“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்”
“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், உப்பானது சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?”—மத்தேயு 5:13.
1. சாதாரண உப்பு என்பது என்ன?
உப்பு ஒரு வியப்பூட்டும் பொருள். இரசாயன ரீதியில் அது வெடியப்பொருளாகிய வழக்கத்துக்கு மாறான ஒரு உலோக மூலப்பொருளாலும் மற்றும் பாசிகம் என்ற ஒரு நச்சு வாயுவாலும் ஆனது. இந்த இரண்டு அபாயகரமான மூலப்பொட்களும் சேர்ந்து பயன்தரக்கூடிய ஒரு கூட்டு பொருளை உண்டுப்பண்ண கூடும் என்ற இந்த உண்மையானது மனிதவர்க்கத்தின் நன்மைக்காக சிருஷ்டிகர் அருளியிருக்கும் மகத்தான கொடை என்பதை காட்டுகிறது.—சங்கீதம் 104:24.
2. உப்பு அழுகிப்போவதை தடுக்கிறது, மேலும் ஒரு காப்பாற்றும் பொருளாக இருக்கிறது என்பதை எவ்வாறு சித்தரித்துக் காட்டலாம்?
2 ஒரு காரியமென்னவெனில், அழுகிப்போவதை தடுப்பதில் உப்பு அதிக பயனுள்ளதாயிருக்கிறது. இதற்கு ஒரு உதாரணம்: ஒரு மனிதன் அறுக்கப்பட்ட இரண்டு ஆட்டு தோல்களை தன்னுடைய மோட்டார் வாகனத்தின் பெட்டிக்குள் வைத்துக்கொண்டு ஆப்ரிக்க நாட்டின் சூரிய உஷ்ணத்தில் நீண்ட தூரம் பயணமானான். அவன் இறுதியாக அந்த பெட்டியை திறந்தப்போது, அங்கே சகிக்கமுடியாத துர்நாற்றம் வீசியது. அந்த தோல்களில் புழுக்கள் நடமாடிக்கொண்டிருந்தன! இருந்தப்போதிலும், அந்த ஆட்டு ரோமம் கழுவப்பட்டது, மேலும் முற்றிலுமாக உப்பிடப்பட்டது. விளைவு? அவை பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட மிருதுவான படுக்கை அறை தரைவிரிப்புகளாக மாறின.
3. உப்பின் மதிப்பு மற்றும் அதன் கையிருப்பு ஆகியவற்றை குறித்து என்ன சொல்லப்படலாம்?
3 அப்படியானால், தெளிவாகவே, உப்பு விலைமதிக்கமுடியாத, பொருட்கள் கெட்டுப்போகாமல் காக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. அதற்கு மற்ற மதிப்புகளும் இருக்கிறது. மெய்யாகவே, பண்டைய சீனாவில் தங்கத்திற்கு அடுத்தப்படியாக அது மதிக்கப்பட்டது. “உப்பு” (அல்லது ஆங்கிலத்தில் “சால்ட்”) என்பதற்கான லத்தீன் வார்த்தை சால் என்பதாகும். ரோம சாம்ராஜ்யத்தின் நாட்களில் இராணுவ படைவீரர்கள் தங்களுடைய ஊதியத்தில் (சாலரியம்) ஒரு பகுதியாக உப்பை பெற்றார்கள். இதிலிருந்துதான் ஊதியத்திற்கு ஆங்கில வார்த்தையான “சாலரி” வருகிறது. என்றாலும் இன்று பெரும்பாலான இடங்களில் உப்பானது சாதாரணமானதாகவும் குறைந்த விலையுள்ளதாகவும் இருக்கிறது. கடல்கள் சுமார் 45 லட்சம் கன சதுர மைல்கள் அளவான (190 லட்சம் கன சதுர கி.மீ.) உப்பை—முழு ஜக்கிய மாகாணத்தையும் ஒரு மைல் (1.6 கி.மீ.) ஆழத்தில் புதைத்துவிடுவதற்கு போதுமானதை தன்னுள் கொண்டிருக்கிறது! இயேசு கிறிஸ்து இங்கே பூமியில் இருந்தபோதும்கூட உப்பு வேண்டியதற்கும் மிகுதியாக இருந்தது. ஒரு எடுத்துக்காட்டாக, சவக்கடலின் தண்ணீர்கள் பேரளவான உப்பை வழங்கின, மேலும் லோத்துவின் மனைவி “உப்புத் தூணாக” மாறின அவ்விடத்துக்கு அருகாமையிலேயே உப்பை உண்டுப் பண்ணும் மலைகள் இருந்தன.—ஆதியாகமம் 19:26.
