படிப்புக் கட்டுரை 35
எப்போதும் “ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்”
“எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள், ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்.”—1 தெ. 5:11.
பாட்டு 90 ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவோம்
இந்தக் கட்டுரையில்...a
1. ஒன்று தெசலோனிக்கேயர் 5:11 சொல்கிறபடி நாம் எல்லாருமே என்ன வேலையைச் செய்கிறோம்?
சபையாகச் சேர்ந்து ஒரு ராஜ்ய மன்றத்தைப் புதிதாகக் கட்டிய அனுபவமோ புதுப்பித்த அனுபவமோ உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால், அந்தப் புதிய மன்றத்தில் முதல்முதலில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டது கண்டிப்பாக உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அங்கே போனபோது யெகோவாவுக்கு ரொம்ப நன்றி சொல்லியிருப்பீர்கள். ஆரம்பப் பாட்டு பாடியபோது ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல், பாடவே நீங்கள் கஷ்டப்பட்டிருப்பீர்கள். அழகாகக் கட்டப்பட்டிருக்கிற நம்முடைய ராஜ்ய மன்றங்கள் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கின்றன. ஆனால், இன்னொரு விதமான கட்டிட வேலையைச் செய்யும்போது, நாம் இன்னும் அதிகமாக அவருக்குப் புகழ் சேர்க்கிறோம். அது கட்டிடங்களைக் கட்டுவதைவிட ரொம்பவே முக்கியமான ஒரு வேலை. அதுதான் ராஜ்ய மன்றத்துக்கு வருகிறவர்களைக் கட்டியெழுப்பும் வேலை, அதாவது பலப்படுத்துகிற வேலை. அந்த வேலையை மனதில் வைத்துதான் 1 தெசலோனிக்கேயர் 5:11-ல் உள்ள வார்த்தைகளை அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (வாசியுங்கள்.) இந்தக் கட்டுரையின் முக்கிய வசனமே அதுதான்.
2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
2 சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவதில் அப்போஸ்தலன் பவுல் மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார். அவர்களைப் பார்த்து அவர் அனுதாபப்பட்டார். கஷ்டங்களைச் சகிக்கவும்... ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருக்கவும்... யெகோவாமேல் இருக்கிற விசுவாசத்தைப் பலப்படுத்தவும்... சகோதர சகோதரிகளுக்கு அவர் உதவினார். அதை எப்படிச் செய்தார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அப்போஸ்தலன் பவுலைப் போல நாமும் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்த என்ன செய்யலாம் என்றும் பார்ப்போம்.—1 கொ. 11:1.
கஷ்டங்களைச் சகிக்க பவுல் உதவினார்
3. பவுல் எப்படிச் சமநிலையாக இருந்தார்?
3 சகோதர சகோதரிகள்மேல் அப்போஸ்தலன் பவுல் உயிரையே வைத்திருந்தார். அவர் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். அதனால்தான், சகோதர சகோதரிகளுக்குக் கஷ்டம் வந்தபோது அவர்களிடம் கரிசனையையும் அனுதாபத்தையும் அவரால் காட்ட முடிந்தது. ஒருசமயம், அவருடைய கையில் காசே இல்லாமல் போய்விட்டது. அப்போது, தன்னுடைய தேவைகளையும் தன்னோடு இருந்தவர்களுடைய தேவைகளையும் கவனித்துக்கொள்வதற்கு ஒரு வேலையை அவர் தேட வேண்டியிருந்தது. (அப். 20:34) அவருக்குக் கூடாரத் தொழில் தெரிந்திருந்தது. அதனால், அவர் கொரிந்துவுக்கு வந்தபோது ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள் தம்பதியோடு சேர்ந்து கூடார வேலையைச் செய்தார். இருந்தாலும், “ஒவ்வொரு ஓய்வுநாளிலும்” யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் அவர் பிரசங்கித்தார். ஆனால், சீலாவும் தீமோத்தேயுவும் வந்த பிறகு, “கடவுளுடைய வார்த்தையை முழு மூச்சோடு பிரசங்கிக்க” ஆரம்பித்தார். (அப். 18:2-5) யெகோவாவுக்குச் சேவை செய்வதுதான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம் என்பதை அவர் மறக்கவே இல்லை. இப்படி, ஊழியத்திலும் தன்னுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதிலும் கடினமாக உழைப்பதன் மூலம் அவரால் சகோதர சகோதரிகளுக்கு நல்ல உதாரணமாக இருக்க முடிந்தது, அவர்களை உற்சாகப்படுத்தவும் முடிந்தது. வாழ்க்கையை எப்படி ஓட்டுவது, குடும்பத்தின் தேவைகளை எப்படிக் கவனித்துக்கொள்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டு ‘மிக முக்கியமான காரியங்களை,’ அதாவது வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை, பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்பதை அவர்களுக்கு பவுல் ஞாபகப்படுத்தினார்.—பிலி. 1:10.
