தைரியத்தோடும் விவேகத்தோடும் ஊழியம் செய்யுங்கள்
பாதுகாத்திடுங்கள்
1 தற்போதைய சூழ்நிலைகளில் ஊழியம்செய்ய நம்மைத் தயார்படுத்திக்கொள்ளுதல்: நாம் ஊழியம் செய்யும்போது, சர்வலோக பேரரசரான யெகோவா தேவனும், சபையின் தலைவராகவும் ஆட்சிபுரியும் அரசராகவும் இருக்கிற கிறிஸ்து இயேசுவும் நம்மோடு இருக்கிறார்கள். பைபிளின் வாயிலாகவும் இயேசு பயன்படுத்துகிற ‘உண்மையுள்ள ஊழியக்காரன்’ தரும் அருமையான அறிவுரைகள் வாயிலாகவும் நன்கு தயார்படுத்தப்பட்ட நிலையில் நாம் இருக்கிறோம்.—மத். 24:45-47; 28:20; 2 தீ. 3:16.
2 ‘இவ்வுலகத்தின் காட்சி தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.’ இப்போதெல்லாம் ஊழியத்தில், அதுவும் முக்கியமாக வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபடுகையில் பிரச்சினைகள் ஏற்படுவது அதிகமாகி வருகிறது. (1 கொ. 7:31, NW) முதல் நூற்றாண்டிலும், சூழ்நிலைகள் மாறியபோது ஆரம்ப கால சீஷர்கள் தாங்கள் ஊழியம் செய்யும் விதத்தில் மாற்றத்தைச் செய்ய வேண்டியிருந்தது. (லூக். 22:35, 36) நாம் விவேகத்துடன் ஊழியம் செய்ய வேண்டியிருந்தாலும்கூட எதைக் கண்டும் நாம் பயப்படக் கூடாது; மாறாக, யெகோவா பலத்தைத் தருவாரென உறுதியோடிருக்க வேண்டும்.—பிலி. 1:28.
3 கடிதங்கள், ஊழியக் கூட்டப் பகுதி போன்றவற்றின் வாயிலாக, எதிர்ப்பைச் சந்திக்கையில் எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்பது பற்றிய பயனுள்ள தகவல்கள் 2003-ல் கொடுக்கப்பட்டன. எனினும், இப்போது அந்த வழிமுறைகளில் காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. முன்பு கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதை அநேக சபைகள் காலப்போக்கில் நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது; ஆனால், ஊழியத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருவதால் இப்போது அவற்றைப் பின்பற்ற வேண்டியது அவசியம். நாட்டின் எல்லா இடங்களிலும் ஊழியத்திற்கு ஒரே விதமான அல்லது ஒரே அளவு எதிர்ப்பு கிளம்புவதில்லை. எனவே, நாம் அனைவருமே உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். ஏற்கெனவே நிலவிவரும் பிரச்சினைகளை சமாளிப்பது மட்டுமல்லாமல், புதிதாய் எந்தப் பிரச்சினையும் எழாமல் தவிர்க்கவும் நாம் விரும்புகிறோம் என்பதை நினைவில் வையுங்கள். நிலைமை இப்படியிருப்பதால், தற்சமயம் ஊழியத்தில் பிரச்சினைகளை நாம் எதிர்ப்படாதிருந்தாலும் இந்தக் கட்டுரையிலுள்ள ஆலோசனைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
4 இந்தக் கட்டுரையில் பைபிளின் அடிப்படையிலும் நடைமுறையான விதத்திலும் ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன; இது தவிர, சட்டம் சார்ந்த தகவலையும் கிளை அலுவலகம் சீக்கிரத்தில் அளிக்கும். இந்தத் தகவல், சட்டப்படி நமக்கு இருக்கும் உரிமைகளையும் பிரசங்கிக்கும்போது கைதுசெய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமான பொதுவான விவரங்களையும் எல்லாரும் தெரிந்துகொள்ள உதவும். இந்தத் தகவல் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்குப் பயன் அளிக்கும்; அதோடு, உங்களுக்கு உதவுவதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை சபையிலுள்ள மூப்பர் குழு தெரிந்துகொள்வதற்கும் இது துணைபுரியும்.
