ஆன்மீக விருந்தை ருசித்து மகிழ்வதற்கான நேரம்
1 யெகோவா தம்முடைய ஊழியர்களின் ஆன்மீக தேவைகளை அன்புடன் பூர்த்தி செய்கிறார். உலகில் பெரும்பாலோர் ஆன்மீக ரீதியில் பட்டினி கிடக்கும்போது நாமோ வயிறார சாப்பிடுகிறோம். (ஏசா. 65:13) ஆன்மீக ரீதியில் நம்மை போஷிப்பதற்கு யெகோவா பயன்படுத்தும் ஒரு வழிதான் வருடந்தோறும் நடைபெறும் மாவட்ட மாநாடுகள். “கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுதல்” என்ற பொருளில் நடக்கவிருக்கும் மாவட்ட மாநாட்டில் எல்லா நாட்களும் கலந்துகொள்ள நீங்கள் தயாராகி வருகிறீர்களா? சுவையான, ஊட்டச்சத்துமிக்க ஆன்மீக விருந்து உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 முன்னதாகவே திட்டமிடுங்கள்: “திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்.” (நீதி. 21:5, பொ.மொ.) ஆகவே, மாநாட்டில் மூன்று நாட்களும் கலந்துகொள்ள நீங்கள் திட்டமிடுகையில், விடுப்பு எடுக்க வேண்டியிருந்தால் அதைக் குறித்து முதலாளியிடம் இப்போதே பேசுங்கள், தள்ளிப் போடாதீர்கள். மாநாட்டு நகரத்தில் தங்க வேண்டுமென்றால், அதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டீர்களா? சகோதரர்களோடு சேர்ந்து மாநாட்டு வளாகத்திலேயே சாப்பிடுவதற்காக எளிய மதிய உணவை எடுத்துச் செல்ல நீங்கள் திட்டமிட வேண்டியிருக்கும். இருக்கைகளைக் கண்டுபிடிக்கவும் ஆரம்ப பாட்டிலும் ஜெபத்திலும் கலந்துகொள்ளவும் வசதியாக ஒவ்வொரு நாளும் சீக்கிரமாகவே வருவதற்கு ஏற்பாடுகளை செய்யுங்கள்.
3 நம்முடைய உடை அடக்கமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். (1 தீ. 2:9, 10) மாவட்ட மாநாடுகள் அது நடக்கிற இடங்களில் உள்ளவர்களுக்கு சாட்சி கொடுக்க அருமையான வாய்ப்பளிக்கின்றன. மாநாட்டு நகரத்தில் கண்ணியமாக உடுத்தியிருப்பதன் மூலமும் மாநாட்டு பேட்ஜ்களை அணிந்திருப்பதன் மூலமும் யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதோர் மத்தியில் தனித்து விளங்குவோம், அவர்கள் மனதில் நம்மைப் பற்றிய நல்லெண்ணத்தையும் உருவாக்குவோம்.
4 கவனமாக செவிகொடுங்கள்: இந்த ஆன்மீக விருந்தில் ஒரு சிறு துணிக்கையைக்கூட நாம் தவறவிட நிச்சயம் விரும்பமாட்டோம். (நீதி. 22:17, 18) வசனங்கள் வாசிக்கப்படுகையில் நம் பைபிளில் அவற்றைக் கவனிப்பதும் சுருக்கமாகக் குறிப்புகளை எழுதிக் கொள்வதும் கவனம் சிதறாமல் நிகழ்ச்சியில் மனதை ஒருமுகப்படுத்த நமக்கு உதவும். பிறகு மாலை வேளையில், நாம் எழுதிய முக்கிய குறிப்புகளை மற்றவர்களோடு கலந்து பேசலாம். மாநாட்டு நிகழ்ச்சியின்போது சில இளைஞர்கள் சேர்ந்து உட்கார்ந்துகொண்டோ வெளியே நின்றுகொண்டோ பேசுவதும் செல் ஃபோனில் குறுந்தகவல்களை அனுப்புவதும் சமீப வருடங்களில் கவனிக்கப்பட்டுள்ளது. நம்முடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தாலும் சரி பருவ வயதினராக இருந்தாலும் சரி, நிகழ்ச்சியின்போது தனியாக மற்ற இளைஞருடன் உட்காரவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது; குடும்பமாக உட்கார்ந்து நிகழ்ச்சியைக் கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
5 தோழமையை அனுபவியுங்கள்: சிநேகிதர்களோடு சேர்ந்து சுவையான உணவை சுவைப்பது அதிக சந்தோஷத்தைத் தருகிறது. (நீதி. 15:17) அதேபோல, மாநாட்டில் நம் சகோதர சகோதரிகளோடு கூட்டுறவு கொள்வது அதிக சந்தோஷத்தைத் தருகிறது. ஆகவே, நிகழ்ச்சி நேரம் போக மற்ற சமயங்களில் அங்கு வந்திருப்பவர்களிடம் நாமே போய் பேசிப் பழகுவது எவ்வளவு இன்பமானதாய் இருக்கும்! (சங். 133:1) இசையோடு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு மாநாட்டு சேர்மன் அனைவரையும் அமரும்படி கேட்டுக்கொள்ளும்போது பேசுவதை நிறுத்திவிட்டு இருக்கைகளில் போய் உட்கார வேண்டும்.
