கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்
பரிசுத்த சேவையில் இன்னொரு வருடத்தைக் கழித்திருக்கிற நாம், நிச்சயமாகவே அகமகிழலாம். கடவுள் தம்முடைய ஊழியர்கள் மூலம் செய்துவருகிற பிரமாண்டமான வேலையின் சிறப்பம்சங்கள் சிலவற்றை வாசிக்கும்போது, “வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்” என நாம் உறுதியாகச் சொல்லலாம்.—சங். 65:11.
இன்டர்நெட்டில் “நற்செய்தி”
முடிவு வருவதற்குமுன் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்க’ வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். (மத். 24:14, NW) பல வருட காலமாகத் தொழில்நுட்பத்தில் புதுப்புது வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளதால், “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி” மக்களிடையே அதிவேகமாகப் பரவியிருக்கிறது. (மத். 13:18–23, NW) கடந்த 11 வருடங்களாக, பொதுமக்களுக்கு ஆன்மீக விஷயங்கள் இன்டர்நெட்டில் கிடைப்பதற்கென்று www.watchtower.org என்ற அதிகாரப்பூர்வ வெப் சைட்டை நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்த வெப் சைட்டுக்கு விஜயம் செய்பவர்கள் 314 மொழிகளில் எந்த மொழியில் வேண்டுமானாலும் பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ளலாம்; அதோடு, “நம்பிக்கைகளும் வேலைகளும்,” “கடவுளும் உங்கள் எதிர்காலமும்,” “மருத்துவ சிகிச்சையும் இரத்தமும்,” “தற்போதைய தகவல்கள்,” “கிடைக்கும் பிரசுரங்கள்” போன்ற தலைப்புகளில் விஷயங்களை அலசிப் பார்க்கலாம்.
பைபிளை வாசிப்பதற்காகவே அநேகர் www.watchtower.org என்ற முகவரியைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் 6,300-க்கும் அதிகமானோர் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலுள்ள வசனங்களை ஆன்லைனில் வாசிக்கிறார்கள்; பத்து மொழிகளில் ஏதோவொரு மொழியில் அவ்வாறு வாசிக்கிறார்கள். வெப் சைட்டிலுள்ள பைபிள் புத்தகங்களில் சங்கீதம், நீதிமொழிகள், சுவிசேஷப் பதிவுகள் ஆகியவற்றை மக்கள் அடிக்கடி விரும்பி வாசிக்கிறார்கள்.
காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், அதுவும் பொதுமக்களுக்குப் பயன்தரும் வகையில் வெளிவந்திருந்த கட்டுரைகள் 12 மொழிகளில் இந்த வெப் சைட்டில் ஒவ்வொரு வாரமும் சேர்க்கப்படுகின்றன. நம் நம்பிக்கைகள் என்ன, நம் கூட்டங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன, நம் பிரசங்க வேலைகளுக்குப் பணம் எப்படிக் கிடைக்கிறது என்றெல்லாம் அநேகர் யோசிக்கிறார்கள். வெப் சைட்டுக்கு விஜயம் செய்கிறவர்கள் யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? என்ற சிற்றேட்டின் எலக்ட்ரானிக் பதிவிலிருந்து இந்தக் கேள்விகளுக்குப் பதிலைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். “மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—முடிவுக்கு வருமா?” என்ற பிரசுரம் 252 மொழிகளில் www.watchtower.org என்ற வெப் சைட்டில் உள்ளது; இவற்றோடு, ஐந்து சைகை மொழிகளில் வீடியோ பகுதிகளும் உள்ளன.
இன்டர்நெட்டில் சத்தியத்தைக் கண்டடைதல்
இந்தப் பிரசுரங்களெல்லாம் ஆன்லைனில் கிடைப்பதால் என்ன பலன்கள் விளைந்திருக்கின்றன? ஒவ்வொரு நாளும் சராசரியாக 60,000 பேருக்கும் அதிகமானோர் www.watchtower.org வெப் சைட்டுக்கு விஜயம் செய்கிறார்கள்! யெகோவாவின் சாட்சிகள் வெகு சிலரே இருக்கிற இடங்களில் அல்லது அவர்களுடைய வேலைக்குத் தடையோ கட்டுப்பாடோ விதிக்கப்பட்டிருக்கிற நாடுகளில் நிறையப் பேர் வசிக்கிறார்கள். அப்படிப்பட்ட இடங்களில், சத்தியத்தின் மீது தாகமாக இருப்பவர்கள் இன்டர்நெட் வெப் சைட் மூலம் ஜீவத் தண்ணீரைப் பருகி தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.
“பைபிளைப் பற்றிக் கற்றுக்கொள்ள எப்போதுமே எனக்கு ஆர்வம் இருந்து வந்தது; ஆனால், நண்பர்களோடு சேர்ந்து சர்ச்சுக்குப் போனபோதெல்லாம் அவர்கள் பாட்டுப் பாடுவார்கள், இல்லையென்றால் விளையாட்டுகளில்தான் ஈடுபடுவார்கள்” என்று பிரையன் என்பவர் சொல்கிறார். அவர் தொடர்ந்து மேற்படிப்பு படித்தார், விளையாட்டு வீரராக ஆனார்; ஐந்து மொழிகளில் புலமை பெற்றார்; அதோடு, மாணவருக்கான உதவித்தொகையைப் பெற்றார். ஆனாலும், இவை எதுவுமே அவருடைய ஆன்மீகத் தாகத்தைத் தீர்க்கவில்லை. ஆகவே, சத்தியத்தைக் கண்டடையத் தனக்கு உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்தார்.
“என் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்க வேண்டுமெனத் துடித்தேன். அப்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய வெப் சைட்டைப் பார்க்கத் தீர்மானித்தேன்; ஏனென்றால், யெகோவாவின் சாட்சிகளான என் பள்ளி நண்பர்கள் சிலர், கடவுளுடைய பெயர் யெகோவா என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். அதனால், அமைப்பின் வெப் சைட்டுக்குள் நுழைந்து, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை வாசிக்கத் தொடங்கினேன். கடைசியாக, என் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தது” என்கிறார் பிரையன். தனக்கு பைபிள் படிப்பு வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார், அதன்பின் ஆன்மீக ரீதியில் வேகமாக முன்னேறி 2004-ல் யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்தார். தற்போது ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிறார்; தன்னுடைய மொழிப் புலமையை மிஷனரி ஊழியத்தில் பயன்படுத்த நினைத்துக்கொண்டிருக்கிறார்.
“தேவன் உங்களோடே இருக்கிறார்”
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ‘சகல பாஷைக்காரராகிய’ ஆயிரக்கணக்கான ஆட்கள் www.watchtower.org வெப் சைட்டுக்கு விஜயம் செய்வதை அறிவது எவ்வளவாய் மெய்சிலிர்க்க வைக்கிறது! ‘உங்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா?’ என்ற ஆன்லைன் படிவத்தை நாளொன்றுக்குச் சராசரியாக 94 பேர் சமர்ப்பிக்கிறார்கள்.—சக. 8:23.
டனிஸ் என்ற பெண்மணி, யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்; ஆனால், ராஜ்ய மன்றத்திற்குப் போகத் தயங்கினார். எனவே, இன்டர்நெட்டில் தேடிப் பார்த்து, www.watchtower.org என்ற வெப் சைட்டைக் கண்டுபிடித்தார். அதிலுள்ள தகவல்களை வாசித்தபின், தான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக உறுதியாய் நம்பினார். ஆனாலும், பைபிள் நெறிகளுக்கு இசைய தன் வாழ்க்கையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்குமென்று அறிந்ததால் தனக்கு பைபிள் படிப்பு வேண்டுமென்று கேட்கத் தயங்கினார். ‘உங்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா?’ என்ற ஆன்லைன் படிவத்தை நான்கு முறை பூர்த்தி செய்தபோதிலும், ‘சப்மிட்’ பட்டனை ‘க்ளிக்’ செய்ய மட்டும் அவருக்குக் கை வரவில்லை.
மார்ச் 2007-ல், டனிஸ் ஐந்தாவது முறையாக அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்தார். இந்த முறை ‘சப்மிட்’ பட்டனை ‘க்ளிக்’ செய்தார். அவரைப் பற்றிய விவரங்கள் அந்தப் பிராந்தியத்திலிருந்த சபைக்கு அனுப்பப்பட்டன; டனிஸை வொனி என்ற சகோதரி சந்திப்பதற்கு அந்தச் சபையின் மூப்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். அவர் சந்தித்த ஒரு வாரத்திற்குள்ளேயே ராஜ்ய மன்றத்தில் நடந்த கூட்டங்களுக்கு டனிஸ் வரத் தொடங்கினார்.
செப்டம்பர் மாதக் கடைசியில், டனிஸ் தன்னுடைய மத சம்பந்தப்பட்ட பொருள்களையெல்லாம் அழித்துவிட்டார்; அந்த மதத்திலிருந்து விலகிக்கொண்டார், ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியானார். அவரும் அவருடைய இரண்டு மகன்களும் ஆன்மீக ரீதியில் வேகமாக முன்னேற்றம் செய்தார்கள்; அவருடைய எட்டு வயது மகன் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்தான். ஜனவரி 2008-ல், அவர் ஞானஸ்நானம் பெற்றார், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது ஆன்லைன் படிவத்தைச் சமர்ப்பித்த ஒரு வருடத்திற்குள், துணைப் பயனியராக ஆனார். “இந்த வெப் சைட் மட்டும் இல்லையென்றால், இந்த அனுபவத்தை என்னால் சொல்லியிருக்கவே முடியாது” என்கிறார் டனிஸ்.
