்மேல் அசைக்க முடியாத விசுவாசம் இருந்ததைக் காட்டுகிறது.
▸ அன்னாளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “மனக்குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினாள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
▸ பூர்வ காலத்தில் வாழ்ந்த தன்னுடைய மக்கள் பலதார மணம் செய்துகொள்ள யெகோவா ஏன் அனுமதித்தார் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள, “பூர்வ இஸ்ரவேலர்கள் பலதார மணம் செய்வதை யெகோவா அனுமதித்தார், ஆனால் இப்போதோ அனுமதிப்பதில்லை. அப்படியென்றால், அவருடைய தராதரம் மாறிக்கொண்டே இருக்குமா?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
எஸ்தர்
அவள் யார்? அவள் ஒரு யூதப் பெண். பெர்சிய பேரரசின் மகா ராஜாவான அகாஸ்வேரு அவளை கல்யாணம் செய்து தன்னுடைய ராணியாக்கினார்.
என்ன செய்தாள்? தன்னுடைய மக்களை பூண்டோடு அழிக்க நினைத்தவர்களை எஸ்தர் ராணி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தினாள். பெர்சிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்கள் எல்லாரும் ஒரு குறிப்பிட்ட நாளில் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு சட்டம் போடப்பட்டது. இந்த சதி வேலையை செய்தது அந்த நாட்டின் பிரதம மந்திரி ஆமான். (எஸ்தர் 3:13-15; 4:1, 5) இதை அறிந்த எஸ்தர், தன்னுடைய பெரியப்பா மகன் மொர்தெகாயின் உதவியை நாடினாள். தன்னுடைய உயிரை பணயம் வைத்து இதைப் பற்றி தன்னுடைய கணவர் அகாஸ்வேரு ராஜாவிடம் சொன்னாள். (எஸ்தர் 4:10-16; 7:1-10) அப்போது இன்னொரு சட்டத்தை போட சொல்லி எஸ்தருக்கும் மொர்தெகாய்க்கும் அகாஸ்வேரு அனுமதி கொடுத்தார். அந்த சட்டத்தின்படி, யூதர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக தங்களை தாக்க வருகிறவர்களை எதிர்த்து போராடலாம். தங்களை தீர்த்துக்கட்ட குறித்திருந்த அதே நாளில் யூதர்கள் தங்களுடைய எதிரிகளை அடியோடு தீர்த்துக் கட்டினார்கள்.—எஸ்தர் 8:5-11; 9:16, 17.
என்ன பாடம்? தைரியத்துக்கும் மனத்தாழ்மைக்கும் அடக்கத்துக்கும் எஸ்தர் ராணி ஒரு சிறந்த முன்மாதிரி. (சங்கீதம் 31:24; பிலிப்பியர் 2:3) பேரழகியாகவும் பேரரசியாகவும் இருந்தாலும் கூட அவளுக்கு பெருமை தலைக்கேறவில்லை. ரொம்ப மனத்தாழ்மையாக மற்றவர்களிடம் ஆலோசனையும் உதவியும் கேட்டாள். கணவரிடம் பேசும்போது கூட ரொம்ப பக்குவமாகவும் பணிவாகவும் பேசினாள், அதேசமயத்தில் தைரியமாகவும் பேசினாள். தான் ஒரு யூதப் பெண் என்று சொன்னாலே தன்னுடைய உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் அதை துணிச்சலோடு சொன்னாள்.
▸ எஸ்தரைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “கடவுளுடைய மக்களுக்காக துணிந்து செயல்பட்டாள்“ மற்றும் “ஞானமாய், தைரியமாய் தன்னலமின்றி செயல்பட்டாள்“ என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.
ஏவாள்
அவள் யார்? கடவுள் படைத்த முதல் பெண். பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற முதல் பெண்ணும் அவள்தான்.
என்ன செய்தாள்? கடவுள் கொடுத்த ஒரு தெளிவான கட்டளையை மீறிவிட்டாள். அவளுடைய கணவன் ஆதாம் மாதிரியே ஏவாளும் பரிபூரணமாக படைக்கப்பட்டாள். சொந்தமாக தீர்மானம் எடுக்கிற உரிமையும் அவளுக்கு இருந்தது. அன்பு, ஞானம் போன்ற கடவுளுடைய குணங்களையும் அவளால் காட்ட முடிந்தது. (ஆதியாகமம் 1:27) ஒரு மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடக் கூடாது, அப்படி சாப்பிட்டால் செத்துப் போய்விடுவீர்கள் என்று ஆதாமிடம் கடவுள் சொன்னது ஏவாளுக்கு ரொம்ப நன்றாகவே தெரிந்திருந்தது. இருந்தாலும், அந்த மரத்தின் பழத்தை சாப்பிட்டால் ஏவாள் சாக மாட்டாள் என்று சாத்தான் அவளை நம்ப வைத்துவிட்டான். கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போனால் கூட அவளால் நன்றாக வாழ முடியும் என்று தந்திரமாக பேசி ஏமாற்றிவிட்டான். ஏவாள் அந்த பழத்தை சாப்பிட்டாள். அதற்கு பின்பு அவளுடைய கணவனையும் சாப்பிட தூண்டினாள்.—ஆதியாகமம் 3:1-6; 1 தீமோத்தேயு 2:14.
என்ன பாடம்? கெட்ட விஷயங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால் அது பேராபத்தில்தான் போய் முடியும் என்ற பாடத்தை ஏவாளிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். கடவுள் தெளிவான கட்டளையை கொடுத்திருந்தும், தனக்கு சொந்தம் இல்லாத விஷயத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பேராசையை வளர்த்துக்கொண்டாள்.—ஆதியாகமம் 3:6; 1 யோவான் 2:16.
சாராள்
அவள் யார்? ஆபிரகாமின் மனைவி, ஈசாக்கின் அம்மா.
என்ன செய்தாள்? ஊர் நகரத்தில் இருந்த செல்வச் செழிப்பான, சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு போனாள். ஏனென்றால், தன்னுடைய கணவர் ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்திருந்த வாக்குறுதிகள்மேல் அவள் விசுவாசம் வைத்திருந்தாள். ஆபிரகாமிடம் கடவுள் ஊர் நகரத்தை விட்டுவிட்டு கானான் தேசத்துக்கு போக சொன்னார். அவரை ஆசீர்வதிப்பதாகவும் ஒரு பெரிய தேசமாக்குவதாகவும் கடவுள் வாக்குறுதி கொடுத்தார். (ஆதியாகமம் 12:1-5) அப்படி கிளம்பிப் போன சமயத்தில் சாராளுக்கு 60-65 வயது இருந்திருக்கும். அதற்கு பிறகு சாராளும் அவளுடைய கணவனும் நாடோடிகளாக கூடாரங்களில்தான் வாழ்ந்தார்கள்.
நாடோடியாக அவளுடைய வாழ்க்கை ஆபத்தானதாக இருந்தது. ஆனாலும், கடவுளுடைய பேச்சை தட்டாமல் நடந்த ஆபிரகாமுக்கு சாராள் பக்கபலமாக இருந்தாள். (ஆதியாகமம் 12:10, 15) ஆபிரகாமுடைய சந்ததி ஆசீர்வதிக்கப்படும் என்று கடவுள் வாக்குக் கொடுத்திருந்தார். (ஆதியாகமம் 12:7; 13:15; 15:18; 16:1, 2, 15) இருந்தாலும் ரொம்ப வருஷங்களுக்கு சாராளுக்கு குழந்தை பாக்கியமே இல்லை. அதை நினைத்து அவள் வேதனைப்படாத நாளே இல்லை. கொஞ்ச நாட்களுக்கு பிறகு சாராள் ஆபிரகாமுக்கு ஒரு குழந்தையை பெற்று கொடுப்பாள் என்று கடவுள் வாக்குக் கொடுத்தார். சாராள் தள்ளாத வயதில் தாயானாள். சாராளுக்கு அப்போது 90 வயது, அவளுடைய கணவருக்கு 100 வயது. (ஆதியாகமம் 17:17; 21:2-5) அந்த குழந்தைக்கு அவர்கள் ஈசாக்கு என்று பெயர் வைத்தார்கள்.
என்ன பாடம்? தான் கொடுத்த வாக்குறுதிகளை கடவுள் நிச்சயம் நிறைவேற்றுவார், நடக்கவே வாய்ப்பில்லை என்று நாம் நினைக்கும் விஷயங்களைக் கூட நடத்திக் காட்டுவார் என்பதை சாராளுடைய உதாரணம் காட்டுகிறது. (எபிரெயர் 11:11) ஒரு மனைவியாக மணவாழ்க்கையில் மரியாதை காட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதை இவளுடைய உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம்.—1 பேதுரு 3:5, 6.
▸ சாராளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறாய்,” மற்றும் “கடவுள் இவளை இளவரசி என்று அழைத்தார்” என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.
சூலேமியப் பெண்
அவள் யார்? அவள் ஒரு அழகான கிராமத்து பெண். பைபிளில் இருக்கிற உன்னதப்பாட்டு புத்தகத்தில் வருகிற முக்கியமான கதாபாத்திரம். பைபிளில் அவளுடைய பெயர் கிடையாது.
என்ன செய்தாள்? மேய்ப்பனான தன்னுடைய காதலனுக்கு அவள் உண்மையாக இருந்தாள். (உன்னதப்பாட்டு 2:16) பணக்காரரான சாலொமோன் ராஜா கொட்டிக் கிடந்த அவளுடைய கொள்ளை அழகில் மயங்கி அவள் மனதை கொள்ளையடிக்க நினைத்தார். தன்னுடைய காதல் வலையில் அவளை விழவைக்க எவ்வளவோ முயற்சி செய்தார். (உன்னதப்பாட்டு 7:6) சாலொமோனை ஏற்றுக்கொள்ள சொல்லி மற்றவர்கள் அவளை கட்டாயப்படுத்தினாலும் அவள் தன் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவள் மனசு முழுக்க அந்த ஏழை மேய்ப்பன்தான் இருந்தான். அவனைத் தவிர அவள் மனதில் யாருக்குமே இடமில்லை.—உன்னதப்பாட்டு 3:5; 7:10; 8:6.
என்ன பாடம்? ராஜாவே மயங்குகிற அளவுக்கு அழகு இருந்தும் கூட அவள் தன்னைப் பற்றி அளவுக்கதிகமாக நினைக்கவில்லை. கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்லி மற்றவர்கள் நச்சரித்தாலும்... பணம் பொருள் அந்தஸ்தை அள்ளி கொடுப்பதாக ராஜா ஆசை வார்த்தை காட்டினாலும்... அவள் எதற்குமே மயங்கவில்லை. தன் மனதை அலைபாய விடவில்லை. ஒழுக்க விஷயத்தில் நெருப்பாக இருந்தாள்.
தெபொராள்
அவள் யார்? இஸ்ரவேலர்களின் கடவுளான யெகோவாவுடைய ஒரு தீர்க்கதரிசி. கடவுள் தன்னுடைய மக்களிடம் சொல்ல நினைத்ததை இவள் மூலமாக சொன்னார். இஸ்ரவேலர்களுக்கு இடையே வந்த நிறைய பிரச்சினைகளை சரிசெய்ய இவளை கடவுள் பயன்படுத்தினார்.—நியாயாதிபதிகள் 4:4, 5.
என்ன செய்தாள்? தீர்க்கதரிசியான தெபொராள் கடவுளை வணங்குகிறவர்களுக்கு ரொம்ப தைரியமாக ஆதரவு கொடுத்தாள். அந்த சமயத்தில், கானானியர்கள் இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்கினார்கள். அதனால், அவர்களை எதிர்த்து போர் செய்ய இஸ்ரவேலர்களுடைய படைகளை திரட்டிக்கொண்டு போகும்படி பாராக்கிடம் யெகோவா சொல்ல சொன்னார். (நியாயாதிபதிகள் 4:6, 7) அதை அவள் சொன்னபோது பாராக் தெபொராளையும் தன்னுடன் வர சொன்னார். போர்க்களம் என்று பயப்படாமல், எந்த தயக்கமும் இல்லாமல் தெபொராள் தைரியமாக அவரோடு போனாள்.—நியாயாதிபதிகள் 4:8, 9.
யெகோவா இஸ்ரவேலர்களுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தார். அப்போது தெபொராளும் பாராக்கும் வெற்றிப் பாடலை பாடினார்கள். நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் விவரித்து பாடினார்கள். அந்தப் பாட்டின் ஒரு பகுதியை தெபொராள் இயற்றினாள். அதில் கானானியர்களை தோற்கடிப்பதற்காக வீர மங்கை யாகேல் செய்த விஷயத்தை பற்றியும் பாடினாள்.—நியாயாதிபதிகள், அதிகாரம் 5.
