கடவுளை யாராவது பார்த்திருக்கிறார்களா?
பைபிள் தரும் பதில்
எந்த மனிதனுமே கடவுளை நேரடியாக பார்த்தது கிடையாது. (யாத்திராகமம் 33:20; யோவான் 1:18; 1 யோவான் 4:12) “கடவுள் பரலோகத்துக்குரிய உடலில் இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. அந்த உடலை மனிதக் கண்களால் பார்க்க முடியாது.—யோவான் 4:24 அடிக்குறிப்பு; 1 தீமோத்தேயு 1:17.
தேவதூதர்களால் கடவுளைப் பார்க்க முடியும். ஏனென்றால் அவர்கள் பரலோகத்துக்குரிய உடலில் இருக்கிறார்கள். (மத்தேயு 18:10) இறந்த பின்பு சிலர் பரலோகத்துக்குரிய உடலில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அப்படி அவர்கள் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு அவர்களாலும் கடவுளைப் பார்க்க முடியும்.—பிலிப்பியர் 3:20, 21; 1 யோவான் 3:2.
கடவுளை இப்போது எப்படிப் “பார்ப்பது?”
மனக்கண்ணால் பார்ப்பதைப் பற்றி பைபிள் அடிக்கடி சொல்கிறது. அதன் அர்த்தம், அறிவைப் பெறுவது. (ஏசாயா 6:10; எரேமியா 5:21; யோவான் 9:39-41) இதே அர்த்தத்தில், கடவுள்மேல் விசுவாசம் வைக்கும்போது ஒரு மனிதனால் அவரை இப்போதே தன்னுடைய ‘மனக்கண்களால்’ பார்க்க முடியும். அதற்காக அந்த நபர் கடவுளைப் பற்றியும் அவருடைய அருமையான குணங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். (எபேசியர் 1:18) இப்படிப்பட்ட விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.
கடவுளுடைய படைப்புகளில் இருந்து அவருடைய அன்பு, தாராள குணம், வல்லமை, ஞானம் போன்ற குணங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். (ரோமர் 1:20) கடவுள் தன்னுடைய படைப்பு வேலைகளைப் பற்றித் தனக்கு உண்மையாக இருந்த யோபுவிடம் எடுத்து சொன்னார். அப்போது, கடவுள் தன்னுடைய கண் முன்னாலேயே இருப்பதுபோல் யோபு உணர்ந்தார்.—யோபு 42:5.
பைபிளைப் படிப்பதன் மூலமாக கடவுளை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். “[கடவுளை] தேடினால், அவரைக் கண்டடைய உதவி செய்வார்” என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—1 நாளாகமம் 28:9; சங்கீதம் 119:2; யோவான் 17:3.
இயேசுவின் வாழ்க்கையிலிருந்து கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். தன்னுடைய அப்பாவான யெகோவாவுடைய குணங்களை இயேசு அப்படியே காட்டினார். அதனால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று அவரால் சொல்ல முடிந்தது.—யோவான் 14:9.
கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழுங்கள். அப்போது அவர் உங்களுக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதைப் பார்ப்பீர்கள். இயேசு இப்படி சொன்னார்: “சுத்தமான இதயமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்; ஏனென்றால் அவர்கள் கடவுளைப் பார்ப்பார்கள்.” நாம் மேலே பார்த்தபடி கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்த சிலரால், இறந்த பின்பு பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்டதும் அங்கே ‘அவரை பார்க்க’ முடியும்.—மத்தேயு 5:8; சங்கீதம் 11:7.
மோசேயும் ஆபிரகாமும் மற்றவர்களும் கடவுளை நேரடியாக பார்த்தார்களா?
மனிதர்கள் கடவுளை நேருக்கு நேர் பார்த்தார்கள் என்பதை போன்ற பதிவுகள் பைபிளில் இருக்கிறது. ஆனால் அந்தப் பதிவுகளை நன்றாக ஆராய்ந்து பார்த்தால், கடவுளுடைய பிரதிநிதியாக வந்த ஒரு தேவதூதனைத்தான் பார்த்தார்கள் அல்லது ஒரு தரிசன காட்சியில்தான் கடவுளைப் பார்த்தார்கள் என்பது தெரிகிறது.