ஜனவரி 2008 முதல், சில பிரசுரங்களின் ஆடியோ பதிப்புகளுக்கென்று www.jw.org என்ற வெப் சைட் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோ பதிப்புகளை 17 மொழிகளில் ‘டவுன்லோட்’ செய்துகொள்ளலாம். நினைத்துப் பார்க்காத அளவு இதற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது; ஒவ்வொரு மாதமும் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட பிரசுரங்களும் கட்டுரைகளும் ‘டவுன்லோட்’ செய்யப்படுகின்றன! இவ்வாறு ‘டவுன்லோட்’ செய்யப்பட்ட கட்டுரைகளை பிரஸ்தாபிகளில் அநேகர் பள்ளிக்கோ வேலைக்கோ பயணிக்கும்போது கேட்டு மகிழ்கிறார்கள்.
ஆன்மீகப் பசியைப் போக்கும் மொழிபெயர்ப்பு
கடவுளுக்கு மகிமை சேர்க்கும்படி ‘சகல ஜாதிகளையும் கோத்திரத்தாரையும் பாஷைக்காரரையும்’ ஊக்கப்படுத்துகிற வேலையில் தேவதூதர்கள் நமக்கு உதவுகிறார்கள் என்பதை அறிவது எவ்வளவாய் மகிழ்ச்சி அளிக்கிறது! (வெளி. 14:6, 7) பைபிளிலுள்ள செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதை அவர்கள் உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டும்; அதனால், யெகோவாவின் சாட்சிகள் தற்போது சுமார் 450 மொழிகளில் பிரசுரங்களைத் தயாரிக்கிறார்கள்.
பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகம் சமீபத்தில் டீட்டம் மொழியில் வெளியிடப்பட்டது; இந்த மொழி கிழக்குத் தைமூரில் பேசப்படும் மொழியாகும். ஆனால் இந்தப் புத்தகம் போதியளவு இருக்கவில்லை. பைபிளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்த மாரீயா என்ற பெண், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை இந்தோனேஷியன் மொழியில் வைத்திருந்தாள். டீட்டம் மொழியில் அந்தப் புத்தகம் அவளிடம் இல்லை. தனக்கு பைபிள் படிப்பு நடத்தும் சகோதரியிடமிருந்து டீட்டம் மொழிப் புத்தகத்தை இரண்டு நாட்களுக்கு இரவல் வாங்கினாள். அதிலிருந்து தெரிந்துகொண்ட அனைத்து விஷயங்களையும் அடுத்த சில நாட்களில் மடமடவெனச் சொல்ல ஆரம்பித்தாள். இந்தோனேஷியன் மொழிப் புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொண்டதைவிட, தன் தாய்மொழியில் வாசித்த பிறகு, சத்தியம் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை அவள் இன்னும் தெளிவாகப் புரிந்துகொண்டாள். டீட்டம் மொழிப் புத்தகத்தை அவளிடமிருந்து திரும்ப வாங்கிக்கொள்ள அந்தச் சகோதரிக்கு மனமே இருக்கவில்லை. தற்போது மாரீயா தொடர்ந்து பைபிளைப் படித்து வருகிறாள், கூட்டங்களிலும் கலந்துகொள்கிறாள்.
கென்யாவில் ஆங்கிலமும் ஸ்வாஹிலியும் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தாலும், லட்சக்கணக்கான கென்யர்கள் கிக்கூயு, கிக்காம்பா, லூவோ போன்ற உள்ளூர் மொழிகளிலேயே சரளமாகப் பேசுகிறார்கள். ஆகவே, இந்த மொழிகளில் பிரசுரங்களைத் தயாரித்திருப்பது யெகோவாவின் வணக்கத்திடம் மக்களுடைய ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. சியாயா சபை லூவோ மொழியில் பிரசுரங்களைப் பயன்படுத்தவும் கூட்டங்களை நடத்தவும் ஆரம்பித்த பிறகு, அந்தச் சபையின் மூப்பர்கள் இவ்வாறு எழுதினார்கள்: “கற்றுக்கொடுக்கப்படும் விஷயங்களைச் சகோதரர்கள் இப்போது நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். கூட்டங்களில் பிள்ளைகள் முன்பைவிட அதிக கவனம் செலுத்துகிறார்கள். பேச்சுக் குறிப்புத்தாள்களை லூவோ மொழியில் நாங்கள் பயன்படுத்த ஆரம்பித்ததால் கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்திருக்கிறது.”
நிகாராகுவாவில் அநேகர் ஸ்பானிஷ் மொழியில் பேசுவதில்லை, மிஸ்கிட்டோ மொழியில்தான் பேசுகிறார்கள், 200-க்கும் மேற்பட்டவர்கள் மிஸ்கிட்டோ மொழியில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டார்கள். அதில் கலந்துகொள்வதற்காகச் சிலர் பெரும் தியாகங்களைச் செய்தார்கள். உதாரணமாக, கொக்கோ நதிக்கரையில் அமைந்துள்ள ஆசாங் என்ற ஒரு சிற்றூரிலிருந்து வாஸ்பாம் என்ற ஊருக்கு வருவதற்காக 13 சகோதரர்கள் ஒரு கட்டுமரத்தைச் செய்து, அதில் இரண்டு நாட்கள் பயணித்து அந்த நதியைக் கடந்தார்கள். பிறகு ஒரு டிரக்கில் ஏறி ஐந்து மணிநேரம் கழித்து மாநாடு நடக்கும் நகரத்திற்கு வந்துசேர்ந்தார்கள். இவர்களில் பெரும்பாலோருக்கு அதுவே முதல் மாவட்ட மாநாடாக இருந்தது. தங்கள் சொந்த மொழியிலேயே நிகழ்ச்சிகளைக் கேட்டு அகமகிழ்ந்தார்கள். மாநாடு நடக்கும் நகரத்திற்குப் போய்ச் சேரத் தங்களிடமிருந்த பணத்தையெல்லாம் செலவழித்துவிட்டதால், திரும்பிச் செல்வதற்கான பயணச் செலவை மாநாட்டிற்கு வந்திருந்த மற்ற சகோதரர்கள் நன்கொடையாக அளித்தார்கள்.
பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகம் மிஸ்கிட்டோ மொழியில் வெளியிடப்பட்டபோது அந்த மாநாட்டிற்கு வந்திருந்த மிஸ்கிட்டோ மொழியினர் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். முக்கியமாக, பயனியர்கள் அதற்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். அதுவரை, மாணாக்கருக்கு பைபிள் படிப்பு நடத்தும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அவர்கள் ஸ்பானிஷ் மொழியிலேயே பயன்படுத்தினார்கள்; பாராக்களையும் கேள்விகளையும் மிஸ்கிட்டோ மொழியில் மொழிபெயர்த்துச் சொன்னார்கள். ஆனால் இப்போது, மொழிபெயர்ப்பது பற்றிய கவலையே இல்லாமல் பைபிள் சத்தியங்களைக் கற்பிப்பதற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
கொச்சுவா என்பது ஓர் அமெரிக்க இந்திய மொழியாகும்; இது தென் அமெரிக்காவில் பேசப்படுகிறது. பெருவிலுள்ள கொச்சுவா மொழிப் பிரஸ்தாபிகள் சிலர் இவ்வாறு எழுதினார்கள்: “வெளி ஊழியத்தில் வீட்டுக்காரரிடம் பேசி முடித்தபின் கொச்சுவா மொழியில் பிரசுரங்களைக் காட்டுகிறோம். தங்கள் தாய்மொழியிலேயே உள்ள பிரசுரங்களைப் பார்த்து அவர்களில் சிலர் ஆனந்தக் கண்ணீர் சிந்தி, அவற்றை முத்தமிட்டிருக்கிறார்கள்.” பெருவிலுள்ள கிளை அலுவலகம் இவ்வாறு எழுதியது: “கொச்சுவா மொழி பேசப்படும் பகுதியில் வசிக்கும் சகோதரர்கள் சிலர் தங்கள் போற்றுதலைத் தெரிவிக்கப் பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை கொச்சுவா மொழியில் வாசித்த பிறகுதான், கிறிஸ்து செலுத்திய மீட்புவிலையின் அருமை தனக்குப் புரிந்ததாக ஒரு சகோதரர் சொன்னார். வாசகர்கள் கிளை அலுவலகத்திற்கு உருளைக் கிழங்குகள், தின்பண்டங்கள், பெட்டி பெட்டியாகப் பழங்கள் போன்றவற்றை அனுப்பி வைத்துத் தங்கள் போற்றுதலைத் தெரிவித்திருக்கிறார்கள்.”
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தனித் தீவுகளில் பேசப்படுகிற மொழிகளிலும் பிரசுரங்களை மொழிபெயர்க்க அமைப்பு விசேஷ முயற்சியெடுத்து வருகிறது. மைக்ரோனேசியத் தீவாகிய போன்பேயில் மிஷனரி சகோதரி ஒருவரிடம் ஒரு சகோதரி, “யெகோவா எங்களை மறந்துவிடவில்லை, அவருக்குக் கோடி நன்றி” என்றார். “முன்பெல்லாம், காவற்கோபுர பத்திரிகை ஆங்கிலத்தில் வந்து சில மாதங்கள் கழித்துத்தான் போன்பே மொழியில் எங்களுக்குக் கிடைக்கும். அதனால், அர்மகெதோன்கூட எங்களுக்குத் தாமதமாகத்தான் வருமோ என்னவோ என்று நாங்கள் நினைத்தோம்” என நகைச்சுவையாகச் சொன்னார். “ஆனால் இப்போது, இந்தப் பத்திரிகையை உலகிலுள்ள மற்ற சகோதர சகோதரிகள் படிக்கும்போதே நாங்களும் படிக்கிறோம்; ஆங்கிலப் பத்திரிகையைப் போலவே இந்தப் பத்திரிகையும் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. ஆளும் குழு எங்கள்மீது காட்டும் அக்கறைக்காக மிகுந்த நன்றி” என்றும் அவர் சொன்னார்.