6 சாட்சி கொடுப்பதற்கு எப்போதும் தயாராய் இருங்கள்: சாட்சி கொடுப்பதற்கு மாநாடுகள் எப்போதுமே சிறந்த வாய்ப்புகளை அளிக்கின்றன. மாநாட்டுக்கு வந்தவர்கள் நிகழ்ச்சிக்குப் பிறகு சாப்பிடுவதற்காக ஹோட்டல்களுக்குப் போகும்போது அங்குள்ள வெய்ட்டர்களோ மற்றவர்களோ மாநாட்டு பேட்ஜிலுள்ள விஷயத்தைப்பற்றி விசாரிப்பார்கள். இது அவர்களிடம் பேசவும், சத்தியத்தைக் குறித்து நன்கு சாட்சிகொடுக்கவும் வாய்ப்பளித்திருக்கிறது. இப்படி விசாரித்தவர்களை மாநாட்டுக்கு அழைத்ததால் சிலர் அதில் கலந்துகொண்ட அனுபவங்களும் உண்டு.
7 கிறிஸ்தவ நன்நடத்தை, கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுவதற்கு அடையாளம்: மாநாட்டுக்கு வரும் சிலர் அட்டன்டன்டுகளுடன் ஒத்துழைக்க மறுத்ததும், கிறிஸ்தவர்கள் பேசத்தகாத வார்த்தைகளை பேசியதும்கூட கவனிக்கப்பட்டிருக்கிறது. “எனக்கு,” “நான்” என்ற போக்கு நற்காரியங்களைச் செய்கிறவர்களாக நம்மை நிச்சயமாகவே அடையாளம் காட்டாது; அதோடு, யெகோவா தேவனுக்குப் புகழையும் சேர்க்காது. மாறாக, அன்பு, பொறுமை, ஒத்துழைக்கும் மனப்பான்மை ஆகியவற்றை வெளிக்காட்டுவதன் மூலம் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிறோம் என்பதை நம்முடைய வாழ்க்கை முறை காட்டுவதாக. (கலா. 5:22, 23, 25) மேலும், இருக்கைகளைப் பிடிக்கும் பிரச்சினை இன்னும் தொடருகிறது. காலை 8 மணிக்கு மாநாட்டு அரங்கத்தின் கதவு திறந்த உடன், “வசதியான” இருக்கைகளைப் பிடிப்பதற்காக சில சகோதர சகோதரிகள், நெருக்கியடித்துக்கொண்டு ஓடுவதும், தள்ளுவதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நடந்துகொள்வதால் சிலருக்குக் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே பெரும்பாலான இருக்கைகள் பிடித்து வைக்கப்படுவதால், குடும்பமாக வெகு முன்னதாகவே வந்தபோதிலும் தங்களுக்கு இருக்கைகளே கிடைக்கவில்லையென சில சகோதரர்கள் தெரிவித்தார்கள். பெரும்பாலும் கதவு திறக்கப்படும் சமயத்தில் குடும்பத்தில் ஒருவர் வந்து குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என வரிசை வரிசையாக இருக்கைகளைப் பிடித்து வைக்கிறார்கள். அன்புக்குத் துளிகூட தன்னலம் இல்லை என்பதாக விளக்கப்படுகிறது. தம்முடைய சீஷர்களை அடையாளம் கண்டுகொள்வதற்குரிய முக்கிய வழி தன்னலமற்ற அன்பே என்று கிறிஸ்து இயேசுவும் குறிப்பிட்டார். (யோவா. 13:35) அநேக இருக்கைகளைப் பிடித்து வைப்பது, இப்படிப்பட்ட கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டுவதாகுமா? கிறிஸ்து பின்வருமாறு சொன்னதைப் பின்பற்ற கிறிஸ்தவ அன்பு நம்மைத் தூண்ட வேண்டும்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—மத். 7:12.