4. துன்புறுத்தலைச் சமாளிப்பதற்கு பவுலும் தீமோத்தேயுவும் சகோதர சகோதரிகளுக்கு எப்படி உதவி செய்தார்கள்?
4 தெசலோனிக்கேயாவில் ஒரு கிறிஸ்தவ சபை உருவாகி கொஞ்ச நாட்களிலேயே புதிதாக கிறிஸ்தவர்களாக ஆனவர்களுக்குப் பயங்கரமான எதிர்ப்பு வந்தது. பவுலையும் சீலாவையும் இழுத்துக் கொண்டுபோவதற்கு வந்த வெறித்தனமான கும்பலால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், ‘சில சகோதரர்களை நகரத் தலைவர்களிடம் அவர்கள் இழுத்துக்கொண்டுபோய்,’ இவர்கள் “ரோம அரசனுடைய கட்டளைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்” என்று கூச்சல் போட்டார்கள். (அப். 17:6, 7) தங்களுடைய ஊர்க்காரர்களே தங்களுக்கு எதிராகத் திரும்பியபோது புதிதாக கிறிஸ்தவர்களாக ஆன அந்த சகோதரர்கள் எவ்வளவு ஆடிப்போயிருப்பார்கள், இல்லையா? யெகோவாவுக்குச் செய்யும் சேவையில் அவர்களுடைய ஆர்வம் குறைந்துகூட போயிருக்கலாம். ஆனால், அப்படி நடந்துவிடக் கூடாது என்று பவுல் நினைத்தார். அவரும் சீலாவும் அங்கிருந்து போக வேண்டியிருந்தாலும் புதிதாக உருவான அந்தச் சபையை நன்றாகப் பார்த்துக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்தார்கள். “நம் சகோதரர் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பி வைத்தோம்; உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தி உங்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகவும், உங்களுக்கு வருகிற உபத்திரவங்களால் நீங்கள் யாரும் நிலைகுலைந்துவிடாதபடி பார்த்துக்கொள்வதற்காகவும் அவரை அனுப்பி வைத்தோம்” என்று தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் பின்பு சொன்னார். (1 தெ. 3:2, 3) தீமோத்தேயு தன்னுடைய சொந்த ஊரான லீஸ்திராவில் ஏற்கெனவே துன்புறுத்தலை நேரடியாகச் சந்தித்திருக்கிறார். அந்தச் சமயத்தில், அங்கிருந்த சகோதரர்களைப் பவுல் எப்படிப் பலப்படுத்தினார் என்பதை அவர் பார்த்திருக்கிறார். அதோடு, யெகோவாவின் ஆதரவு அவர்களுக்கு இருந்ததையும் அவர் பார்த்திருக்கிறார். அதனால்தான், தெசலோனிக்கேயாவில் இருந்த கிறிஸ்தவர்களிடம் சீக்கிரத்தில் எல்லாமே சரியாகிவிடும் என்று தீமோத்தேயுவால் உறுதியாகச் சொல்ல முடிந்திருக்கும்.—அப். 14:8, 19-22; எபி. 12:2.
5. ஒரு மூப்பர் செய்த உதவி சகோதரர் ப்ரையன்ட்டுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது?
