உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 184
  • மணவாழ்வைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மணவாழ்வைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • திருமணத்தைப் பற்றி கடவுள் என்னென்ன சட்டங்களை கொடுத்திருக்கிறார்?
  • பிரிந்து வாழ்வதையும் விவாகரத்தையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
  • திருமணத்தை கடவுள் அங்கீகரிக்க வேண்டுமென்றால் அதை சட்டப்படி பதிவு செய்ய வேண்டுமா?
  • குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கிற பங்கையும் பொறுப்புகளையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
  • இன்றைய தம்பதிகள் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறாரா?
  • என்னுடைய கல்யாண வாழ்க்கைக்கு பைபிள் எப்படி கைகொடுக்கும்?
  • சந்தோஷமான கல்யாண வாழ்க்கை!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • திருமணம்—கடவுளின் பரிசு
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • மணவாழ்வில் வெற்றி காண
    விழித்தெழு!—2012
  • திருமண பந்தத்தை பலப்படுத்துங்கள், சந்தோஷமாக இருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 184
ஒரு தம்பதி சந்தோஷமாக பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள்.

மணவாழ்வைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் தரும் பதில்

முதல் ஆணையும் பெண்ணையும் படைத்த பின்பு கடவுள் அவர்களை திருமணம் என்ற பந்தத்தில் இணைத்தார். அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் விசேஷமான பந்தமாக, குடும்பம் என்ற கட்டிடத்தின் அஸ்திவாரமாக ஏற்படுத்தினார்.—ஆதியாகமம் 1:27, 28; 2:18.

தம்பதிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் கடவுள் ஆசைப்படுகிறார். (நீதிமொழிகள் 5:18) கல்யாண வாழ்க்கையில் சந்தோஷம் பூத்துக் குலுங்குவதற்கு தேவையான சட்டங்களையும் ஆலோசனைகளையும் அவர் பைபிளில் கொடுத்திருக்கிறார்.

இந்தக் கட்டுரையில்

  • திருமணத்தைப் பற்றி கடவுள் என்னென்ன சட்டங்களை கொடுத்திருக்கிறார்?

  • பிரிந்து வாழ்வதையும் விவாகரத்தையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

  • திருமணத்தை கடவுள் அங்கீகரிக்க வேண்டுமென்றால் அதை சட்டப்படி பதிவு செய்ய வேண்டுமா?

  • குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கிற பங்கையும் பொறுப்புகளையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

  • இன்றைய தம்பதிகள் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறாரா?

  • என்னுடைய கல்யாண வாழ்க்கைக்கு பைபிள் எப்படி கைகொடுக்கும்?

  • மணவாழ்வுக்கு உதவும் பைபிள் வசனங்கள்

திருமணத்தைப் பற்றி கடவுள் என்னென்ன சட்டங்களை கொடுத்திருக்கிறார்?

ஆரம்பத்திலிருந்தே, திருமண பந்தத்தை ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருக்கிற பந்தமாகத்தான் கடவுள் ஏற்படுத்தினார். (ஆதியாகமம் 2:24) பலதார மணம், ஓரினச் சேர்க்கை, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது போன்ற விஷயங்களை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார். (1 கொரிந்தியர் 6:9; 1 தெசலோனிக்கேயர் 4:3) திருமணம் சம்பந்தமாக ஆரம்பத்தில் கடவுள் வைத்த சட்டங்களுக்கு தன்னுடைய சீஷர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று இயேசு கற்றுக்கொடுத்தார்.—மாற்கு 10:6-8.

திருமண பந்தத்தை காலாகாலத்துக்கும் நிலைத்திருக்கும் பந்தமாக கடவுள் பார்க்கிறார். ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும்போது ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருப்போம், உயிரோடு இருக்கும் காலம்வரை ஒன்றாக இருப்போம் என்று வாக்குக் கொடுக்கிறார்கள். அந்த வாக்கை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார்.—மாற்கு 10:9.

பிரிந்து வாழ்வதையும் விவாகரத்தையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

சில சந்தர்ப்பங்களில் கணவனோ மனைவியோ பிரிந்திருக்கும் நிலைமை ஏற்படலாம். உதாரணமாக, குடும்பத்தில் ஏற்படுகிற அவசர சூழ்நிலை காரணமாக அவர்களில் ஒருவர் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால், கல்யாண வாழ்க்கையில் வருகிற பிரச்சினைகள் காரணமாக பிரிந்து வாழ்வதை பைபிள் ஏற்றுக்கொள்வதில்லை. பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து சமரசமாக வேண்டுமென்று தம்பதிகளை பைபிள் உற்சாகப்படுத்துகிறது.—1 கொரிந்தியர் 7:10.