5 எதிர்ப்பைச் சந்திக்கத் தயாராக இருக்கவும் தனிப்பட்ட விதத்தில் உத்தமத்தோடு நிலைத்திருக்கவும் வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறோம். (2 தீ. 3:12) எனினும், கிளை அலுவலகம் எப்போதும் நமக்குப் பக்கபலமாய் இருக்கும் என்பதில் நாம் எல்லாரும் உறுதியாய் இருக்கலாம். நம்முடைய சகோதரர்களில் அநேகர், கலக கும்பல்களின் எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறார்கள், ‘ஆலோசனைச் சங்கத்திற்கு [அதாவது, நீதிமன்றத்திற்கு]’ அல்லது காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்; இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது எதிர்ப்பட்டால், மத்தேயு 10:17-20-ல் சொல்லப்பட்டுள்ள ஆலோசனையை மனதில் கொள்ளுங்கள். மூப்பர்கள், ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றுவதோடுகூட, கிளை அலுவலகத்தையும் உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டும். தம்முடைய அமைப்பின்மூலம் யெகோவா நமக்குப் பக்கபலமாய் இருப்பாரென உறுதியாய் நம்பலாம்.—ஏசா. 54:17; பிலி. 1:7, 27-29.
6 ஊழியத்தில் நாம் எதிர்ப்பைச் சந்திப்பதற்குக் காரணம்: வெளிப்படுத்துதல் 12-ஆம் அதிகாரம் 12, 17 வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பிசாசாகிய சாத்தான் தன் கோபத்தை வெளிக்காட்டுவதே இதற்கு முக்கியக் காரணம். இந்தக் ‘கடைசி நாட்களின்போது,’ பல்வேறு சமயங்களில், வெவ்வேறு இடங்களில் அவன் எதிர்ப்பைத் தூண்டிவிட்டிருக்கிறான். (2 தீ. 3:3) நாம் பிரசங்கிக்கிற உயிர்காக்கும் செய்திக்குச் செவிசாய்க்காதபடி மற்றவர்களைத் தடுக்க அவன் விரும்புகிறான்; நாம் உற்சாகமிழந்தோ பயந்தோ பிரசங்க வேலையை நிறுத்திவிட வேண்டுமென்றும் விரும்புகிறான். கடந்த காலங்களில் அவனுடைய இந்த எண்ணம் ஈடேறவில்லை, தற்போது நம் நாட்டில் அவன் எடுத்துவரும் முயற்சிகளும் தோல்வியடையும். காலங்காலமாக, பற்பல நாடுகளில் நம் சகோதரர்கள் எவ்வாறு எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறார்கள், யெகோவா தந்த பலத்தால் எப்படிச் சகித்திருந்திருக்கிறார்கள், நற்செய்தியைப் பிரசங்கிப்பதை நிறுத்திவிடாமல் அவருடைய சாட்சிகளாய் எப்படித் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் போன்றவற்றை, பல்வேறு இயர்புக்குகளையோ அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகத்தையோ வாசிப்பதன் மூலமே நாம் தெரிந்துகொள்ளலாம்.—அப். 5:42.
7 உள்ளூர்வாசிகளுடைய மத உணர்வுகளே சில சமயங்களில் நாம் எதிர்ப்பைச் சந்திப்பதற்குக் காரணமாய் இருக்கலாம். (அப். 19:23-29) நாம் சட்டவிரோதமாய் மதம் மாற்றுவதாக எதிர்ப்பவர்கள் நம்மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறுவதற்கு பெரும்பாலும் இதுவே காரணம். அல்லது, அவர்களுடைய நம்பிக்கைகள் தவறென்பதை நாம் பைபிளிலிருந்து காட்டுவதாலும் அவர்களுடைய தெய்வங்களை நாம் அவமதிப்பதாக அவர்களாகவே நினைத்துக்கொள்வதாலும் மத சண்டைகளை நாம் ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டலாம். இவை பொய் குற்றச்சாட்டுகள்; காரணம், மற்றவர்களிடம் நாம் நற்செய்தியை சொல்வதற்காக மட்டுமே செல்கிறோம், அதற்கேற்ப நடப்பதையும் நடக்காததையும் அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடுகிறோம். அதோடு, யாரையும் புண்படுத்தாமல் கனிவாகப் பேசவே முயற்சி செய்கிறோம்.—அப். 17:22-28; ரோ. 14:12; கொலோ. 4:6.