5 வேறெந்த வழிகளில் சகோதர சகோதரிகளை பவுல் பலப்படுத்தினார்? லீஸ்திரா, இக்கோனியா மற்றும் அந்தியோகியாவில் இருந்த சபைகளை பவுலும் பர்னபாவும் திரும்பச் சந்தித்தபோது, ‘ஒவ்வொரு சபையிலும் அவர்களுக்காக மூப்பர்களை நியமித்தார்கள்.’ (அப். 14:21-23) அந்த மூப்பர்கள், சபையில் இருந்த சகோதர சகோதரிகளுக்குத் தேவையான ஆறுதலைக் கொடுத்தார்கள். இன்றைக்கு இருக்கிற மூப்பர்களும் அதைத்தான் செய்கிறார்கள். ப்ரையன்ட் என்ற சகோதரருடைய அனுபவத்தைக் கவனியுங்கள். “எனக்கு 15 வயசு இருந்தப்போ வீட்டைவிட்டு அப்பா போயிட்டாரு. அம்மா சபைநீக்கம் செய்யப்பட்டாங்க. எனக்கு யாருமே இல்லனு நினைச்சு சோர்ந்துபோயிட்டேன்” என்று அவர் சொல்கிறார். இந்தக் கஷ்டமான சூழ்நிலையைச் சமாளிக்க ப்ரையன்ட்டுக்கு எது உதவியது? “டோனிங்கற ஒரு மூப்பர் கூட்டங்களுக்கு போறப்பவும் மத்த சமயங்கள்லயும் என்கிட்ட பேசுவாரு. கஷ்டங்கள் வந்தப்பவும் சந்தோஷமா இருந்தவங்கள பத்தி என்கிட்ட சொன்னாரு. சங்கீதம் 27:10-ஐ அவர் எனக்கு வாசிச்சு காட்டுனாரு. அடிக்கடி எசேக்கியா ராஜாவ பத்தி எனக்கு சொல்வாரு. எசேக்கியா ராஜாவோட அப்பா நல்லவரா இல்லன்னாலும் அவர் கடவுளுக்கு உண்மையா இருந்தத பத்தி சொல்வாரு” என்று ப்ரையன்ட் சொல்கிறார். அந்த மூப்பர் செய்த உதவி ப்ரையன்ட்டுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது? “சகோதரர் டோனி கொடுத்த உற்சாகத்தால கொஞ்ச நாளைக்கு அப்புறம் முழுநேர சேவைய என்னால ஆரம்பிக்க முடிஞ்சுது. அது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷத்த கொடுத்துச்சு” என்று ப்ரையன்ட் சொல்கிறார். மூப்பர்களே, உங்களுடைய சபையிலும் ப்ரையன்ட் போல இருக்கிறவர்களுக்கு ‘நல்ல வார்த்தைகளை’ சொல்லி உற்சாகப்படுத்த எப்போதும் தயாராக இருங்கள்.—நீதி. 12:25.
6. கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களின் வாழ்க்கை சரிதையைப் பயன்படுத்தி சகோதர சகோதரிகளைப் பவுல் எப்படி உற்சாகப்படுத்தினார்?
6 யெகோவா கொடுத்த பலத்தால் “திரண்ட மேகம் போன்ற . . . சாட்சிகள்” கஷ்டங்களைச் சகித்திருக்கிறார்கள் என்பதை சகோதர சகோதரிகளுக்கு பவுல் ஞாபகப்படுத்தினார். (எபி. 12:1) அவர்களைப் பற்றி பவுல் ஏன் சொன்னார்? எல்லா விதமான கஷ்டங்களையும் வெற்றிகரமாக சகித்துக்கொண்டவர்களுடைய வாழ்க்கை சரிதை, சகோதர சகோதரிகளுக்குத் தைரியத்தைக் கொடுக்கும் என்று அவருக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, ‘உயிருள்ள கடவுளுடைய நகரத்தின்மேல்’ கவனம் செலுத்த அது அவர்களுக்கு உதவும். (எபி. 12:22) இன்றைக்கும் அதுதான் உண்மை. கிதியோன், பாராக், தாவீது, சாமுவேல் போன்ற நிறைய பேருக்கு யெகோவா எப்படி உதவி செய்திருக்கிறார் என்பதைப் பற்றிப் படிப்பது நம் எல்லாரையுமே பலப்படுத்துகிறது! (எபி. 11:32-35) நம்முடைய காலத்திலும்கூட யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்களுடைய வாழ்க்கை சரிதையைப் படிப்பது நம்மைப் பலப்படுத்துகிறது! நிறைய சகோதர சகோதரிகள் அதுபோன்ற அனுபவங்களைப் படித்ததால் தங்களுடைய விசுவாசம் பலமாகி இருப்பதாக உலகத் தலைமை அலுவலகத்துக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.
ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருப்பதற்கு பவுல் உதவினார்
7. ரோமர் 14:19-21-ல் பவுல் கொடுத்த ஆலோசனையிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
7 சபை சமாதானமாக இருப்பதற்காக நம்மால் முடிந்ததையெல்லாம் செய்யும்போது சகோதர சகோதரிகளைப் பலப்படுத்த முடியும். கருத்துவேறுபாடுகளால் சபையில் பிரிவினை வருவதற்கு நாம் இடம்கொடுக்க மாட்டோம். பைபிள் நியமங்கள் மீறப்படாதவரை நாம் மற்றவர்களோடு ஒத்துப்போவோம். இதற்கு ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். ரோமில் இருந்த சபையில் யூத கிறிஸ்தவர்களும் யூதர்களாக இல்லாத கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லாமல் போனபோது, சில உணவுகளைச் சாப்பிடுவதற்கு இருந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் போய்விட்டது. (மாற். 7:19) அந்தச் சமயத்திலிருந்து சில யூத கிறிஸ்தவர்கள் எல்லா விதமான உணவுகளையும் சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால், அப்படிச் சாப்பிடுவது சரியில்லை என்று மற்ற யூத கிறிஸ்தவர்கள் நினைத்தார்கள். இதனால் சபையில் பிரிவினை வந்தது. அந்தச் சமயத்தில், ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதற்கு பவுல் இப்படிச் சொன்னார்: “இறைச்சி சாப்பிடுவதோ திராட்சமது குடிப்பதோ வேறெதாவது செய்வதோ உங்கள் சகோதரனுடைய விசுவாசத்தைப் பலவீனமாக்கினால், அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது.” (ரோமர் 14:19-21-ஐ வாசியுங்கள்.) வாக்குவாதம் செய்வது சபையில் இருக்கிற ஒவ்வொருவரையும் சொல்லப்போனால், ஒட்டுமொத்த சபையையும் எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதைச் சகோதர சகோதரிகளுக்கு இந்த விதத்தில் பவுல் புரியவைத்தார். மற்றவர்களுடைய விசுவாசத்தை பலவீனமாக்காமல் இருப்பதற்காக தன்னுடைய பழக்கங்களை மாற்றிக்கொள்ளவும் அவர் தயாராக இருந்தார். (1 கொ. 9:19-22) அதேபோல் நாமும் நம்முடைய தனிப்பட்ட விருப்பத்துக்காக வாக்குவாதம் செய்வதை விட்டுவிட்டோம் என்றால் நம்மாலும் மற்றவர்களைப் பலப்படுத்த முடியும், சபை சமாதானமாக இருப்பதற்கும் உதவ முடியும்.
8. சபையின் சமாதானத்தைக் குலைக்கிற மாதிரி ஒரு பெரிய பிரச்சினை வந்தபோது பவுல் எப்படி நடந்துகொண்டார்?
8 முக்கியமான விஷயங்களைப் பற்றி வாக்குவாதம் செய்தவர்களிடம்கூட சமாதானமாக இருப்பதில் பவுல் நல்ல முன்மாதிரியாக இருந்தார். உதாரணத்துக்கு, முதல் நூற்றாண்டு சபையில் இருந்த சிலர், யூதர்களாக இல்லாதவர்கள் கிறிஸ்தவர்களாக ஆனபோது அவர்களை விருத்தசேதனம் செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள். ஒருவேளை, யூதர்கள் அவர்களைக் குறை சொல்லாமல் இருப்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம். (கலா. 6:12) அவர்கள் அப்படிச் சொன்னது பவுலுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனாலும், அவர் சொல்கிறபடிதான் அவர்கள் செய்ய வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, மனதாழ்மையுடன் அந்த விஷயத்தைப் பற்றி எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களிடமும் மூப்பர்களிடமும் ஆலோசனை கேட்டார். (அப். 15:1, 2) இப்படி, அந்தக் கிறிஸ்தவர்கள் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கு அவர் உதவி செய்தார்.—அப். 15:30, 31.