பொதுமக்களுக்கான காவற்கோபுர இதழ் மார்ஷலீஸ் மொழியில் வெளியிடப்பட்டபோது, பசிபிக் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் தீவுகளிலுள்ள சகோதர சகோதரிகள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வாழ்க்கைச் சரிதைகளை வாசிப்பதென்றால் இந்தச் சகோதரர்களுக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால், முன்பு வெளியிடப்பட்ட காவற்கோபுர பத்திரிகைகளில் வாழ்க்கைச் சரிதைகளுக்குப் போதிய இடம் இருக்கவில்லை; இதனால், ஆங்கிலப் பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளை யாராவது மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டியிருந்தது. ஆகவே, மார்ஷலீஸ் மொழியில் முதன்முதலாக வாழ்க்கைச் சரிதை இடம்பெற்றபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! 16 வயது இளைஞன் ஒருவன் சொன்னதாவது: “முன்பெல்லாம் ஆங்கிலப் பத்திரிகையைப் புரட்டிப் பார்த்து, வாழ்க்கைச் சரிதையிலுள்ள படங்களை ரசிப்பேன்; அந்தக் கட்டுரையை வாசிக்க ஆசையாக இருக்கும், ஆனால் இப்போதுதான் அவற்றை என்னால் வாசிக்க முடிகிறது.”
ஒரு மொழியில் ஒரே ஒரு பிரசுரம் இருந்தாலும்கூட, அது மக்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். பிரசங்க வேலைக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மத்திய ஆசிய நாடு ஒன்றில், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேடு பெருமளவு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஓர் இளைஞன் இந்தச் சிற்றேட்டைப் பெற்றுக்கொண்ட பிறகு அதை வாசித்துப் பார்த்தான்; அதிலுள்ள விஷயம் அவன் மனதை அந்தளவு தொட்டதால் பக்கத்திலிருந்த ஆற்றுக்குப் போய் தானாகவே “ஞானஸ்நானம்” எடுத்தான். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டபோது, ஆவலோடு அதற்கு ஒத்துக்கொண்டான்; சீக்கிரத்திலேயே முறைப்படி ஞானஸ்நானம் பெற்றான். இப்போது மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் அதிக நேரம் செலவிட்டு வருகிறான்.
பைபிள் மொழிபெயர்ப்பில் முன்னேற்றம்
யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய வார்த்தையான பைபிளைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள்; திருத்தமான, தெளிவான பைபிள் மொழிபெயர்ப்பை உயர்வாய் மதிக்கிறார்கள். இதன் காரணமாக, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைகிறார்கள். பைபிளின் இந்த மொழிபெயர்ப்பு வெளியிடப்படும்போது நாம் மெய்சிலிர்த்துப்போவோம் என்பது உண்மையே, ஆனால் நம்முடைய தனிப்பட்ட படிப்பிலும், சபைக் கூட்டங்களிலும், வெளி ஊழியத்திலும் அதைப் பயன்படுத்தும்போதுதான் அது நம் இருதயத்தைத் தொட்டு, நம் சிந்தனைகளைச் செதுக்கிச் சீராக்கும்.
ரஷ்ய மொழியில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் முழுமையாகக் கிடைத்திருப்பதற்குப் போற்றுதல் தெரிவித்து ரஷ்ய கிளை அலுவலகத்திற்குக் கடிதங்கள் வந்து குவிகின்றன. “பைபிளை நான் பலமுறை வாசித்திருக்கிறேன், ஆனால் இந்த மொழிபெயர்ப்பை வாசிக்கும்போது, பைபிளை முதன்முதலாக வாசிப்பது போலவே இருக்கிறது! பைபிள் செய்தி என் இருதயத்தைத் தொடும்போது சிலசமயம் என் கண்கள் கலங்கிவிடுகின்றன, உடம்பெல்லாம் புல்லரிக்கிறது” என்கிறார் ஒரு பெண்மணி.
இந்த மொழிபெயர்ப்பு தெளிவாக இருப்பதைக் கண்ட இன்னொரு பெண்மணி இவ்வாறு சொல்கிறார்: “இன்றைக்கு ஆதியாகமம் 18-வது அதிகாரத்தை வாசித்தேன்; கட்டாயம் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டுமென்று தோன்றியது. அந்த அதிகாரத்தின் 23-32 வசனங்களில், ஆபிரகாம் யெகோவாவோடு பேசிய சம்பவம் என் உள்ளத்தை ஆழமாகத் தொட்டது. நான் ஏற்கெனவே நான்கு முறை பைபிளை வாசித்திருக்கிறேன்; என்றாலும், இந்த உரையாடல் இவ்வளவு தத்ரூபமாக இருந்ததை இந்த முறை பைபிளை வாசித்தபோதுதான் கவனித்தேன். ஆபிரகாமுக்காக மனம் நெகிழ்ந்தேன், அவர் யெகோவாவிடம் பேசியதையும் யெகோவா அவருக்குப் பதில் சொன்னதையும் என் “காதால் கேட்டேன்.” யெகோவா ஆபிரகாமுக்குச் செவிகொடுத்த விதம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இதெல்லாம் நேரில் நடப்பதைப் போலவே உணர்ந்தேன். யெகோவாவின் குணங்களை என்னால் காண முடிந்ததோடு அவற்றை உள்ளூர உணரவும் முடிந்தது.”
மாஸ்கோவைச் சேர்ந்த ஸ்விட்லானா என்ற பெண்மணி எழுதினார்: “புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை முழுமையாக எங்களுக்குக் கொடுத்ததற்கு நன்றி! முன்பு ‘பழைய ஏற்பாட்டை’ படித்துப் புரியாமல் குழம்பிப்போயிருந்த நாங்கள் இப்போது அந்தப் பழங்கால மொழிபெயர்ப்பை வைத்துக்கொண்டு மண்டையை உடைக்கத் தேவையில்லை! இந்த மொழிபெயர்ப்பு ரொம்பவே எளிதாக இருக்கிறது!”
இன்னொரு வாசகி இவ்வாறு எழுதினார்: “என்னிடம் வேலை பார்க்கும் இரீனா என்ற பெண்ணுக்குச் சத்தியத்தைச் சொன்னேன். முதலில், பைபிளைத் திறக்காமலேயே பைபிள் வசனங்களை அவளிடம் சொன்னேன். ஆனால், இயேசு சொல்லிக்கொடுத்த மாதிரி ஜெபத்தை என்னுடைய பைபிளிலிருந்து காட்டியபோது, ‘அட, இது பரமண்டல ஜெபம்தானே?’ என்று ஆச்சரியப்பட்டாள். இயேசுவின் வார்த்தைகளை வாசித்த பிறகு, சந்தோஷத்தில் அவளுடைய கண்கள் மின்னின: ‘அருமையிலும் அருமை! எவ்வளவு எளிய வார்த்தைகள்! இந்த ஜெபத்தை அடிக்கடி கேட்டிருக்கிறேன், ஆனால் எனக்கு ஒன்றுமே புரியாது. இந்த பைபிள் எவ்வளவு தெளிவாகவும் எவ்வளவு எளிதாகவும் இருக்கிறது! இந்த மாதிரி பைபிள்தான் எனக்கு வேண்டும். கட்டாயம் வேண்டும், தயவுசெய்து கொண்டுவந்து தாருங்கள்!’ என்றாள். அதற்கு நான், ‘பைபிளைப் படிக்க உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறவர்களுக்குத்தான் நாங்கள் பைபிளைக் கொடுக்கிறோம்’ என்று சொன்னேன். அவளோ உள்ளார்வத்துடன், ‘முன்பெல்லாம் பைபிளை வாசிக்கவே எனக்குப் பிடிக்காது. என்னிடம் எத்தனையோ பைபிள்கள் இருந்தன, அவற்றையெல்லாம் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டேன், ஆனால், இப்பொழுது பைபிளை வாசிக்க உண்மையிலேயே எனக்கு ஆசையாக இருக்கிறது!’ என்றாள்.”
உக்ரைனியன் மொழியில் வெளிவந்த கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் பற்றி ஒரு சகோதரர் இவ்வாறு எழுதினார்: “இந்த அருமையான பரிசைத் தந்த யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். பக்கத்திற்குப் பக்கம் இதை ரசித்துப் படிக்கிறேன். எங்கே போனாலும் கையோடு எடுத்துச் செல்கிறேன். எளிய நடையிலும் புரிந்துகொள்ளும் விதத்திலும் இருக்கிறது. இதிலுள்ள வார்த்தைகள் என் இருதயத்தைத் தொடுகின்றன, பைபிளின் ஆழமான போதனைகளை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.”
செர்பியன், குரோஷியன் மொழிகளிலும்கூட இந்த பைபிளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. “வாசிக்க இது ரொம்பவும் எளிதாக இருக்கிறது; வருடக்கணக்கில் பயன்படுத்தி வந்த பைபிளோடு ஒப்பிடும்போது, புரிந்துகொள்வதற்கு எவ்வளவோ எளிதாக இருக்கிறது. வேதப்பூர்வ ஆலோசனைகள் என் இருதயத்தில் எளிதாகப் பதிந்துவிடுகின்றன; எப்போதையும்விட இப்போதுதான் யெகோவாவை என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது” என குரோஷியன் சகோதரி ஒருவர் எழுதினார்.
