தீர்க்கதரிசனம் என்றால் என்ன?
பைபிள் தரும் பதில்
தீர்க்கதரிசனம் என்பது கடவுளிடமிருந்து வரும் செய்தி, கடவுளுடைய சக்தியின் உதவியால் ஒரு விஷயத்தை வெளிப்படுத்துவது. தீர்க்கதரிசிகள் “கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் சொன்னார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 1:20, 21) கடவுளிடமிருந்து தனக்கு கிடைக்கிற செய்தியை மற்றவர்களுக்கு தெரிவிக்கிறவர்தான் தீர்க்கதரிசி.—அப்போஸ்தலர் 3:18.
தன்னுடைய செய்திகளை கடவுள் தீர்க்கதரிசிகளுக்கு எப்படி தெரியப்படுத்தினார்?
தன்னுடைய யோசனைகளை அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு தெரியப்படுத்த கடவுள் நிறைய விதங்களை பயன்படுத்தினார்:
எழுத்துக்கள். எழுதப்பட்ட பத்து கட்டளைகளை மோசேக்கு கடவுள் நேரடியாகவே கொடுத்தார். இப்படி குறைந்தது ஒரு தடவையாவது இந்த முறையை கடவுள் பயன்படுத்தினார்.—யாத்திராகமம் 31:18.
தேவதூதர்கள் மூலமாகச் சொன்னார். உதாரணமாக, எகிப்தின் ராஜா பார்வோனிடம் சொல்ல வேண்டிய விஷயத்தை பற்றி மோசேக்கு தெரியப்படுத்த கடவுள் தேவதூதர்களை பயன்படுத்தினார். (யாத்திராகமம் 3:2-4, 10) சில சமயங்களில், சொல்ல வருகிற விஷயம் கொஞ்சம் கூட மாறக் கூடாது என்பதற்காக தேவதூதர்களிடம் கடவுள் அந்த விஷயத்தை சொல்லி அதை அப்படியே ஒப்பிக்கச் சொன்னார். ஒரு தடவை மோசேயிடம் அவர் இந்த மாதிரிதான் செய்தார். “இந்த வார்த்தைகளை நீ எழுதி வைத்துக்கொள். ஏனென்றால், இந்த வார்த்தைகளின்படியே நான் உன்னோடும் இஸ்ரவேலர்களோடும் ஒப்பந்தம் செய்கிறேன்” என்று அவர் மோசேயிடம் சொன்னார்.—யாத்திராகமம் 34:27.a
தரிசனங்கள். தீர்க்கதரிசிகள் தூங்காமல் விழித்திருந்தபோது... சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வோடு இருந்தபோது... சில சமயங்களில் தரிசனங்கள் காட்டப்பட்டன. (ஏசாயா 1:1; ஆபகூக் 1:1) ஒருசில தரிசனங்கள் ரொம்ப தத்ரூபமாக இருந்ததால் அதை பார்த்தவர்கள் அந்த காட்சியில் பங்கெடுக்கவும் செய்தார்கள். (லூக்கா 9:28-36; வெளிப்படுத்துதல் 1:10-17) வேறு சந்தர்ப்பத்தில், தீர்க்கதரிசிகள் மெய்மறந்த நிலையில் இருந்தபோது தரிசனங்கள் காட்டப்பட்டன. (அப்போஸ்தலர் 10:10, 11; 22:17-21) இன்னும் சில தீர்க்கதரிசிகள் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது கடவுள் தன்னுடைய செய்தியை கனவுகள் மூலமாக தெரிவித்தார்.—தானியேல் 7:1; அப்போஸ்தலர் 16:9, 10.