9. நாம் எப்படி பவுலைப் போல் நடந்துகொள்ளலாம்?
9 இன்றைக்கும்கூட சகோதரர்களோடு பயங்கரமான வாக்குவாதங்கள் வரும்போது சபையை வழிநடத்த யெகோவா நியமித்திருக்கிறவர்களிடம் ஆலோசனை கேட்பதன் மூலம் நம்மால் சமாதானத்தைக் கட்டிக்காக்க முடியும். நம்முடைய பிரசுரங்களிலும் அமைப்பு கொடுக்கிற வழிமுறைகளிலும் பைபிளின் அடிப்படையிலான ஆலோசனைகள் இருக்கின்றன. நம்முடைய தனிப்பட்ட கருத்துகளைச் சொல்வதற்குப் பதிலாக, அந்த ஆலோசனைகளின்படி செய்தால் சபையின் சமாதானத்தைக் கட்டிக்காக்க நம்மால் உதவ முடியும்.
10. சபை சமாதானமாக இருப்பதற்கு பவுல் வேறு என்னவெல்லாம் செய்தார்?
10 பவுல் சகோதர சகோதரிகளிடம் இருக்கிற குறைகளைப் பற்றிச் சொல்லாமல் அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களை எடுத்துச்சொல்வதன் மூலமாக சபை சமாதானமாக இருப்பதற்கு உதவி செய்தார். உதாரணத்துக்கு, ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தின் கடைசியில் பவுல் நிறைய நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு எழுதினார். அவர்கள் செய்த நல்ல விஷயங்களைப் பற்றி அல்லது அவர்களுடைய சில தனிப்பட்ட விவரங்களைப் பற்றி அதில் குறிப்பிட்டு எழுதினார். பவுலைப் போலவே நாமும் நம் சகோதர சகோதரிகளுடைய நல்ல குணங்களைப் பற்றி அவர்களிடமும் மற்றவர்களிடமும் தாராளமாகப் பேசலாம். அப்படிச் செய்யும்போது, சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்க முடியும்; சபையில் அன்பான சூழலை உருவாக்கவும் முடியும்.
11. சபையில் மற்றவர்களுடன் கருத்துவேறுபாடு வரும்போது திரும்பவும் சமாதானமாக ஆவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
11 சிலசமயங்களில் அனுபவமுள்ள கிறிஸ்தவர்களுக்கு இடையில்கூட கருத்துவேறுபாடோ வாக்குவாதமோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நெருங்கிய நண்பர்களாக இருந்த பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையில்கூட அப்படி நடந்தது. மிஷனரி பயணத்தில் இந்தத் தடவை மாற்குவைத் தங்களோடு கூட்டிக்கொண்டு போக வேண்டுமா வேண்டாமா என்பதில் அவர்கள் இரண்டு பேருக்கும் பயங்கரமான வாக்குவாதம் வந்தது. அவர்கள் ‘கடுமையாக வாக்குவாதம்’ செய்ததால் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து போய்விட்டார்கள். (அப். 15:37-39) ஆனாலும், அதற்குப் பிறகு மூன்று பேருமே தங்களுக்கு இடையில் ஏற்பட்ட அந்த விரிசலைச் சரிசெய்தார்கள். ஏனென்றால், சபை ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பின்பு ஒருசமயம், பர்னபாவையும் மாற்குவையும் பற்றி பவுல் நல்ல விதமாகச் சொன்னார். (1 கொ. 9:6; கொலோ. 4:10) இன்றைக்கும், சபையில் இருக்கிறவர்களோடு நமக்கு ஏதாவது கருத்துவேறுபாடு வந்தால் அதைச் சரிசெய்ய வேண்டும். தொடர்ந்து அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, சபை ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்வோம்.—எபே. 4:3.
விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள பவுல் உதவினார்
12. நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன?
