‘ஆல்பா மற்றும் ஒமேகா’ என்றால் என்ன? அது யாரைக் குறிக்கிறது?
பைபிள் தரும் பதில்
‘ஆல்பா மற்றும் ஒமேகா’ என்ற வார்த்தைகள் சர்வவல்லமையுள்ள கடவுளான யெகோவாவைக் குறிக்கிறது. பைபிளில் இந்த வார்த்தைகள் மூன்று தடவை வருகின்றன.—வெளிப்படுத்துதல் 1:8; 21:6; 22:13.a
கடவுள் ஏன் தன்னை ‘ஆல்பா மற்றும் ஒமேகா’ என்று அழைக்கிறார்?
கிரேக்க மொழியில், ஆல்பா என்பது முதல் எழுத்து, ஒமேகா என்பது கடைசி எழுத்து. புதிய ஏற்பாடு என்று பொதுவாக அழைக்கப்படுகிற பைபிளின் ஒரு பாகம் இந்த மொழியில்தான் எழுதப்பட்டிருக்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகமும் இந்தப் புதிய ஏற்பாட்டில் அடங்கும். கிரேக்க எழுத்துக்களில், ஆல்பா முதல் இடத்திலும் ஒமேகா கடைசி இடத்திலும் வருவதால், யெகோவா ஒருவர்தான் ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறார் என்பதற்கு உதாரணமாக இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:6) இதுவரை யெகோவா ஒருவர்தான் சர்வவல்லமையுள்ள கடவுளாக இருக்கிறார். இனி எப்போதுமே அவர் மட்டும்தான் சர்வவல்லமையுள்ள கடவுளாக இருப்பார். ஆம், ‘என்றென்றும் கடவுளாக இருக்கிறவர்’ அவர் ஒருவர் மட்டும்தான்.—சங்கீதம் 90:2.
“முதலானவரும் கடைசியானவரும்” யார்?
பைபிளில் இந்த வார்த்தைகள் கடவுளாகிய யெகோவா மற்றும் அவருடைய மகனான இயேசு கிறிஸ்து என இரண்டு பேருக்குமே பொருந்துகிறது, ஆனால் வித்தியாசமான அர்த்தங்களில். அதற்கு இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.
ஏசாயா 44:6-ல் யெகோவா இப்படி சொல்கிறார்: “என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. முதலும் நானே, கடைசியும் நானே.” அவர் ஒருவர்தான் என்றென்றைக்கும் இருக்கிற உண்மையான கடவுள், அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை யெகோவா இங்கே தெளிவாக சொல்கிறார். (உபாகமம் 4:35, 39) அதனால், இந்த வசனத்தில் வருகிற “முதலும் நானே, கடைசியும் நானே” என்ற வார்த்தைகளின் அர்த்தமும் ‘ஆல்பா மற்றும் ஒமேகா’ என்ற வார்த்தைகளின் அர்த்தமும் ஒன்றுதான்.
“முதலானவரும் (இதன் கிரேக்க வார்த்தை புரோட்டோஸ், ஆல்பா கிடையாது) கடைசியானவரும் (இதன் கிரேக்க வார்த்தை எஸ்கடோஸ், ஒமேகா கிடையாது)” என்ற வார்த்தைகள் வெளிப்படுத்துதல் 1:17,18-லும் 2:8-லும் இருக்கின்றன. இந்த வசனங்களின் பின்னணியை வைத்துப் பார்க்கும்போது, அதில் குறிப்பிடப்பட்டிருக்கிற நபர் இறந்தார், பின்பு உயிரோடு வந்தார் என்று தெரிகிறது. ஆனால், கடவுளுக்கு சாவு என்பதே கிடையாது. அதனால் இந்த வசனங்களில் சொல்லப்பட்ட நபர் கடவுளை குறிப்பதில்லை. (ஆபகூக் 1:12) ஆனால் இயேசு இறந்தார், மறுபடியும் உயிரோடு எழுப்பப்பட்டார். (அப்போஸ்தலர் 3:13-15) சாவே இல்லாத உடலில் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்ட முதல் மனிதர் இயேசுதான். அங்கே அவர் ‘என்றென்றும் உயிரோடு இருக்கிறார்.’ (வெளிப்படுத்துதல் 1:18; கொலோசெயர் 1:18) அதற்கு பின்பு, எல்லா உயிர்த்தெழுதல்களையும் இயேசுதான் செய்கிறார். (யோவான் 6:40, 44) அதனால் யெகோவாவால் நேரடியாக உயிர்த்தெழுப்பப்பட்ட கடைசி நபரும் அவர்தான். (அப்போஸ்தலர் 10:40) இந்த அர்த்தத்தில்தான் “முதலானவரும் கடைசியானவரும்” என்று இயேசு அழைக்கப்படுகிறார்.
வெளிப்படுத்துதல் 22:13-ல் “ஆல்பாவும் ஒமேகாவும்” என்பது இயேசுவைக் குறிக்கிறதா?
இல்லை. வெளிப்படுத்துதல் 22-ம் அதிகாரத்தை வாசிக்கும்போது, அதில் நிறைய பேர் மாறி மாறி பேசுவதை நாம் பார்க்கிறோம். அதனால், 13-ம் வசனத்தில் இருக்கிற வார்த்தைகளை சொல்வது யார் என்பது தெளிவாக தெரியவில்லை. இது சம்பந்தமாக, பேராசிரியர் வில்லியம் பார்க்லே இப்படி எழுதினார்: “இந்த விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் எழுதப்படவில்லை . . . அதனால், யார் பேசுகிறார் என்று கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம்.” (த ரெவலேஷன் ஆஃப் ஜான், தொகுதி 2, ரிவைஸ்ட் எடிஷன், பக்கம் 223) வெளிப்படுத்துதல் புத்தகத்தின் மற்ற இடங்களில் வரும் “ஆல்பாவும் ஒமேகாவும்” என்ற வார்த்தைகள் கடவுளான யெகோவாவை குறிக்கிறது. அதே மாதிரி வெளிப்படுத்தல் 22:13-ல் வரும் “ஆல்பாவும் ஒமேகாவும்” என்ற வார்த்தைகளும் யெகோவாவைத்தான் குறிக்கிறது.
a இந்த வார்த்தை நான்காவது தடவையாக கிங் ஜேம்ஸ் வெர்ஷன் பைபிளில், வெளிப்படுத்துதல் 1:11-ல் இருக்கிறது. ஆனால், பூர்வ கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் அது இல்லை, பிற்பாடு வேதாகமங்களை நகல் எடுக்கும்போது சேர்க்கப்பட்டிருக்கலாம். அதனால் நிறைய சமீபத்திய மொழிபெயர்ப்புகளில் இந்த வார்த்தைகள் இல்லை.