நான் ஊழியத்தில் போதுமானதைச் செய்கிறேனா?
1. உண்மையுள்ள ஒரு கிறிஸ்தவருக்கு என்னென்ன கவலைகள் இருக்கலாம்?
1 உங்கள் மனதில் எப்போதாவது இந்தக் கேள்வி எழுந்திருக்கிறதா? வயோதிகம், உடல்நலப் பிரச்சினைகள், நிறைய குடும்ப பொறுப்புகள் காரணமாக முன்புபோல் ஊழியத்தில் அதிகம் ஈடுபட முடியாததை நினைத்து நீங்கள் சோர்வடையலாம். குடும்பத்தைக் கவனிப்பதிலேயே நேரமும் சக்தியும் விரயமாகிவிடுவதால் ஊழியத்தில் அதிகம் ஈடுபட முடியவில்லை என்ற குற்ற உணர்வு தன்னை வாட்டுவதாக மூன்று பிள்ளைகளையுடைய ஒரு சகோதரி எழுதினார். அப்படியானால், காரியங்களைச் சமநிலையோடு சீர்தூக்கிப்பார்க்க எது நமக்கு உதவும்?
2. யெகோவா நம்மிடமிருந்து எதை எதிர்ப்பார்க்கிறார்?
2 நம்மிடமிருந்து யெகோவா எதிர்பார்ப்பவை: ஊழியத்தில் அதிகம் ஈடுபட வேண்டும் என்றுதான் நாம் எல்லாருமே ஆசைப்படுகிறோம். பொதுவாக, நாம் நிறைய காரியங்களைச் செய்ய விரும்புவோம் ஆனால் எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியாது என்பதே உண்மை. நாம் ஊழியத்தில் அதிகமாக ஈடுபட விரும்புவதற்குக் காரணம், மனநிறைவளிக்கும் அளவுக்கு அதில் ஈடுபடவில்லை என்று உணருவதுதான். நம்முடைய வரம்புகளை யெகோவா நன்கு அறிவார் என்பதையும் நம்மால் முடியாததை அவர் எதிர்ப்பார்க்க மாட்டார் என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். (சங். 103:13, 14) அப்படியென்றால், அவர் நம்மிடமிருந்து எதை எதிர்ப்பார்க்கிறார்? முழுமூச்சோடு அவருக்குச் சேவை செய்யவும் நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை அவருக்குக் கொடுக்கவும் விரும்புகிறார்.—கொலோ. 3:23.
3. ஊழியத்தில் ஈடுபடுவதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளை எவ்வாறு சீர்தூக்கிப்பார்க்கலாம்?
3 நம்மால் செய்ய முடிந்தவை எவையென தீர்மானிப்பதற்கு எது உதவலாம்? நம் சூழ்நிலையை நியாயமாகச் சீர்தூக்கிப்பார்க்க உதவுமாறு யெகோவாவிடம் கேட்கலாம். (சங். 26:2) நம்மை பற்றி நன்கு தெரிந்த, அதே சமயத்தில் நாம் எந்த விஷயத்தில் சரி செய்ய வேண்டும் என்பதைத் தயங்காமல் சொல்கிற நம்பகமான முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ நண்பர் ஒருவரிடம்கூட உதவி கேட்கலாம். (நீதி. 27:9) நம் சூழ்நிலை மாறிக்கொண்டே இருப்பதால், அதை அவ்வப்போது சீர்தூக்கிப்பார்ப்பது நல்லது.—எபே. 5:10.
4. ஊழியம் சம்பந்தமாக பைபிள் அடிப்படையில் கொடுக்கப்படுகிற நினைப்பூட்டுதல்களை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
4 நினைப்பூட்டுதல்களை எவ்வாறு கருதுவது: ஓட்டப் பந்தயத்தின்போது, பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவார்கள். ஓட்ட பந்தைய வீரர்கள் சோர்வடைவதற்காக அல்ல, ஆனால் வெற்றி பெறுவதற்காகவே அவ்வாறு செய்வார்கள். அதேபோல, ‘அவசர உணர்வுடன் பிரசங்கிப்பதற்கு’ கூட்டங்கள், பிரசுரங்கள் வாயிலாக நமக்கு பைபிள் அடிப்படையில் உற்சாகமும் நினைப்பூட்டுதல்களும் அளிக்கப்படுகின்றன; அவை, நாம் எடுக்கிற முயற்சியெல்லாம் போதுமானதல்ல எனச் சுட்டிக்காட்டுவதற்காக அல்ல, ஆனால் நம்முடைய நன்மைக்காகவே அளிக்கப்படுகின்றன. (2 தீ. 4:2) நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்ய எப்போதும் முயன்றால், நம்முடைய “உழைப்பையும் . . . அன்பையும்” யெகோவா சந்தோஷத்துடன் நினைத்துப் பார்ப்பார் என்பதில் உறுதியாய் இருக்கலாம்.—எபி. 6:10.