ஊழியத்தில் பிற மொழி பேசுவோரை சந்திக்கையில்
1 உலகெங்குமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகள், தங்கள் சபையில் பயன்படுத்தாத மொழிகளைப் பேசுகிற அநேகர் நற்செய்திக்கு ஆர்வம் காட்டுவதை இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்ய பிற மொழி தொகுதிகளையும் சபைகளையும் உருவாக்குவது அவசியமென அநேக கிளை அலுவலகங்கள் கண்டிருக்கின்றன. ஒரே பகுதியில் பல மொழி பேசுகிறவர்கள் வசிப்பதால், வெவ்வேறு மொழி சபைகள் அதே பிராந்தியத்தில் ஊழியம் செய்யலாம். பிரசங்க வேலை கிரமமாகச் செய்யப்படுவதற்கு இந்த சபைகள் எப்படி ஒத்துழைக்கலாம்?—1 கொ. 14:33.
2 நல்ல ஒத்துழைப்பு: தெரு ஊழியம் செய்யும்போதோ சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போதோ ஒரு பிரஸ்தாபி யாரை வேண்டுமானாலும் அணுகி பேசலாம்; பிற மொழி பேசுபவரை சந்தித்தால், அவர் வாசிக்க விரும்பும் மொழியில் பிரசுரத்தை அளிக்கலாம். ஆனால், வெவ்வேறு மொழி தொகுதிகளோ சபைகளோ ஒரே பிராந்தியத்தில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது பொதுவாக ஒரு பிரஸ்தாபி தன் சபை பயன்படுத்தும் மொழியைப் பேசுவோரிடமே கவனம் செலுத்த வேண்டும். வெவ்வேறு சபைகள் ஒரே பிராந்தியத்தில் ஊழியம் செய்யும்போது எல்லா விவரங்களையும் பற்றிய முழுமையான பதிவை வைத்திருப்பது மிக முக்கியம். ஊழியக் கண்காணிகள் ஒருவரோடொருவர் கலந்துபேசி அனைவருக்கும் பயனுள்ள விதத்தில் காரியங்களை ஒழுங்கமைக்க வேண்டும். (நீதி. 11:14) என்றாலும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒரு பிரஸ்தாபி சந்திக்கிற நபர் பேசும் மொழியில் பக்கத்தில் ஒரு சபை இல்லாவிட்டால் அவருக்கு சாட்சிகொடுக்கவும், ஆர்வம் காட்டினால் அவரைத் திரும்பவும் போய் சந்திக்கவும் வேண்டும்.
3 செய்யும் ஊழியம் ஒன்றே: வெவ்வேறு சபைகள் ஒரே பிராந்தியத்தில் ஊழியம் செய்வதாக இருந்தால் அதை எப்படி ஒழுங்கமைக்க வேண்டும்? அந்தப் பிராந்தியத்தில் எந்த மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, எந்த மொழி சபைகள், எப்போது ஊழியம் செய்ய வேண்டும் என்பதை ஊழியக் கண்காணிகள் தீர்மானிப்பார்கள். அதற்கேற்ப பிராந்திய வரைபட அட்டைகள் அந்தந்த சபைகளுக்குக் கொடுக்கப்படும். பிரஸ்தாபிகள், பிராந்திய அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைக்குள் ஊழியம் செய்வார்கள். சபையிலிருந்து பிராந்திய வரைபட அட்டையைப் பெறாமல் எந்தப் பகுதியிலும் ஊழியம் செய்ய மாட்டார்கள். கிறிஸ்தவ அன்புக்கு மொழி ஒரு தடையாக இல்லாவிட்டாலும், நாம் அனைவருமே பிராந்தியத்தில் உள்ளவர்களின் தேவைக்கு முக்கியமாய் கவனம் செலுத்துவோம். (யோவா. 13:34, 35) ஒரு பிராந்தியத்தில் முழுமையாக ஊழியம் செய்து முடிப்பதில், முன்நின்று வழிநடத்துபவர்கள் நியாயத்தன்மையையும் ஒழுங்கையும் அன்பையும் வெளிக்காட்டுவார்கள்.—யாக். 3:17, 18.
4 வெவ்வேறு மொழி பேசுபவர்கள் நற்செய்திக்குச் செவிசாய்ப்பார்கள் என பைபிள் தீர்க்கதரிசனம் உரைத்தது. (வெளி. 14:6, 7) அனைவரும் நன்கு ஒத்துழைக்கையில், வெவ்வேறு சபைகளைச் சேர்ந்தவர்கள் ஒரே வீட்டில் போய் சாட்சி கொடுப்பதைத் தவிர்க்கலாம்; அப்போது பிற மொழி பேசுகிறவர்கள் உட்பட புதியவர்கள் அநேகருக்கு நற்செய்தியை அறிவிக்க முடியும்.—எபே. 4:16.
[கேள்விகள்]
1. பிராந்தியத்தில் ஊழியம் செய்யும்போது ஏன் அதிக ஒத்துழைப்பு தேவைப்படுகிறது?
2. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது நம் பிராந்தியத்தைப் பகிர்ந்துகொள்ளும் பிற மொழி தொகுதியுடன் அல்லது சபையுடன் நாம் எப்படி ஒத்துழைக்கலாம்?
3. பிற மொழி தொகுதிகள் அல்லது சபைகள் ஒரே பிராந்தியத்தில் ஊழியம் செய்வதாக இருந்தால், அதை எப்படி ஒழுங்கமைக்க வேண்டும்?
4. என்ன தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருகிறது?