தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—செப்பனியா
1. எப்படிப்பட்ட சூழ்நிலையில் செப்பனியா ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார், அவருடைய உதாரணத்தை இன்று நாம் எப்படிப் பின்பற்றலாம்?
1 அது கி.மு. 7-ஆம் நூற்றாண்டின் மத்திப காலம். யூதாவில் இருந்த மக்கள் பாகால் வணக்கத்தில் ஊறிப்போய் இருந்தார்கள். கெட்ட ராஜாவான ஆமோன் கொலை செய்யப்பட்டதால் இளம் யோசியா ராஜாவானார். (2 நா. 33:21–34:1) அந்தச் சமயத்தில், யெகோவா தம்முடைய நியாயத்தீர்ப்பு செய்தியைச் சொல்வதற்காக செப்பனியாவை நியமித்தார். செப்பனியா, யூதாவின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் யூதாவின் ராஜாக்கள்மீது யெகோவா கொண்டுவரப்போகும் கண்டனத்தீர்ப்பைப் பற்றி தைரியமாகச் சொன்னார். (செப். 1:1; 3:1-4) நாமும் செப்பனியாவின் தைரியத்தைப் பின்பற்ற வேண்டும். யெகோவாவை வணங்குவதில், நம் சொந்தபந்தங்கள் ஒரு தடையாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். (மத். 10:34-37) செப்பனியா என்ன நியாயத்தீர்ப்பு செய்தியைச் சொன்னார், அதற்கு என்ன பலன் கிடைத்தது?
2. யெகோவாவுடைய கோபத்தின் நாளில் தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
2 யெகோவாவைத் தேடுங்கள்: தம்முடைய கோபத்தின் நாளில், யெகோவாவால் மட்டுமே மக்களைக் காப்பாற்ற முடியும். அதனால்தான் காலம் இருக்கும்போதே யெகோவாவைத் தேடும்படி, நீதியைத் தேடும்படி, மனத்தாழ்மையைத் தேடும்படி யூதாவில் இருந்த மக்களிடம் செப்பனியா சொன்னார். (செப். 2:2, 3) நம்முடைய நாளிலும் இதுவே உண்மை. செப்பனியாவைப் போலவே நாமும், யெகோவாவைத் தேட மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அதே சமயத்தில் நாமும் யெகோவாவை ‘விட்டுப் பின்வாங்குகிறவர்களாக’ இருக்கக் கூடாது. (செப். 1:6) பைபிளை ஆழமாக வாசித்து, அவருடைய வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்வதன் மூலம் யெகோவாவைத் தேட வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதன் மூலம் நீதியைத் தேட வேண்டும். அடிபணியும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதோடு, யெகோவாவின் அமைப்பு கொடுக்கும் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் மனத்தாழ்மையைத் தேட வேண்டும்.
3. ஊழியத்தில் நாம் ஏன் நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள வேண்டும்?
3 நல்ல பலன்கள்: செப்பனியாவின் செய்தியைக் கேட்டு யூதாவில் இருந்த சில மக்கள் யெகோவாவைத் தேடினார்கள். முக்கியமாக, சிறுவனாக இருந்த யோசியா யெகோவாவைத் தேட ஆரம்பித்தார். சிலை வழிபாட்டை அந்த நாட்டிலிருந்து முழுவதுமாக ஒழித்துக்கட்ட யோசியா தீவிரமாகச் செயல்பட்டார். (2 நா. 34:2-5) இன்று, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியின் விதைகள் பாதையோரத்தில், கற்பாறையில், முட்செடி உள்ள இடத்தில் விழுகின்றன. ஆனால் சில விதைகள், நல்ல நிலத்தில் விழுந்து கனி கொடுக்கின்றன. (மத். 13:18-23) கடவுளுடைய அரசாங்கத்தின் விதையை விதைக்க நாம் சுறுசுறுப்பாக ஈடுபட்டால், நம்முடைய எல்லா முயற்சிகளையும் யெகோவா ஆசீர்வதிப்பார் என்பதில் நிச்சயமாக இருக்கலாம்.—சங். 126:6.
4. நாம் ஏன் யெகோவாவுக்காக ‘காத்திருக்க’ வேண்டும்?
4 யெகோவா எதுவும் செய்ய மாட்டார் என்று யூதாவில் இருந்த சிலர் நினைத்தார்கள். ஆனால், தம்முடைய நாள் சீக்கிரத்தில் வரப்போவதாக யெகோவா உறுதியளித்தார். (செப். 1:12, 14) இன்றும் யெகோவாமீது நம்பிக்கை வைப்பவர்கள் மட்டுமே தப்பிப்பிழைப்பார்கள். (செப். 3:12, 17) நாம் யெகோவாவுக்காகக் ‘காத்திருக்கும்’ இந்தச் சமயத்தில், சக வணக்கத்தாரோடு சேர்ந்து அவரை வணங்குவோமாக! அதில் அளவில்லா சந்தோஷத்தை அனுபவிப்போமாக!!—செப். 3:8, 9.