4. உப்பு உயிர் சம்பந்தப்பட்டதில் முக்கியத்துவமுடையதாயிருக்கிறது என்று ஏன் சொல்லப்படலாம்?
4 உப்பிற்கு மருத்துவ மதிப்பும் இருக்கிறது. நம்முடைய உடல்கள் சுமார் எட்டு அவுன்சு அளவான (230 கிராம்) உப்பை தன்னுள் கொண்டிருக்கிறது. அது இல்லாவிடில் நாம் மரித்துப்போவோம். ஆகவே, உயிருக்கு உப்பு இன்றியமையாததாக இருக்கிறது. ஆனால் பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறபடி உப்பு, அடையாள அர்த்தத்தையும் அது கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் நடவடிக்கை ஆகியவற்றின்பேரில் தொடர்புடையதாக இருக்கிறது.
“உப்பால் சாரமேறியிருத்தல்”
5. உணவு சம்பந்தப்பட்டதில் உப்பு என்ன நோக்கத்தை சேவிக்கிறது?
5 ஏதாவதொரு உணவை தயாரிக்கையில், சமையல் செய்பவர் உப்பை சேர்க்க மறந்துவிடுவாரானால் மக்கள் அதை சாப்பிட மறுக்கும் அளவுக்கு உணவு சுவையற்றதாக ஆகிவிடுகிறது. யோபு சொன்னதுபோல: “ருசியில்லா பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமா?” (யோபு 6:1, 6) உப்பு உணவின் சவையை சிறப்பாக்குகிறது. உப்பின் இந்த சுவையூட்டும் தன்மை மற்றும் காப்பாற்றும் பொருளாக அதன் உபயோகம் ஆகிய இரண்டும் வேதவசனங்களில் உருவகமாக பொருத்திக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. உப்பானது முக்கியமாய் சரியான வகை பேச்சை விவரிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
6. கொலோசெயர் 4:6 யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது?
6 அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாவது: “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு உங்கள் வசனம் (வார்த்தைகள்) எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” மற்றொரு மொழிபெயர்ப்பு வாசிப்பதாவது: “உங்கள் உரையாடல் எப்பொழுதும் கனிவார்ந்ததாக இருக்கட்டும், ஒருபோதும் சுவையற்றதாக இருக்கவேண்டாம்.” (கொலோசெயர் 4:6; தி நியூ இங்கிலிஷ் பைபிள்) உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தை குறித்து பேசுவதில் அநேக மணிநேரங்களை செலவிடுகின்றனர். மெய்தான், எல்லா யெகோவாவின் சாட்சிகளும் இயல்பாகவே சரளமாகப் பேசும் பேச்சாளர்கள் அல்ல. என்றபோதிலும் அவர்கள் செய்தியை ஆழமாக மதித்து திடநம்பிக்கையுடனும் அனலூட்டும் விதத்திலும் அவர்கள் பேசுவார்களானால் அநேகருடைய இருதயங்களை கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தினடமாக திருப்பலாம். அப்படியானால், யெகேவாவாவின் ஊழியர்களுடைய பேச்சு கனிவானதாயும் மனதை தொடுவதாயும் இருப்பது எவ்வளவு இன்றியமையாததாக இருக்கிறது!
7. ஒரு கிறிஸ்தவனின் “சாரமேறின” வார்த்தைகள் என்ன நற்பலன்களை கொண்டிருக்கக்கூடும்?
7 ஒரு கிறிஸ்தவனுடைய “சாரமேறின” வார்த்தைகள், செவிகொடுப்பவர் பைபிள் செய்தியின் சிறந்த சுவையை பெறுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல் அதற்கு செவிகொடுப்பவர்களின் உயிரை காக்கும் தன்மையுடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உயிருக்கு உப்பு எவ்வளவு அத்தியாவசியமானதாக இருக்கிறதோ அவ்வாறே யெகோவாவின் ஊழியர்கள் கடவுளுடைய நோக்கத்தையும் அவருடைய ராஜ்யத்தையும் குறித்து என்ன சொல்லுகிறார்களோ அந்த வார்த்தைகளை மதித்துணர்வோடு செவி கொடுப்பவர்களுக்கு அது ஜீவனை குறிக்ககூடும்.—யோவான் 6:63, 68-ஜ ஒப்பிட்டுப் பார்க்கவும்.