என்ன பாடம்? இவள் தன்னலம் பார்க்காமல் தன்னையே கொடுத்த தைரியமான பெண். கடவுளுடைய பார்வையில் சரியானதை செய்ய சொல்லி மற்றவர்களை உற்சாகப்படுத்தினாள். அப்படி செய்தவர்களை மனசார பாராட்டினாள்.
▸ தெபொராளை பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “இஸ்ரவேலில் நான் ஒரு தாயாக வந்தேன்“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
தெலீலாள்
அவள் யார்? இஸ்ரவேலின் நியாயாதிபதியான சிம்சோனின் காதலி.—நியாயாதிபதிகள் 16:4, 5.
என்ன செய்தாள்? பெலிஸ்திய தலைவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு சிம்சோனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தாள். பெலிஸ்தியர்களிடமிருந்து இஸ்ரவேலர்களை காப்பாற்ற சிம்சோனை கடவுள் பயன்படுத்தினார். கடவுள் சிம்சோனுக்கு அபார பலம் கொடுத்திருந்ததால் பெலிஸ்தியர்களால் அவரை தோற்கடிக்கவே முடியவில்லை. (நியாயாதிபதிகள் 13:5) அதனால் அந்தத் தலைவர்கள் தெலீலாளிடம் உதவி கேட்டார்கள்.
சிம்சோனுடைய பலத்தின் ரகசியத்தை கண்டுபிடிக்க பெலிஸ்தியர்கள் தெலீலாளுக்கு லஞ்சம் கொடுத்தார்கள். தெலீலாள் அந்தப் பணத்தை வாங்கினாள். இந்த ரகசியத்தை தெரிந்தே ஆக வேண்டும் என்று அவள் விடாப்பிடியாக முயற்சி செய்தாள், ஒருவழியாக அதைத் தெரிந்துகொண்டாள். (நியாயாதிபதிகள் 16:15-17) அதை அப்படியே பெலிஸ்தியர்களின் காதில் போட்டுவிட்டாள். அவர்கள் சிம்சோனை பிடித்து சிறையில் போட்டார்கள்.—நியாயாதிபதிகள் 16:18-21.
என்ன பாடம்? தெலீலாள் ஒரு கெட்ட உதாரணம். பேராசை ஆட்டிப்படைத்ததால் யெகோவாவுடைய ஊழியரிடம் ஒரு துரோகியாக... சுயநலவாதியாக... வஞ்சகியாக நடந்துகொண்டாள்.
மகதலேனா மரியாள்
அவள் யார்? இயேசுவுக்கு விசுவாசமாக இருந்த ஒரு பெண் சீஷர்.
என்ன செய்தாள்? இயேசுவோடும் அவருடைய சீஷர்களோடும் பயணம் செய்த நிறைய பெண்களில் மகதலேனா மரியாளும் ஒருவர். இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் சேவை செய்ய தன்னுடைய பணத்தை தாராளமாக செலவு பண்ணினாள். (லூக்கா 8:1-3) இயேசு ஊழியம் செய்த கடைசி நாள்வரை அவளும் அவர் கூடவே போனாள். அவர் கொல்லப்பட்ட சமயத்தில் கூட அவர் பக்கத்திலேயே இருந்தாள். இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவரை முதன்முதலாக பார்க்கும் விசேஷ வாய்ப்பு பெற்ற சிலரில் மகதலேனா மரியாளும் ஒருவர்.—யோவான் 20:11-18.
என்ன பாடம்? பணம், பொருள், சக்தி என தன்னிடம் இருந்த எல்லாவற்றையுமே கொடுத்து இயேசுவுடைய ஊழிய வேலையை ஆதரித்தாள். அவள் தன்னையே அர்ப்பணித்த ஒரு பெண் சீஷர்.
மரியாள் (இயேசுவின் அம்மா)
அவள் யார்? அவள் ஒரு இளம் யூதப் பெண். அற்புதமான விதத்தில் அவள் கர்ப்பமானாள். கடவுளுடைய மகனான இயேசுவை பெற்றெடுத்தபோது அவள் ஒரு கன்னிப் பெண்.
என்ன செய்தாள்? மரியாள் கடவுளுடைய விருப்பத்தை தாழ்மையோடு செய்தாள். யோசேப்போடு அவளுக்கு கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த சமயத்தில்தான் ஒரு தேவதூதர் அவளிடம் பேசினார். அவள் கர்ப்பமாவாள் என்றும் காலங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட மேசியாவை பெற்றெடுப்பாள் என்றும் சொன்னார். (லூக்கா 1:26-33) இந்த பொறுப்பை மரியாள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாள். ஆனால், மரியாள் கடைசி வரைக்கும் ஒரு கன்னிப் பெண்ணாகவே இருந்துவிடவில்லை. இயேசு பிறந்த பிறகு மரியாளுக்கும் யோசேப்புக்கும் நான்கு மகன்களும் ஒன்றோ இரண்டோ மகள்களும் பிறந்தார்கள். (மத்தேயு 13:55, 56) யாருக்குமே கிடைக்காத ஒரு விசேஷ பாக்கியம் மரியாளுக்கு கிடைத்திருந்தாலும் இயேசு ஊழியம் செய்த சமயத்திலும் சரி, ஆரம்பகால கிறிஸ்தவ சபையில் ஒரு அங்கத்தினராக இருந்தபோதும் சரி, தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டிக்கொள்ளவும் இல்லை, எல்லாரும் தன்னை புகழ வேண்டும் என்று நினைக்கவும் இல்லை.
என்ன பாடம்? மரியாள் சவாலான பொறுப்பைத் தயங்காமல் ஏற்றுக்கொண்ட விசுவாசமுள்ள பெண். கடவுளுடைய வார்த்தையை அவள் கரைத்துக் குடித்திருந்தாள். அவள் சொன்ன சில முத்தான வார்த்தைகள் லூக்கா 1:46-55-ல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில், ஒரு கணக்கின்படி எபிரேய வேதாகமத்தில் இருந்து கிட்டத்தட்ட இருபது மேற்கோள்களை அவள் பயன்படுத்தியிருக்கலாம்.