மனதைத் தூண்டினார். கடவுள் தன்னுடைய செய்திகளை தீர்க்கதரிசிகளுக்கு தெரிவிப்பதற்காக அவர்களுடைய மனதைத் தூண்டினார். “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன” என்ற பைபிள் வசனத்தின் அர்த்தம் இதுதான். (2 தீமோத்தேயு 3:16) “கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்” என்ற வார்த்தைகள் “கடவுள் ஊதினார்” என்றும் மொழிபெயர்க்கப்படலாம். கடவுள் தன்னுடைய பரிசுத்த சக்தியை, அதாவது செயல்படுகிற சக்தியை, பயன்படுத்தி தன்னுடைய ஊழியர்களுடைய மனதில் தன்னுடைய எண்ணங்களை ஊதினார். செய்தி கடவுளுடையது, ஆனால் எந்த வார்த்தைகளை பயன்படுத்தி எழுத வேண்டும் என்று தீர்க்கதரிசிகள் முடிவு செய்தார்கள்.—2 சாமுவேல் 23:1, 2.
தீர்க்கதரிசனம் என்பது எதிர்காலத்தை பற்றி சொல்வது மட்டும் தானா?
இல்லை. பைபிள் தீர்க்கதரிசனங்கள் எதிர்காலத்தை பற்றி சொல்வது மட்டும் கிடையாது. மக்களுடைய வாழ்க்கை எப்படி மாறும் என்பதையும் அது தெரியப்படுத்தியது. உதாரணத்துக்கு, பூர்வ இஸ்ரவேலர்களுடைய மோசமான வழிகளைப் பற்றி கடவுளுடைய தீர்க்கதரிசிகள் திரும்பத் திரும்ப எச்சரித்தார்கள். எச்சரிப்பை இஸ்ரவேலர்கள் கேட்டு நடந்தால் அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றும் கீழ்ப்படியாமல் போனால் அவர்களுக்கு வரப்போகிற நாசத்தை பற்றியும் அந்த தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். (எரேமியா 25:4-6) இஸ்ரவேலர்கள் எடுத்த முடிவை பொருத்துதான் அவர்களுடைய எதிர்காலமே அமைந்தது.—உபாகமம் 30:19, 20.
எதிர்காலத்தைப் பற்றி சொல்லாத பைபிள் தீர்க்கதரிசனங்கள்
ஒருசமயம் இஸ்ரவேல் ஜனங்கள் கடவுளிடம் உதவி கேட்டார்கள். ஆனால் அவர்கள் கடவுளுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாததால் கடவுள் அவர்களுக்கு உதவி செய்ய மாட்டார் என்பதை சொல்வதற்காக ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்.—நியாயாதிபதிகள் 6:6-10.
இயேசு சமாரிய பெண்ணிடம் பேசும்போது அவளுடைய கடந்தகால வாழ்க்கையை பற்றி சொன்னார். இது கடவுளுடைய சக்தியால்தான் அவருக்கு தெரிந்திருந்தது. ஆனால் எதிர்காலத்தை பற்றி அவர் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனாலும் கூட அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதை அவள் புரிந்துகொண்டாள்.—யோவான் 4:17-19.
இயேசுவை விசாரணை செய்த சமயத்தில் அவருடைய எதிரிகள் அவருடைய முகத்தை மூடி அவரை அடித்து “நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் உன்னை அடித்தது யார் என்று சொல் பார்க்கலாம்” என்றார்கள். எதிர்காலத்தில் நடக்கப்போவதை சொல்லும்படி அல்ல, தன்னை அடித்தது யார் என்று தெய்வீக சக்தியால் சொல்லும்படித்தான் அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்.—லூக்கா 22:63, 64.
a இதை படித்தவுடன், கடவுள் நேரடியாக மோசேயிடம் பேசிய மாதிரி நமக்கு தோன்றலாம். ஆனால், திருச்சட்டத்தை தேவதூதர்கள் மூலமாகத்தான் கொடுத்தார் என்று பைபிளில் இருக்கிற மற்ற வசனங்கள் காட்டுகிறது.—அப்போஸ்தலர் 7:53; கலாத்தியர் 3:19.