இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
சிடுசிடுவென்று இருக்கிற டீச்சரிடம் நான் எப்படி நடந்துகொள்வது?
டெரர்ரான டீச்சர்
எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிற, நியாயமாக நடக்காத டீச்சர் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாணவருடைய வாழ்க்கையிலேயும் கட்டாயம் இருப்பார்கள்.
21 வயது லூயிஸ் சொல்கிறார்: “எனக்கு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க வாய திறந்தாலே கெட்ட வார்த்தைதான் வரும். மாணவர்களை ஒரு ஆளாகவே மதிக்க மாட்டாங்க. அவங்க சீக்கிரம் ரிட்டையர் ஆக போவதால், இப்படியெல்லாம் நடந்தாலும் அவங்களை வேலையை விட்டு தூக்க மாட்டாங்க என்று நினைச்சுகிட்டாங்க.”
25 வயது மிலானிக்கு, தன்னுடைய டீச்சர் தன்னிடம் மட்டும் கடுமையாக நடந்துகொண்டது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அவர் இப்படி சொல்கிறார்: “அவர் என்னை இப்படி மோசமாக நடத்தியதற்கு காரணம் என்னுடைய மதம்தான். ‘நீ பெருசானதுக்கு அப்புறம் எல்லாரும் உன்னை இப்படித்தான் நடத்துவாங்க. அதுக்கு நீ இப்பவே பழகிக்கோ’ என்று அந்த டீச்சர் சொல்வார்.”
இப்படி ஒரு டெரர்ரான டீச்சர் உங்களுக்கு இருந்தால், ‘என் ஸ்கூல் லைஃபே போச்சு’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கீழே இருக்கும் டிப்ஸை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
பயனுள்ள டிப்ஸ்
வளைந்துகொடுங்கள். ஒவ்வொரு டீச்சருடைய எதிர்பார்ப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். உங்கள் டீச்சர் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பின்பு அதற்கேற்றபடி செய்ய முயற்சி எடுங்கள்.
பைபிள் ஆலோசனை: “ஞானமுள்ளவர்கள் காதுகொடுத்துக் கேட்டு, நிறைய அறிவுரைகளை ஏற்றுக்கொள்வார்கள்.”—நீதிமொழிகள் 1:5.
“என்னுடைய டீச்சருக்குப் பிடித்த மாதிரி என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று புரிஞ்சுகிட்டேன். அதனால் அவங்க என்ன செய்ய சொன்னாங்களோ அதை அப்படியே செய்ய எல்லா முயற்சியும் எடுத்தேன். அவங்களோட ஒத்துப்போவது எனக்கு இப்போ ஈஸி ஆயிடுச்சு.”—கிறிஸ்டோபர்.
மரியாதையாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் டீச்சர்களிடம் கனிவாக பேசுங்கள். அவர்கள் உங்களிடம் சிடுசிடுவென்று பேசினால் அவர்களிடம் பதிலுக்கு பதில் பேச வேண்டும் என்றுதான் உங்களுக்கு தோன்றும். ஆனால் அப்படி செய்யாதீர்கள். இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: டீச்சர்கள் உங்களை தங்களிடம் படிக்கும் மாணவராகத்தான் பார்ப்பார்கள், அவர்களுக்கு சமமாக அல்ல.
பைபிள் ஆலோசனை: “உங்கள் பேச்சு எப்போதும் கனிவாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பீர்கள்.”—கொலோசெயர் 4:6.
“பொதுவாக டீச்சர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாணவர்கள் கொடுப்பதில்லை. அதனால் நீங்கள் உங்கள் டீச்சரிடம் மரியாதையாக நடந்துகொண்டால் அவர் உங்களை நடத்துகிற விதமே மாறிவிடும்.”—சியாரா.
புரிந்து நடந்துகொள்ளுங்கள். எல்லாருக்கும் இருக்கிற மாதிரியே டீச்சர்களுக்கும் பிரச்சினைகளும் கவலைகளும் இருக்கும். அவர்களும் மனிதர்கள்தானே! அதனால் ‘என் டீச்சர் ரொம்ப மோசம்,’ ‘என் டீச்சருக்கு என்னை கண்டாலே ஆகாது’ என சட்டென்று முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.
பைபிள் ஆலோசனை: “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.”—யாக்கோபு 3:2.
“டீச்சர் வேலை ரொம்ப கஷ்டம்தான். எல்லா பிள்ளைகளையும் அடக்கி உட்கார வைச்சு படிக்க வைப்பது அவ்வளவு ஈஸி கிடையாது. அதனால டீச்சருக்கு நான் இன்னும் கஷ்டம் கொடுக்காம இருந்தா, அவங்களை புரிந்து நடந்துகிட்டா கொஞ்சமாவது அவங்களுக்கு தலைவலி குறையும், இல்லையா!”—அலெக்ஸிஸ்.
அப்பா-அம்மாவிடம் பேசுங்கள். உங்கள் அப்பா-அம்மா உங்களை நன்றாகப் புரிந்துகொண்டு உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் ஸ்கூலில் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஆசை. உங்களிடம் கடுகடுவென்று இருக்கிற டீச்சர்களிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் உங்களுக்கு சொல்லித் தருவார்கள்.
