“பத்திரிகைகளை அளிப்பது எப்படி?”
பத்திரிகைகளை எப்படி அளிப்பது என்ற பகுதியை ஒவ்வொரு மாதமும் ஊழியக் கூட்டத்தில் நாம் சிந்திக்கிறோம். இதன் நோக்கம், பத்திரிகைகளில் என்ன இருக்கிறது என்று கலந்தாலோசிப்பது அல்ல, ஆனால் ஊழியத்தில் அவற்றை எப்படி அளிப்பது என்று கலந்தாலோசிப்பதே. எனவே, இந்தப் பகுதியைக் கையாளும் சகோதரர் பத்திரிகைகள்மீது ஆர்வத்தைத் தூண்டுவதற்காக அட்டவணையில் சொல்லப்பட்டுள்ளபடி சுருக்கமான முன்னுரையைக் கொடுப்பார். பிறகு, ஒரு கட்டுரையை (அல்லது தொடர் கட்டுரையை) எடுத்து அதை எப்படி அளிக்கலாம் எனப் பிரஸ்தாபிகளிடம் கேட்பார். இப்படிச் செய்யும்போது அவர்கள் சொல்லும் குறிப்புகளை எல்லோராலும் கவனிக்க முடியும், அவற்றை மனதில் வைக்கவும் முடியும். ஒரு அணுகுமுறையை முழுவதுமாகச் சொல்லும்படி கேட்பதற்குப் பதிலாக, ஆர்வத்தைத் தூண்டும் என்ன கேள்விகளைக் கேட்கலாமென்றும், என்ன வசனங்களை வாசிக்கலாமென்றும் பலரிடம் கேட்பார். கடைசியாக, ஒவ்வொரு பத்திரிகையையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்வார். சபையார் பத்திரிகைகளிலுள்ள கட்டுரைகளை முன்னரே பார்த்துவிட்டு வந்தால் கூட்டத்தில் குறிப்புகளைச் சொல்வது சுலபமாக இருக்கும். எல்லோரும் நன்கு தயாரித்து வந்தால், ஊழியத்தில் ஒருவருக்கொருவர் தங்கள் திறமைகளைத் தீட்டிக்கொள்ள முடியும்.—நீதி. 27:17.