‘ஏற்ற வேளையில் உணவு’
1. கடந்த விசேஷ மாநாட்டு தினம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எப்படி உதவியிருக்கிறது?
1 பொதுவாக விசேஷ மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, “மாநாட்டில் கேட்ட விஷயமெல்லாம் எனக்கே தயார் செய்து கொடுத்த மாதிரி இருந்தது” என்று சொல்வோம். சமீபத்தில் நடந்த வட்டார மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, ஊழியத்தில் இன்னும் அதிகமாய் ஈடுபட சிலர் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஒரு வட்டாரக் கண்காணி சொன்னார். “நாம் கடைசி காலத்தில் வாழ்வதால் நம் தெரிவுகளைச் சீர்தூக்கிப் பார்க்க மாநாடு உதவியது” என்று ஒரு பயணக் கண்காணி சொன்னார். “மிக முக்கியமான வேலையில், அதாவது ஊழியத்தில் தங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்த இந்த மாநாடு தங்களைத் தூண்டியதாக அநேக பிரஸ்தாபிகள் சொன்னார்கள்” என்று மற்றொரு பயணக் கண்காணி கூறினார். கடந்த விசேஷ மாநாட்டு தினம் உங்களுக்கு எப்படி உதவியது?
2. அடுத்த ஊழிய ஆண்டின் விசேஷ மாநாட்டில் என்ன விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படும்?
2 வரப்போகிற ஊழிய ஆண்டில் நடைபெறும் விசேஷ மாநாடும் நமக்கே தயார் செய்யப்பட்ட விதத்தில் இருக்கும். “யெகோவாவிடம் அடைக்கலம் புகுங்கள்” என்பதே அதன் தலைப்பு. இது சங்கீதம் 118:8, 9-ன் (NW) அடிப்படையில் இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படும் சில தலைப்புகள்: “ஆபத்துக் காலத்தில் யெகோவா நமக்கு எவ்வாறு அடைக்கலமாக இருக்கிறார்,” “யெகோவாவின் செட்டைகளில் அடைக்கலம் கண்டடைய மற்றவர்களுக்கு உதவுங்கள்,” “அடைக்கலம் கொடுப்பதில் யெகோவாவைப் பின்பற்றுங்கள்,” “இளைஞர்களே, யெகோவாவை உங்கள் நம்பிக்கையாகக் கொள்ளுங்கள்!,” “ஆன்மீகப் பரதீஸ்—நம்முடைய அடைக்கலத்திற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடு.”
3. மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் நாம் எப்படி முழுமையாகப் பயனடையலாம்?
3 நீங்கள் நன்மையடைய: மாநாடு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநாட்டில் கலந்துகொள்வதற்குத் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அதில் கலந்துகொள்ள உங்களோடு பைபிளைப் படிக்கிறவர்களையும் உற்சாகப்படுத்துங்கள். ‘சகித்திருந்து பலன் கொடுப்பதற்கு’ நாம் எதைக் கேட்கிறோமோ அதை மனதில் பதியவைக்க வேண்டும். (லூக். 8:15) ஆகவே, நிகழ்ச்சியை நன்கு கவனியுங்கள், முக்கியமான விஷயங்களையும் உங்களுடைய வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் நீங்கள் கடைப்பிடிக்க விரும்பும் விஷயங்களையும் சுருக்கமாகக் குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். மாநாடு முடிந்த பிறகு, மாநாட்டில் கேட்ட விஷயங்களைக் குடும்பமாகக் கலந்து பேசுங்கள்; அதோடு, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மாநாட்டில் சொல்லப்பட்ட விஷயங்களை எந்தெந்த விதங்களில் கடைப்பிடிக்கலாம் என்பதையும் சிந்தித்துப்பாருங்கள்.
4. வரவிருக்கிற விசேஷ மாநாட்டு தினத்தை நாம் ஏன் ஆவலோடு எதிர்பார்க்க வேண்டும்?
4 சுவையான, ஊட்டச்சத்துமிக்க உணவைப்போல், இந்த வருடத்தின் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிகள் அனைத்தும் நமக்காக மிகுந்த அன்போடும் முன்யோசனையோடும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவ ஊழியர்களை ஆன்மீக ரீதியில் போஷிப்பதற்காக மாநாடுகளில் ‘ஏற்ற வேளையில் உணவு’ கொடுக்கப்படுகிறது; இதில் கலந்துகொள்ளவும் பயனடையவும் நீங்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பாராக.—மத். 24:45.