8 நாம் ஊழியம் செய்கையில் பின்பற்ற வேண்டிய நியமங்கள்: தைரியமாய் இருங்கள். யெகோவாவின் சாட்சிகள் மனிதரைப் பிரியப்படுத்துகிறவர்களுமல்ல, மனிதருக்குப் பயப்படுகிறவர்களும் அல்ல. (நீதி. 29:25; எபே. 6:6; w-TL93 7/1 பக். 23) அப்போஸ்தலரைப் போலவே, நாமும் கடவுள் கொடுத்த பிரசங்க வேலையை எந்த எதிர்ப்பின் மத்தியிலும் நிறுத்திவிடக்கூடாது.—அப். 5:29.
9 எச்சரிக்கையாய் இருங்கள். இயேசுவும் கடவுளுக்கு விசுவாசமாய் இருந்த மற்ற ஊழியர்களும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, துன்புறுத்துதலுக்கு வெவ்வேறு விதங்களில் பிரதிபலித்திருக்கிறார்கள்; என்றாலும், தேவையின்றி தங்கள் உயிரை பணயம் வைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அகப்பட்டபோதெல்லாம் அவர்கள் தைரியமாகவும் அதே சமயத்தில், முன்ஜாக்கிரதையாகவும் நடந்து கொண்டார்கள். (மத். 10:16, 23) பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதும், யெகோவாவுக்கு உத்தமமாய் நிலைத்திருக்க வேண்டும் என்பதுமே அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது. பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது, சோதனைகளையும் துன்புறுத்தல்களையும் சந்திக்கும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு பாடமாக இருக்கிறது.—w-TL03 10/1 பக். 14 பாரா 4-ஐப் பாருங்கள்.
10 திருப்பித் தாக்காதீர்கள். நம்மைத் துன்புறுத்துகிறவர்களை நாம் ஒருபோதும் திருப்பித் தாக்கக் கூடாது என்ற மற்றொரு முக்கிய பாடத்தை இயேசுவும் அப்போஸ்தலரும் இக்கட்டான சூழ்நிலையில் நடந்து கொண்ட விதத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். இயேசுவோ அவரது சீஷர்களோ கூட்டுச் சேர்ந்துகொண்டு ஒருவித கலக கும்பலை உருவாக்கியதாகவோ, தங்களைத் துன்புறுத்துகிறவர்களோடு சண்டையிடுவதற்காக வன்முறையைக் கையாண்டதாகவோ பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. ஆகவே, ரோமர் 12:17-21-ல் காணப்படுகிற அப்போஸ்தலன் பவுலின் ஆலோசனையை நாம் உறுதியாகக் கடைப்பிடிப்பது அவசியம்.—நீதி. 20:22.
