‘உங்கள் வசனம் எப்பொழுதும் உப்பால் சாரமேறினதாய் இருப்பதாக’
1 “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” (கொலோ. 4:6) நம்முடைய பேச்சு உப்பால் சாரமேறினதாக இருப்பது என்பது, சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுவதையும் கேட்போரைக் கவரும் விதத்தில் பேசுவதையும் அர்த்தப்படுத்துகிறது. ஊழியத்தில் நம்முடைய பேச்சு அவ்வாறு இருப்பது மிக முக்கியம்.
2 இயேசுவின் முன்மாதிரி: ஒரு கிணற்றருகே ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கையில், அங்கு தண்ணீர் எடுக்க வந்த ஒரு சமாரிய பெண்ணிடம் இயேசு தாமாகவே முன்வந்து பேசினார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் பகையை வெளிக்காட்டிய குறிப்புகளை அவள் பலமுறை தெரிவித்தாள். சமாரியர்கள் அந்நிய தேசத்தாரின் சந்ததிகள் என யூதர்கள் உறுதியாக நம்பினாலும் தாங்கள் யாக்கோபின் சந்ததியார் என்பதாக தான் நம்புவதாக அவள் கூறினாள். அவள் சொன்ன விஷயங்களைப்பற்றி தர்க்கம் செய்துகொண்டிருப்பதற்குப் பதிலாக, மனதைக் கவரும் முறையில் இயேசு அவளுடன் உரையாடினார். அதன் பலனாக, அவளும், அந்தப் பட்டணத்து ஆட்களும் நன்மை அடையும் விதத்தில் இயேசுவால் சாட்சி கொடுக்க முடிந்தது.—யோவா. 4:7-15, 39.
3 சாட்சி கொடுக்கையில் நம் குறிக்கோளை மனதில் வைத்திருக்க வேண்டும். ‘நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவிப்பதே’ நம் குறிக்கோள். (ரோ. 10:15) பைபிளிலிருந்து ஆர்வத்தைத் தூண்டுகிற, உற்சாகமளிக்கிற விஷயத்தை வீட்டுக்காரருக்குத் தெரிவிக்கவே நாம் விரும்புகிறோம்; அவருடைய நம்பிக்கைகளை நாம் தாக்கிப் பேசுகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த விரும்புவதில்லை. அப்படியே அவர் தவறான ஒரு கருத்தை சொன்னாலும்கூட, அது தவறு என முகத்தில் அடித்தாற்போல் நாம் சொல்லக்கூடாது. அவர் சொல்கிற குறிப்பில் ஒத்துக்கொள்ள முடிந்த விஷயம் ஏதேனும் இருக்கிறதா, அல்லது அவரை மனமார பாராட்டுவதற்குரிய விஷயம் ஏதேனும் இருக்கிறதா? ஒருவேளை ஒரு வசனத்தை அவருக்குக் காட்டி, “இதுபோல நடக்கும் என்று நீங்கள் எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா?” என்று கேட்கலாம்.
4 வீட்டுக்காரர் கடுகடுப்பாகப் பேசுகிறார் என்றால், அல்லது வெறுமனே தர்க்கம் செய்வதில்தான் குறியாக இருக்கிறார் என்றால் என்ன செய்வது? அப்போதும்கூட நாம் பேசும் விதம் சாந்தமாயும் மென்மையாயும் இருக்க வேண்டும், நம் வார்த்தைகளும் அப்படியே இருக்க வேண்டும். (2 தீ. 2:24, 25) நாம் சொல்லும் ராஜ்ய செய்தியில் அந்நபர் எந்த ஆர்வமும் காட்டவில்லை என்றால், அங்கிருந்து சாதுரியமாக வந்துவிடுவதே நல்லது.—மத். 7:6; 10:11-14.
5 சிறந்த பலன்கள்: ஒரு சகோதரி தன் பக்கத்து வீட்டு பெண்ணிடம் சாட்சிகொடுத்தபோது, அந்தப் பெண் ஆவேசத்துடன் வாய்க்கு வந்தபடி தாறுமாறாகப் பேசினாள். நம் சகோதரியோ கனிவோடு, “நான் பேசியது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள். நான் போய் வருகிறேன்” என்று சொன்னார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் இந்தச் சகோதரியின் வீட்டுக் கதவைத் தட்டினாள். தான் அப்படிப் பேசியதற்காக மன்னிப்பு கேட்டாள், சகோதரி சொல்ல வந்த செய்தியை இப்போது கேட்க விரும்புவதாகச் சொன்னாள். பணிவாகப் பேசுவதால் பெரும்பாலும் நல்ல பலன்களே கிடைக்கின்றன!—நீதி. 15:1; 25:15.
6 நற்செய்தியை அறிவிக்கையில், உப்பால் சாரமேறிய விதத்தில் பேச முயலுங்கள். வீட்டுக்காரர் இப்போது கேட்காவிட்டாலும், அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகள் வீட்டிற்கு வரும்போது கேட்பதற்கு மனமுள்ளவராக இருக்கலாம்.
[கேள்விகள்]
1. நம் பேச்சு ‘உப்பால் சாரமேறினதாய் இருப்பது’ என்பதன் அர்த்தம் என்ன?
2. சமாரிய பெண்ணிடம் இயேசுவால் எப்படி சாட்சி கொடுக்க முடிந்தது?
3. ஊழியத்தில் ஈடுபடுகையில் நாம் இயேசுவின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம்?
4. வீட்டுக்காரர் கடுகடுப்பாகப் பேசினால் நாம் என்ன செய்ய வேண்டும்?
5. பணிவாகப் பேசியதால் ஒரு சகோதரிக்கு என்ன நல்ல பலன்கள் கிடைத்தன?
6. ஊழியத்தில் உப்பால் சாரமேறிய விதத்தில் நாம் பேசுவது ஏன் முக்கியம்?