12 யெகோவாமேல் இருக்கிற விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கும் சகோதர சகோதரிகளுக்கு நாம் உதவலாம். கிறிஸ்தவர்களாக இருக்கிற சிலரை, யெகோவாவின் சாட்சியாக இல்லாத அவர்களுடைய குடும்பத்தார், கூட வேலை செய்கிறவர்கள் அல்லது கூடப் படிக்கிறவர்கள் கேலிகிண்டல் செய்யலாம். இன்னும் சிலர், மோசமான உடல்நிலை பிரச்சினைகளால் கஷ்டப்படலாம். அல்லது, யாராவது மனதை நோகடித்ததை நினைத்து கவலைப்படலாம். சிலர் ஞானஸ்நானம் எடுத்து ரொம்ப வருஷம் ஆனதால், இந்த உலகத்தின் முடிவுக்காக ரொம்பக் காலம் காத்துக்கொண்டிருக்கலாம். இவையெல்லாம் இன்றைக்கு கிறிஸ்தவர்களுடைய விசுவாசத்துக்கு ஒரு பெரிய சோதனையாக இருக்கிறது. முதல் நூற்றாண்டு சபையில் இருந்தவர்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. அவர்களைப் பலப்படுத்த பவுல் என்ன செய்தார்?
அப்போஸ்தலன் பவுலைப் போல மற்றவர்களை நாம் எப்படிப் பலப்படுத்தலாம்? (பாரா 13)b
13. சகோதர சகோதரிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்காகக் கேலி செய்யப்பட்டபோது அவர்களுக்கு பவுல் எப்படி உதவினார்?
13 வேதவசனங்களைப் பயன்படுத்தி பவுல் சகோதர சகோதரிகளுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தினார். அதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். யூத கிறிஸ்தவர்களுடைய குடும்பத்தார், கிறிஸ்தவ மதத்தைவிட யூத மதம்தான் பெரியது என்பதுபோல் மட்டம்தட்டி பேசியபோது அவர்களிடம் எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல் யூத கிறிஸ்தவர்கள் கஷ்டப்பட்டிருக்கலாம். அந்தச் சமயத்தில், அவர்களுக்கு பவுல் எழுதிய கடிதம், அவர்களை நிச்சயம் பலப்படுத்தியிருக்கும். (எபி. 1:5, 6; 2:2, 3; 9:24, 25) பவுல் கொடுத்த மறுக்க முடியாத ஆதாரங்கள் குறை சொன்னவர்களுக்குப் பதில்கொடுக்க யூத கிறிஸ்தவர்களுக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருந்திருக்கும். இன்றைக்கும்கூட, நம்முடைய நம்பிக்கைகளுக்காக சகோதர சகோதரிகள் கேலி செய்யப்படலாம். அப்படிக் கேலி செய்யப்படும்போது, நாம் ஏன் அப்படி நம்புகிறோம் என்பதற்கான காரணத்தை நம்முடைய பிரசுரங்களைப் பயன்படுத்தி விளக்க அவர்களுக்கு உதவி செய்யலாம். நம்முடைய இளம் பிள்ளைகள், கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை நம்புவதால் கேலி செய்யப்படலாம். அப்படிப்பட்ட சமயங்களில், உயிர் படைக்கப்பட்டதுதான் என அவர்கள் நம்புவதற்கான ஆதாரத்தை உயிர் படைக்கப்பட்டதா? என்ற ஆங்கில சிற்றேட்டிலிருந்தும், உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேட்டிலிருந்தும் காட்டுவதற்கு அவர்களுக்கு நாம் உதவலாம்.
அப்போஸ்தலன் பவுலைப் போல மற்றவர்களை நாம் எப்படிப் பலப்படுத்தலாம்? (பாரா 14)c
14. ஊழியத்தை பவுல் மும்முரமாகச் செய்தாலும் வேறு எதையும் செய்தார்?