11 முடிந்தவரை பிரச்சினையைத் தவிருங்கள். சில சமயங்களில், பிரச்சினைக்குரிய இடத்திலிருந்து ஓடிப்போவது ஞானமானது மட்டுமல்ல, தைரியமான செயலும்கூட என்று பைபிள் தெளிவாகக் கூறுகிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை ஊழியத்துக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களிடம் சொன்ன விஷயம் இதை உறுதி செய்கிறது. “ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்” என்று அவர் சொன்னார். (மத். 10:23) ஆம், இயேசுவின் சீஷர்கள் தங்களைத் துன்புறுத்துகிறவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் மதப் போர் போன்றவற்றில் இறங்கி மற்றவர்களைப் பலவந்தமாக மதம்மாற்ற வேண்டுமென சொல்லப்படவில்லை. அவர்கள் சமாதான செய்தியை அறிவித்தார்கள். (மத். 10:11-14; அப். 10:34-37) ஆகவே, கிறிஸ்தவர்கள் கோபத்தில் கொதித்தெழுவதற்குப் பதிலாக, பிரச்சினைக்குரிய இடத்திலிருந்து தூரமாக ஓடிவிட வேண்டியிருந்தது. இப்படிச் செய்ததால் அவர்கள் எப்போதும் நல்மனசாட்சியோடும் யெகோவாவுடன் அருமையான பந்தத்திலும் நிலைத்திருந்தார்கள்.—2 கொ. 4:1, 2; w-TL02 4/15 பக். 32-ஐப் பாருங்கள்.
12 தேர்ந்தெடுங்கள். ஒரு பிராந்தியத்திலுள்ள எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக்கொள்வார்களென எதிர்பார்க்க முடியாதென்பதை இயேசு தம்முடைய சீஷர்களிடம் தெரிவித்தார். ‘எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும் போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரியுங்கள் [அதாவது, தேடுங்கள்]’ என்று அவர் சொன்னார். எல்லாருமே ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் ‘தேடுங்கள்’ என சொல்வதற்கு அவசியமே இருந்திருக்காது. ராஜ்ய செய்திக்கு ஆர்வம் காட்டாதவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டியிருந்தது? “எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும் போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.” சமாதானத்தோடு விடைபெறுங்கள்; கேட்காததால் வரும் விளைவுகளை யெகோவாவின் நியாயத்தீர்ப்புக்கு விட்டுவிடுங்கள்.—மத். 10:11, 14. w88 7/15 பக். 11 பாரா 9-ஐப் பாருங்கள்.
13 விவேகமாய் நடந்துகொள்ளுங்கள். வெளி ஊழியம் செய்யும்போது முடிந்தவரை பிரச்சினையை ஏற்படுத்துகிற சூழ்நிலைகளைத் தவிருங்கள். ‘விவேகி தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்’ என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 14:15) “விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு” என்றும் அது புத்திமதி சொல்கிறது. (நீதி. 17:14) உங்கள் நடையின்மேல் கவனமாய் இருப்பது என்பது, ஆபத்தான இடங்களுக்குச் செல்லாதிருப்பதையும் உட்படுத்துகிறது. ஒரு பகுதியில் தனியாக ஊழியம் செய்வது ஆபத்தானதென்றால் வேறொரு பிரஸ்தாபியுடன் செல்லுங்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஊழியம் செய்யும்போது, பல பிரஸ்தாபிகள் ஒரே தளத்தில் ஊழியம் செய்வது நல்லது. சகோதரர்கள் இருந்தால், இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் முன்நின்று வழிநடத்தலாம். வீடுகளிலோ அடுக்குமாடி குடியிருப்புகளிலோ உள்ளே வரும்படி வீட்டுக்காரர் அழைப்பு விடுக்கும்போது யோசித்து செயல்படுங்கள்.
14 மூப்பர் குழு இப்போது செயல்படுத்தப் போகும் விஷயங்கள்: ஊழியக் குழுவின் வழிநடத்துதலின்கீழ், சபை பிராந்தியம் முழுவதையும் மூப்பர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்; எந்தப் பகுதிகளிலெல்லாம் மத வெறியர்கள் வசிக்கிறார்கள் என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும், இப்படிப்பட்ட நபர்கள் அருகருகே வசிக்கிறார்கள். இவர்களுடைய வீடுகளைக்கூட வரைபடத்தில் குறித்துக்கொள்ள வேண்டும். அத்தகைய பகுதிகளிலும் வீடுகளிலும் ஊழியம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். சபையார் ஊழியம் செய்வதற்கு இன்னும் அநேக பிராந்தியங்கள் இருக்கின்றன, அங்கு நல்ல பலன்களும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
15 சபையாகவும் தொகுதிகளாகவும் வெளி ஊழியக் கூட்டத்திற்குச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பரிசீலனை செய்யுங்கள்; மதப்பற்றுமிக்கவர்கள் வசிக்கிற பகுதிகளிலுள்ள சகோதரர்களின் வீடுகளில் இத்தகைய கூட்டங்களை நடத்தாதீர்கள். வெளி ஊழியம் செய்வதற்கான பிராந்தியத்தில் பெரிய கூட்டமாக கூடிவராதபடி பார்த்துக்கொள்வது நல்லது. ஊழியம் செய்யும்போது விவேகத்தோடு நடந்துகொள்ள வேண்டும். ஒருவரோடொருவர் சத்தமாகப் பேசுவதையோ, ஒரு பகுதியில் ஊழியம் செய்து முடித்தவுடன் அங்கு மறுபடியும் கூட்டங்கூடுவதையோ, பிறருடைய கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நடந்துகொள்வதையோ தவிர்க்க வேண்டும்.