▸ மரியாளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “அவள் யெகோவாவின் தயவை மிகுதியாகப் பெற்றிருந்தாள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
மரியாள் (மார்த்தாளுக்கும் லாசருவுக்கும் சகோதரி)
அவள் யார்? லாசரு மற்றும் மார்த்தாளை போல மரியாளும் இயேசுவின் ஒரு நெருங்கிய நண்பர்.
என்ன செய்தாள்? கடவுளுடைய மகனான இயேசுமேல் அவள் வைத்திருந்த பெரும் மதிப்பை பல தடவை செயல்களில் காட்டினாள். இயேசு அங்கே இருந்திருந்தால் தன்னுடைய சகோதரன் லாசரு இறந்திருக்க மாட்டான் என்ற தன்னுடைய நம்பிக்கையை மரியாள் வெளிப்படையாக சொன்னாள். இயேசு லாசருவை உயிர்த்தெழுப்பிய போதும் மரியாள் அங்கே இருந்தாள். வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வதற்கு பதிலாக இயேசுவின் காலடியில் உட்கார்ந்து அவருடைய போதனைகளை கேட்டுக்கொண்டிருந்ததற்காக மரியாளை மார்த்தாள் குறை சொன்னாள். மற்ற விஷயங்களை விட ஆன்மீக விஷயங்களுக்கு மரியாள் முக்கியத்துவம் கொடுத்ததால் இயேசு அவளை பாராட்டினார்.—லூக்கா 10:38-42.
இன்னொரு சந்தர்ப்பத்தில், இயேசுவின் தலையிலும் பாதத்திலும் “விலை உயர்ந்த வாசனை எண்ணெயை” ஊற்றுவதன் மூலம் மரியாள் தாராள குணத்தை தாராளமாக காட்டினாள். (மத்தேயு 26:6, 7) மரியாள் தேவையில்லாமல் வீணாக்குவதாக அங்கே இருந்தவர்கள் குற்றம்சாட்டினார்கள். ஆனால், இயேசு மரியாளுக்கு ஆதரவாக இப்படிச் சொன்னார்: “உலகில் எங்கெல்லாம் [கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய] நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இந்தப் பெண் செய்த காரியமும் இவள் நினைவாகச் சொல்லப்படும்.”—மத்தேயு 24:14; 26:8-13.
என்ன பாடம்? மரியாளுக்கு ஆழமான விசுவாசம் இருந்தது. சொந்த வேலைகளிலேயே மூழ்கிப்போகாமல் கடவுளை வணங்குவதற்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தாள். இயேசுவை கௌரவப்படுத்துவதற்காக பணத்தை தாராளமாக செலவு செய்யக் கூட தயாராக இருந்தாள்.
மார்த்தாள்
அவள் யார்? லாசரு மற்றும் மரியாளின் சகோதரி. இவர்கள் மூன்று பேரும் எருசலேமுக்குப் பக்கத்தில் இருந்த பெத்தானியா என்ற கிராமத்தில் வாழ்ந்தார்கள்.
என்ன செய்தாள்? மார்த்தாள் இயேசுவின் நெருங்கிய நண்பர். “மார்த்தாளையும் அவளுடைய சகோதரியையும் லாசருவையும் இயேசு நேசித்தார்.” (யோவான் 11:5) மார்த்தாள் உபசரிக்கும் குணமுள்ள பெண். ஒரு தடவை இயேசு அவர்களுடைய வீட்டுக்கு வந்தபோது, மரியாள் அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் மார்த்தாளோ வீட்டு வேலைகளை விழுந்து விழுந்து செய்துகொண்டிருந்தாள். மரியாள் தனக்கு உதவி செய்யவில்லை என்று இயேசுவிடம் மார்த்தாள் குறை சொன்னாள். அப்போது இயேசு மார்த்தாளை கனிவாக திருத்தினார்.—லூக்கா 10:38-42.
லாசருக்கு உடம்பு முடியாமல் போனபோது மார்த்தாளும் அவளுடைய சகோதரியும் இயேசுவை வரவழைக்க ஆள் அனுப்பினார்கள். இயேசு எப்படியும் தங்களுடைய சகோதரனை குணப்படுத்திவிடுவார் என்று உறுதியாக அவர்கள் நம்பினார்கள். (யோவான் 11:3, 21) ஆனால் லாசரு இறந்துவிட்டார். உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிள் கொடுத்திருக்கிற வாக்குறுதியிலும், அவளுடைய சகோதரனை உயிரோடு எழுப்புவதற்கு இயேசுவுக்கு இருக்கிற சக்தியிலும் மார்த்தாளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. இது அவள் இயேசுவிடம் பேசிய வார்த்தைகளிலிருந்து தெரிகிறது.—யோவான் 11:20-27.
என்ன பாடம்? தடபுடலாக விருந்து வைத்து விருந்தாளிகளை கவனித்துக்கொள்வதில் மார்த்தாள் ஒரு கில்லாடி. அவளுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டபோது அதை மனதார ஏற்றுக்கொண்டாள். மனதில் பட்டதை வெளிப்படையாக சொன்னாள். அவளுடைய நம்பிக்கையை பற்றியும் தயங்காமல் பேசினாள்.
▸ மார்த்தாளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “‘நான் நம்புகிறேன்’” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
மிரியாம்
அவள் யார்? மோசேக்கும் ஆரோனுக்கும் சகோதரி. அதோடு, பைபிளில் சொல்லப்பட்ட முதல் பெண் தீர்க்கதரிசி.
என்ன செய்தாள்? ஒரு தீர்க்கதரிசியாக கடவுளுடைய செய்தியை மற்றவர்களுக்கு சொல்வதில் இவளுக்கும் ஒரு பங்கு இருந்தது. அதனால் இஸ்ரவேலில் அவள் ஒரு முக்கியமான நபராக இருந்தாள். எகிப்தியர்களை செங்கடலில் கடவுள் சமாதியாக்கியபோது வெற்றிப் பாடலை ஆண்கள் பாடப் பாட மிரியாமும் அவர்களோடு சேர்ந்து பாடினாள்.—யாத்திராகமம் 15:1, 20, 21.