நவம்பர் 2, 2007-ல் ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர் ஜெஃப்ரீ ஜேக்ஸன், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை சமோவன் மொழியில் வெளியிட்டார். காலங்காலமாய்ப் புழக்கத்திலிருந்த சமோவன் மொழி பைபிள் அரிதானதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருந்தது; ஆகவே, இப்போது இந்த மொழிபெயர்ப்பு எளிதில் கிடைப்பதால் சகோதரர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த மொழிபெயர்ப்பைச் சில மாதங்கள் பயன்படுத்திய பிறகு ஒரு பிரஸ்தாபி இவ்வாறு சொன்னார்: “பழைய பைபிள், கருத்துகளைப் புதைத்துவிட்டது; புதிய பைபிளோ அவற்றைத் தோண்டியெடுத்துப் பட்டை தீட்டியிருக்கிறது.”
ஒரு சகோதரி பைபிள் படிப்பு நடத்தியபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவர்கள் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் யாக்கோபு 4:8 கொடுக்கப்பட்டிருந்தது. “இது ஏற்கெனவே நமக்குத் தெரிந்த வசனமாய் இருந்தாலும், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இதை நாம் எடுத்துப் பார்க்கலாமென்று அந்த பைபிள் மாணாக்கரிடம் சொன்னேன். நாங்கள் வாசித்தது சரியான வசனம்தானா என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துவிட்டது; ஆனால், அது சரியான வசனம்தான். அந்த பைபிள் படிப்புக்கு என்னோடு வந்திருந்த சகோதரி திடுக்கிட்டுப்போனார்; ‘இது என்ன, இந்த வசனம் மாறியிருக்கிறதே!’ என்றார். யெகோவாவிடம் ‘நெருங்கி வருவது,’ அவரோடு நாம் நெருங்கிய பந்தத்தை வைத்திருப்பதையே குறிக்கிறது என அப்போது எங்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது; இந்தக் குறிப்பு பழைய பைபிளில் இல்லவே இல்லை. இது எங்களை நெகிழச் செய்தது, யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ளத் தூண்டியது” என்று அந்தச் சகோதரி சொன்னார்.
தைவானில் சேவைசெய்யும் மிஷனரிகள், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் சைனீஸ் மொழியில் வெளிவந்தபின் சிலகாலம் கழித்து இவ்வாறு எழுதினார்கள்: “நம்முடைய பத்திரிகைகளைத் தவறாமல் வாசிக்க விரும்பும் ஒரு வக்கீலிடம் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைக் கொடுத்தோம். ‘எதற்காக ஒரு புதிய மொழிபெயர்ப்பு?’ என்று அவர் கேட்டார். சில வசனங்களை அவரிடம் எடுத்துக்காட்டினோம், அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘இத்தனை நாள் யூனியன் வர்ஷன் பைபிளைத்தான் வாசித்துவந்தேன்; ஆனால் அதைவிட இந்த மொழிபெயர்ப்பு எவ்வளவோ எளிதாக இருக்கிறது’ என்றார்.” அந்த மிஷனரிகள் நாடாளுமன்ற உறுப்பினரான ஒரு பெண்மணிக்கும் இந்த பைபிளைக் கொடுத்தார்கள். அவர் அந்த பைபிளைத் தன் அலுவலகத்திலேயே வைத்துவிட்டுச் சென்றார். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிக் குறைசொல்கிற வானொலி அறிவிப்பாளர் ஒருவர் அந்த பைபிளை எடுத்து ஒரு பகுதியை வாசித்துப் பார்த்தார். அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால், தனக்கும் இந்த பைபிளைக் கொண்டுவந்து தரும்படி அந்த மிஷனரிகளுக்கு ஃபோன் செய்தார்.
கிர்கீஸ் சகோதரி ஒருவருக்குக் கண்பார்வை சரியில்லாததால் வாசிக்கக் கஷ்டப்பட்டார்; அதனால், பைபிள் வாசிப்பதைப் பாரமான ஒரு வேலையாக நினைத்துவந்தார். என்றாலும், கிர்கீஸ் மொழியில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் கிடைத்த பிறகு, அவருடைய எண்ணமே மாறியது. இப்போதெல்லாம் பைபிள் வாசிப்பு அவருக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது; தெளிவான, எளிய மொழிபெயர்ப்புதான் அதற்குக் காரணம்.
“அபாரமான மொழிபெயர்ப்பு இது!” என்றார் மற்றொரு சகோதரி. “சத்தமாக வாசிக்கும்போது தவறில்லாமல் வாசிக்கிறேன். திரும்பத் திரும்ப வாசிக்க ஆசையாக இருக்கிறது. சத்தியத்தை மறுபடியும் கற்றுக்கொள்வதுபோல இருக்கிறது” என்றும் அவர் சொன்னார்.
காது கேளாத ஒரு சகோதரி ஆளும் குழுவுக்கு இவ்வாறு எழுதினார்: “அமெரிக்க சைகை மொழியில் (ASL) வெளிவந்துள்ள மத்தேயு சுவிசேஷம் வெகு ஜோர்! இப்போதுதான் பைபிள் உயிருள்ளதாய் இருக்கிறது, என் உள்ளத்தைத் தொடுகிறது. இயேசுவின் சுபாவம், முக பாவனை, கருணை, அளவில்லா அன்பு ஆகியவற்றை என்னால் பார்க்க முடிகிறது. சைகை மொழியிலுள்ள மத்தேயு சுவிசேஷம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பைபிளின் மற்ற புத்தகங்களையும் சைகை மொழியில் சீக்கிரமாய் வெளியிட ஏதாவது செய்யுங்களேன்!”
சரியான ஒரு மொழிபெயர்ப்பு, பைபிள் செய்தியை மூடிமறைக்கிற போர்வையை அகற்றிவிடுகிறது, வாசிப்பவரின் இருதயத்தில் சத்திய ஒளியை ஊடுருவச் செய்கிறது; இதில் சந்தேகமே இல்லை. இதனால்தான், தங்கள் பரமத் தகப்பனோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள ஏங்குபவர்கள் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைத் தங்களுடைய தாய்மொழியில், அதாவது தங்கள் இருதயத்தைத் தூண்டுகிற மொழியில், பெற்றுக்கொள்ளும்போது அகமகிழ்கிறார்கள்.
அறுவடைக்கு அதிக ஆட்கள் அனுப்பப்படுதல்
கிளை அலுவலகக் காரியங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டதன் காரணமாக, அமெரிக்க பெத்தேல் அங்கத்தினர் பலர் ஊழியத்தின் வேறு அம்சங்களில் சேவை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அவர்களில் சிலர் மற்ற நாடுகளிலுள்ள கிளை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டார்கள், அவர்களில் நூற்றுக்கணக்கானோர் விசேஷ பயனியர்களாகவோ ஒழுங்கான பயனியர்களாகவோ நாடு முழுவதும் நியமிக்கப்பட்டார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்டபோது அவர்கள் எப்படி உணர்ந்தார்கள்? புதிய நியமிப்பில் அவர்கள் எதிர்ப்பட்ட சவால்களை எப்படிச் சமாளித்திருக்கிறார்கள்? இதனால் சபைகள் எவ்வாறு நன்மை அடைந்திருக்கின்றன?
டாட், லெஸ்லீ தம்பதியர் இவ்வாறு சொல்கிறார்கள்: “‘அறுவடையின் எஜமானர் தமது அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி’ பல வருடங்களாக வேண்டிக்கொண்டிருந்தோம். இந்த வேண்டுதலுக்கு யெகோவா எங்கள் மூலமாகவே பதிலளிப்பார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை! எல்லாக் காரியங்களையும் யெகோவாதான் வழிநடத்துகிறார் என்பதை இப்போது எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது; அதோடு, கிறிஸ்து எங்களை ‘உண்மையுள்ளவர்களாகக் கருதி, இந்த ஊழியத்தைச் செய்வதற்கு எங்களை நியமித்திருப்பதை’ பாக்கியமாகக் கருதுகிறோம்.”—மத். 9:37, 38, NW; 1 தீ. 1:12, NW.
புதிய நியமிப்பை ஏற்றுக்கொண்ட சில மாதங்களில் தானும் தன் மனைவியும் பெற்ற அனுபவத்தைப் பற்றி ஃபிராங்கோ என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “ஐக்கிய மாகாணத்திலே ஊழியத்தில் இந்தளவுக்குத் தேவை இருக்குமென்று நானும் என் மனைவியும் கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கவில்லை. எக்கச்சக்கமான பைபிள் படிப்புகள் கிடைத்துக்கொண்டே இருந்தன.” இவர்களைப் போன்ற அநேக பயனியர்களின் உணர்வுகளையே கர்ட்டஸ், கரெலன் தம்பதியர் தெரிவிக்கிறார்கள்: “வெளி ஊழிய நியமிப்பைப் பெற்றது எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம்! நாங்கள் எங்களுக்காக வாழாமல் யெகோவாவுக்காக வாழ்வதற்கு எங்களை அர்ப்பணித்தபோது அதை உள்ளப்பூர்வமாகவே செய்தோம் என்பதைச் செயலில் காட்ட இது எங்களுக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு.”