விவாகரத்து செய்வதற்கு பைபிள் அனுமதிக்கிற ஒரே காரணம், மணத்துணைக்கு துரோகம். (மத்தேயு 19:9) இதை தவிர வேறெந்த காரணத்துக்காவது கணவனோ மனைவியோ பிரிந்து வாழ்ந்தால் அல்லது விவாகரத்து செய்தால் அவர்கள் வேறொரு நபரை டேட்டிங் செய்வதையோ மறுமணம் செய்வதையோ பைபிள் அங்கீகரிப்பதில்லை.—மத்தேயு 5:32; 1 கொரிந்தியர் 7:11.

திருமணத்தை கடவுள் அங்கீகரிக்க வேண்டுமென்றால் அதை சட்டப்படி பதிவு செய்ய வேண்டுமா?

திருமணம் சம்பந்தமாக அரசாங்கம் போடும் சட்டங்களுக்கு கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். (தீத்து 3:1) தம்பதிகள் தங்களுடைய திருமணத்தை பதிவு செய்யும்போது அவர்கள் அரசாங்க அதிகாரிகளுக்கும் கடவுளுக்கும் மதிப்புக் கொடுக்கிறார்கள். ஏனென்றால் கடவுளுடைய சட்டத்தின்படி திருமணம் என்பது நிரந்தரமாக காக்க வேண்டிய பந்தம்.a

குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கிற பங்கையும் பொறுப்புகளையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

  • இருவருக்கும் இருக்கும் பொறுப்புகள். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் அன்பாகவும் மரியாதையாகவும் நடத்த வேண்டும். (எபேசியர் 5:33) செக்ஸ் தேவைகளை ஒருவருக்கொருவர் அன்பான விதத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். எல்லாவிதமான துரோகத்தையும் தவிர்க்க வேண்டும். (1 கொரிந்தியர் 7:3; எபிரெயர் 13:4) பிள்ளைகள் இருந்தால், அவர்களை வளர்க்கிற பொறுப்பு இருவருக்குமே இருக்கிறது.—நீதிமொழிகள் 6:20.

    ஒரு அம்மா தன் மகளுக்கு ஹோம்வர்க் செய்ய உதவுகிறார், அப்பா காய்கறிகளை வெட்டுகிறார்.

    தம்பதிகள் இருவரும் வேலைக்குப் போக வேண்டுமா என்பதைப் பற்றியும் வீட்டு வேலைகளை எப்படிப் பகிர்ந்துகொள்ளலாம் என்பதைப் பற்றியும் பைபிள் விலாவாரியாக சொல்வது கிடையாது. தங்கள் குடும்பத்துக்கு எது ஒத்துவரும் என்பதை தம்பதிகள்தான் பேசி முடிவு செய்ய வேண்டும்.

  • கணவன். ‘கணவன் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்’ என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:23) எந்த அர்த்தத்தில்? தன் குடும்பத்தை அவர் வழிநடத்த வேண்டும். மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பலன் தரும் முடிவுகளை எடுக்க வேண்டும்.

    ஒரு தம்பதி டீ குடித்துக்கொண்டே ஒன்றுசேர்ந்து பைபிளை படிக்கிறார்கள்.

    தன்னுடைய குடும்பத்தார் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்களா... கடவுளிடம் நெருங்கியிருக்கிறார்களா... என்பதை அவர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். (1 தீமோத்தேயு 5:8) அவர் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து ஒரு ‘டீமாக’ செயல்படுவார். முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அவளுடைய கருத்துகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்புக் கொடுப்பார். இப்படி அவளுடைய அருமையான குணங்களையும் அவளுக்கு இருக்கும் திறமைகளையும் மதிக்கிறார் என்பதை காட்டுவார். (நீதிமொழிகள் 31:11, 28) ஒரு கணவர் தன்னுடைய பொறுப்புகளை அன்பான விதத்தில் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.—கொலோசெயர் 3:19.

  • மனைவி. “மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:33) கணவனுக்கு கடவுள் கொடுத்திருக்கும் ஸ்தானத்துக்கு மனைவி மதிப்புக் கொடுத்தால் கடவுள் சந்தோஷப்படுவார்.

    கணவனும் மனைவியும் வரவுசெலவுகளைப் பற்றி பேசுகிறார்கள்.