தேவதூதர்கள்.
பூர்வ காலங்களில், கடவுள் தேவதூதர்களை தன்னுடைய பிரதிநிதிகளாக அனுப்பி தன் சார்பாக மனிதர்களிடம் பேச சொன்னார். (சங்கீதம் 103:20) ஒரு தடவை, எரிகிற முட்புதரிலிருந்து கடவுள் மோசேயிடம் பேசினார். அப்போது “உண்மைக் கடவுளைப் பார்க்க மோசே பயந்ததால் முகத்தை மூடிக்கொண்டார்” என்று பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 3:4, 6) ஆனால், மோசே கடவுளை நேரடியாக பார்க்கவில்லை, ‘யெகோவாவின் தூதரைத்தான்’ பார்த்தார் என்று முன்பு இருக்கிற வசனங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.—யாத்திராகமம் 3:2.
அப்படியென்றால், கடவுள் ‘மோசேயிடம் நேருக்கு நேராகப் பேசினார்’ என்று சொன்னதன் அர்த்தம் என்ன? நெருங்கிய நண்பரிடம் அன்னியோன்னியமாக பேசுவதைப் போல் கடவுள் மோசேயிடம் பேசினார் என்பதையே அது அர்த்தப்படுத்துகிறது. (யாத்திராகமம் 4:10, 11; 33:11) மோசே கடவுளுடைய முகத்தைப் பார்க்கவில்லை. அவருக்குக் கிடைத்த தகவல்கள், ‘தேவதூதர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.’ (கலாத்தியர் 3:19; அப்போஸ்தலர் 7:53) மோசேக்கு கடவுள்மேல் அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. அதனால்தான் அவர், “பார்க்க முடியாதவரைப் பார்ப்பதுபோல்” உணர்ந்தார் என்று பைபிள் சொல்கிறது.—எபிரெயர் 11:27.
தேவதூதர்கள் மூலம் மோசேயிடம் பேசிய மாதிரியே கடவுள் ஆபிரகாமிடமும் பேசினார். பைபிளை மேலோட்டமாக படிக்கும்போது ஆபிரகாம் கடவுளை நேரடியாக பார்த்த மாதிரி நமக்குத் தோன்றலாம். (ஆதியாகமம் 18:1, 33) ஆனால் அந்தப் பதிவை நன்றாகப் படிக்கும்போது, ஆபிரகாமை பார்க்க வந்த “மூன்று மனிதர்கள்” கடவுள் அனுப்பிய தேவதூதர்கள் என்பது தெரிகிறது. அவர்கள் கடவுளுடைய பிரதிநிதிகள் என்பதை ஆபிரகாம் புரிந்துகொண்டதால் யெகோவாவிடமே பேசுவதுபோல் அவர்களிடம் பேசினார்.—ஆதியாகமம் 18:2, 3, 22, 32; 19:1.
தரிசனக் காட்சிகள்.
தரிசனங்கள் அல்லது காட்சிகள் மூலமாக ஒருவருடைய மனதில் கடவுள் தோன்றினார். உதாரணத்துக்கு, மோசேயும் மற்ற இஸ்ரவேலர்களும் “இஸ்ரவேலின் கடவுளைப் பார்த்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. ஆனால் அவர்கள், “அவருடைய தரிசனத்தைப் பார்த்தார்கள்” என்றுதான் அது சொல்கிறது. (யாத்திராகமம் 24:9-11) தீர்க்கதரிசிகளும் ‘யெகோவாவை பார்த்ததாக’ பைபிள் சொல்கிறது. (ஏசாயா 6:1; தானியேல் 7:9; ஆமோஸ் 9:1) ஆனால், அந்த ஒவ்வொரு பதிவையும் ஆராய்ந்து படித்தால், அவர்கள் தரிசனங்கள் மூலமாகத்தான் கடவுளைப் பார்த்தார்கள், அவரை நேரடியாக பார்க்கவில்லை என்பது புரிகிறது.—ஏசாயா 1:1; தானியேல் 7:2; ஆமோஸ் 1:1.