8. கிறிஸ்தவ ஊழியர்களின் சம்பாஷணைகளில் ஏன் கனிவார்ந்த தன்மை தனிச்சிறப்பாய் அமையவேண்டும்?
8 சரியாகவே, அவிசுவாசிகளிடம் பேசுகையில் கிறிஸ்தவர்களின் சம்பாஷணைகள் கனிவுள்ள தன்மையை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். சில சமயங்களில் ராஜ்யத்தின் செய்தியை கேட்பவர்கள் மூர்க்கமாகவும் கடூரமாகவும் பதிலளிக்கக்கூடும். ஆனால் யெகோவாவின் ஊழியர்களோ அந்த முறையில் ஒருபோதும் திரும்ப பதிலளிக்கக்கூடாது. மாறாக அவர்கள் எப்போதும் கிருபை பொருந்தினவர்களாக இருக்க வேண்டும். கிருபை பொருந்தினவர்களாக இருத்தல் என்றால் அர்த்தமென்ன? அது தயவாக, இனியதாக, அன்பாதரவாக, மற்றும் இரக்கமுள்ளதாக இருப்பதை குறிக்கிறது. கேள்விகளை எதிர்ப்புகளை, குறைகூறுதல்களை அல்லது தவறான பழக்கவழக்கங்களை ஒரு கிறிஸ்தவன் தயவான, பொறுமையான ஒரு முறையில் கையாளுகையில் அது அடிக்கடி ஒரு முக்கிய வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும். நீதிமொழிகள் சொல்லுகிற பிரகாரம்: “பிரதியுத்தரம் சாந்தமானதாயிருந்தால் உக்கிரத்தை மாற்றிவிடும்.” (நீதிமொழிகள் 15:1, NW) கிறிஸ்தவ ஊழியத்தில் கனிவார்ந்த, கருணைநிறைந்த, மற்றும் சாதுரியமான பிரதியுத்தரம் கடினமும் மூர்க்கமுமான முறையில் நடந்துகொள்ளும் ஆட்களை உண்மையில் நல்ல இருதயமுள்ளவர்களாக ஆவதற்கு சாந்தப்படுத்தக்கூடும்.—நீதிமொழிகள் 25:15.
9. உடன் விசுவாசிகளிடம் கிறிஸ்தவர்கள் எவ்வாறு உரையாட வேண்டும்? மற்றும் ஏன்?
9 சரி, அப்படியானால் உடன் விசுவாசிகளிடம் ஒரு கிறிஸ்தவன் எப்படி உரையாட வேண்டும்? கனிவற்ற முறையிலா? ஒருபோதும் கூடாது! ஏன்? ஏனெனில் யெகோவாவின் ஒப்புக்கொடுத்த இந்த ஊழியர்களும்கூட “தேவனுடைய மந்தையின் பாகமாக இருக்கின்றனர். அதை கனிவுடன் நடத்த வேண்டும்.—1 பேதுரு 5:2-4; அப்போஸ்தலர் 20:29-ஜ ஒப்பிட்டுப் பார்க்கவும்.
10. யெகோவாவின் ஊழியர்களால் பயன்படுத்தப்படும் சொற்களின் பேரில் எபேசியர் 4:29-32 என்ன தொடர்புடையதாக இருக்கிறது?
10 தன்னை எரிச்சல்படுத்தியிருக்கக்கூடிய வேலையாட்களிடம் ஒரு யெகோவாவின் ஊழியன் கெட்ட வார்த்தைகளை பேசவேண்டுமா? வேலையாட்கள் வேலை செய்யாமல் தன்னை ஏமாற்றும்போது ஒரு கிறிஸ்தவ மேற்பார்வையாளர் அல்லது வேலையாட்களை கண்காணிப்பவர் அசுத்தமான வார்த்தைகளை பயன்படுத்துவது சரியாகுமா? கிறிஸ்தவ கணவனும் மனைவியும் ஏதோ ஓரளவுக்கு எரிச்சலடையும்போது அவர்கள் கூச்சலிட்டு ஒருவரையொருவர் ஏசிக்கொள்ள வேண்டுமா அல்லது அவர்களுடைய பிள்ளைகளைப் பார்த்து கூச்சலிட்டு திட்ட வேண்டுமா? ஒருபோதும்கூடாது! பவுல் எழுதியதாவது: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம் . . . சகலவிதமான கசப்பும், கோபமும் மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும் மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—எபேசியர் 4:29-32.
“உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள்”
11, 12. மாற்கு 9:50-ல் என்ன வகையான உப்பைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருந்தார்? மேலும் என்ன வகையான பேச்சையும் செயலையும் அந்த வார்த்தை கேட்கின்றனர்?
11 நாம் அபூரணராயிருப்பதால், நாம் அனைவருமே சில சமயங்களில் கிறிஸ்தவனுக்கு தகாத முறையில் பேசிவிடுகிறோம். சீஷனாகிய யாக்கோபு ஒளிவுமறைவின்றி ஒப்புக்கொண்டதுபோல: “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீர முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக் கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.” (யாக்கோபு 3:2, 8-10) இயேசுவின் ஆரம்ப கால சீஷர்கள் இதற்கு விதிவிலக்கு அல்ல, அவர்கள் ஒருவருக்கொருவர் கிருபை பொருந்திய விதத்தில் பேசிக்கொள்ள தவறியதற்காக அவர்கள் கடிந்துகொள்ளப்பட வேண்டியவர்களாக இருந்தனர். ஒரு எடுத்துக்காட்டாக, தங்களுக்குள் யார் பெரியவன் என்று சீஷர்கள் தங்கள் மத்தியில் அதிக கோபமாக தர்க்கித்துக் கொண்ட சில சமயங்கள் இருந்தன. மற்றவர்களை இடறசெய்து “அக்கினியினால் உப்பிடப்படுவது” அல்லது கெஹென்னாவில் அழிக்கப்படுவதற்கு எதிராக இயேசு முழு தொகுதியினருக்கும் சில சிறந்த அறிவுரைகளைக் கொடுத்தார். அதன் பின்பு அவர் பின்வரும் வார்த்தைகள் மூலம் முடித்தார்: “உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள். ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயுமிருங்கள்.”—மாற்கு 9:33-50.
12 தெளிவாகவே அங்கே இயேசு தம்முடைய சீஷர்களுடைய மாம்ச உடலில் சொற்ப அளவில் காணப்படும் சொல்லர்த்தமான உப்பைப்பற்றி பேசிக்கொண்டில்லை. மாறாக, அவர்கள் மற்றவர்கள் நலனை எண்ணிப் பார்க்கிறவர்களாயும் சாதுரியமானவர்களாயும், நற்பயன் விளைவிக்கிறவர்களாயும் வார்த்தையிலும் நடத்தையிலும் சமாதானமுள்ளவர்களாயும் இருப்பதையே—மற்றவர்களிடம் சுவையாக நடந்து கொள்வதையே—அவர் குறிப்பிட்டார். உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயிருப்பதற்கு இது மிகவும் இன்றியமையாதது.
“பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்”
13. “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்று சொன்னபோது இயேசு என்ன அர்த்தப்படுத்தினார்?
13 தம்மை பின்பற்றுகிறவர்களைக் குறித்து இயேசு சொன்னதாவது: “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.” (மத்தேயு 5:13) இதை சொல்லுவதன் மூலம் தம்முடைய சீஷர்கள் சொல்லர்த்தமாகவே உப்பாயிருக்கிறார்களென்று இயேசு குறிப்பிடவில்லை. மாறாக, உப்பு பாதுகாக்கும் தன்மையுடையது, ஆகவே இயேசுவின் சீஷர்கள் ஜனங்களிடம் சுமந்து செல்லும் செய்தி அநேகருடைய ஜீவனை பாதுகாக்கக்கூடியதாக இருக்கும். மெய்யாகவே, அவருடைய சீஷர்கள் தங்களுடைய செய்தியை கேட்டவர்கள் மீது பாதுகாப்புக்குரிய செல்வாக்கை செலுத்துகிறவர்களாக இருந்தனர். அப்படிப்பட்ட தனியாட்களின் மத்தியில் ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சம்பந்தமான கெடுதல்கள் வராமல் பாதுகாத்தனர். இயேசுவை பின்பற்றியவர்களால் அறிவிக்கப்பட்ட நற்செய்தி ஜீவனை பாதுகாக்கக்கூடியது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.—அப்போஸ்தலர் 5:20; 13:46-48.
உப்பு அழுகிப் போவதிலிருந்து பாதுகாக்கிறது
14. உலக சீர்கேட்டை எதிர்த்து தடுப்பதற்கு என்ன தேவைப்படுகிறது?
