வித்தியாசமானவர்களை வெறுக்காமல் இருக்க—பைபிள் எப்படி உதவி செய்யும்?
“மக்கள் மத்தியில் இருக்கிற வித்தியாசங்களை நாம் வெறுக்காமல் இருந்தால்தான் இந்தப் பூமியில் சமாதானத்தைப் பார்க்க முடியும்.”—யுனஸ்கோ டிக்ளரேஷன் ஆஃப் பிரின்சிபில்ஸ் ஆன் டாலரன்ஸ், 1995.
அதேசமயத்தில், வித்தியாசமான மக்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்கள்மேல் இருக்கிற மரியாதை குறைந்துவிடும். அவர்களை வெறுக்கக்கூட ஆரம்பித்துவிடுவோம். அதுமட்டுமல்ல, அவர்களை வெறுப்பதை நம்முடைய பேச்சில் காட்டுவோம், அவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்வோம். இது வன்முறையில்கூட போய் முடியலாம்.
மக்கள் மத்தியில் இருக்கிற வித்தியாசங்களை ஏற்றுக்கொள்கிற ஒருவரை, அல்லது பரந்த மனப்பான்மை இருக்கிற ஒருவரை, பற்றி நிறைய பேருக்கு வெவ்வேறு கருத்து இருக்கிறது. சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால் பரந்த மனப்பான்மை இருக்கிறவர்கள், மற்றவர்கள் என்ன செய்தாலும் சரி, எப்படி நடந்துகொண்டாலும் சரி, அவர்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் பைபிள் சொல்கிற மாதிரி யோசிக்கிறார்கள்: மற்றவர்களுடைய நம்பிக்கையும் அவர்கள் நடந்துகொள்ளும் விதமும் பிடிக்கவில்லை என்றால்கூட, தங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எல்லாருக்கும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அவர்களை மதிக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் இருக்கிற வித்தியாசங்களை ஏற்றுக்கொள்வதற்கு பைபிள் உதவி செய்யுமா?
வித்தியாசமானவர்களை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்—பைபிளின் கருத்து
“நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்” என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 4:5) மற்றவர்களிடம் நியாயமாக, மரியாதையாக, நல்ல விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்று அது சொல்கிறது. பைபிள் சொல்கிற மாதிரி நடக்கிறவர்கள் மற்றவர்களுடைய நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம்... அதன்படி நடக்காமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மதிக்கிறார்கள்.
இருந்தாலும், மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று சில நெறிமுறைகளை கடவுள் வைத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. “மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார்” என்று அது சொல்கிறது. (மீகா 6:8) மனிதர்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் பைபிளில் சொல்லியிருக்கிறார்.—ஏசாயா 48:17, 18.
மற்றவர்களை நியாயம் தீர்ப்பதற்கான அதிகாரத்தைக் கடவுள் நமக்குக் கொடுக்கவில்லை. “சட்டத்தைக் கொடுப்பவராகவும் நீதிபதியாகவும் இருப்பவர் ஒருவர்தான் . . . மற்றவர்களை நியாயந்தீர்க்க நீங்கள் யார்?” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 4:12) பிடித்ததைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுத்திருக்கிறார். ஆனால், அவரவர் எடுக்கும் முடிவுக்கு அவரவர்தான் பொறுப்பு.—உபாகமம் 30:19.
மரியாதை—பைபிளின் கருத்து
“எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 2:17) அதனால் பைபிள்படி நடக்கிறவர்கள், மற்றவர்கள் என்ன நம்பினாலும் சரி, எப்படி வாழ்ந்தாலும் சரி, எல்லா விதமான ஆட்களுக்கும் மரியாதை கொடுப்பார்கள். (லூக்கா 6:31) அதற்காக, மற்றவர்களுடைய நம்பிக்கைகளையோ கருத்துகளையோ ஏற்றுக்கொள்வார்கள் அல்லது அவர்கள் எடுக்கிற எல்லா முடிவுகளுக்கும் ஆதரவு கொடுப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. மற்றவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொள்வதற்குப் பதிலாக இயேசு மாதிரியே நடந்துகொள்வதற்கு முயற்சி செய்வார்கள்.
உதாரணத்துக்கு, ஒரு சமயம் இயேசு வேற மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்தார். அவள் தன் கணவனோடு வாழாமல் இன்னொரு ஆணோடு வாழ்ந்துகொண்டு இருந்தாள். அவளுடைய மதத்தையும் அவள் வாழ்ந்த வாழ்க்கையையும் இயேசு ஏற்றுக்கொள்ளவில்லைதான். இருந்தாலும் அவளிடம் மரியாதையாக பேசினார்.—யோவான் 4:9, 17-24.
