‘சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருங்கள்’
1 பிரசங்க வேலையில் ஒரு புதிய அணுகுமுறையை இயேசு அறிமுகப்படுத்தியபோது தம்முடைய சீஷர்களுக்குப் பயிற்சி அளிக்க நேரம் எடுத்துக்கொண்டார். (மத். 10:5-14) நாம் அனைவருமே ஓய்வொழிச்சல் இன்றி வேலை செய்கிறோம் என்பது உண்மைதான். இருந்தாலும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொள்ளும் முன்பு தயாரிப்பதற்கு சில நிமிடங்களையாவது ஒதுக்குவது நல்ல பலன்களைப் பெற நமக்கு உதவும்.—2 கொ. 9:6.
2 எப்படித் தயாரிப்பது: நாம் அளிக்கவிருக்கும் பிரசுரத்தில் உள்ள தகவலை அறிந்திருப்பது நல்ல தயாரிப்புக்கான முதற்படியாகும். நம் பிராந்தியத்தில் உள்ளவர்களைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும்? அவர்கள் என்னென்ன பிரச்சினைகளைக் குறித்து கவலைப்படுகிறார்கள்? பொதுவாக எந்த மதத்தினர் அதிகமாய் இருக்கிறார்கள்? இவர்களிடம் எப்படிப் பேசலாம் என்பதைத் தெரிந்துகொள்ள நம் ராஜ்ய ஊழியத்தில் அல்லது வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் உள்ள மாதிரி அணுகுமுறைகளைப் பார்க்கலாம்.
3 ஊழியக்கூட்டத்தில் இடம்பெறும் நடிப்புகளைக் கூர்ந்து கவனிப்பதும்கூட உங்களுக்கு உதவியாயிருக்கும். நம்முடைய அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாகி வருகையில் தயாரிப்பதற்குக் குறைவான நேரமே நமக்குத் தேவைப்படும். என்றாலும், ஒவ்வொரு முறையும் ஊழியத்திற்குப் போகும் முன் நாம் என்ன பேசப் போகிறோம் என்பதைக் கொஞ்சம் யோசித்து, நம்முடைய அணுகுமுறையில் தொடர்ந்து மாற்றங்களைச் செய்தால் நாம் அதிக திறம்பட்டவர்களாய் ஆவோம். அதோடு, நாம் ஊழியத்திற்கு எடுத்துச் செல்லும் பையில் நமக்குத் தேவையான எல்லா பிரசுரங்களும் இருக்கின்றனவா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
4 நாம் தயாரித்திருக்கும் அணுகுமுறையை மறக்காதிருக்க எது நமக்கு உதவும்? அதற்கு ஒரு வழி, அதைச் சத்தமாகச் சொல்லி பழகிப் பார்ப்பதாகும். குடும்பப் படிப்பின்போது சிலர் அதைப் பழகிப் பார்க்கிறார்கள். இன்னும் சிலர் அந்த அணுகுமுறையை ஒரு சிறிய காகிதத்தில் சுருக்கமாக எழுதி வைத்துக்கொள்வது உதவியாயிருக்கும் என நினைக்கிறார்கள்; இதை, ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீட்டிற்குப் போகும் முன் எடுத்துப் பார்க்கிறார்கள்.
5 ஏன் பயனுள்ளது: நன்கு தயாரித்து செல்கையில் ஊழியத்தில் இன்னும் திறம்பட்ட விதத்தில் பேச முடிவதோடு சந்தோஷமும் கிடைக்கிறது. இப்படிச் செய்வது, ஊழியத்தில் பதட்டப்படாமல் நிதானமாய்ப் பேச உதவுகிறது. அதோடு, நம்மிடம் யாராவது கேள்வி கேட்டாலோ நம்மை பழித்துப் பேசினாலோ தகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களுக்குச் சாந்தமாய்ப் பதிலளிப்போம். இது, நாம் என்ன பேசப்போகிறோம் என்பதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல் வீட்டுக்காரரிடம் அதிக கவனம் செலுத்தவும் உதவுகிறது. மேலும், நாம் அளிக்கவிருக்கும் பிரசுரத்தில் உள்ள விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பது உற்சாகம் ததும்ப பேசி அதை அளிக்க உதவும்.
6 ‘சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கும்படி’ பைபிள் நம்மை ஊக்கப்படுத்துகிறது. (தீத். 3:1) நற்செய்தியைப் பிரசங்கிப்பதைவிட சிறந்த வேலை வேறேதேனும் இருக்க முடியுமா? ஊழியத்திற்கு நன்கு தயாரித்து செல்வதன்மூலம் நம் செய்தியைக் கேட்கிற வீட்டுக்காரருக்கு மரியாதை கொடுக்கிறோம். அதோடு, யெகோவாவின் பிரதிநிதிகளாகச் செல்வதால் அவருக்கும் மரியாதை கொடுக்கிறோம்.—ஏசா. 43:10.