‘அறுவடையின் எஜமானரை’ நம்புதல்
பெத்தேலில் வருடக்கணக்காகச் சேவை செய்தபின் பயனியராக நியமிப்பைப் பெற்ற சகோதர சகோதரிகளுக்கு ஓரளவு கவலை இருக்கத்தான் செய்தது. “வீடு கிடைக்குமா, அப்படிக் கிடைத்தாலும் கட்டுப்படி ஆகுமா? சாதாரண ஒரு பிரஸ்தாபியாக இருந்துவிட்டு, இப்போது மாதத்திற்கு எப்படி 120, 130 மணிநேரம் ஊழியத்தில் செலவிட முடியும்? அதே சமயம் எப்படிச் சபையாரை ஊக்கப்படுத்த முடியும்?” என்றெல்லாம் ஒரு தம்பதியர் யோசித்தார்கள். அவர்களும் இன்னும் மற்றவர்களும் இந்தப் புதிய சூழ்நிலையை எப்படிச் சமாளித்தார்கள்?
புதிய நியமிப்பைத் தொடங்குவதற்கு முந்தின நாள்வரை வீடு தேடித்தேடி அலைந்து கடைசி நாளில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டில் வீடு கிடைத்தது. உதாரணமாக, ஜெஸிக்கா என்ற மணமாகாத சகோதரி தனக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியத்தைப் போய்ப் பார்த்தார்; அங்கே வீடு தேடி இரண்டு வாரங்களாக அலைந்தும் அவருக்கு வீடு கிடைக்கவில்லை. ஆனால், அவருடைய சாமான்களை எடுத்துவருவதற்காக பெத்தேலுக்குத் திரும்ப வேண்டிய நாளுக்கு முந்தின நாள் அவருக்கு வீடு கிடைத்தது! அந்தப் பிராந்தியத்திலிருந்த சபையின் மூப்பர் ஒருவர் ஒரு சிறிய வீட்டைக் குறைந்த வாடகைக்குக் கொடுப்பதாகச் சொன்னார்; ஜெஸிக்காவுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது.
ஜெஃப், சிந்தியா தம்பதியர் அப்பார்ட்மென்ட் லீஸிங் மானேஜர் ஒருவரிடம் தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதாகச் சொன்னார்கள். அப்போது அவர், “எனக்கு யெகோவாவின் சாட்சிகளைத் தெரியும், உங்களைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. உங்கள் வாடகைக்கு யெகோவாதானே உத்தரவாதி!” என்றார்.
எரிக், மெலனி தம்பதியர் இவ்வாறு சொன்னார்கள்: “யெகோவாவையே சார்ந்திருக்க வேண்டும் என்பதை எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் நினைப்பூட்டுகின்றன. ஒவ்வொரு நாளும் யெகோவா எங்களுக்காகச் செய்துவரும் காரியங்களை எங்களால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இது உண்மையிலேயே எங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கிறது.”
பக்கபலமாக உள்ள சபைகள்
இந்த பயனியர்கள் எங்கெல்லாம் நியமிக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் இருந்த சபைகள் இவர்கள்மீது அன்பு காட்டின; அதனால், தங்களுடைய புதிய நியமிப்பில் எதிர்ப்பட்ட சவால்களை இவர்களால் சமாளிக்க முடிந்தது. ‘இந்த பயனியர்களைப் பற்றிப் பேசும்போது, “எங்களுடைய விசேஷ பயனியர்கள்” என்று அநேக சபைகளிலுள்ள சகோதர சகோதரிகள் வாய்நிறையச் சொல்கிறார்கள்; வட்டாரத்திலுள்ள எல்லாச் சபைகளும் இருகரம் நீட்டி அவர்களை வரவேற்று அவர்களுக்கு உதவி செய்தன’ என்று வட்டாரக் கண்காணி ஒருவர் தெரிவிக்கிறார். உள்ளூர் சபையைச் சேர்ந்த ஒரு சகோதரர், “கிளை அலுவலகத்திற்கு நான் நன்றி சொல்கிறேன். எங்கள் எல்லாருக்கும் இந்த பயனியர்கள் எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறார்கள்!” என்று போற்றுதல் தெரிவித்து எழுதினார்.
கான்ஸாஸ் நகரத்திலுள்ள ஒரு சபைக்குரிய 100 பிராந்தியங்களில் பல மாதங்களாக ஊழியம் செய்யப்படவில்லை. இப்போதோ, ஒரு விசேஷ பயனியர் தம்பதியர் அந்தச் சபைக்கு நியமிக்கப்பட்டிருப்பதால் அவற்றில் பெரும்பாலான பிராந்தியங்களில் தவறாமல் ஊழியம் செய்யப்பட்டு வருகிறது. “பயனியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இந்தளவு பிரயோஜனமாக இருக்குமென்று நாங்கள் நினைத்துப் பார்க்கவே இல்லை” என்று அந்தச் சபை மூப்பர்கள் எழுதினார்கள்.
சபைகள் இந்த பயனியர்களுக்கு “பக்கபலமாக” இருந்திருக்கின்றன என்பது உண்மைதான், அதே சமயத்தில், சபைகளிலுள்ள பிரஸ்தாபிகளும் அவர்களால் பிரயோஜனம் அடைந்திருக்கிறார்கள். (கொலோ. 4:11, NW) “பயனியர்களின் பக்திவைராக்கியமும் ஆர்வத்துடிப்பும் நம் சகோதர சகோதரிகளைப் பெருமளவு ஊக்கப்படுத்தி உந்துவித்திருக்கிறது” என்று வட்டாரக் கண்காணி ஒருவர் தெரிவிக்கிறார். “பொதுவாக, விசேஷ பயனியர்களிடம் பளிச்செனத் தெரிகிற குணங்கள் அன்பும் சந்தோஷமும்; இந்தக் குணங்களைக் காட்டுவதற்குச் சபையிலுள்ள மற்றவர்களும் தூண்டப்பட்டிருக்கிறார்கள்” என்று மற்றொரு வட்டாரக் கண்காணி எழுதினார்.
ஒரு சபையில் செயலற்ற பிரஸ்தாபிகளாக இருந்த பத்துப் பேர் மீண்டும் செயல்பட ஒரு தம்பதியர் உதவி செய்திருக்கிறார்கள். மூப்பர்களாகச் சேவை செய்யும் சகோதரர்கள் சபையிலுள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறார்கள். “நன்கு பயிற்சிபெற்ற சமநிலையான ஒரு சகோதரர் இப்போது சபையில் இருப்பதால் எங்களுக்குக் கவலையே இல்லை. சபைக்கும் மூப்பர் குழுவுக்கும் இப்படிப்பட்ட ஓர் ஆள்தான் தேவையாக இருந்தது” என்று மூப்பர் ஒருவர் எழுதினார்.
‘கடவுளுடைய சக வேலையாட்கள்’
ராஜ்ய அறிவிப்பாளர்களுக்கு அநேக நல்ல அனுபவங்களைத் தந்து யெகோவா அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார். உதாரணத்திற்கு, கடுங்குளிராய் இருந்த ஒரு நாளில், ஸ்டீவ், கே தம்பதியர் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார்கள். முதல் வீட்டில், மனச்சோர்வுடன் இருந்த ஒரு வயதானவருக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தார்கள். இரண்டே வாரங்களுக்குள் ராஜ்ய மன்றத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அவர் வந்தார்; அப்போது, தங்களை வீட்டிற்குள் அழைத்த அவருடைய பெருந்தன்மையைப் பாராட்டி அந்தத் தம்பதியர் அவரிடம் பேசினார்கள். அப்போது அவர், “என் நல்ல குணத்தின் காரணமாக நான் உங்களை வீட்டிற்குள் அழைக்கவில்லை, நீங்கள் வருவீர்கள் என்பது எனக்கு முன்பே தெரியும்; ஏனென்றால், உதவிகேட்டு கடவுளிடம் மூன்று நாட்களாக நான் ஜெபம் செய்துகொண்டிருந்தேன்” என்று சொன்னார். இப்போது அவர் தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்கிறார், சீக்கிரத்தில் ஞானஸ்நானம் எடுக்கப் போகிறார்.
ரே, ஜில் தம்பதியர் ஒருநாள் காலை வண்டி ஓட்டிச்சென்றபோது, சாலையின் மறுபக்கம் ஒருவர் நடந்துசெல்வதைப் பார்த்தார்கள், அவரிடம் பேசத் தீர்மானித்தார்கள். அவரிடம் பிரசுரத்தைக் காட்டி பைபிள் படிப்பைப் பற்றிச் சொன்னார்கள். அவர் பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்டார்; யெகோவாவின் சாட்சிகளோடு முன்பு பைபிளைப் படித்து வந்ததாகச் சொன்னார். அவர் அந்தப் பகுதிக்குப் புதிதாகக் குடிமாறி வந்திருந்ததைத் தெரிவித்தார்; பைபிள் படிப்பை மீண்டும் தொடருவதற்குச் சந்தோஷத்துடன் சம்மதம் தெரிவித்தார்.
‘தங்கள் கிரியையையும், தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்ல’ என்று யெகோவாவின் சேவையில் தொடர்ந்து தியாகங்கள் செய்கிறவர்கள் அறிந்திருக்கிறார்கள். (எபி. 6:10) உடலிலுள்ள பல்வேறு உறுப்புகள் உடலுக்குத் தேவையான காரியங்களைச் செய்வது போலவே, சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் சபையின் ஆன்மீக வளர்ச்சிக்கும் அழகுக்கும் தேவையான காரியங்களைச் செய்ய முடியும். ‘தேவன் தமது சித்தத்தின்படி, உறுப்புகள் ஒவ்வொன்றையும் [சபையிலே] வைத்தார்.’ அந்த ஒவ்வொரு உறுப்பும் சேர்ந்து எடுக்கும் கூட்டு முயற்சியின் காரணமாக ‘மற்ற எல்லா உறுப்புகளும் சந்தோஷப்படும்.’ (1 கொ. 12:18, 26; NW) ‘கடவுளுடைய சக வேலையாட்கள்’மத்தியில் நிலவும் ஒற்றுமை, சபையை ‘வளரச் செய்திருக்கிற’ கடவுளுக்கு மகிமை சேர்க்கிறது.—1 கொ. 3:6, 9, NW.