16 இந்தக் குறிப்புகளுக்கு இசைவாக, நவம்பர் 1998, நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 5-ல் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது: “ஊழியம் செய்ய சபையாக பிராந்தியத்திற்கு செல்லும்போது கும்பல் கும்பலாக கூடுவதைத் தவிர்க்க சிறந்த திட்டமிடுதல் அவசியம். கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் அல்லது வேன்கள் என வாகனங்களில் அநேக பிரஸ்தாபிகள் வந்து கும்பலாக இறங்கினால் சில வீட்டுக்காரர்கள் பயந்துவிடுவார்கள். குடியிருப்பு பகுதிகளுக்குள் நாம் ‘படையெடுக்கிறோம்’ என்ற நினைப்பை அவர்களுக்கு ஏற்படுத்திவிடக்கூடாது. ஊழியத்திற்கான கூட்டத்திலேயே பிராந்தியத்தில் யார் யார் எங்கெங்கே ஊழியத்திற்கு செல்வது என்பதைத் தீர்மானித்து பிரித்துவிட வேண்டும். ஒரு பகுதிக்கு ஒரு குடும்பத்தை அனுப்பலாம். சிறு குழுக்களாக அனுப்பப்படுகையில் வீட்டுக்காரர்களும் பயந்துவிட மாட்டார்கள்; ஊழியத்திற்குப் பிரித்துவிடுவதிலும் பிரச்சினை இருக்காது.”
17 ஒரே பிராந்தியத்தில் வெவ்வேறு மொழி தொகுதிகளோ சபைகளோ ஊழியம் செய்யக்கூடும். இந்நிலையில், அந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்வதைப் பொறுத்தவரை, எல்லா காரியங்களும், “நல்லொழுக்கமாயும் கிரமமாயும்” செய்யப்படுகிறதா என்பதையும் மூப்பர்கள் கவனிப்பார்கள். (1 கொ. 14:40) இதுவும்கூட ஊழியத்தில் ஈடுபடுவோரிடம் தேவையில்லாமல் கவனத்தைத் திருப்பாதிருப்பதற்கே செய்யப்படுகிறது.
18 நாம் ஒவ்வொருவரும் கவனமாய் இருக்க வேண்டிய சில காரியங்கள்: சபையார் வெளி ஊழியம் செய்கிற விதத்திலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதால், நாம் ஒவ்வொருவரும் திட்டமிடப்படும் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவது அவசியம்.
19 புத்தகத்தையோ பத்திரிகையையோ துண்டுப்பிரதியையோ பிற பிரசுரங்களையோ வீட்டுக்காரருக்குக் கொடுப்பதற்கு முன்பாக, நாம் சொல்வதைக் கேட்கவும் நம்முடன் பேசவும் அவருக்கு விருப்பம் இருக்கிறதாவென்பதை முதலாவது கண்டுபிடிப்பது புத்திசாலித்தனமாகும். பைபிளிலிருந்து நற்செய்தியை அறிவிக்கவே நாம் செல்கிறோம். வீட்டுக்காரர் பிரச்சினை ஏற்படுத்துகிறவர் அல்ல என்று தெளிவாய் தெரிந்தால் அவர் வாசிப்பதற்கு ஏதாவது பிரசுரங்களைக் கொடுக்க நாம் தீர்மானிக்கலாம்.