14 ‘நல்ல செயல்களை’ செய்வதன் மூலமாக அன்பு காட்ட சகோதர சகோதரிகளை பவுல் உற்சாகப்படுத்தினார். (எபி. 10:24) சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் சகோதர சகோதரிகளுக்கு அவர் உதவி செய்தார். உதாரணத்துக்கு, யூதேயாவில் இருந்த சகோதர சகோதரிகள் பஞ்சத்தால் கஷ்டப்பட்டபோது அவர்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொடுப்பதற்கு பவுல் உதவி செய்தார். (அப். 11:27-30) சொல்லப்போனால், ஊழிய வேலையை பவுல் மும்முரமாகச் செய்துகொண்டிருந்தாலும் கஷ்டப்படுகிறவர்களுக்குப் பொருள் உதவி செய்யவும் எப்போதுமே தயாராக இருந்தார். (கலா. 2:10) இப்படிச் செய்வதன் மூலமாக அவர்களை யெகோவா பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்தினார். இன்றைக்கும்கூட, பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நம்முடைய நேரம், சக்தி, திறமை என எல்லாவற்றையுமே கொடுக்கும்போது நாமும் நம்முடைய சகோதர சகோதரிகளுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறோம். உலகளாவிய வேலைக்காகத் தவறாமல் நன்கொடை கொடுப்பதன் மூலமாகவும் இதை நாம் செய்கிறோம். இப்படி நிறைய வழிகளில் உதவி செய்வதன் மூலமாக யெகோவா ஒருநாளும் நம்மைக் கைவிடமாட்டார் என்று நம்புவதற்கு நம் சகோதர சகோதரிகளுக்கு நாம் உதவலாம்.
அப்போஸ்தலன் பவுலைப் போல மற்றவர்களை நாம் எப்படிப் பலப்படுத்தலாம்? (பாராக்கள் 15-16)d
15-16. விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
15 விசுவாசத்தில் பலவீனமாக இருந்தவர்களுக்கும் பவுல் தொடர்ந்து உதவி செய்தார். அவர்களிடம் கரிசனையாக நடந்துகொண்டார். அன்பாகவும் நல்ல விதமாகவும் பேசினார். (எபி. 6:9; 10:39) உதாரணத்துக்கு, எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் “நாம்,” “நம்முடைய” போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தினார். (எபி. 2:1, 3) இப்படி, அவர் கொடுத்த ஆலோசனையை அவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைக் காட்டினார். பவுலைப் போல் நாமும் விசுவாசத்தில் பலவீனமாக இருக்கிறவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்கிறோம். அவர்கள்மேல் உண்மையான அக்கறை காட்டுவதன் மூலமாக அவர்களை நாம் பலப்படுத்துகிறோம். இப்படிச் செய்யும்போது, அவர்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். அவர்களிடம் ரொம்பப் பாசமாகவும் கனிவாகவும் பேசும்போது நாம் சொல்வது அவர்களுடைய மனதைத் தொடும், அவர்களை உற்சாகப்படுத்தும்.
16 சகோதர சகோதரிகள் செய்கிற நல்ல செயல்கள் எல்லாமே யெகோவாவுக்குத் தெரியும் என்ற நம்பிக்கையை பவுல் அவர்களுக்குக் கொடுத்தார். (எபி. 10:32-34) விசுவாசத்தில் பலவீனமாக இருக்கிற ஒருவருக்கு உதவும்போது நாமும் பவுலைப் போலவே நடந்துகொள்ளலாம். ஒருவேளை, அவர் எப்படி ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனார் என்று நாம் கேட்கலாம். அல்லது, எப்போதெல்லாம் யெகோவா அவருக்கு உதவி செய்திருக்கிறார் என்று யோசித்துப்பார்க்க சொல்லலாம். இதுவரைக்கும் யெகோவாமேல் அவர் காட்டிய அன்பை யெகோவா மறக்கவில்லை என்றும் எதிர்காலத்தில் அவரை யெகோவா கைவிட மாட்டார் என்றும் நம்பிக்கை கொடுக்கலாம். (எபி. 6:10; 13:5, 6) இப்படிச் செய்யும்போது, திரும்பவும் யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு வரும்.
“எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்”
17. என்னென்ன திறமைகளை நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்?