நற்செய்தியைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுதல்
இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களிடம், “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்” என்று சொன்னார். (மத். 10:22) உண்மையான சீடர்கள் ‘தம்மை விசுவாசிப்பதன் காரணமாக’ எதிராளிகள் அவர்களைப் பற்றி ‘இல்லாததையும் பொல்லாததையும் சொல்வார்கள்’ என்று முன்னறிவித்தார். (மத். 5:11, NW) அப்படியானால், கிறிஸ்துவின் நவீனகால சீடர்கள் ‘நற்செய்தியைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவதற்கு’ என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்?—பிலி. 1:7, NW.
ஆர்மீனியா
ஏப்ரல் 2007-க்கும் ஏப்ரல் 2008-க்கும் இடைப்பட்ட காலத்தில், ஏழு டன்னுக்கும் அதிகமாயிருந்த பைபிள் மற்றும் பைபிள் பிரசுரங்களை எடுத்துச்செல்ல ஆர்மீனியச் சுங்க அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. அப்படி எடுத்துச் செல்வதற்குச் சகோதரர்கள் எக்கச்சக்கமான வரி கட்ட வேண்டியிருந்தது. கடைசியாக ஏப்ரல் 2008-ல், ஆட்சேபணையுடன் வரி கட்டிய பின்பு, ஒரு லோடு பிரசுரங்களை எடுத்துச்செல்ல சகோதரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது, மற்ற லோடுகளெல்லாம் பிடித்து வைக்கப்பட்டன. இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்ட சகோதரர்கள் சட்டப்பூர்வமாக முயற்சியெடுத்து வருகிறார்கள்.
கஸக்ஸ்தான்
கஸக்ஸ்தானிலுள்ள சகோதரர்களுக்கு ஆன்மீகப் புத்துணர்ச்சி அளிப்பதற்காக உலகத் தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருந்த இரண்டு சகோதரர்கள் ஆல்மாட்டியில் நடைபெற்ற ஒரு விசேஷக் கூட்டத்திற்குப் பின்பு கைது செய்யப்பட்டார்கள். காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்கள், பின்பு நிர்வாக நீதிமன்ற நீதிபதிக்குமுன் நிறுத்தப்பட்டார்கள்; “மிஷனரி ஊழியம்” செய்ததற்காக அவர்களுக்கு அவர் தண்டனைத்தீர்ப்பு வழங்கினார். பிற்பாடு அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், அவர்கள்மீது விதிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டை நீக்குவதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சகோதரர்களின் வீடுகளில் நடைபெற்றுவந்த கூட்டங்களைக் கலைக்கும் விதத்தில் அதிகாரிகள் அண்மையில் திடீர் திடீரென்று சோதனை நடத்தியிருக்கிறார்கள்; சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட மூன்று சபைகளின் நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றன; காஸ்பியன் கடலுக்கு வடபகுதியில் நடைபெற்றுவந்த தேவராஜ்ய நடவடிக்கைகளில் சட்ட அமலாக்க நிறுவனங்கள் திரும்பத்திரும்பக் குறுக்கிட்டிருக்கின்றன.
தஜிகிஸ்தான்
இங்கு யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பு 1994-ல் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டது; இதனால், வணக்கத்திற்காக அவர்கள் ஒன்றுகூடி வர முடிகிறது. என்றாலும், அக்டோபர் 11, 2007-ல், அவர்களுக்குத் தடை விதித்துக் கலாச்சார அமைச்சகம் ஒரு தீர்மானத்தை வெளியிட்டது. ஆனால், தாங்கள் சமாதானப் பிரியர்கள் என்றும், சமுதாய ஒழுங்கிற்குப் பங்கம் விளைவிக்காதவர்கள் என்றும் அதிகாரிகளுக்கு நிரூபிப்பதற்காகச் சகோதரர்கள் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.
உஸ்பெகிஸ்தான்
உஸ்பெகிஸ்தானிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய நிலைமை மோசமாகிக்கொண்டே வருகிறது. 2008-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் ஒரு சகோதரர், தன் விசுவாசத்தின் காரணமாக நான்கு வருட தண்டனை விதிக்கப்பட்டுக் கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். மத நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களையும், மத நம்பிக்கைகளைப் போதிப்பது குறித்த விதிமுறைகளையும் மீறிய குற்றத்திற்காக மற்றவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள், குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள், அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கூட்டங்களின்போது அதிகாரிகள் திடீரென நுழைந்திருக்கிறார்கள், சகோதரர்களுடைய வீடுகள் சோதனையிடப்பட்டிருக்கின்றன, பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன, பிரஸ்தாபிகள் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். நம் சகோதர சகோதரிகளில் பலரை போலீஸ் அதிகாரிகள் வாய்க்கு வந்தபடி திட்டியிருக்கிறார்கள், கண்மண் தெரியாமல் அடித்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட அட்டூழியங்களுக்கு சர்ச் குருமார்களே காரணம் என இந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தங்களுடைய செயல்கள் அநியாயமானவை என்பதை அந்த அதிகாரிகள் சீக்கிரம் அறிந்துகொள்ள வேண்டுமென்றும், அங்குள்ள சகோதர சகோதரிகள் “எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு” அந்த அதிகாரிகள் அனுமதிக்க வேண்டுமென்றும் நாம் தொடர்ந்து ஜெபிக்கிறோம்.—1 தீ. 2:1, 2.
கிரீஸ்
கிரீஸில், மத நம்பிக்கையை முன்னிட்டு ராணுவத்தில் சேர மறுக்கும் தனி நபர் உரிமை சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டில் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. கான்ஸ்டான்டீனாஸ் காட்டீடிஸ் என்பவர் ரஷ்யாவிலிருந்தபோது ராணுவத்தில் சேவை செய்திருந்தார்; சில வருடங்கள் கழித்து கிரீஸுக்கு வந்த பின்பு யெகோவாவின் சாட்சியாய் ஆகியிருந்தார். ராணுவ அதிகாரிகள் அவரை ராணுவச் சேவைக்கு மீண்டும் அழைத்தார்கள், ராணுவம் சாராத சேவை செய்ய அவரை அனுமதிக்கவில்லை. அவர் ஏற்கெனவே ராணுவத்தில் சேவை செய்திருந்ததால், இப்போது ராணுவச் சேவையை மறுக்க முடியாதென அவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால், ராணுவச் சேவை செய்திருந்த ஒருவர் மத நம்பிக்கை காரணமாகப் பிற்பாடு ராணுவத்தில் சேர மறுக்கலாம் என்றும், ராணுவம் சாராத சேவை செய்ய அனுமதிக்கப்படலாம் என்றும் அரசுப் பேரவை தீர்மானித்தது.
மற்றொரு வழக்கில், ஸ்டிலியானாஸ் யானீதிஸ் என்பவர் ராணுவத்தில் சேர மறுத்ததால் சிறையில் போடப்பட்டிருந்ததாலும், தன் ராணுவக் கடமைகளை அவர் நிறைவேற்றாததாலும் அரசு நிறுவனம் ஒன்று அவருக்கு வேலை தர மறுத்துவிட்டது. ஆனால், ஒருவர் ஏற்கெனவே சிறைத் தண்டனையை அனுபவித்துவிடுகிறார் என்றால் அதன்பின் அவர் ராணுவச் சேவை செய்ய அவசியமில்லை என்று அரசுப் பேரவை தீர்மானித்தது. நீதிமன்றமும் அவ்வாறே தீர்ப்பளித்தது; அதாவது அவர் ராணுவத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுகிறார் என்றும், அதனால் அரசு நிறுவனத்தில் வேலை செய்ய அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அது தீர்ப்பளித்தது. மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியிருந்த தீர்ப்பைப் போலவே அரசுப் பேரவை தீர்ப்பு கூறியது இதுவே முதல் முறையாகும்; யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் ராணுவத்தில் சேர மறுத்ததன் காரணமாக அவருக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டதே ஐரோப்பிய நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்காகும்.
எரிட்ரியா
எரிட்ரியாவிலுள்ள நம் சகோதர சகோதரிகள் கொடுமைக்கும் அநீதிக்கும் ஆளாவது தொடர்கதையாகிவிட்டது. யெகோவாவின் சாட்சிகளில் ஏராளமானோரை அதிகாரிகள் சிறையில் அடைத்திருக்கிறார்கள், அதுவும் அந்தச் சிறைகள் சிலவற்றில் படு மோசமான சூழல் இருக்கிறது. இந்நாட்டில் ஊழியத்தை முன்னின்று நடத்துகிற பொறுப்பான சில மூப்பர்கள் உட்பட இன்னும் ஆறு சகோதரர்களை ஜூலை 2008-ல் கைதுசெய்தார்கள். இது சம்பந்தமாகச் சகோதரர்கள் என்னென்னவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள், கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி உலகெங்கிலுமிருந்து மனுக்கள் வந்து குவிகின்றன; அப்படியிருந்தும் உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் வணக்கத்தை அரசு பிடிவாதமாக எதிர்த்து வருகிறது.