இயேசு மாதிரியே இன்றைக்கு கிறிஸ்தவர்களும் தங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு அதை விளக்கிச் சொல்கிறார்கள். ஆனால் அதை “ஆழ்ந்த மரியாதையோடு” சொல்கிறார்கள். (1 பேதுரு 3:15) கிறிஸ்தவர்கள் அவர்களுடைய நம்பிக்கைகளை மற்றவர்களிடம் திணிக்கக் கூடாது என்று பைபிள் சொல்கிறது. கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒருத்தர் “சண்டைபோடக் கூடாது; அதற்குப் பதிலாக, எல்லாரிடமும் மென்மையாக” நடந்துகொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது—வேறு நம்பிக்கை இருக்கிறவர்களிடம்கூட.—2 தீமோத்தேயு 2:24.
வெறுப்பு—பைபிளின் கருத்து
“எல்லாரோடும் சமாதானமாக இருக்கப் பாடுபடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 12:14) சமாதானமாக நடந்துகொள்வதற்கு பாடுபடுகிற ஒருத்தர், யாரையும் வெறுக்க மாட்டார். மற்றவர்களிடம் சமாதானமாக நடந்துகொள்வதற்கு அவரால் முடிந்த எல்லா முயற்சியும் எடுப்பார். அதேசமயத்தில், அவருடைய நம்பிக்கைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டார். (மத்தேயு 5:9) சொல்லப்போனால் எதிரிகளைக்கூட நேசிக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால் நம்மை மோசமாக நடத்துகிறவர்களிடம்கூட நாம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்.—மத்தேயு 5:44.
மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதை, அவர்களை அவமானப்படுத்துவதை, கடவுள் “வெறுக்கிறார்” அல்லது “அருவருக்கிறார்” என்று பைபிள் சொல்வது உண்மைதான். (நீதிமொழிகள் 6:16-19) ஆனால், “வெறுக்கிறார்” என்று சொல்லும்போது அவர்கள் செய்கிற கெட்ட செயல்களைத்தான் அவர் வெறுக்கிறார். யாரெல்லாம் அவர்களுடைய தவறைத் திருத்திக்கொண்டு கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதற்குத் தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு உதவி செய்யவும் அவர்களை மன்னிக்கவும் கடவுள் தயாராக இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது.—ஏசாயா 55:7.
பரந்த மனப்பான்மை மற்றும் மரியாதை பற்றிய பைபிள் வசனங்கள்
தீத்து 3:2: “நியாயமானவர்களாக நடந்துகொள்ள வேண்டும், எல்லாரிடமும் எல்லாவற்றிலும் சாந்தகுணத்தைக் காட்ட வேண்டும்.”
நியாயமாக நடந்துகொள்கிற ஒருத்தர், வித்தியாசமான கருத்துகளை மற்றவர்கள் சொன்னாலும் சாந்தமாக நடந்துகொள்வார், மரியாதை கொடுப்பார்.
மத்தேயு 7:12: “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.”
நம்முடைய கருத்துகளையும் உணர்ச்சிகளையும் மற்றவர்கள் மதிக்கும்போதும் நமக்கு மரியாதை கொடுக்கும்போதும் சந்தோஷமாக இருக்கும். நாமும் அதேமாதிரி மற்றவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசு சொல்லிக்கொடுத்தார். அதை எப்படிச் செய்யலாம் என்று தெரிந்துகொள்ள, “அந்த பொன்மொழி என்ன?“ என்ற ஆங்கில கட்டுரையைப் பாருங்கள்.
யோசுவா 24:15: “யாரை வணங்குவதென்று இன்றைக்கு நீங்களே முடிவு செய்யுங்கள்.”
முடிவெடுக்கிற உரிமை எல்லாருக்கும் இருக்கிறது என்பதைப் புரிந்து, நாம் மதித்து நடந்தோம் என்றால் சமாதானத்தைக் கட்டிக்காக்க முடியும்.
அப்போஸ்தலர் 10:34: “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்.”
ஒருவர் எந்த கலாச்சாரம், தேசம், இனம், பின்னணி, அவர் ஆணா-பெண்ணா என்றெல்லாம் கடவுள் வித்தியாசம் பார்ப்பதில்லை. அவரைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் எல்லா ஆட்களுக்கும் மதிப்பு கொடுக்கிறார்கள்.
ஆபகூக் 1:12, 13: “அக்கிரமங்களை [கடவுளால்] சகிக்க முடியாதே!”
அக்கிரமங்களை ஓரளவுக்குத்தான் கடவுள் பொறுத்துக்கொள்வார். மனிதர்கள் கெட்டதை என்றென்றைக்கும் செய்வதற்கு அவர் அனுமதிக்க மாட்டார். இதைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்? என்ற வீடியோவைப் பாருங்கள்.
ரோமர் 12:19: “ ‘ “பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்’ என்று எழுதப்பட்டிருப்பதால், நீங்கள் பழிக்குப்பழி வாங்காமல் அதைக் கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிடுங்கள்.”a
பழிவாங்குகிற அதிகாரத்தை யெகோவா யாருக்குமே கொடுக்கவில்லை. சரியான சமயத்தில் அவரே நியாயம் வழங்குவார். இதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்வதற்கு, “நியாயத்துக்கான கூக்குரலுக்கு பதில் கிடைக்குமா?” என்ற ஆங்கில கட்டுரையைப் பாருங்கள்.
a யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.