பைபிள் ஆலோசனை: “கலந்துபேசாமல் இருந்தால் திட்டங்கள் தோல்வியடையும்.”—நீதிமொழிகள் 15:22.
“பிள்ளைகளை விட அப்பா-அம்மாவுக்குத்தான் பிரச்சினைகளை சமாளிப்பதில் அனுபவம் ஜாஸ்தி. அதனால் அவங்க சொல்வதை கேட்டு நடங்க. அப்படி செய்தால் உங்களுக்கு வர பிரச்சினைகளை ஈஸியா சமாளிக்கலாம்.”—ஒலிவியா.
உங்கள் டீச்சரிடம் எப்படிப் பேசுவது
சிலசமயம் உங்களை ரொம்பவே நோகடிக்கிற டீச்சரிடம் அதைப் பற்றி நேரடியாக பேச வேண்டியிருக்கலாம். அப்படி முகத்துக்கு நேராக பேசுவதை நினைத்து பயப்படாதீர்கள். நீங்கள் சண்டை போட போகவில்லை. உங்கள் மனதில் இருப்பதை பேசத்தான் போகிறீர்கள். நீங்கள் பயப்படுகிற மாதிரி எதுவும் நடக்காது. உங்கள் பிரச்சினையை சரி பண்ண வழிதான் கிடைக்கும்.
பைபிள் ஆலோசனை: ‘மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.’—ரோமர் 14:19.
“உங்க டீச்சர் உங்க கிட்ட மட்டும் கடுகடுப்பா நடந்துகொண்டால், அவரை கோபப்படுத்துகிற மாதிரி நீங்கள் ஏதாவது செய்துவிட்டீர்களா என்று கேளுங்க. அவர் சொல்கிற பதிலிலிருந்து நீங்க எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்வீர்கள்.”—ஜூலியானா.
“டீச்சர் உங்க கிட்ட நடந்துகொள்கிற விதத்தை பற்றி கிளாஸ் ஆரம்பிப்பதற்கு முன்போ பின்போ அவரை தனியா சந்தித்து பொறுமையாக பேசுவது நல்லது. அப்படி பேசினால் அவர் உங்களை புரிந்துகொள்வார், நீங்கள் பக்குவமாக நடந்துகொண்ட விதம் அவர் மனசை தொடும்.”—பென்ஜமின்.
உண்மை சம்பவம்
“எனக்கு படிப்பு சுத்தமா ஏறவில்லை. மார்க்கும் ரொம்ப கம்மி ஆயிடுச்சு. டீச்சரும் என்னை கண்டுக்கல. எதுக்கெடுத்தாலும் என்னை திட்டிட்டே இருந்தாங்க. எனக்கு ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல.
“நான் இன்னொரு டீச்சரிடம் போய் அட்வைஸ் கேட்டேன். அவர் என்னிடம், ‘உன் பிரச்சினை என்னவென்று அவருக்கு தெரியாது, அவர் என்ன நினைக்கிறார் என்று உனக்கும் தெரியாது. அதனால், உன் பிரச்சினையைப் பற்றி நீ அவரிடம் பேசு. அப்போதுதான் உன்னை மாதிரி அவரிடம் பேச பயப்படுகிற மற்ற மாணவர்களுக்கு அது உதவியாக இருக்கும்’ என்று சொன்னார்.
“எனக்கு அப்படி செய்ய ரொம்ப தயக்கமாக இருந்தது. ஆனால் அவர் சொன்னதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். அவர் சொன்னது சரிதான். என்னுடைய பிரச்சினை சரியாக வேண்டுமென்றால் நான்தான் முதல்படி எடுக்க வேண்டும்.
“அடுத்த நாளே என் டீச்சர் கிட்ட போய் மரியாதையோடு இப்படி பேசினேன்: ‘உங்க கிளாஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும், எனக்கும் நல்லா படிக்கணும் என்றுதான் ஆசை. ஆனால், படிப்பு ஏற மாட்டேங்குது, என்ன பண்றது என்றே தெரியல’ என்று சொன்னேன். நான் எப்படி படிக்க வேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்தார். கிளாஸ் முடிந்த பின்பும்கூட எனக்கு உதவி செய்வதாக சொன்னார்.
“அவர் இப்படி சொல்வார் என்று நான் நினைச்சு கூட பாக்கல. நாங்க இப்படி பேசியதால் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க முடிந்தது. என் ஸ்கூல் லைஃபை நான் என்ஜாய் பண்ண ஆரம்பித்தேன்.”—மரியா.
டிப்ஸ்: உங்கள் டீச்சரிடம் உங்களுக்குப் பிரச்சினை இருந்தால், அதை ஒரு பயிற்சியாக பாருங்கள். ஏனென்றால், பெரியவர்களான பின்பு இதுபோன்ற நிறையப் பிரச்சினைகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். 22 வயது கேட்டி சொல்கிறார்: “படிச்சு முடித்த பின்பும் கூட இதே மாதிரி ஆட்களை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கலாம். வேலை செய்கிற இடத்தில் உங்களை கடுப்பேத்துகிற சில மேலதிகாரிகள் இருக்கலாம். நீங்கள் இப்பவே டெரர்ரான டீச்சரை சமாளிக்க கத்துகிட்டா, எதிர்காலத்தில் கறாரான ஆட்களை சமாளிப்பது ரொம்ப ஈஸியாக இருக்கும்.”