20 நாம் வெளி ஊழியம் செய்யும்போது, சுற்றிலும் நடக்கும் காரியங்களைக் குறித்து விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். வீட்டுக்காரர் பிரச்சினையை ஏற்படுத்துவார் என்பதற்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் விவேகத்துடன் உரையாடலை அத்துடன் முடித்துக்கொண்டு அங்கிருந்து, சொல்லப்போனால் அந்தப் பகுதியைவிட்டே வெளியேறிவிடுங்கள். இரண்டு பேராக ஊழியம் செய்யும்போது, ஒருவர் வீட்டுக்காரரிடம் பேசுகையில், மற்றவர் சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதே தெரியாதளவுக்கு உரையாடலில் மூழ்கிவிடாமல் அக்கம்பக்கம் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. பொதுவாக, நாம் ஊழியம் செய்வதைக் கவனிக்கிற ஒரு நபர்தான், கூட்டத்தைக் கூட்டி பிரச்சினையைக் கிளப்பிவிடுகிறார்.
21 தவறாகப் புரிந்துகொள்ளப்படும் சொற்களை நாம் பயன்படுத்தாதிருக்க வேண்டும். உதாரணத்திற்கு, பைபிளிலிருந்து ஒரு நல்ல செய்தியை ‘சொல்ல’ வந்திருப்பதாக நாம் கூறலாம். எதையோ ‘கொடுக்க’ வந்திருப்பதாகக் கூறக்கூடாது. ஏனெனில், மதம் மாற்றுவதற்காக நாம் எதையோ கொடுக்கிறோம் என்று கதை கட்டப்படலாம். அவர்களுடைய வழிபாட்டைப்பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்றோ விக்கிரகங்களை அவர்கள் பயன்படுத்துவதைக் குறித்து என்ன நினைக்கிறோம் என்றோ கேட்டால், அத்தகைய விஷயங்களைக் குறித்து தீர்ப்புசெய்வதற்கோ, மத சம்பந்தமான அவர்களுடைய தீர்மானங்கள் சரியா தவறாவென சொல்வதற்கோ நாம் வரவில்லையென கூறலாம். அவற்றைத் தீர்மானிக்க வேண்டியது அவர்கள்தான். பைபிளிலிருந்து நல்ல தகவலை அவர்களிடம் சொல்ல மட்டுமே நாம் விரும்புகிறோம். அதைக் கேட்பதும் கேட்காதிருப்பதும் அவர்களுடைய விருப்பம்.
22 நம் உடையும், ஊழியத்திற்கான பையும் மற்றவர்களிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டுவதாய் இருக்கக்கூடாது. நாம் என்ன செய்கிறோம் என்று மற்றவர்கள் நம்மை கவனிக்கும் விதத்தில் இருக்கக்கூடாது. சுத்தமான, அடக்கமான உடையை நாம் அணிந்துசெல்ல வேண்டும்; இப்படித்தான் ஊழியத்திற்குச் செல்ல வேண்டுமென்ற திட்டவட்டமான நெறிமுறைகளைப் பின்பற்ற அவசியமில்லை; ஊழியத்திற்கு உடுத்துகிற விதத்தில் பிற நாடுகளிலுள்ள நம் சகோதரர்களின் பாணியைப் பின்பற்ற அவசியமில்லை. நம்மிடமும் நாம் என்ன செய்கிறோம் என்பதிடமும் கவனத்தைத் திருப்புகிற விதத்தில் பெரிய பையை எடுத்துச் செல்வதற்கு மாறாக, பைபிளையும் சில பிரசுரங்களையும் பாக்கெட்டிலோ வெளியே தெரியாதபடி ‘ஃபைல்’ (folder) போன்றவற்றிலோ எடுத்துச் செல்வது நல்லது.