கொஞ்ச நாளுக்கு பின்பு மிரியாமும் ஆரோனும் மோசேக்கு எதிராக தப்புத் தப்பாக பேச ஆரம்பித்தார்கள். பெருமையும் பொறாமையும்தான் அவர்கள் இப்படிச் செய்ததற்கான முக்கிய காரணம். இவை எல்லாவற்றையும் கடவுள் “கேட்டுக்கொண்டிருந்தார்,” மிரியாமையும் ஆரோனையும் கடுமையாக கண்டித்தார். (எண்ணாகமம் 12:1-9) இப்படி தப்புத் தப்பாக பேசுவதற்கு ஆரம்பப் புள்ளி வைத்ததே மிரியாம்தான். அதனால் கடவுள் அவளை தொழுநோயால் தண்டித்தார். மிரியாமுக்காக மோசே கடவுளிடம் கெஞ்சியதால் கடவுள் அவளை குணப்படுத்தினார். மிரியாம் இஸ்ரவேல் முகாமுக்கு வெளியே ஏழு நாள் ஒதுக்கி வைக்கப்பட்டாள். பின்பு மறுபடியும் உள்ளே வர அனுமதிக்கப்பட்டாள்.—எண்ணாகமம் 12:10-15.
கடவுள் கொடுத்த ஆலோசனையையும் கண்டிப்பையும் மிரியாம் ஏற்றுக்கொண்டாள் என்று பைபிள் சொல்கிறது. பல நூற்றாண்டுகள் கழித்து, “நான்தான். . . மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் உங்கள்முன் அனுப்பினேன்” என்று கடவுள் சொன்னபோது மிரியாமுக்கு கிடைத்த விசேஷ பொறுப்பை இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஞாபகப்படுத்தினார். —மீகா 6:4.
என்ன பாடம்? கடவுளை வணங்குகிறவர்கள் ஒருவருக்கொருவர் என்ன பேசிக்கொள்கிறார்கள், மற்றவர்களை பற்றி என்ன பேசுகிறார்கள் என்று கடவுள் கவனித்து கேட்கிறார் என்பதை மிரியாமின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம். கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்றால் பெருமையும் பொறாமையும் எட்டிப் பார்க்க நாம் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் மற்றவர்களுடைய நல்ல பெயரைக் கெடுக்கிற மாதிரி எதையாவது செய்துவிடுவோம்.
யாகேல்
அவள் யார்? ஹேபெருடைய மனைவி, இவர்கள் இஸ்ரவேலர்கள் கிடையாது. கடவுளுடைய மக்களுக்காக யாகேல் தைரியமாக நின்றாள்.
என்ன செய்தாள்? கானானியர்களுடைய படைத்தலைவன் சிசெரா தன்னுடைய கூடாரத்துக்கு வந்தபோது யாகேல் வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டாள். இஸ்ரவேலுக்கு எதிராக செய்த போரில் தோற்றுப்போய் சிசெரா அடைக்கலம் தேடி அங்கே வந்தான். ஒளிந்துகொள்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் அவனை தன் கூடாரத்துக்குள்ளே வரச் சொல்லி யாகேல் கூப்பிட்டாள். சிசெரா அசந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் அவனை சாகடித்தாள்.—நியாயாதிபதிகள் 4:17-21.
“ஒரு பெண்ணின் கையால்தான் சிசெராவை யெகோவா சாகடிப்பார்” என்று தெபோராள் தீர்க்கதரிசனமாக சொன்ன வார்த்தைகளை யாகேல் நிறைவேற்றினாள். (நியாயாதிபதிகள் 4:9) அவள் செய்த இந்த வீரமான செயலால் “பெண்களில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்ற பெயரை சம்பாதித்தாள்.—நியாயாதிபதிகள் 5:24.
என்ன பாடம்? யாகேல் தானாகவே முன்வந்து தைரியமாக செயல்பட்டாள். ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காக சூழ்நிலைகளை அதற்கு ஏற்ற மாதிரி மாற்ற கடவுளால் முடியும் என்பதை யாகேலுடைய உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
யேசபேல்
அவள் யார்? இஸ்ரவேல் ராஜாவான ஆகாபின் மனைவி. ஆனால் அவள் ஒரு இஸ்ரவேல் பெண் கிடையாது. அவள் யெகோவாவை வணங்கவில்லை, கானானிய கடவுளான பாகாலை வணங்கினாள்.
என்ன செய்தாள்? யேசபேல் ராணி மற்றவர்களை ஆட்டிப்படைப்பவளாக... ஈவிரக்கம் இல்லாதவளாக... கொடூரமானவளாக இருந்தாள். பாகால் வணக்கத்தையும் அதன் பாகமாக இருந்த பாலியல் முறைகேட்டையும் அவள் ஊக்குவித்தாள். அதே சமயத்தில், உண்மைக் கடவுளான யெகோவாவுடைய வழிபாட்டை துடைத்தழிப்பதில் பிடிவாதமாக இருந்தாள்.—1 ராஜாக்கள் 18:4, 13; 19:1-3.
தான் நினைத்ததை சாதிப்பதற்காக பொய்யும் பித்தலாட்டமும் செய்தாள், நிறைய பேரை கொன்று குவித்தாள். (1 ராஜாக்கள் 21:8-16) கடவுள் முன்கூட்டியே சொன்னதுபோல் அவளுக்கு ரொம்ப கொடூரமான சாவு வந்தது, அவளுடைய உடலும் நல்லடக்கம் செய்யப்படவில்லை.—1 ராஜாக்கள் 21:23; 2 ராஜாக்கள் 9:10, 32-37.
என்ன பாடம்? யேசபேல் ஒரு மோசமான உதாரணம். அவள் ஒரு ஒழுக்கங்கெட்ட, தரங்கெட்ட பெண். நினைத்ததை அடைய வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவள். இன்றும் கூட அடங்காப்பிடாரியாக ... வெட்கங்கெட்டவளாக... நடத்தைகெட்டவளாக... இருக்கிற பெண், யேசபேல் என்ற பட்டப் பெயரில் அழைக்கப்படுவதில் ஆச்சரியமே இல்லை.
ராகாப்
அவள் யார்? கானானிய நகரமான எரிகோவில் வாழ்ந்த ஒரு விலைமகள். இவள் பின்பு யெகோவாவை வணங்க ஆரம்பித்தாள்.