தென் கொரியா
ராணுவத்தில் சேர மறுக்கும் அடிப்படை உரிமையை அளிக்கத் தென் கொரிய அரசாங்கம் மறுத்திருக்கிறது; இந்தச் சூழ்நிலையில் தற்போது முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக, நம் சகோதரர்களில் 13,000-க்கும் அதிகமானோர் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார்கள்; சுமார் 500 பேர் தற்போது சிறையில் இருக்கிறார்கள். அவர்களுடைய திடத் தீர்மானமும் நன்னடத்தையும், சிறை அதிகாரிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அருமையான சாட்சியாக அமைந்திருக்கின்றன; அதோடு, நம் கடவுளாகிய யெகோவாவைப் பிரியப்படுத்தியிருக்கின்றன. (1 பே. 2:20) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் குழுவிடம் இந்நாள் வரையாக 488 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன; இவற்றில் இரண்டு மனுக்களுக்கு 2006-ஆம் ஆண்டின்போது சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில், ராணுவம் சாராத சேவைக்கு அனுமதியளிப்பது சம்பந்தமாக ஒரு சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்துமென்று நம் சகோதரர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
ருவாண்டா
யெகோவாவின் சாட்சிகள் பலர் உட்பட ருவாண்டாவிலுள்ள அனைத்து ஆசிரியர்களும், ஏப்ரல் 2008-ல் நடைபெறவிருந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ளும்படி எதிர்பார்க்கப்பட்டார்கள். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்கு எதிரான காரியங்களில் ஈடுபடாதிருக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய 215 யெகோவாவின் சாட்சிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள மறுத்ததால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்; அவர்களில் இரண்டு சகோதரிகள் பல வாரங்களுக்குச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அந்தக் கருத்தரங்கில் அரசியல் விஷயங்களும் ராணுவ விஷயங்களும் பேசப்பட்டன; அதில் கலந்துகொண்டவர்கள் அரசியல் நடவடிக்கைகளிலும் தேசியக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ளச் சொல்லிக் கட்டளையிடப்பட்டார்கள். அந்தக் கருத்தரங்கிலிருந்து வெளியேற முயன்றவர்கள் ராணுவத்தாரால் தடுக்கப்பட்டார்கள். அதுமுதல், யெகோவாவின் சாட்சிகளுடைய 90 பிள்ளைகள் தேசிய கீதம் பாட மறுத்ததாலும், கொடி வணக்கம் செய்ய மறுத்ததாலும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அண்மையில் ஆரம்பித்துள்ள இந்தத் துன்புறுத்தல் மத்தியிலும் தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்கு நம் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளை யெகோவா தாமே பலப்படுத்துவாரென்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.
ஸ்பெயின்
பெத்தேல் அங்கத்தினர்கள், பயணக் கண்காணிகள் போன்ற விசேஷ முழுநேர ஊழியர்கள் சம்பந்தமாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு ஸ்பெயின் அரசாங்கம் அங்கீகாரம் அளித்தது. விசேஷ முழுநேர சேவையில் இருப்பவர்கள், “கடவுளால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள்; . . . அவர்கள் மிஷனரி சேவைக்காகவோ கிறிஸ்தவ ஊழியர்கள் சம்பந்தப்பட்ட சேவைக்காகவோ, அல்லது மத சம்பந்தப்பட்ட கல்விக்காகவோ, அவர்களுடைய மதத்தின் லட்சியங்களை அடைய உதவும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காகவோ விசேஷமாகத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள்” என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சில நாடுகளில், பிற மதத் தொகுதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு யெகோவாவின் சாட்சிகளின் விசேஷ முழுநேர ஊழியர்கள் உண்மையிலேயே தகுதியானவர்கள்தானா என்ற சர்ச்சை எழுந்த சமயம் பார்த்து அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம்
பிரான்சு நாட்டு ஸ்ட்ராஸ்பர்க் நகரிலுள்ள மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் (ECHR) ஆர்மீனியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், பிரான்சு, ஜார்ஜியா, ரஷ்யா, துருக்கி, உக்ரைன் ஆகிய நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் சமர்ப்பித்த 24 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்துமே மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒப்பந்தத்திற்கு உட்பட்ட நாடுகளில் வசிப்போரின் அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்டவை; ராணுவத்தில் சேர மறுப்பதற்கான தனிநபர் உரிமையும் இதில் அடங்கும். மற்றவை, மதத் துன்புறுத்தல் அல்லது மதப் பாகுபாடு பற்றியதும், யெகோவாவின் சாட்சிகளது சட்டப்பூர்வ அமைப்புக்குத் தடைவிதிப்பது அல்லது சட்டப்பூர்வ பதிவை ரத்துசெய்வது பற்றியதும், வழிபாட்டுக்கென்று அமைதியாகக் கூடிவரும் உரிமையில் அரசு குறுக்கிடுவது பற்றியதும், பிள்ளையை ஒரு யெகோவாவின் சாட்சியாக வளர்க்க தாய்க்கு இருக்கிற உரிமை பற்றியதும் ஆகும்.
ஆஸ்திரியா
ஜூலை 31, 2008-ல், ஆஸ்திரியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர்களுக்குச் சாதகமாக ECHR தீர்ப்பு வழங்கியது. ஆஸ்திரியாவின் மத சம்பந்தமான சட்டம் இரட்டை வகுப்பு முறையைப் பின்பற்றுவதால் இரண்டாந்தர மதங்களை உருவாக்கி அதன் மூலம் இரண்டாந்தர குடிமக்களைத் தோன்றச்செய்கிறதென்றும், இதனால் அது யெகோவாவின் சாட்சிகளுடைய வழிபாட்டு உரிமையைக் குலைக்கிறதென்றும் அந்த நீதிமன்றம் அறிவித்தது. ஆஸ்திரியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பு, அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்பு என்ற அந்தஸ்தைப் பெறுவதற்காகச் சகோதரர்கள் 30 ஆண்டுகள் போராடிய பின்னரே அது இவ்வாறு அறிவித்தது: “சர்வதேச அளவில் வெகு காலமாக இயங்கி வருகிற மத அமைப்புகளை, அதுவும் ஆஸ்திரியாவில் வெகு காலத்திற்கு முன்பே நிறுவப்பட்டிருக்கிற மத அமைப்புகளை, அரசு அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிற மத அமைப்புகளை இவ்வளவு காலம் காத்திருக்க வைத்தது கொஞ்சமும் நியாயமல்ல; ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது.” எனவே, ஆஸ்திரிய அரசாங்கம் அதன் தற்போதைய சட்டத்தைத் திருத்தியமைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது; அதன்பின், ஆஸ்திரியாவிலுள்ள முக்கிய மதத்தினருக்கு இருக்கிற அதே உரிமைகளை நம்முடைய சகோதரர்களும் அனுபவிக்க முடியும்.
அஜர்பைஜான்
நம்முடைய வழிபாட்டு உரிமையை போலீஸார் குலைத்துப் போட்டதாக மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் நவம்பர் 2007-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அஜர்பைஜானில் யெகோவாவின் சாட்சிகளுடைய மதம் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிற போதிலும், சகோதரர்கள் கைது செய்யப்படுவதும் கொடூரமாக நடத்தப்படுவதும் அதிர்ச்சியூட்டுகிற அளவுக்கு நடைபெற்று வருகிறது. அவர்களுடைய அமைதியான சபைக் கூட்டங்களின்போது ஆயுதம் ஏந்திய போலீஸார் படைபடையாக உள்ளே நுழைந்து திடீர் சோதனை நடத்தியிருக்கிறார்கள், பிரசுரங்களையும் சகோதரர்களுடைய உடமைகளையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள், கூட்டத்திற்கு வந்தவர்களைக் காவல் வைத்திருக்கிறார்கள், சகோதர சகோதரிகளைக் கண்டபடி திட்டியிருக்கிறார்கள், அவர்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். போலீஸாரின் இத்தகைய திடீர் தாக்குதல் தொடர்கதையாகி விட்டிருப்பதால், சூழ்நிலையின் அவசரத்தன்மையை அந்த நீதிமன்றம் புரிந்துகொண்டு வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. வெகு விரைவில், போலீஸாரின் தொந்தரவின்றி சகோதரர்களால் நிம்மதியாகச் சபை கூடிவர முடியுமென்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.