14 யெகோவா தேவனின் உயர்வான மற்றும் தூய்மையான தராதரத்திலிருந்து நோக்கும்போது, இந்த முழு துன்மார்க்க ஒழுங்குமுறையும் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஆட்டுத்தோல்களைப் போன்றே தோன்றவேண்டும். தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு முன்பும் மேலும் உப்பை பயன்படுத்துவதற்கு முன்பும் அவை துர்நாற்றத்தை உண்டுபண்ணியது. நடமாடிக்கொண்டிருந்த புழுக்களால் நிறைந்திருந்தது. சரி, ஒரளவிற்கு ஒவ்வொருவரும் இந்த உலகத்தின் சூழ்நிலைமைகளால் பாதிக்கப்படுகின்றனர். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் எட்டக்கூடிய அழுகுதலை அல்லது சீர்கேட்டை எதிர்த்து தடுப்பதற்கு, ஒரு ஆளுக்கு தைரியம் தேவைப்படுகிறது. மேலும் அவன் கடவுளுக்கு தன்னுடைய உத்தமத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் மட்டுமே ஒரு தனி நபர் ஒழுக்க சீரழிவிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளமுடியும். அவனுக்கு தேவைப்படுவது கிருபை பொருந்திய பேச்சு மட்டுமல்ல, ஆனால் எல்லா வகைகளிலும் காணப்படக்கூடிய சீர்கேடுகளுக்கும் வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்க உதவக்கூடிய, தற்காப்பு பண்பை அதாவது சீர்கெடாமல் பாதுகாத்துக்கொள்ளும் தன்மையை அவன் கொண்டிருக்க வேண்டும். அவனுடைய விஷயத்தில் உப்பு அவனுக்கு அவசரமாக தேவைப்படுகிறது.—1 பேதுரு 4:1-3.
15. இயேசுவாலும், மற்றும் தானியேலாலும் வைக்கப்ட்ட சிறந்த முன்மாதிரி என்ன?
15 ஒரு உண்மையுள்ள யெகோவாவின் ஊழியன் கெட்ட பழக்கவழக்கங்களுக்கும் தீய கவர்ச்சிகளுக்கும் எவ்வாறு வேண்டாம் என்று மறுப்பு சொல்வது என்பதை அறிந்தவனாக இருக்க வேண்டும். சாத்தானால் வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டபோது இயேசு மூன்று முறையும் மறுப்பு தெரிவித்தார் என்பதை நினைவு கூருங்கள். (மத்தேயு 4:1-10) தீர்க்கதரிசியாகிய தானியேலால் அளிக்கப்பட்ட முன்மாதிரியை கவனியுங்கள். இளம் வயதிலேயே வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்க கற்றுக்கொண்டான், பாபிலோனின் ராஜ அரண்மனையிலே தானியேல் இளைஞனாக இருந்தபோது அவனுக்கும் அவனுடைய தோழர்களுக்கும் ‘ராஜா உண்ணும் போஜனத்திலே தினம் அவர்களுக்கு ஒரு பங்கு’ அளிக்கப்பட்டது. ஆனால் தானியேலும் அவனுடைய நண்பர்களும் அதை வேண்டாமென்று மறுத்துவிட்டார்கள். இது மருத்துவமனையில் கொடுக்கப்படுபவற்றை வேண்டாமென்று மறுப்பதைப் போன்ற ஒரு காரியமல்ல. மாறாக, இந்த நான்கு இளம் எபிரேயர்களும் முற்றிலுமாக மரக்கறி அடங்கிய போஜனத்தையும் குடிக்க தண்ணீரையும் கொடுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஏனெனில், யெகோவாவின் சட்டம் தடை செய்திருந்த அல்லது புறமத சடங்குகளால் மாசுபட்டிருந்த உணவை அவர்கள் தவிர்க்க விரும்பினார்கள். அந்த போக்கை மேற்கொள்வதற்கு உண்மையான தைரியம் தேவைப்பட்டது. அதன் விளைவு பலனுள்ளதாயிருந்தது. ஏனெனில் சோதனைக்கென்று நியமிக்கப்பட்டிருந்த அந்த குறித்த காலத்தின் முடிவிலே ராஜ போஜனத்தை புசித்தவர்களை காட்டிலும் அவர்களுடைய சரீர தோற்றம் மேம்பட்டதாயிருந்தது, மேலும் ஆவிக்குரிய பிரகாரமாய் அந்த எபிரெயர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் தயவையும் அனுபவித்து மகிழ்ந்தார்கள்.—தானியேல் 1:5-17.