என்ன செய்தாள்? தன்னுடைய நாட்டை உளவு பார்க்க வந்த இரண்டு இஸ்ரவேலர்களை ராகாப் ஒளித்து வைத்தாள். ஏன்? இஸ்ரவேலின் கடவுளான யெகோவா எகிப்தியர்களிடமிருந்து தன்னுடைய மக்களை எப்படி காப்பாற்றி கூட்டிக்கொண்டு வந்தார்... எமோரியர்கள் தாக்கியபோது அவர்களை எப்படி காப்பாற்றினார்... என்றெல்லாம் ராகாப் நன்றாக தெரிந்து வைத்திருந்தாள்.
ராகாப் அந்த உளவாளிகளுக்கு உதவினாள். இஸ்ரவேலர்கள் எரிகோவை அழிக்க வரும்போது தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று அந்த உளவாளிகளிடம் கெஞ்சினாள். அவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டார்கள், ஆனால் சில நிபந்தனைகளுடன்: அவர்கள் வந்துபோன விஷயத்தை அவள் யாரிடமும் வாய் திறக்கக் கூடாது. இஸ்ரவேலர்கள் தாக்க வரும்போது அவளும் அவளுடைய குடும்பத்தாரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அவளுடைய வீட்டை அடையாளம் காட்டுவதற்காக ஜன்னலுக்கு வெளியே ஒரு சிவப்பு கயிறை தொங்க விட வேண்டும். அவர்கள் சொன்ன இந்த ஒவ்வொரு விஷயத்தையும் ராகாப் அப்படியே செய்தாள். அதனால் இஸ்ரவேலர்கள் எரிகோவை கைப்பற்ற வந்தபோது அவளும் அவளுடைய குடும்பத்தாரும் காப்பாற்றப்பட்டார்கள்.
கொஞ்ச நாளுக்கு பின்பு ராகாப் ஒரு இஸ்ரவேலரை கல்யாணம் பண்ணிக்கொண்டாள். தாவீது ராஜாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் மூதாதையானாள்.—யோசுவா 2:1-24; 6:25; மத்தேயு 1:5, 6, 16.
என்ன பாடம்? விசுவாசத்தை தன் சுவாசமாக ராகாப் வைத்திருந்தாள் என்று பைபிள் அவளைப் பற்றி உயர்வாக பேசுகிறது. (எபிரெயர் 11:30, 31; யாக்கோபு 2:25) கடவுள்மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் எந்த தேசத்தை, இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடவுள் அவர்களை தாராளமாக மன்னிப்பார்... பாரபட்சமாக நடத்த மாட்டார்... ஆசீர்வாதங்களை பொழிவார்... என்பதை ராகாபுடைய உதாரணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்.
▸ ராகாபை பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “ராகாப்—விசுவாச செயல்களால் நீதியுள்ளவளாக அறிவிக்கப்பட்டாள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
ராகேல்
அவள் யார்? லாபானுடைய ஒரு மகள். முற்காலத்தில் வாழ்ந்த யாக்கோபுடைய காதல் மனைவி.
என்ன செய்தாள்? ராகேல் யாக்கோபை கல்யாணம் பண்ணிக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ராகேல் பெற்ற இரண்டு மகன்கள் உட்பட யாக்கோபுடைய மகன்களில் இருந்துதான் பூர்வ இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்கள் உருவானது. ராகேல் தன்னுடைய அப்பாவுடைய ஆடுகளை மேய்க்கும்போதுதான் முதல் முறையாக யாக்கோபை பார்த்தாள். (ஆதியாகமம் 29:9, 10) அவளுடைய அக்கா லேயாளை விட “ராகேல் ரொம்ப அழகாகவும் லட்சணமாகவும் இருந்தாள்.”—ஆதியாகமம் 29:17.
யாக்கோபு ராகேலை காதலித்தார். அதனால் அவளை கல்யாணம் பண்ணுவதற்காக ஏழு வருஷங்கள் லாபானிடம் வேலை செய்ய ஒத்துக்கொண்டார். (ஆதியாகமம் 29:18) ஆனால், லாபான் யாக்கோபை தந்திரமாக ஏமாற்றி முதலில் லேயாளை யாக்கோபுக்கு கட்டி வைத்துவிட்டார். அதற்கு பின்பு ராகேலையும் அவருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தார்.—ஆதியாகமம் 29:25-27.
லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் விட யாக்கோபு ராகேலையும் அவளுடைய இரண்டு மகன்களையும்தான் அதிகமாக நேசித்தார். (ஆதியாகமம் 37:3; 44:20, 27-29) அதனால் இந்த இரண்டு பெண்களுக்கும் இடையில் எப்போதுமே சண்டையும் சச்சரவும் இருந்தது.—ஆதியாகமம் 29:30; 30:1, 15.
என்ன பாடம்? குடும்பத்தில் பயங்கரமான பிரச்சினைகள் இருந்தாலும் ராகேல் அதை சகித்துக்கொண்டாள். ஏனென்றால், தன்னுடைய ஜெபத்தை கடவுள் கேட்பார் என்பதில் அவள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தாள். (ஆதியாகமம் 30:22-24) பலதார மணம் கல்யாண வாழ்க்கையை கண்ணீர் கடலில் அமிழ்த்திவிடும் என்பதை ராகேலுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்கிறோம். திருமணத்தை பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி என்று கடவுள் வைத்த சட்டம்தான் உண்மையிலேயே சிறந்தது என்பதை ராகேலுடைய விஷயத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.—மத்தேயு 19:4-6.
▸ லேயாளை பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “சோகத்தில் வாடிய சகோதரிகள் ‘இஸ்ரவேல் வீட்டைக் கட்டியவர்கள்’” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
▸ கொஞ்ச காலத்துக்கு, தன்னுடைய மக்கள் பலதார மணம் செய்துகொள்ள யெகோவா ஏன் அனுமதித்தார் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள, “பூர்வ இஸ்ரவேலர்கள் பலதார மணம் செய்வதை யெகோவா அனுமதித்தார், ஆனால் இப்போதோ அனுமதிப்பதில்லை. அப்படியென்றால், அவருடைய தராதரம் மாறிக்கொண்டே இருக்குமா?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
ரூத்
அவள் யார்? இவள் ஒரு மோவாபிய பெண். யெகோவாவை வணங்குவதற்காக தன்னுடைய தெய்வங்களையும் தாய்நாட்டையும் விட்டுவிட்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தாள்.