8 நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவும், மாநாட்டு வளாகத்தை ஏற்பாடு செய்யவும், அங்கு செயல்படும் பல இலாகாக்களை ஒழுங்கமைக்கவும், பேச்சுகளைத் தயாரிக்கவும் ஆயிரக்கணக்கான மணிநேரங்கள் செலவிடப்பட்டிருக்கின்றன. இந்த ஆன்மீக விருந்தைத் தயாரிப்பதற்கு அன்போடு எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் யெகோவா தம் மக்கள்மீது எந்தளவுக்கு அக்கறை வைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. நாம் எல்லாரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ஆன்மீக விருந்தைத் திருப்தியாய் அனுபவிப்போமாக. உலகத்தாரைப் போலில்லாமல், நாம் ‘மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்போம்.’—ஏசா. 65:14.
[கேள்விகள்]
1. யெகோவா தம்முடைய ஊழியர்களின் ஆன்மீக தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்கிறார்?
2. மாநாட்டுக்குத் தயாராகையில் என்னென்ன காரியங்களை முன்னதாகவே திட்டமிட வேண்டும்?
3. நாம் எத்தகைய உடை உடுத்த திட்டமிட வேண்டும்?
4. நாமும் நம் குடும்பத்தாரும் நிகழ்ச்சியிலிருந்து முழுமையாக பயனடைய எது உதவும்?
5. மாநாட்டில் அதிக சந்தோஷத்தைப் பெற நாம் என்ன செய்யலாம்?
6. மாநாட்டு நகரத்தில் எப்படிச் சாட்சி கொடுக்கலாம் என்பதைக் குறிப்பிடும் அனுபவம் இருந்தால் சொல்லவும்.
7. மாநாட்டு அரங்கத்தில் கிறிஸ்தவ நன்நடத்தையை வெளிக்காட்ட எந்த பைபிள் நியமம் நம்மைத் தூண்ட வேண்டும்?
8. வரவிருக்கும் மாவட்ட மாநாட்டில் நாம் ஏன் கலந்துகொள்ள வேண்டும்?
[பக்கம் 5-ன் பெட்டி]
மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
◼ நிகழ்ச்சி நேரம்: மூன்று நாட்களும் காலை 9:20-க்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். காலை 8:00 மணிக்கு கதவுகள் திறக்கப்படும். ஆரம்ப ராஜ்ய இசை துவங்குகிறபோது நாம் எல்லாரும் நம்முடைய இருக்கையில் அமர வேண்டும். இது கண்ணியமான விதத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாக உதவும். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் மாலை 4:55-க்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00-க்கும் நிகழ்ச்சிகள் முடிவடையும்.
◼ வாகனம் நிறுத்துமிடம்: வாகனம் நிறுத்துமிடமுள்ள எல்லா மாநாட்டு வளாகங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும். வாகனங்களை நிறுத்துவதற்கு மாநாட்டு பேட்ஜ் கார்டுகள் அடையாள அட்டைகளாக பயன்படுத்தப்படும்.
◼ இருக்கைகளைப் பிடித்து வைப்பது: உங்களுடைய காரில் பயணிப்பவர்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே இருக்கைகளைப் பிடித்து வைக்கலாம்.
◼ மதிய உணவு: மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே செல்லாதபடிக்கு தயவுசெய்து மதிய உணவை கையோடு எடுத்து வாருங்கள். உங்கள் சீட்டிற்கு அடியில் வைக்க முடிந்த சிறிய டிபன் கேரியர்களை எடுத்து வரலாம். பெரிய பெரிய டிபன் கேரியர்கள், கண்ணாடி பாத்திரங்கள், மதுபானங்கள் ஆகியவை மாநாட்டு மன்றத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டா.
◼ நன்கொடைகள்: ராஜ்ய மன்றத்திலோ மாநாட்டு வளாகத்திலோ உலகளாவிய வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் அளிப்பதன் மூலம் மாநாட்டு ஏற்பாடுகளுக்கு நாம் நன்றி உணர்வைக் காட்டலாம். மாநாட்டில் செக்குகளை நன்கொடையாக அளிக்கும்போது அவற்றை “Watch tower” என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
◼ விபத்துகளும் அவசர நிலைகளும்: மாநாட்டு வளாகத்தில் மருத்துவ அவசர நிலை ஏற்படும்போது அருகிலுள்ள அட்டென்டண்டிடம் தயவுசெய்து சொல்லுங்கள்; அவர் உடனடியாக முதலுதவி இலாகாவிடம் சொல்லுவார்; அப்போதுதான் சூழ்நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையும், என்ன உதவி அளிக்க வேண்டும் என்பதையும் வளாகத்தில் முதலுதவி அளிக்க தகுதி பெற்றிருப்பவரால் தீர்மானிக்க முடியும். தேவைப்பட்டால் முதலுதவி இலாகாவினர் 102 என்ற எண்ணில் தொடர்புகொள்வார்கள்.
