சூழ்நிலைக்கு ஏற்றவாறு வளைந்துகொடுத்து ஊழிய முறைகளை மாற்றிக்கொள்கிறீர்களா?
1 நற்செய்தியை அறிவிக்கும் பரிசுத்தமான வேலையில் ஈடுபடும்போது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு வளைந்துகொடுத்து ஊழிய முறைகளை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்; இதை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதற்கு எப்போதுமே கடவுளுடைய ஞானத்தையும் அவருடைய வார்த்தையையும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கடவுள் கொடுத்த வேலையை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படிச் செய்தார்கள் என்றும், அவ்வாறு செய்யும்போது நடைமுறையான ஞானத்தை எப்படிக் காட்டினார்கள் என்றும் அப்போஸ்தலர் புத்தகத்திலுள்ள பதிவு காண்பிக்கிறது. (மத். 28:19, 20) உதாரணமாக, இக்கோனியாவில் எதிர்ப்பு தலைதூக்கியபோது பவுல் அந்த இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்திற்குச் சென்று பிரசங்கித்தார். (அப். 14:5, 6) இப்படி எதிர்ப்புகளைச் சந்தித்த சமயங்களிலெல்லாம் அவரும் அவருடைய நண்பர்களும் ஞானமாக வெவ்வேறு முறைகளில் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். (அப். 16:13) நாமும்கூட எதிரிகளுக்குப் பயப்படாமல் யெகோவாவுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிதலைக் காட்டுவோம் என்றாலும், சூழ்நிலை மாறும்போது ஊழியத்தில் வழக்கமான முறைகளையே விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்காமல் வெவ்வேறு முறைகளைக் கையாள வேண்டும். (பிலி. 1:28; அப். 5:29) இப்படிப்பட்ட நடைமுறையான ஞானத்தை நாம் காட்டுகிறோமா?
2 உண்மை வணக்கத்திற்கு எதிரிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதைச் சில மாநிலங்களில் நடந்துள்ள சமீபத்திய சம்பவங்கள் காட்டுகின்றன. மத வெறியர்கள் நம்மை எதிர்ப்பதற்கு எத்தனையோ உள்நோக்கங்கள் இருக்கலாம்; ஆனால் அவற்றைச் சாத்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, உண்மைக் கிறிஸ்தவர்களின் உள்நோக்கத்தைத் தவறாக எடைபோடும்படியும் நற்செய்தியைக் கேட்காதபடியும் மக்களை மோசம்போக்கக்கூடும். பவுல் எபேசுவில் இருந்தபோது அதேதான் நடந்தது. (அப். 19:23-28) எதிரிகளின் இப்படிப்பட்ட பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களின் மத்தியிலும், யெகோவாவின் பெயரையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி நாம் விடாமல் அறிவிக்கத் தீர்மானமாய் இருக்க வேண்டும், அதே சமயத்தில் நம் ஊழிய முறைகளைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும்.
3 நன்றாக ஒழுங்கமைத்தல்: ஊழியத்தின்போது பிரஸ்தாபிகளை முன்நின்று நடத்துகிற மூப்பர்களும் உதவி ஊழியர்களும் பிராந்தியத்திலுள்ள மக்களின் கவனத்தை அநாவசியமாக ஈர்க்காதபடி கவனமாயிருக்க வேண்டும்; யாரோடு யார் ஊழியம் செய்வது, எங்கே ஊழியம் செய்வது போன்ற எல்லாக் காரியங்களையும் பிராந்தியத்திற்குச் செல்வதற்கு முன்னதாகவே அவர்கள் ஒழுங்கமைக்க வேண்டும். சகோதர சகோதரிகள் கும்பலாகத் தெருமுனைகளில் நின்று எங்கே ஊழியம் செய்வது என்று கேட்டுக்கொண்டு, பிறருடைய கவனத்தைத் தேவையில்லாமல் ஈர்ப்பதற்குப் பதிலாக அப்படிப்பட்ட ஏற்பாடுகளை முன்னதாகவே செய்வது எவ்வளவு ஞானமான காரியம்! வெளி ஊழியத்தில் முன்நின்று நடத்துகிற சகோதரர், ஒவ்வொரு பிரஸ்தாபிக்கும் எந்தப் பிராந்தியம் நியமிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும்; இதற்கென்று அவர் முன்னதாகவே தயாரிக்க வேண்டும்; இப்படிச் செய்யும்போது தெருக்களில் பெரிய கும்பலாக நின்று பேசிக்கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியும்.