    தன் கணவர் நல்ல முடிவுகளை எடுக்க அவள் உதவ வேண்டும். தலைமை ஸ்தானத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இப்படி செய்யும்போது தன் கணவருக்கு பொருத்தமான ஒரு துணையாக இருக்கிறாள். (ஆதியாகமம் 2:18) திருமண வாழ்க்கையில் அவளுக்கு இருக்கும் முக்கியமான பங்கை நன்றாக செய்யும் மனைவியை பைபிள் உயர்வாக பேசுகிறது.—நீதிமொழிகள் 31:10.

இன்றைய தம்பதிகள் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறாரா?

இல்லை. பூர்வ காலங்களில் தன்னுடைய ஊழியர்கள் சிலரிடம் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டார். (ஆதியாகமம் 1:28; 9:1) ஆனால் அந்தக் கட்டளை கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது. பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று இயேசு தன்னைப் பின்பற்றியவர்களிடம் ஒருபோதும் சொல்லவில்லை. முதல் நூற்றாண்டு சீஷர்களும் அப்படி எதுவும் சொல்லவில்லை. அதனால் பிள்ளைகள் வேண்டுமா வேண்டாமா என்று தம்பதிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

என்னுடைய கல்யாண வாழ்க்கைக்கு பைபிள் எப்படி கைகொடுக்கும்?

கல்யாண வாழ்க்கையில் காலெடுத்து வைக்கும் தம்பதிகளுக்கு பைபிளில் நிறைய ஆலோசனைகள் இருக்கிறது. அவை பிரச்சினைகளை தவிர்க்கவும் அதை சமாளிப்பதற்கும் தம்பதிகளுக்கு உதவும்.

தம்பதிகளுக்கு கைகொடுக்கும் பைபிள் ஆலோசனைகள் . . .

  • உண்மையான அன்பைக் காட்டுங்கள்.—1 கொரிந்தியர் 13:4-7; கொலோசெயர் 3:14.

  • கருத்துவேறுபாடுகளை சரி செய்துகொள்ளுங்கள்.—1 கொரிந்தியர் 10:24.

  • காதுகொடுத்துக் கேளுங்கள்.—யாக்கோபு 1:19.

  • மரியாதை காட்டுங்கள்.—ரோமர் 12:10.

  • மன்னியுங்கள்.—1 பேதுரு 4:8.

  • உண்மையாக இருங்கள்.—மாற்கு 10:9.

  • பொறுமையாக இருங்கள்.—எபேசியர் 4:2, 3.

  • ஒரு ‘டீமாக’ செயல்படுங்கள்.—பிரசங்கி 4:9.

  • திருமண வாக்குறுதியை காப்பாற்றுங்கள்.—உன்னதப்பாட்டு 8:7.

a சம்பிரதாயப்படி அல்லது குலமரபுப்படி செய்யப்படுகிற திருமணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, காவற்கோபுரம் அக்டோபர் 15, 2006, பக்கம் 21, பாரா 12-ஐப் பாருங்கள்.

மணவாழ்வுக்கு உதவும் பைபிள் வசனங்கள்

நீதிமொழிகள் 18:22: “நல்ல மனைவியைத் தேடிக்கொள்கிறவன் நல்ல ஆசீர்வாதத்தைத் தேடிக்கொள்கிறான்.”

அர்த்தம்: கல்யாணம் செய்வது தவறில்லை என்று பைபிள் சொல்கிறது.

மல்கியா 2:15: “இளவயதில் நீங்கள் கைப்பிடித்த மனைவிக்குத் துரோகம் செய்யாதீர்கள்.”

அர்த்தம்: கல்யாணமாகி காலங்கள் உருண்டோடினாலும் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் மரியாதையாக நடத்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

மாற்கு 10:9: “கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்.”

அர்த்தம்: திருமணத்தை காலாகாலத்துக்கும் இருக்கும் பந்தமாக கடவுள் ஏற்படுத்தினார்.

எபிரெயர் 13:4: “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்.”

அர்த்தம்: தம்பதிகள் திருமண வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், பந்தத்தை கட்டிக்காக்க கடினமாக உழைக்க வேண்டும்.

1 கொரிந்தியர் 7:28: “திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு வாழ்க்கையில் உபத்திரவங்கள் வரும்.”

அர்த்தம்: கல்யாண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும். அதை தம்பதிகள் ஒன்றுசேர்ந்து சரிசெய்ய வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்