23 அதோடு, அக்கம்பக்கம் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், வீட்டுக்காரரிடம் சத்தமாகப் பேசாதிருப்பது நல்லது. சத்தமாய் உரையாடும்போது மற்றவர்கள் வந்து நம்மை சூழ்ந்துகொள்வதற்கும், நம்முடைய ஊழியத்தை யாராவது தவறாகப் புரிந்துகொள்வதற்கும் வாய்ப்பளிக்கலாம் என்பது பல அனுபவங்களிலிருந்து தெரியவந்திருக்கிறது.
24 வீட்டுக்குள் வரச் சொன்னால் விழிப்புடன் செயல்படுங்கள். பிரஸ்தாபிகள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறாமல் பிடித்து வைப்பதற்கும் ஃபோனில் தொடர்புகொண்டு நம்மை எதிர்க்கும் மற்றவர்களை வரவழைப்பதற்காகவும் எதிர்ப்பவர்கள் இந்த முறையை சில சமயங்களில் கையாண்டிருக்கிறார்கள். வீட்டுக்காரருடன் நீங்கள் பேசும்போது, அவர் யாருக்காவது ஃபோன் செய்தாலோ, ஃபோன் செய்யும்படி தன் குடும்பத்தில் ஒருவரிடம் சொன்னாலோ அங்கிருந்து நீங்கள் வெளியேறுவதற்கான சமிக்கையாய் அதை எடுத்துக்கொள்ளுங்கள்.
25 நம் குறிக்கோளை மனதில் வையுங்கள்: நம்முடைய செய்தியைக் கேட்க விரும்புகிற, ‘பாத்திரமானவர்களை’ தேடுகிறோம். நற்செய்தியைப் பிரசங்கிக்கவிடாமல் தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்குத் தீர்மானமாய் இருக்கிறவர்களின் கவனத்தைக் கவராத விதத்தில் நாம் இதைச் செய்ய வேண்டும்.
26 யெகோவா அளிக்கும் ஆதரவில் நம்பிக்கை வையுங்கள்: ஊழியம் செய்கிற விதத்தில் மேற்குறிப்பிடப்பட்ட மாற்றங்களைச் செய்கையில் யெகோவா எப்போதும் பக்க துணையாய் இருப்பார் என்பதில் உறுதியாய் இருங்கள். (ஏசா. 54:17; பிலி. 4:13, NW) தற்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுவது புத்திசாலித்தனம் மட்டுமல்ல, வேதப்பூர்வமான செயலும்கூட. தம்முடைய சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது இதைத்தான் இயேசுவும் குறிப்பிட்டார். (மத். 10:5-23) வெளி ஊழியத்தில், அதாவது வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையிலும் சரி, சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையிலும் சரி யோசித்துச் செயல்படுங்கள், சுற்றிலும் என்ன நடக்கிறதென எப்போதும் விழிப்புடன் இருங்கள். ஜீவனைப் பெறும்படி யெகோவா தேவன் விடுக்கிற அன்பான அழைப்பை ஏற்றுக்கொள்பவர்களிடம் தேவதூதர்கள் உங்களை வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.—வெளி. 14:6.
27 நீங்கள் தைரியத்தோடும் விவேகத்தோடும் ஊழியம் செய்வதற்கு உதவுகிற இன்னும் சில கட்டுரைகள், வரவிருக்கும் மாதங்களில் நம் ராஜ்ய ஊழியத்தில் பிரசுரிக்கப்படும். கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கும் அமைப்பின் ஏற்பாடுகளுக்கும் இசைவாக நடக்க நாம் எல்லாரும் திட்டமிடுவோமாக.
[பக்கம் 3-ன் பெட்டி]
இந்த உட்சேர்க்கையைப் பயன்படுத்தும் விதம்
இதைக் கவனமாக வாசித்து இதிலுள்ள விஷயங்களைப்பற்றி சிந்தித்து பாருங்கள். இதிலுள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கத் தயாராக இருங்கள். இக்கட்டுரையில் உள்ள ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் எப்போது முதற்கொண்டு பின்பற்ற வேண்டும்? உடனடியாக!