வாசகர் கேட்கும் கேள்விகள்
“இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பை தேசங்கள் எப்போது செய்யும்?
சமீபத்தில் வந்த காவற்கோபுரத்தின்a “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதியில், ‘பத்துக் கொம்புகளுடைய’ (அதாவது, எல்லா மனித அரசாங்கங்களுடைய) இதயத்தில் யெகோவா “தன்னுடைய எண்ணத்தை” சீக்கிரத்தில் வைப்பார் என்று பார்த்தோம். அதாவது, தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் ‘கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்துக்கு’ (அதாவது, ஐ.நா. சபைக்கு) கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை யெகோவா பத்துக் கொம்புகளின் இதயத்தில் வைப்பார். இந்த கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்தை, ‘மூர்க்க மிருகத்தின் உருவம்’ என்றுகூட பைபிள் சொல்கிறது. (வெளி. 13:14, 15; 17:3, 16, 17) யெகோவா அந்த எண்ணத்தைக் கொடுத்த பிறகு, “பத்துக் கொம்புகளும்” புதிதாக அதிகாரம் பெற்ற மூர்க்க மிருகமும் சேர்ந்து, உலகத்தில் இருக்கும் எல்லா பொய் மதங்களையும் அழிக்கும். இப்போது கேள்வி என்னவென்றால், “இதோ! சமாதானம், பாதுகாப்பு!”b என்ற அறிவிப்பு, பொய் மதங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு வருமா, அல்லது அதற்குப் பிறகு வருமா?—1 தெ. 5:3.
சுருக்கமாகச் சொன்னால், அந்த அறிவிப்பு எந்தச் சமயத்தில் செய்யப்படும் என்பது நமக்கு உறுதியாகத் தெரியாது. நமக்கு எல்லா விவரங்களும் இப்போதே தெரிந்திருந்தால், விழிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் இருப்பதற்கான அவசியமே இருக்காது! ஆனால், இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “விழிப்புடன் இருங்கள்” என்ற ஆலோசனையைத் திரும்பத் திரும்ப கொடுத்தார். (மத். 24:42; 25:13; 26:41) இப்போது, தெசலோனிக்கேயர்களுக்கு எழுதிய கடிதத்தில் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் சொன்ன தீர்க்கதரிசனத்தைக் கொஞ்சம் ஆழமாக அலசிப் பார்க்கலாம்.
“‘இதோ! சமாதானம், பாதுகாப்பு!’ என்று அவர்கள் சொல்லும்போது, ஒரு கர்ப்பிணிக்குப் பிரசவ வலி வருவதுபோல் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவர்களுக்கு அழிவு வரும்” என்று பவுல் எழுதினார். (1 தெ. 5:2, 3) பவுலின் இந்த வார்த்தைகளை நம் பிரசுரங்கள் இப்படி விளக்கியிருக்கிறது: மகா பாபிலோனின் (பொய்மத உலகப் பேரரசின்) அழிவோடு ஆரம்பமாகும் மிகுந்த உபத்திரவத்துக்கு சற்று முன்பு, “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பு செய்யப்படும்; இந்த அறிவிப்புதான், அடுத்து மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கப்போகிறது என்பதற்கு நமக்கு ஒரு அறிகுறியாக இருக்கும்.
ஆனால் கவனமாக ஆராய்ச்சி செய்த பிறகு, இந்தத் தீர்க்கதரிசனத்துக்கு இன்னொரு விளக்கமும் இருக்கலாம் என்று புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, பொய் மதத்தின் அழிவுக்குப் பிறகு, “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பு ஒருவேளை செய்யப்படலாம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? சில கேள்விகளையும் அதற்கான பதில்களையும் பார்க்கலாம்.
இந்தப் பூமியில் நடந்த போர்களில், பொய் மதங்களின் பங்கு எந்தளவு இருந்திருக்கிறது? இதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “பூமியில் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்ட எல்லாருடைய இரத்தமும் அவளிடம் [‘பேர்போன விபச்சாரியிடம்,’ அதாவது மகா பாபிலோனிடம்] காணப்பட்டது.” (வெளி. 17:1, 5; 18:24) மனித சரித்திரம் முழுக்க, இந்தப் பேர்போன விபச்சாரி போர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறாள்; தீவிரவாத செயல்களுக்கும் அவள் பெரும்பாலும் தீனி போட்டிருக்கிறாள். அப்படியென்றால், போருக்கும் வன்முறைக்கும்தான் அவள் காரணமாக இருக்கிறாளே தவிர, சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் அல்ல. இதை வைத்துப் பார்க்கும்போது, மகா பாபிலோனை அழித்த பிறகு, “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பை ஒருவேளை தேசங்கள் செய்யுமா? வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும், நமக்கு அது உறுதியாக தெரியாது.
“இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்புக்குப் பிறகு என்ன நடக்கும்? “எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவர்களுக்கு (அதாவது, தேசங்களுக்கு) அழிவு வரும்” என்று பவுல் சொல்கிறார். (1 தெ. 5:3) ஒருவேளை, பொய் மதங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பைத் தேசங்கள் செய்தால், அந்த அறிவிப்புக்குப் பிறகு முதலில் பொய் மதங்கள் அழியும்; பிறகுதான் தேசங்கள் அழியும். இப்படி நடந்தால், அந்த அறிவிப்புக்கும் தேசங்களின் அழிவுக்கும் இடையில் கொஞ்சம் காலம் கடந்துபோக வேண்டியிருக்கும். ஆனால் பவுல் அப்படிச் சொல்லவில்லை. அறிவிப்பு வந்ததும், “திடீரென்று,” அதாவது சடுதியில், தேசங்களுக்கு அழிவு வரும் என்றுதான் சொல்லியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, பொய் மதங்களை அழித்த பிறகு “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பை தேசங்கள் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பது தெரிகிறது.
இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது கடவுளுடைய மக்களுக்கு எப்படியிருக்கும்? அதைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: “சகோதரர்களே, நீங்கள் இருட்டில் இருப்பவர்கள் அல்ல; அதனால், வெளிச்சத்தில் திடீரென்று மாட்டிக்கொள்கிற திருடர்களைப் போல் நீங்கள் அந்த நாளில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள்.” (1 தெ. 5:4) “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பு, பொய் மதங்களின் அழிவுக்குப் பிறகு வந்தால், அதைத் தொடர்ந்து தேசங்களின் அழிவு வந்துவிடும் என்பது யெகோவாவின் மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அதனால், அது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்காது. ஆனால், தேசங்களுக்கு அது அதிர்ச்சியாக இருக்கும். ஏனென்றால், அப்போதுதான் அவர்கள் “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பைச் செய்திருப்பார்கள்; தங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்று நினைத்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத அந்தச் சமயத்தில்தான், திடீரென்று ஒரு திருடனைப் போல் அவர்களுக்கு அழிவு வரும்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்? சீக்கிரத்தில், “பத்துக் கொம்புகளும்,” அதிகாரத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொண்ட மூர்க்க மிருகமும் பொய் மதங்களை அழிக்கும். இதுதான் மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பமாக இருக்கும். அதோடு, ஏதோவொரு கட்டத்தில், “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பைத் தேசங்கள் செய்யும். இந்த அறிவிப்பு எப்போது செய்யப்படும் என்பதற்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன என்று இதுவரை பார்த்தோம். ஒரு வாய்ப்பு: பொய் மதங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு இந்த அறிவிப்பு செய்யப்படலாம். இரண்டாவது வாய்ப்பு: தேசங்கள் பொய் மதங்களை முழுமையாக அழித்த பிறகு இந்த அறிவிப்பு செய்யப்படலாம். இந்த இரண்டில் எது நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெரும்பாலும், பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகிற சமயத்தில் அல்லது நிறைவேறி முடிந்த பிறகுதான் அதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.—யோவான் 12:16-ஐ ஒப்பிடுங்கள்.
“இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பு எப்போது செய்யப்படும் என்பதைவிட யெகோவாவுக்கு நாம் உண்மையாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். அதனால், நாம் “விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.” இந்தச் சம்பவங்கள் எந்த வரிசையில் நடந்தாலும் சரி, அதைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.—1 தெ. 5:6.
a நவம்பர் 2025 காவற்கோபுரத்தில் வந்த “வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள்.
b இது ஒரேவொரு அறிவிப்பாக இல்லாமல் தொடர்ச்சியாகச் செய்யப்படும் குறிப்பிடத்தக்க அறிவிப்புகளாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதை அப்போஸ்தலன் பவுல் எழுதியிருக்கிற விதம் காட்டுகிறது.