16. தானியேல் நன்கு உப்பிடப்பட்ட யெகோவாவின் ஊழியன் என்று ஏன் சொல்லப்படலாம்?
16 ‘தங்களுக்குள் உப்புடையவர்களாக இருந்ததன்’ காரணமாக தானியேலும் அவனுடைய தோழர்களும் பாதுகாக்கப்படுவதை யெகோவா தேவன் கவனித்துக் கொண்டார். ஆனால் தானியேலிடமிருந்து நாம் அதிகத்தை கற்றுக் கொள்ளலாம். அவன் பாபிலோனிய அரசாங்கத்தில் ஒரு உயர்வான பதவியில் நியமிக்கப்பட்டான். அவன் புறமத ஆட்களால் சூழப்பட்டிருந்ததன் காரணமாகவும், மேலும் ராஜ அரண்மனை சந்தேகமின்றி ஒழுக்கக்கேடு, பொய் சொல்லுதல், லஞ்சம், அரசியல் சதி திட்டங்கள் மற்றும் வேறு பல ஊழல்கள் நிறைந்ததாக இருந்தமையால் அவன் அநேக முறை மறுப்பு தெரிவிக்க வேண்டியதாக இருந்திருக்கும். தானியேல் அநேக சமயங்களில் கடும் அழுத்தங்களின் கீழ் இருந்தான். அவன் அந்நாட்களின் “உலகத்தின்” மத்தியிலிருந்தபோதிலும் அவன் “உலகத்தானாக” இருக்கவில்லை. (யோவான் 17:16) தானியேல் உண்மையுள்ள “நன்கு உப்பிடப்பட்ட” யெகோவாவின் ஊழியனாக இருந்தான். ஏன், தானியேலின் சத்துருக்கள் அவனுடைய உத்தமத்தன்மையும் நேர்மையும் தங்கள் மீது கெட்ட பெயரை ஏற்படுத்தியதன் காரணமாக ஒருவேளை எரிச்சலடைந்திருக்கக்கூடும். அவனை ஒழிக்கவும் முயற்சித்தார்கள்! இருந்தபோதிலும், “அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை,” என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதாக இருந்தது. (தானியேல் 6:4, 5) என்னே ஒரு சிறந்த முன்மாதிரி!
17. இன்று கிறிஸ்தவ இளைஞர்கள் எதிர்படக்கூடிய கடினமான சோதனைகள் என்ன?
17 இளம் தானியேல் மற்றும் அவனுடைய நண்பர்களை போன்று கிறிஸ்தவ இளைஞர்கள் இன்று கடினமான பரீட்சைகளை எதிர்ப்படுகின்றனர். விசேஷமாக பள்ளியில், அவர்கள் போதை பொருட்கள், புகைபிடித்தல், மதுபானங்கள், அசுத்தமான பேச்சுகள், ஒழுக்கக்கேடு, பொய்வணக்கம், தேசப்பற்று, கெட்ட சகவாசம், பரிணாமம் போன்ற பொய் போதனைகள், மற்றும் அநேக சக்திவாய்ந்த செல்வாக்குகளுடன் அவர்கள் போராட வேண்டியதாக இருக்கிறது. இந்த எல்லா சோதனைகளின் மத்தியிலும் தூய்மையான உத்தமத்தை காத்துக்கொள்பவராக நிலைத்திருப்பதற்கு, ஒரு கிறிஸ்தவ இளைஞன் “நன்கு உப்பிடப்பட்டவனாக” இருக்கவேண்டியதாக இருக்கிறது.
18. (எ) கிறிஸ்தவ பெற்றோர் என்ன கேள்விகளை சிந்தித்துப் பார்ப்பது நலமானதாயிருக்கும்? (பி) தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதை கடினமானதாக காணக்கூடிய பெற்றோருக்கு என்ன சிபார்சு செய்யப்படுகிறது?
