சவ அடக்க நிகழ்ச்சியைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய கருத்து என்ன?
சவ அடக்க நிகழ்ச்சியை பற்றிய எங்களுடைய கருத்துகளும் பழக்கவழக்கங்களும் பைபிள் அடிப்படையில் இருக்கின்றன. கீழே கொடுக்கப்பட்டிருக்கிற விஷயங்களும் அதில் உட்பட்டிருக்கின்றன.
அன்பானவர்கள் இறக்கும்போது துக்கப்படுவது சகஜம்தான். இயேசுவின் சீஷர்கள் தங்களுடைய அன்பானவர்களை இழந்தபோது, அழுது புலம்பினார்கள். (யோவான் 11:33-35, 38; அப்போஸ்தலர் 8:2; 9:39) நாங்களும் சவ அடக்க நிகழ்ச்சிகளை துக்கப்படுவதற்கான நேரமாகத்தான் பார்க்கிறோம், கொண்டாட்டத்திற்கான நேரமாக பார்ப்பதில்லை.—பிரசங்கி 3:1, 4; 7:1-4; ரோமர் 12:15.
இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது. இறந்தவர்கள் எங்கேயோ வாழ்கிறார்கள், உயிரோடு இருக்கிறவர்களுக்கு அவர்களால் நல்லதோ கெட்டதோ செய்ய முடியும் என்ற நம்பிக்கையை பைபிள் ஏற்றுக்கொள்வது கிடையாது. அதனால் எங்களுடைய நாடு, இனம், கலாச்சாரம் எதுவாக இருந்தாலும், இந்த நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்களில் நாங்கள் ஈடுபட மாட்டோம். (பிரசங்கி 9:5, 6, 10) சாவு வீட்டில் தூங்காமல் விழித்திருப்பது, ஆடம்பரமான சவ அடக்க நிகழ்ச்சிகளை நடத்துவது, இறந்தவர்களுக்காக வருஷாந்திரம் பண்ணுவது, படையல் போடுவது, அவர்களிடம் பேசுவது, அவர்களை வணங்குவது, விதவைகளுக்காக சடங்குகளை செய்வது போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம். “பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதீர்கள்” என்று பைபிள் கட்டளை கொடுக்கிறது. (2 கொரிந்தியர் 6:17) இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிந்து இதுபோன்ற எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும் பழக்கவழக்கங்களையும் நாங்கள் தவிர்க்கிறோம்.
இறந்தவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள், மரணமே இல்லாத காலம் வரப்போகிறது என்று பைபிள் கற்பிக்கிறது. (அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 21:4) இந்த நம்பிக்கை இருப்பதால் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் மாதிரியே நாங்களும் அளவுக்கு அதிகமாக துக்கப்படுவதில்லை, அப்படிப்பட்ட சம்பிரதாயங்களை செய்வதும் இல்லை.—1 தெசலோனிக்கேயர் 4:13.
அடக்கமாக இருக்க பைபிள் ஆலோசனை கொடுக்கிறது. (நீதிமொழிகள் 11:2) ஒருவருடைய பண வசதியையும் அந்தஸ்தையும் ‘பகட்டாகக் காட்டிக்கொள்வதற்கான’ ஒரு வாய்ப்பாக சவ அடக்க நிகழ்ச்சிகளை நாங்கள் பார்ப்பதில்லை. (1 யோவான் 2:16) கண்ணைப் பறிக்கிற விதமாக அலங்காரம் செய்யப்பட்ட சவப் பெட்டிகளை நாங்கள் வைப்பதில்லை... மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக காட்டிக்கொள்கிற மாதிரி உடை உடுத்துவதில்லை... சவ அடக்க நிகழ்ச்சிகளை ஆடிப்பாடி ஆடம்பரமாக நாங்கள் செய்வதில்லை.
சவ அடக்க நிகழ்ச்சி சம்பந்தமாக எங்களுடைய நம்பிக்கைகளை யார் மீதும் நாங்கள் திணிக்க மாட்டோம். இந்த விஷயத்தில் பைபிள் சொல்கிற இந்த ஆலோசனையை நாங்கள் பின்பற்றுகிறோம்: “நாம் ஒவ்வொருவரும் நம்முடைய செயல்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.” (ரோமர் 14:12) இருந்தாலும், எங்கள் நம்பிக்கையை பற்றி யாராவது கேட்டால் “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” பதில் சொல்வதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம்.—1 பேதுரு 3:15.
யெகோவாவின் சாட்சிகளுடைய சவ அடக்க நிகழ்ச்சி எப்படி இருக்கும்?
இடம்: பொதுவாக சவ அடக்க நிகழ்ச்சியில் ஒரு பேச்சு கொடுக்கப்படலாம். அப்படி கொடுக்க வேண்டும் என்று அந்த குடும்பம் முடிவு செய்தால், அதற்கான இடத்தை அவர்களே தீர்மானிக்கலாம். ஒருவேளை அது ராஜ்ய மன்றமாகவோ, அவர்களுடைய வீடாகவோ, தகன மையமாகவோ, கல்லறையாகவோ கூட இருக்கலாம்.
நிகழ்ச்சி: இறந்துபோன நபருடைய குடும்பத்தாரை ஆறுதல்படுத்துவதற்காக கொடுக்கப்படுகிற பேச்சில், இறந்தவர்களுடைய நிலைமையைப் பற்றியும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது என்பது விளக்கப்படும். (யோவான் 11:25; ரோமர் 5:12; 2 பேதுரு 3:13) அதுமட்டுமல்ல, இறந்துபோன நபருடைய அருமையான குணங்களைப் பற்றியும் சொல்லப்படும். கடவுளுக்கு உண்மையாக இருந்த அந்த நபரிடமிருந்து என்ன நல்ல நல்ல பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம் என்பதும் அந்த பேச்சில் சொல்லப்படும்.—2 சாமுவேல் 1:17-27.
ஒரு பைபிள் பாடல் கூட பாடப்படலாம். (கொலோசெயர் 3:16) ஆறுதலான ஒரு ஜெபத்தோடு இந்த நிகழ்ச்சி முடிவடையும்.—பிலிப்பியர் 4:6, 7.
கட்டணம்: சவ அடக்க நிகழ்ச்சிகள் உட்பட எங்களுடைய மத நிகழ்ச்சிகள் எதற்குமே நாங்கள் கட்டணம் வசூலிப்பது கிடையாது. எங்களுடைய கூட்டங்களில் கூட நாங்கள் பணம் வசூலிக்க மாட்டோம்.—மத்தேயு 10:8.
கலந்துகொள்பவர்கள்: எங்களுடைய ராஜ்ய மன்றத்தில் நடக்கிற கூட்டங்களில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். அதே மாதிரிதான் அங்கே நடக்கிற சவ அடக்க நிகழ்ச்சியிலும் சாட்சிகளாக இல்லாதவர்கள் கூட கலந்துகொள்ளலாம்.
மற்ற மதத்தை சேர்ந்தவர்களுடைய சவ அடக்க நிகழ்ச்சிகளில் சாட்சிகள் கலந்துகொள்வார்களா?
ஒவ்வொரு சாட்சியும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையில் இதை முடிவு செய்வார். (1 தீமோத்தேயு 1:19) இருந்தாலும் பைபிளுக்கு எதிராக இருக்கிற மத சடங்குகளில் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்.—2 கொரிந்தியர் 6:14-17.