பிரான்சு
யெகோவாவின் சாட்சிகளுடைய சங்கத்தின் மீது பிரெஞ்சு அரசாங்கம் சட்டவிரோதமாக அநியாய வரி விதித்ததன் சம்பந்தமாக பிப்ரவரி 2005-ஆம் ஆண்டு ECHR-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் விரைவில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமெனக் காத்துக்கொண்டிருக்கிறோம். இதற்கிடையில், விரோதிகள் நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றிப் படுமோசமான தகவல்களைப் பரப்பியிருப்பதால் ராஜ்ய மன்றங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன; இதுபோல் சுமார் 70 சம்பவங்கள் கடந்த ஆண்டின்போது நடந்திருக்கின்றன. ஆனாலும், பிரெஞ்சு அரசாங்கம் பாரபட்சமாக நடந்திருக்கிறதென நீதிமன்றம் சீக்கிரத்தில் தீர்ப்பு வழங்குமென்றும், யெகோவாவின் சாட்சிகளுக்கு அதன் மூலம் நிம்மதி கிடைக்குமென்றும் பிரான்சிலுள்ள சகோதரர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
ரஷ்யா
ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்புக்கு எதிராகத் திரும்பத்திரும்பக் குற்ற வழக்குகளும் பொது வழக்குகளும் போடப்படுகின்றன என்று புகார் செய்து, அங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் ECHR-ல் டிசம்பர் 2001-ஆம் ஆண்டு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்கள். மாஸ்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையைத் தடை செய்யுமாறும் அவர்களுடைய சட்டப்பூர்வ அமைப்பைக் கலைக்குமாறும் கீழ் கோர்ட்டு தீர்ப்பளித்தபடியே மாஸ்கோ மாநகர நீதிமன்றமும் ஜூன் 2004-ல் தீர்ப்பளித்தது. ஆனால், மாஸ்கோவிலுள்ள நம் சகோதரர்களால் பெரும்பாலும் வணக்கத்திற்காகக் கூடி வர முடிகிறது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வர முடிகிறது. என்றாலும், ரஷ்யாவில் மாஸ்கோ மற்றும் பிற இடங்களில் சபைக் கூட்டங்களின்போதும், மாநாடுகளின்போதும் அரசதிகாரிகள் திடீர் திடீரெனக் குறுக்கிட்டிருக்கிறார்கள், நம் சகோதர சகோதரிகளை விரோதிகள் மோசமாக நடத்தியிருக்கிறார்கள்; இதுபோல் ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜூலை மாதத்தில் மாஸ்கோவுக்குத் தெற்கே சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சீக்காஃப் என்ற ஊரில் ஒரு ராஜ்ய மன்றம் தீக்கொளுத்தப்பட்டது. தீயணைப்புப் படையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டபோதிலும், தீயணைப்பு வீரர்கள் எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் எனச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தார்கள்; போலீஸார் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தனை கஷ்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில்கூட ரஷ்யாவிலுள்ள சகோதர சகோதரிகள் உண்மையுடன் இருக்கிறார்கள், யெகோவா தங்களை ஆதரிப்பாரென நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
தம்முடைய ஊழியர்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகுமென்று யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (ஏசா. 54:17) மிகமிக இக்கட்டான சூழ்நிலைகூட “நற்செய்தி பரவுவதற்கு” உதவி செய்யலாம். ஆகவே, ‘நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்திற்காக ஒரே உள்ளத்துடன் தோளோடு தோள் சேர்ந்து பாடுபடுவதற்கும், எதிரிகளைக் கண்டு துளியும் பயப்படாமல் இருப்பதற்கும்’ கடவுளுடைய ஊழியர்கள் தீர்மானமாய் இருக்கிறார்கள். (பிலி. 1:12, 16, 18, 27, 28, NW) தங்களது ‘கோட்டையும் இரட்சகருமாகிய’ யெகோவாவை நம்பியிருக்கிற உலகளாவிய சகோதர சகோதரிகளுக்காகத் தயவுசெய்து “ஜெபம் செய்யுங்கள்.”—சங். 18:2; 2 தெ. 3:1, NW.
கிளை அலுவலக அர்ப்பணிப்பு விழாக்கள்
தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட அச்சகம், உணவறை, குடியிருப்புக் கட்டிடம் ஆகியவற்றின் அர்ப்பணிப்பு விழா நவம்பர் 10, 2007 சனிக்கிழமை அன்று அமர்க்களமாக நடைபெற்றது; அதற்குச் சுமார் 4,000 சகோதர சகோதரிகள் வந்திருந்தார்கள்.
விரிவாக்கப்பட்ட அச்சகத்தில் ‘மேன் ரோலன்ட் லித்தோமன்’ பிரின்டிங் பிரஸ், பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் லட்சக்கணக்கில் அச்சடித்துத் தள்ளுவதைப் பார்த்தவர்கள் வாயடைத்து நின்றார்கள். புக் பைண்டிங் செய்யும் புதிய இயந்திரம் பத்து லட்சத்திற்கும் அதிகமாக புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை 16 ஆப்பிரிக்க மொழிகளில் ஏற்கெனவே தயாரித்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியிலுள்ள பத்து நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 8,000 சபைகளுக்குத் தேவையான பைபிள் பிரசுரங்கள், விரிவாக்கப்பட்ட ஷிப்பிங் இலாகாவில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.
லாகோஸ் நகரில், விரிவாக்கம் செய்யப்பட்ட நைஜீரிய கிளை அலுவலக வளாகம் ஜூன் 7, 2008-ல் அர்ப்பணம் செய்யப்பட்டது; இந்நகரம் இகாடூமாவிலுள்ள பெத்தேல் வளாகத்திற்குத் தென்மேற்கே 360 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லாகோஸிலுள்ள வளாகத்தில் 24 அறைகளையுடைய குடியிருப்புக் கட்டிடம் ஒன்றும், கிடங்கு ஒன்றும், அலுவலகக் கட்டிடம் ஒன்றும் உள்ளன. கிளை அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இந்நாட்டின் முக்கிய நகரமான லாகோஸில்தான் கையாளப்படுகின்றன. துறைமுகத்திலிருந்து சரக்குகளை எடுத்து வரும் பெத்தேல் அங்கத்தினர்களும், கிளை அலுவலகத்திற்காகப் பொருள்களை வாங்க வரும் பெத்தேல் அங்கத்தினர்களும், விமான நிலையத்திற்கு வந்துசேருகிறவர்களும் அங்கிருந்து புறப்படுகிறவர்களும் இந்தப் புதிய வளாகத்தில் தங்குவதற்கு இடவசதி இருக்கிறது. அதோடு, இகாடூமாவில் கிளை அலுவலக விரிவாக்கப் பணி முடிவடையும்வரை ஊழியப் பயிற்சிப் பள்ளியும் தற்போது லாகோஸில்தான் நடைபெறுகிறது. யெகோவா உலகெங்கிலும் நடைபெறுகிற பிரசங்க வேலையை ஆசீர்வதிப்பது போலவே ஆப்பிரிக்காவில் நடைபெறுகிற பிரசங்க வேலையையும் ஆசீர்வதிப்பது கண்கூடு.
கடவுளுடைய சித்தத்தைச் செய்யத் தயாராய் இருத்தல்
யெகோவா தேவன் ‘இயேசு கிறிஸ்துவைக்கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை நம்மில் நடப்பித்து, நம்மைச் சகலவித நற்கிரியையிலும்’ தயார்படுத்தியிருப்பதற்காக அவருக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! (எபி. 13:21) ‘நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராக’ யெகோவா தம்மை நிரூபித்திருப்பதால், ‘சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் அவருக்கு மகிமை உண்டாவதாக’ என நாம் முழு இருதயத்தோடு சொல்கிறோம்.—எபே. 3:20, 21.
[பக்கம் 25-ன் பெட்டி]
ஒரு மதத்தைச் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்தல்—ஏன், எப்படி?
ஒரு மதத்தைச் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யும் முறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆர்மீனியா, அஜர்பைஜான் போன்ற நாடுகளில் ஒரு மத அமைப்பு சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்படுவதற்கும் அங்கீகாரம் பெறுவதற்கும் விண்ணப்பம் செய்வதற்கென்றே சில சட்டங்கள் இருக்கின்றன. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த மத அமைப்பு அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக அங்கீகரிக்கப்படும். மற்ற நாடுகளில், மதங்கள் இரண்டு பிரிவுகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. முதல் பிரிவு, பிரபலமான முக்கிய மதங்களுக்கென்று ஒதுக்கப்படுகிறது. இந்தப் பிரிவைச் சேர்ந்த மதங்களுக்கு, வரிவிலக்குகள் உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இரண்டாவது பிரிவு, பொதுவாகச் சிறிய, புதிய, நவீன மதப் பிரிவுகளுக்கென்று ஒதுக்கப்படுகிறது.
ஜார்ஜியா, அமெரிக்க ஐக்கிய மாகாணம் போன்ற நாடுகளில் மதங்களைப் பதிவு செய்வதற்கான எந்தச் சட்டங்களும் இயற்றப்படவில்லை. அத்தகைய நாடுகளில், அந்நாட்டு அரசியலமைப்பு எல்லாருக்கும் மத சுதந்தரத்தை அளிக்கிறது. அங்கே, தனித்தனி மதத் தொகுதிகளை முறைப்படி பதிவு செய்யும் வழக்கம் இல்லாவிட்டாலும், ஒரு மதத் தொகுதியினர் சட்டப்பூர்வ நிறுவனமாகப் பதிவுசெய்யப்படுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்தத் தொகுதியினர் சட்டப்பூர்வ நிறுவனத்தின் பெயரில் செயல்படலாம்; அதாவது பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடலாம், சொத்துகளைச் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம்.
[பக்கம் 21-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆஸ்திரியா
பிரான்சு
ஸ்பெயின்
கிரீஸ்
எரிட்ரியா
ருவாண்டா
ஆர்மீனியா
அஜர்பைஜான்
ரஷ்யா
கஸக்ஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
தஜிகிஸ்தான்
தென் கொரியா
[பக்கம் 11-ன் படம்]
சியாயாவில் லூவோ மொழிச் சபை
[பக்கம் 13-ன் படம்]
“புதிய உலக மொழிபெயர்ப்பு” பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது
[பக்கம் 22-ன் படம்]
ஸ்டிலியானாஸ் யானீதிஸ்
[பக்கம் 22-ன் படம்]
கான்ஸ்டான்டீனாஸ் காட்டீடிஸ்
[பக்கம் 29-ன் படம்]
நைஜீரியாவிலுள்ள லாகோஸில் புதிய குடியிருப்புக் கட்டிடம்
[பக்கம் 29-ன் படம்]
தென் ஆப்பிரிக்க பெத்தேலில் உள்ள அச்சகம்