17 கட்டிடம் கட்டுகிற ஒருவர், நாட்கள் போகப் போக தன்னுடைய திறமைகளை நன்றாக வளர்த்துக்கொள்வார். அதேபோல் நாமும் ஒருவரை ஒருவர் கட்டியெழுப்புகிற விஷயத்தில், அதாவது பலப்படுத்துகிற விஷயத்தில், இன்னும் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். எப்படியென்றால், கஷ்டங்களைச் சகித்துக் கொண்டிருக்கிறவர்களைப் பலப்படுத்துவதற்கு பைபிளில் இருக்கிற உதாரணங்களை நாம் காட்டலாம். மற்றவர்களிடம் நாம் பார்க்கிற நல்ல விஷயங்களைச் சொல்வதன் மூலமாக ஒருவருக்கொருவர் சமாதானமாக இருப்பதற்கு நாம் உதவலாம். சபையின் சமாதானத்தைக் கெடுக்கும் விதமாக ஏதாவது நடக்கும்போது, அந்தச் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு நாம் உதவலாம். சகோதரர்களோடு கருத்துவேறுபாடு வரும்போது அதைச் சரிசெய்து திரும்பவும் சமாதானமாக ஆவதற்கு நாம் முயற்சி செய்யலாம். முக்கியமான பைபிள் உண்மைகளைச் சொல்வதன் மூலம்... தேவையான உதவிகளைச் செய்வதன் மூலம்... விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம்... நம்முடைய சகோதர சகோதரிகளுடைய விசுவாசத்தை நாம் தொடர்ந்து பலப்படுத்தலாம்.
18. நீங்கள் என்ன செய்வதற்குத் தீர்மானமாக இருக்கிறீர்கள்?
18 வணக்கத்துக்காகப் பயன்படுத்துகிற கட்டிடங்களைக் கட்டுகிறவர்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறார்கள். அதேபோல், சபையில் இருக்கிற நம் சகோதர சகோதரிகளுடைய விசுவாசத்தைக் கட்டியெழுப்பும்போது, அதாவது பலப்படுத்தும்போது, நமக்கும் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும். நாம் கட்டுகிற கட்டிடங்கள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், மற்றவர்களைக் கட்டியெழுப்புவதால் கிடைக்கிற நன்மைகள் என்றென்றைக்குமே நிலைத்திருக்கும்! அதனால், ‘எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்கும் ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதற்கும்’ நாம் தீர்மானமாக இருக்கலாம்.—1 தெ. 5:11.
பாட்டு 100 தாராளமாக உபசரிப்போம்
a இந்த மோசமான உலகத்தில் வாழ்க்கையை ஓட்டுவதே ரொம்பக் கஷ்டம். நம்முடைய சகோதர சகோதரிகள் ஏகப்பட்ட பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படியெல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்று யோசித்துப்பார்க்கும்போது நம்மால் அவர்களுக்குக் கண்டிப்பாக உதவ முடியும். இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தை யோசித்துப்பார்ப்பது நமக்குப் பிரயோஜனமாக இருக்கும்.
b படவிளக்கம்: கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு வற்புறுத்தப்படும்போது அதைச் சமாளிக்க நம்முடைய பிரசுரங்களில் இருக்கிற ஆலோசனையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஒரு அப்பா தன்னுடைய மகளுக்குக் காட்டுகிறார்.
c படவிளக்கம்: பேரழிவில் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வதற்காக ஒரு தம்பதி தங்களுடைய நாட்டில் இருக்கிற இன்னொரு பகுதிக்குப் போயிருக்கிறார்கள்.
d படவிளக்கம்: விசுவாசத்தில் பலவீனமாக இருக்கிற ஒரு சகோதரரை ஒரு மூப்பர் போய்ப் பார்க்கிறார். பல வருஷங்களுக்கு முன்னால் அவர்கள் இரண்டு பேரும் பயனியர் ஊழியப் பள்ளியில் கலந்துகொண்டபோது எடுத்த சில போட்டோக்களை அவர் காட்டுகிறார். அப்போது, அவர்கள் சந்தோஷமாக இருந்த தருணங்கள் அந்தச் சகோதரருடைய ஞாபகத்துக்கு வருகிறது. யெகோவாவுக்குச் சேவை செய்தபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது என்பதை அவர் ரொம்ப ஏக்கமாக யோசித்துப் பார்க்கிறார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு சபைக்குத் திரும்ப வருகிறார்.