4 ஊழியத்தின்போது பிறருடைய கவனத்தை ஈர்க்காமல் இருப்பது ஞானமான காரியம். ஒரு காலத்தில், ஊழியத்தின்போது துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் நம்மால் பேச முடிந்தது, மக்களும் செவிகொடுத்துக் கேட்டார்கள்; இந்தக் காலத்திலோ அப்படியெல்லாம் பேசினால் ஒருவேளை ஊழியமே தடைபட்டுவிடலாம், ஏன் உங்களுக்கும் உங்களோடு இருப்பவர்களுக்கும் ஆபத்துகூட நேர்ந்துவிடலாம். ஆகவே, நம்முடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது முட்டாள்தனமாகும். அதனால், வெளி ஊழியத் தொகுதிகள் சிறுசிறு தொகுதிகளாகவே இருக்க வேண்டும். ‘படையெடுத்து’ போவதுபோல் பிராந்தியத்திற்குப் போகக் கூடாது. ஒவ்வொரு பிரஸ்தாபிக்கோ ஜோடிஜோடியான பிரஸ்தாபிகளுக்கோ ஒரு நாளைக்குத் தேவையான பிராந்தியத்தைக் கொடுங்கள்; அல்லது இரண்டு, மூன்று வாரத்திற்குத் தேவையான பிராந்தியத்தைக் கொடுங்கள். அவர்களுக்குச் சௌகரியமான நேரத்தில் அந்தப் பிராந்தியத்திற்குச் சென்று ஊழியம் செய்யலாம், ஆனால் பிராந்தியத்தில் எந்தளவு ஊழியம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தொகுதிக் கண்காணியிடம் தெரிவித்துவிட வேண்டும். தொகுதிக் கண்காணிகளும் வெளி ஊழியத் தொகுதிகளை முன்நின்று நடத்தும் எல்லா ஊழியர்களும் தாங்கள் கையாண்டு வந்திருக்கிற முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
5 ஊழியத்தில் வளைந்துகொடுக்கிறீர்களா?: முடிந்தபோதெல்லாம் நாம் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட வேண்டும் என்றாலும், சில சமயங்களில் சில இடங்களில் வேறு விதமான ஊழிய முறைகளைப் பயன்படுத்துவது ஞானமான காரியம். அல்லது, மற்ற நாடுகளில் நம் சகோதரர்கள் செய்வதுபோல் ஒரு தெருவில் ஒரேவொரு வீட்டில் மட்டும் பேசிவிட்டு வேறொரு இடத்திற்கு, வேறொரு தெருவுக்குச் சென்றுவிடலாம். உண்மைதான், இப்படிச் செய்வது நிறைய நேரமெடுக்கும், ஆனால் வீட்டுக்கு வீடு ஊழியத்தை நிறுத்துவதற்கு எதிரிகள் எடுக்கிற முயற்சிகளை அது ஒருவேளை முறியடித்துவிடலாம்.
6 வெளி ஊழியத்தில் ஈடுபடும்போது உங்களைச் சுற்றி என்ன நடக்கிறதென்று கவனிக்க ஜாக்கிரதையாக இருங்கள். அப்படியிருந்தால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை உங்களால் பகுத்துணர முடியும், இதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். நீங்கள் பேச ஆரம்பிக்கும்போது வீட்டுக்காரர் என்ன சொல்கிறார் என்பதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். எடுத்த எடுப்பில் வீட்டுக்காரரிடம் என்ன பேசப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தயாரித்துவந்து பேசும்போதும், வீட்டுக்காரர் என்ன சொல்கிறாரெனக் கவனித்துக் கேட்கும்போதும், வீட்டுக்காரர் சிநேகப்பான்மையானவரா இல்லையா என்பதை உங்களால் சட்டென்று கண்டுகொள்ள முடியும். நல்ல தயாரிப்பு உங்களைப் பாதுகாக்கும். நம்மைப் பற்றியும் நம்முடைய நோக்கத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள விருப்பமுள்ளவர்களுக்குத் தகுந்த சந்தர்ப்பங்களில், யெகோவாவின் சாட்சிகளுடைய பதில் என்ற துண்டுப்பிரதியைப் பயன்படுத்திப் பதிலளிக்கலாம்.
7 யெகோவா தேவன்மீது தொடர்ந்து சார்ந்திருங்கள். அவருடைய சக்தியைக் கேட்டு நீங்கள் ஜெபம் செய்தால் நிச்சயம் அவர் தருவார். (லூக். 11:13) நம்முடைய ஊழிய முறைகளை மாற்றிக்கொள்ள நாம் மனமுள்ளவர்களாக இருக்கும்போது, வளைந்துகொடுப்பதில் அவரது ஒப்பற்ற முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். யெகோவா தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக ஒரே ஒரு வழிமுறையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பதில்லை. என்ன தடைகள் வந்தாலும் சரி, தமது சித்தத்தின்படியே தமது நோக்கத்தை எப்படியாவது அவர் நிறைவேற்றுவார்.—ஏசா. 55:11; எபே. 1:9-11.