◼ காது கேளாதோருக்கு: கோவையிலும் கொச்சியிலும் நடைபெறும் மாநாடுகளிலும் பெங்களூரில் நடைபெறவிருக்கும் ஆங்கில மாநாட்டிலும் நிகழ்ச்சிகளை சைகை மொழியில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
◼ குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகள்: குழந்தைகளை உட்காரவைத்து தள்ளிச் செல்லும் வண்டிகளை மாநாட்டு வளாகத்திற்கு எடுத்துவரக் கூடாது. ஆனாலும், பெற்றோரின் அருகிலுள்ள இருக்கையோடு சேர்த்து பொருத்தக்கூடிய குழந்தை-பாதுகாப்பு இருக்கைகளை எடுத்து வரலாம்.
◼ சென்ட்டுகளின் உபயோகம்: சில மாநாடுகள் நாலா பக்கமும் மூடியிருக்கும் அரங்கங்களில் நடைபெற இருக்கின்றன. அவற்றில் செயற்கை முறை காற்றுப்போக்கு வசதிகளே உள்ளன. அத்தகைய அரங்கங்களில் நடைபெறும் மாநாட்டுக்குச் செல்பவர்கள், சுவாசக் கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாதபடி, மூக்கைத் துளைக்கும் சென்ட்டுகளை அளவாகப் பயன்படுத்துவது தயவான செயலாகும்.—1 கொ. 10:24.
◼ மறுசந்திப்புப் படிவங்கள்: மாநாட்டு சமயத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் பலனாக ஆர்வமுள்ள எவரையாவது நாம் கண்டுபிடித்திருந்தால், ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43) படிவத்தில் குறிப்பிட வேண்டும். பிரஸ்தாபிகள் இந்தப் படிவங்களில் ஒன்றிரண்டை எடுத்துவர வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாநாட்டு புத்தக இலாகாவிலோ, வீடு திரும்பிய பின் உங்கள் சபை செயலரிடமோ சமர்ப்பிக்கலாம்.—பிப்ரவரி 2005 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 6-ஐக் காண்க.
◼ ரெஸ்டாரன்ட்டுகள்: உணவகங்களில் நல்ல நடத்தையின் மூலம் யெகோவாவின் பெயருக்கு மகிமை சேர்ப்போம். பல இடங்களில், சேவைக்கு ஏற்ப 10 சதவீத டிப்ஸ் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.
◼ ஓட்டல்கள்: (1) தயவுசெய்து தேவைக்கு அதிகமான அறைகளை புக் செய்யாதீர்கள், அனுமதிக்கப்படுவதற்கும் அதிகமான ஆட்களை உங்களுடன் தங்க வைக்காதீர்கள். (2) புக் செய்த அறையை ரத்து செய்ய வேண்டுமென்றால் உடனடியாக ஓட்டல் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள். (3) லக்கேஜை எடுத்துச் செல்ல உதவும் தள்ளுவண்டிகளை உடனடி உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள், மற்றவர்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக உடனடியாக அவற்றைத் திருப்பிக்கொடுங்கள். (4) சமைக்க அனுமதிக்கப்படாத அறைகளில் சமைக்காதீர்கள். (5) ஒவ்வொரு நாளும் அறையை ஒழுங்குபடுத்த உதவும் ஹௌஸ்கீப்பருக்கு டிப்ஸ் கொடுங்கள். (6) ஓட்டலில் தங்கும் நபர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற காலை உணவு, காபி அல்லது ஐஸ் போன்றவற்றை நாம் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. (7) எல்லா சமயத்திலும் ஓட்டல் பணியாளருடன் நடந்துகொள்ளும் விதத்தில் ஆவியின் கனியை வெளிக்காட்டுங்கள். (8) சிபாரிசு செய்யப்படுகிற தங்குமிடங்களுக்கான பட்டியலில் அறை வாடகையாக குறிப்பிடப்பட்டுள்ள தொகை, வரிக் கட்டணம் சேர்க்கப்படாத ஒரு நாள் வாடகையாகும். நீங்கள் கேட்காத அல்லது பயன்படுத்தாத பொருள்களுக்கென கூடுதல் தொகையைச் செலுத்தச் சொன்னால் அவற்றைச் செலுத்தாமல், உடனடியாக மாநாட்டிலுள்ள அறைவசதி இலாகாவுடன் தொடர்புகொள்ளுங்கள். (9) உங்கள் ஓட்டல் அறை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை எழுந்தால், அறைவசதி இலாகாவிடம் மாநாட்டின்போதே மறக்காமல் தெரிவியுங்கள்.