18 ஆகையால், கிறிஸ்தவ பெற்றோர்களே, உங்கள் குடும்பத்தின் நிலைமையை கவனமாக ஆராய்ந்து பாருங்கள். எல்லா குடும்ப அங்கத்தினர்களும் ஆவிக்குரிய விதத்தில் முன்னேறுகிறார்களா? உங்கள் சொந்த இளம் பிள்ளைகள் உலக கறைகளால் கறைபடுவதிலிருந்து நீங்கள் தடுத்திருக்கிறீர்களா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? உண்மை வணக்கத்தை குறித்து அவர்கள் மெய்யாகவே என்ன நினைக்கிறார்கள். மற்றும் எப்படி உணருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த உலகத்தின் அசுத்தமான காரியங்களின் பேரில் அவர்களுக்கு வெறுப்புணர்ச்சி இருக்கிறதா அல்லது அவற்றிற்கு இறையாகும் அபாயத்தில் அவர்கள் இருக்கிறார்களா? (ஆமோஸ் 5:14, 15) நீங்கள் ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளைகளுக்கு உதவியளிக்க உங்கள் பிள்ளைகளிடம் போதிய அளவுக்கு நீங்கள் நெருங்கியவர்களாக இல்லையென்றால், அல்லது இதை நீங்கள் கடினமாக உணருகிறீர்களென்றால், அதை யெகோவா தேவனிடம் ஊக்கமாக ஜெபிக்கும் ஒரு காரியமாக ஏன் நீங்கள் ஆக்கிக் கொள்ளக்கூடாது? நிச்சயமாகவே, இந்த தடைச்சுவரை மேற்கொள்ள அவர் உங்களுக்கு உதவக்கூடும்.—1 யோவான் 5:14.
19. கிறிஸ்தவ பெற்றோர் வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கக்கூடிய சில காரியங்கள் என்ன?
19 கிறிஸ்தவ பெற்றோராக, நீங்கள் என்னவிதமான முன்மாதிரியை வைக்கிறீர்கள்? தீங்கு விளைவிக்கக்கூடிய பெருந்தீனி, குடிவெறி, பலவகையான ஒழுக்கக்கேடு மற்றும் உங்களை சுற்றி அப்பியாசிக்கப்பட்டு வரும் அசுத்தமான காரியங்கள் ஆகியவற்றிற்கு நீங்கள் உறுதியாக வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கிறீர்களா? லஞ்சம், அற்பமான சிறு திருட்டுகள், மற்றும் அருவருப்பான தமாஷ்கள் மற்றும் உலக ஆட்கள் பேசும் பேச்சுகள் ஆகியவற்றிற்கு மறுப்பு தெரிவிக்கிறீர்களா? வேலை செய்யுமிடத்திலோ உங்கள் அயலகத்தார் மத்தியிலோ நீங்கள் சுத்தமானவர்கள், நேர்மையுள்ளவர்கள், சீரானவர்கள் என்று அறியப்பட்டிருக்கிறீர்களா? சரியான சமயங்களில் வேண்டாம் என்று மறுப்பு தெரிவிப்பது “பூமிக்கு உப்பாயிருப்பதற்கு” அத்தியாவசியமானதாக இருக்கிறது.
நிரந்தரமும் உண்மை மாறாமையும்
20. பண்டைய இஸ்ரவேலில் யெகோவாவின் வணக்கத்துடன் உப்பு எவ்வாறு தொடர்புள்ளதாயிருந்தது?
20 சந்தேகத்திற்கிடமின்றி உப்பு அழுகிவிடுவதிலிருந்து அல்லது சீர்கேட்டிலிருந்து விடுப்பட்ட நிலையை பிரதிநிதித்துவம் செய்ததன் காரணமாக இஸ்ரவேலருடைய யெகோவாவின் வணக்கத்தில் உப்பு பயன்படுத்தப்பட்டது. ஒரு எடுத்துக்காட்டாக பலிபீடத்தின் மீதுள்ள எல்லா படையல்களும் உப்பினால் சாரமாக்கப்பட வேண்டும். மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில், அது குறிப்பிட்டதாவது: “நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜன பலியிலே குறைவிடாமல் நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.” “உப்பு உடன்படிக்கை” பலமான கட்டாக கருதப்பட்டது.—லேவியராகமம் 2:13; எண்ணாகமம் 18:19; 2 நாளாகமம் 13:4, 5.
21. “பூமிக்கு உப்பாக” இருக்கக்கூடிய இன்றைய யெகோவாவின் ஊழியர்களுக்கு என்ன தேவைப்படுகிறது?
