சபை புத்தகப் படிப்பில் என்னுடைய பைபிள் கதை புத்தகத்தைப் பயன்படுத்துதல்
1 கடவுளுடைய வார்த்தையிலுள்ள செய்தி வலிமை மிக்கதாய் இருப்பதால் உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை அது மாற்றியிருக்கிறது. (எபி. 4:12) பைபிள் பதிவுகளை வாசித்து மனத்திரையில் ஓடவிடும்போது, கடவுளுடைய வார்த்தை தனிப்பட்ட விதத்தில் நம்மீது தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது. கடவுளுடைய வார்த்தை, வரலாற்று தகவல்கள் அடங்கிய புத்தகம் மட்டும் அல்ல. அது ஜீவனுள்ளதாயும் தொடர்ந்து நிறைவேறி வருவதாயும் இருக்கிறது. சபை புத்தகப் படிப்பில் கடவுளுடைய வார்த்தையை நன்றாகப் படிப்பதற்கு என்னுடைய பைபிள் கதை புத்தகத்தைப் உபயோகிப்பது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2 அதிக சுவாரஸ்யமாகவும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் என்னுடைய பைபிள் கதை புத்தகம் அடிப்படை பைபிள் அறிவை அளிக்கிறது. பைபிள் சம்பவங்கள், அவை நிகழ்ந்த கால வரிசைப்படி அதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள அநேக வண்ண படங்கள் நமக்குப் பாடம் கற்பிக்க சிறந்த விதத்தில் துணை புரிகின்றன; பைபிள் சம்பவங்களைக் குறித்து அவை நம்மை ஆழ்ந்து யோசிக்க வைக்கின்றன. (சங். 77:12) சொல்லப்போனால், பயபக்தியாய் வாழ்ந்த நம் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றவர்களோடு சேர்ந்து “நடக்க” இந்தப் புத்தகம் நமக்கு உதவுகிறது. தேவ பக்தியுள்ள சாராள், ரெபெக்காள், உண்மையுள்ள மோவாபிய பெண்ணாகிய ரூத் போன்றோரை நம்மால் “பார்க்க” முடிகிறது. இயேசு கிறிஸ்து பேசுவதைக்கூட, உதாரணத்திற்கு அவருடைய மலைப் பிரசங்கத்தையும் நம்மால் “கேட்க” முடிகிறது. சபை புத்தகப் படிப்புக்கு நன்றாக தயாரிப்பதன் மூலம் பைபிளிலுள்ள இந்தச் சிறந்த போதனைகள் அனைத்திலிருந்தும் நாம் பயன் பெறலாம். கடவுளுடைய வார்த்தையைப் படிக்க வேண்டும் என்ற நம் தீர்மானத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கும் அதிலிருந்து அதிக இன்பத்தையும் பயனையும் பெற்றுக் கொள்வதற்கும் இந்தப் படிப்பு நிச்சயம் உதவும்.
3 பைபிள் கதை புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கதைக்கும் இரு தொகுதிகளாக கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதியில், கதையையும் அதிலுள்ள சம்பவங்களையும் சிந்திப்பதற்கு உதவும் கேள்விகள் உள்ளன. ஒரு கதையை முழுவதும் வாசித்த பிறகு, படிப்பு நடத்துபவர் இந்தக் கேள்விகளைக் கேட்பார். கதையின் அடிப்படையில் சுருக்கமாகவும் குறிப்பாகவும் பதில்களைச் சொல்ல வேண்டும். கதையில் சம்பவங்கள் நிகழ்ந்த வரிசைப்படி கேள்விகள் எப்போதும் இருக்காது என்பதை தயவுசெய்து கவனத்தில் வையுங்கள்.
4 பிறகு படிப்பை நடத்துகிறவர், கதையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களைச் சிறப்பித்துக் காட்ட இரண்டாம் தொகுதியிலுள்ள கேள்விகளைக் கேட்பார். கூடுதல் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் முன்பு, வசனப் பகுதிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் அவை நீண்ட பகுதிகளாக இருக்கின்றன. புத்தகப் படிப்புக்குத் தயாரிக்கும்போதே இவற்றை அனைவரும் வாசித்திருக்க வேண்டும். கூடுதல் கேள்விகள் ஒவ்வொன்றிற்குப் பிறகும் அநேக வசனங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பதில்களைக் கண்டுபிடிக்க இந்த வசனங்கள் உதவியாக இருக்கின்றன. கதையில் விவரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் குறிப்பிடப்பட்ட வசனங்களுக்கும் உள்ள தொடர்பைத் தெளிவாக விளக்கும் பதில்களை படிப்பை நடத்துபவர் வரவழைக்க வேண்டும். பைபிளிலுள்ள தகவலிடமும் அதன் போதனைகளை எப்படிப் பின்பற்றலாம் என்பதிடமும் சபையாரின் கவனத்தை ஒருமுகப்படுத்த அவர் உதவ வேண்டும்.
5 இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கப்பட்டுள்ள அறிமுகப் பகுதி புத்தகப் படிப்பின்போது தனி பாடமாக சிந்திக்கப்படும். ஒவ்வொரு அறிமுகப் பகுதியையும் வாசித்த பிறகு, படிப்பை நடத்துபவர், தான் தயாரித்துள்ள பொருத்தமான கேள்விகளைக் கேட்பார். அறிமுகப் பகுதியை முதலில் சிந்திப்பது அடுத்துவரும் கதைகளைச் சிந்திப்பதற்கு நம்மைத் தயார்படுத்தும். இந்தப் புத்தகத்தைப் படிப்பது, நம் மனதிலும் இருதயத்திலும் ஆன்மீக குணங்களை பதிய வைப்பதற்கும் மகத்தான நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வருவதற்கும் நமக்கு உதவுவதாக.—யாக். 4:8.