என்ன செய்தாள்? தன்னுடைய மாமியார் நகோமிமேல் அளவுகடந்த அன்பும் அக்கறையும் காட்டினாள். இஸ்ரவேலில் பஞ்சம் தலைவிரித்தாடிய சமயத்தில் நகோமி தன் கணவரோடும் இரண்டு மகன்களோடும் மோவாபுக்கு பஞ்சம் பிழைக்கப் போனாள். மகன்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு ரூத், ஓர்பாள் என்ற மோவாபிய பெண்களை கல்யாணம் செய்துகொண்டார்கள். ஆனால் கொஞ்ச நாளைக்கு பிறகு நகோமியுடைய கணவரும் இரண்டு மகன்களும் இறந்துவிட்டார்கள். நகோமியும் அவளுடைய மருமகள்களும் துணையை இழந்து தனிமரமாக நின்றார்கள்.
இஸ்ரவேல் தேசத்தை வாட்டி வதைத்த பஞ்சம் பஞ்சாய் பறந்துவிட்டது என்று கேள்விப்பட்ட உடனே நகோமி அங்கே திரும்பிப்போக முடிவெடுத்தாள். ரூத்தும் ஓர்பாளும் அவளோடு போக ஆசைப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரையும் தங்கள் குடும்பத்தாரிடமே திரும்பி போகும்படி நகோமி சொன்னாள். அதனால் ஓர்பாள் போய்விட்டாள். (ரூத் 1:1-6, 15) ஆனால் ரூத் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் தன் மாமியாரை விட்டு பிரியாமல் காந்தம்போல் அவளோடு ஒட்டிக்கொண்டாள். ஏனென்றால், நகோமியை அவள் நெஞ்சார நேசித்தாள், நகோமியின் கடவுள் யெகோவாவை வணங்க ஆசைப்பட்டாள்.—ரூத் 1:16, 17; 2:11.
ரூத் நல்ல மருமகளாகவும் கடின உழைப்பாளியாகவும் இருந்ததால் நகோமியின் சொந்த ஊரான பெத்லகேமில் சீக்கிரத்திலேயே அவளுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனால் பல நிலபுலன்களுக்கு சொந்தக்காரராகவும் பணக்காரராகவும் இருந்த போவாஸுக்கு ரூத்மேல் நல்ல அபிப்பிராயம் வந்தது. நகோமிக்கும் இவளுக்கும் தானியங்களை வாரி வழங்கினார். (ரூத் 2:5-7, 20) அதற்கு பிறகு ரூத் போவாஸை கல்யாணம் பண்ணிக்கொண்டாள். இவளுடைய வம்சத்தில்தான் தாவீது ராஜாவும் இயேசு கிறிஸ்துவும் வந்தார்கள்.—மத்தேயு 1:5, 6, 16.
என்ன பாடம்? யெகோவா மீதும் நகோமி மீதும் ரூத் உயிரையே வைத்திருந்ததால் அவளுடைய வீட்டையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு வந்தாள். அவளுடைய வாழ்க்கையில் துயர மேகங்கள் சூழ்ந்தாலும் கடினமாக உழைத்தாள், தன்னையே அர்ப்பணித்தாள், மாறாத அன்பை காட்டினாள்.
▸ ரூத்தைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, ‘குணசாலியான பெண்’ மற்றும் ‘நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்’ என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.
ரெபெக்காள்
அவள் யார்? ஈசாக்கின் மனைவி, யாக்கோபு, ஏசா என்ற இரட்டை பிள்ளைகளின் அம்மா.
என்ன செய்தாள்? கடவுளுடைய விருப்பத்தின்படி செய்வது சுமையாக தெரிந்தால் கூட அதை சுகமாக செய்தாள். கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த சமயத்தில் ஒருவர் அவளிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டார். அவள் உடனடியாக அவருக்கு தண்ணீர் கொடுத்தது மட்டுமல்லாமல் அவருடைய ஒட்டகங்களுக்கும் குடிக்க தண்ணீர் எடுத்து ஊற்றினாள். (ஆதியாகமம் 24:15-20) அந்த நபர் வேறு யாரும் இல்லை, ஆபிரகாமுடைய ஊழியக்காரர். ஆபிரகாமின் மகன் ஈசாக்குக்கு பெண் தேடி அவர் ரொம்ப தூரம் பயணம் செய்து வந்திருந்தார். (ஆதியாகமம் 24:2-4) தான் வந்த வேலை நன்றாக முடிய வேண்டும் என்று அவர் கடவுளிடம் ஜெபம் செய்திருந்தார். ரெபெக்காளுடைய சுறுசுறுப்பையும் உபசரிக்கும் குணத்தையும் பார்த்தபோது ஈசாக்குக்கு பொருத்தமான ஜோடி இவள்தான் என கடவுள் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டார். இப்படி கடவுள் தன்னுடைய ஜெபத்துக்கு பதில் கொடுத்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டார்.—ஆதியாகமம் 24:10-14, 21, 27.
ஆபிரகாமின் ஊழியர் வந்த காரணத்தை தெரிந்துகொண்ட உடனே ரெபெக்காள் அவரோடு போவதற்கும் ஈசாக்கை கல்யாணம் செய்வதற்கும் சம்மதித்தாள். (ஆதியாகமம் 24:57-59) கொஞ்ச காலத்துக்குப் பின்பு, ரெபெக்காளுக்கு இரட்டை மகன்கள் பிறந்தார்கள். மூத்த மகன் ஏசா, இளைய மகன் யாக்கோபுக்கு சேவை செய்வார் என்று கடவுள் ரெபெக்காளுக்கு தெரியப்படுத்தியிருந்தார். (ஆதியாகமம் 25:23) மூத்த மகனுடைய ஆசீர்வாதத்தை ஏசாவுக்கு கொடுக்க ஈசாக்கு நினைத்தபோது, அந்த ஆசீர்வாதம் இளைய மகன் யாக்கோபுக்கு வந்துசேருவதற்காக ரெபெக்காள் சில விஷயங்களை செய்தாள். அதுதான் கடவுளுடைய விருப்பம் என்று தெரிந்திருந்ததால் அப்படிச் செய்தாள்.—ஆதியாகமம் 27:1-17.
என்ன பாடம்? ரெபெக்காள் சுறுசுறுப்பானவள். அடக்கத்தையும் உபசரிக்கும் குணத்தையும் காட்டிய பெண். அருமையான மனைவியாக... அன்பான தாயாக... கடவுள்பக்தி உள்ள பெண்ணாக... இருக்க இந்த குணங்கள்தான் அவளுக்கு கைகொடுத்தது.
