கடவுளின் நண்பராகும்படி மற்றவர்களுக்கு உதவுங்கள்
1 இன்று எல்லா தேசத்தவருக்கும் யெகோவாவின் வழிகள் கற்பிக்கப்படுகின்றன. (ஏசா. 2:2, 3) என்றாலும், ‘பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாய்’ ஆவதற்கு, யெகோவாவை அவர்கள் நேசிக்க வேண்டும். (லூக். 8:15; மாற். 12:30) அப்படிப்பட்ட அன்பு இல்லாவிட்டால், கெட்ட செல்வாக்குகளை எதிர்ப்பதற்குத் தேவையான பலமோ, சரியானதைச் செய்வதற்குத் தேவையான தைரியமோ அவர்களுக்கு இருக்காது. யெகோவாவிடம் ஒரு நல்ல உறவை வளர்த்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவும் ஒரு வழியானது, அவருடைய குணங்களை அதிகமதிகமாய் மதித்துணர அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதாகும். யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்திலுள்ள தகவலை ஆழ்ந்து சிந்திக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
2 உங்கள் முன்மாதிரி: உங்களுடைய செயல்கள் உங்கள் பைபிள் மாணாக்கர்கள்மீது பெரும் செல்வாக்கு செலுத்தலாம். யெகோவாவுடன் உங்களுக்கிருக்கும் நட்பை நீங்கள் எந்தளவு மதிக்கிறீர்கள் என்பதையும், அந்த நட்பு உங்கள் வாழ்க்கையை எவ்வாறு உருப்படுத்துகிறது என்பதையும் அவர்கள் பார்க்கும்போது அதே போன்ற தனிப்பட்ட உறவை தாங்களும் வளர்த்துக்கொள்ள உந்துவிக்கப்படுவார்கள். (லூக். 6:40) பொதுவாக, நம் வார்த்தைகளைவிட நம் முன்மாதிரியே அதிக செல்வாக்கு செலுத்துகிறது.
3 யெகோவாவை நேசிக்கத் தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் கற்பிக்கும் ஒரு முக்கியமான வழி, அவர்கள் வைக்கும் முன்மாதிரிதான். (உபா. 6:4-9) தங்கள் பிள்ளைகளை சத்தியத்தில் வளர்க்க விரும்பிய ஒரு தம்பதியர், அவ்வாறு வளர்ப்பதில் வெற்றி கண்ட பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். “நான் பேசியவர்கள் சொன்னதிலிருந்து, பெற்றோர் வைக்கிற முன்மாதிரியே முக்கியமென்று தெரிகிறது” என்றார் அந்தக் கணவர். எனவே, ‘தேவனுடைய சிநேகிதனாய்’ இருப்பதன் அர்த்தமென்ன என்பதைப் பெற்றோர் தங்களது வாழ்க்கை முழுவதிலும் வைக்கும் முன்மாதிரியின் மூலமாகவே பிள்ளைகளுக்குக் கற்பிக்கலாம்.—யாக். 2:23.
4 இதயப்பூர்வமான ஜெபம்: இதயப்பூர்வமாக ஜெபிக்கக் கற்றுக்கொடுப்பதன் மூலம் யெகோவாவோடு நட்பை வளர்த்துக்கொள்ள மற்றவர்களுக்கு நீங்கள் உதவலாம். இயேசுவின் மாதிரி ஜெபத்திற்கு அவர்களது கவனத்தைத் திருப்பலாம். அத்துடன், பைபிளில் பதிவாகியிருக்கும் அநேகரது உருக்கமான ஜெபங்களுக்கும் அவர்களது கவனத்தைத் திருப்பலாம். (மத். 6:9, 10) நீங்கள் செய்கிற ஜெபங்களின் மூலமாகவும் கற்றுத்தரலாம்; இதயப்பூர்வமான உங்கள் வார்த்தைகளை உங்கள் பிள்ளைகளும் பைபிள் மாணாக்கர்களும் கேட்கும்போது, யெகோவாவைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். துன்பங்களைச் சந்திக்கையில் ‘ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்க’ அவர்களை ஊக்கப்படுத்துங்கள். (ரோ. 12:12) கஷ்டமான சந்தர்ப்பங்களில் யெகோவா தங்களுக்கு உதவி அளிப்பதை அவர்கள் அனுபவத்தில் காணும்போது, அவர்மீது நம்பிக்கை வைக்கவும் அவரை ஓர் உண்மை நண்பராகக் கருதி அன்புகூரவும் ஆரம்பிப்பார்கள்.—சங். 34:8; பிலி. 4:6, 7.