21 .யெகோவாவுக்கு சாட்சிகளாக, அன்று அவருடைய ஊழியர்கள் “பூமிக்கு உப்பாக” இருக்கிறார்கள். அப்படியானால் இது அவர்கள் சீர்கெடாதவர்களாக, உண்மையுள்ளவர்களாக மற்றும் பற்று மாறாதவர்களாக இருப்பதை கேட்கிறது. கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கனிகளை—அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றை விருத்தி செய்வதில் ஊக்கமாக உழைக்க வேண்டும். (கலாத்தியர் 5:22, 23) ஆவிக்குரிய உப்பை போன்ற பண்புகளுக்கு அந்த ஆவியின் கனிகளே ஊற்று மூலமாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் யெகோவா தேவனை பல ஆண்டுகளாக சேவித்து வந்திருக்கின்றனர் என்ற அந்த உண்மைதானே அவர்கள் வீழ்ச்சியடைய மாட்டார்கள் என்ற உத்தரவாதம் அளித்துவிடாது. (1 கொரிந்தியர் 10:12) இதை குறித்து இயேசு தாமே நம்மை எச்சரித்தார்.
22. மத்தேயு 5:13-ன் பிற்பகுதியின் அர்த்தம் என்ன?
22 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்று இயேசு சொன்னபின்பு உடனே அதை தொடர்ந்து அவர்: “உப்பானது சராமற்றுப்போனால், எதனால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது” என்று அவர் சொன்தை நினைவுகூருங்கள். (மத்தேயு 5:13) இயேசு பூமியிலிருந்தபோது பயன்படுத்தப்பட்ட சில உப்பானது அந்நிய பொருட்களோடு கலக்கப்பட்டது. எனவே தூய்மையான உப்பு மழையினாலோ அல்லது வேறு ஒரு முறையிலோ கறைந்து போகையில் எது மீதமாக தங்கியிருந்ததோ அது புறம்பே எறியப்படுவதற்கும் அல்லது பாதையில் போடப்பட்டு வழிபோக்கர்களால் மிதியுண்டு போவதற்குமே தகுதியுள்ளதாயிருந்தது. உப்பு சரியான நிலையில் வைக்கப்படாவிட்டால் அது எளிதில் பயனற்றதாக ஆகிவிடக்கூடும்.
23. “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளைக் குறித்ததில் யெகோவாவின் சாட்சிகளாக நம் கருத்து என்னவாக இருக்கவேண்டும்?
23 அப்படியானால் யெகோவாவின் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் உண்மை மாறாத ஊழியனாக, ஒருபோதும் ‘சாரமற்று போகாதபடி’ அல்லது தூய்மையான உப்பைப்போன்ற பண்புகளை இழக்காதபடி கவனமாயிருப்போமாக. மாறாக கடவுளுடைய ஆவியின் கனிகளை வளர்ப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்போமாக. நாம் எப்பொழுதும் நம்முடைய பேச்சில் கிருபை பொருந்தினவர்களாக இருந்து ராஜ்ய செய்தியை வைராக்கியத்துடன் அறிவிப்போமாக, இதன் மூலம் மற்றவர்களுடைய உயிர்களை காப்பாற்றுவதற்கு உதவுவோமாக. இந்த உலகத்தின் சீர்கேடுகளால் நாம் ஒருபோதும் ஜெயிக்கப்படாமலிருப்போமாக. ஆனால் “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளோடு தொடர்புள்ள மிகப்பெரிய சிலாக்கியத்தையும் ஆழமான அர்த்தத்தையும் நாம் எப்பொழுதும் மனதில் கொண்டிருப்போமாக. (w85 5/15)
உங்கள் ஞாபக சக்தியை சோதியுங்கள்
▫ நம்முடைய வார்த்தைகள் ‘உப்பால் சாரமேறினதாக இருக்கும்படி’ எப்படி செய்யலாம்?
▫ கிறிஸ்தவர்கள் ‘தங்களுக்குள் உப்புடையவர்களாக இருப்பது’ ஏன் இன்றியமையாதது?
▫ எவ்வாறு இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் “பூமிக்கு உப்பாயிருக்கிறார்கள்?
▫ “நன்கு உப்பிடப்பட்ட” கிறிஸ்தவர்களால் தவிர்க்கப்பட வேண்டிய சில காரியங்கள் என்ன?
▫ “மத்தேயு 5:13-ல் சொல்லப்பட்டிருப்பதை முன்னிட்டு இன்று யெகோவாவின் ஊழியர்களுடைய கருத்து என்னவாக இருக்க வேண்டும்?
[பக்கம் 10-ன் படம்]
இளம் வயதிலேயே, தானியேல், வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கக் கற்றுக்கொண்டான்