▸ ரெபெக்காளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “ரெபெக்காள் தேவபக்தியுள்ள சுறுசுறுப்பான ஒரு பெண்” என்ற கட்டுரையை பாருங்கள்.
லேயாள்
அவள் யார்? முற்காலத்தில் வாழ்ந்த யாக்கோபின் முதல் மனைவி. அவளுடைய தங்கச்சி ராகேல் யாக்கோபின் இன்னொரு மனைவி.—ஆதியாகமம் 29:20-29.
என்ன செய்தாள்? லேயாள் யாக்கோபுக்கு ஆறு மகன்களை பெற்றெடுத்தாள். (ரூத் 4:11) யாக்கோபு லேயாளை அல்ல, ராகேலைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் லேயாளின் அப்பா லாபான், ராகேலுக்கு பதிலாக லேயாளை கல்யாணம் பண்ணி கொடுத்துவிட்டார். லாபான் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று யாக்கோபுக்கு தெரிய வந்ததும் லாபானிடம் இதைப் பற்றி கேட்டார். மூத்த மகள் இருக்கும்போது இளைய மகளை கல்யாணம் பண்ணி கொடுப்பது எங்களுடைய வழக்கம் இல்லை என்று லாபான் உறுதியாக சொல்லிவிட்டார். ஒரு வாரத்துக்கு பின்பு, யாக்கோபு ராகேலையும் கல்யாணம் செய்தார்.—ஆதியாகமம் 29:26-28.
யாக்கோபு லேயாளை விட ராகேலைத்தான் ரொம்ப நேசித்தார். (ஆதியாகமம் 29:30) அதனால் யாக்கோப்பின் அன்பும் அரவணைப்பும் தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக லேயாள் தன் தங்கையுடன் பொறாமையோடு போட்டிப்போட ஆரம்பித்தாள். லேயாளின் உணர்ச்சிகளை கடவுள் புரிந்துகொண்டார். அதனால் அவளுக்கு ஏழு பிள்ளைகளை, ஆறு மகன்களையும் ஒரு மகளையும், கொடுத்து ஆசீர்வதித்தார்.—ஆதியாகமம் 29:31.
என்ன பாடம்? லேயாள் கடவுளிடம் ஜெபம் செய்தாள், அவரையே நம்பியிருந்தாள். கல்யாண வாழ்க்கையில் அவளுக்கு புயல் மாதிரி பிரச்சினைகள் வந்தாலும், கடவுள் தனக்கு புகலிடமாக இருந்தார் என்பதை அவள் மறக்கவே இல்லை. (ஆதியாகமம் 29:32-35; 30:20) பலதார மணத்தை கடவுள் கொஞ்ச நாளைக்கு மட்டும்தான் அனுமதித்திருந்தார். ஆனால் அதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன என்பதை இவளுடைய வாழ்க்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கல்யாணத்தைப் பொறுத்தவரைக்கும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் கடவுள் வைத்த ஒழுக்க சட்டம். —மத்தேயு 19:4-6.
▸ லேயாளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “சோகத்தில் வாடிய சகோதரிகள் ‘இஸ்ரவேல் வீட்டைக் கட்டியவர்கள்’” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
▸ கொஞ்ச காலத்துக்கு, தன்னுடைய மக்கள் பலதார மணம் செய்துகொள்ள யெகோவா ஏன் அனுமதித்தார் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள, “பூர்வ இஸ்ரவேலர்கள் பலதார மணம் செய்வதை யெகோவா அனுமதித்தார், ஆனால் இப்போதோ அனுமதிப்பதில்லை. அப்படியென்றால், அவருடைய தராதரம் மாறிக்கொண்டே இருக்குமா?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
லோத்துவின் மனைவி
அவள் யார்? அவளுடைய பெயர் பைபிளில் இல்லை. அவளுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள் என்றும் அவளும் அவளுடைய குடும்பமும் சோதோம் என்ற நகரத்தில் வாழ்ந்தார்கள் என்றும் பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 19:1, 15.
என்ன செய்தாள்? கடவுள் கொடுத்த கட்டளையை மீறிவிட்டாள். சோதோமையும் சுற்றி இருந்த நகரங்களையும் அழிக்க கடவுள் முடிவு பண்ணினார். ஏனென்றால், அங்கிருந்த மக்கள் கீழ்த்தரமான ஒழுக்கங்கெட்ட விஷயங்களில் ஈடுபட்டார்கள். ஆனால் சோதோமில் வாழ்ந்த நீதிமானாகிய லோத்துவையும் அவருடைய குடும்பத்தையும் கடவுள் நேசித்தார். அதனால் அந்த நகரத்திலிருந்து அவர்களை பத்திரமாக காப்பாற்றுவதற்காக இரண்டு தேவதூதர்களை அனுப்பினார்.—ஆதியாகமம் 18:20; 19:1, 12, 13.
தேவதூதர்கள் லோத்துவின் குடும்பத்திடம் ‘அந்த நகரத்தை விட்டு தப்பித்து ஓடுங்கள், திரும்பி பார்க்காதீர்கள், அப்படி பார்த்தால் செத்துப்போவீர்கள்’ என்று சொன்னார்கள். (ஆதியாகமம் 19:17) ஆனால், லோத்துவின் மனைவி திரும்பி பார்த்தாள். உடனே உப்புச் சிலை ஆனாள்.—ஆதியாகமம் 19:26.
என்ன பாடம்? பணம் பொருள் மீது ஆசை வைத்தால் கடவுள் பேச்சை மீறி ஆபத்தில் மாட்டிக்கொள்வோம் என்று இவளுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்கிறோம். “லோத்துவின் மனைவியை நினைத்து பாருங்கள்” என்று இயேசு சொன்னபோது அவள் ஒரு எச்சரிக்கும் பாடமாக இருக்கிறாள் என்பதை ஞாபகப்படுத்தினார்.—லூக்கா 17:32.
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் வாழ்ந்த காலவரிசை
பெருவெள்ளம் (கி.மு. 2370)
எகிப்திலிருந்து விடுதலை (கி.மு.1513)
இஸ்ரவேலின் முதல் ராஜா (கி.மு. 1117)
இயேசுவின் ஞானஸ்நானம் (கி.பி.29)
இயேசுவின் மரணம் (கி.மு. 33)