புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி
இந்த உலகம் அது என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நம்மை நம்ப வைக்க முயற்சி செய்கிறது. கடவுளுடைய வார்த்தையோ, அதற்கு நேர்மாறானதே உண்மை என்கிறது. (1 யோ. 2:15-17) இந்தப் ‘பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க’ முயற்சி செய்வது வீண் என்பதை நாம் புரிந்துகொள்ள அது உதவுகிறது. கடவுளுடைய மக்களைப் பலப்படுத்தும் விதத்தில், “பரலோகத்திலே . . . பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்” என்ற பொருளில், 2007 ஊழிய ஆண்டிற்கான வட்டார மாநாட்டு நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருக்கிறது.—மத். 6:19, 20.
எபேசியர் 2:2-ல், ‘கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகார . . . ஆவி [அதாவது, காற்று]’ என குறிப்பிடப்பட்டதில் பொருளாசையும் உட்பட்டுள்ளது. நாம் சுவாசிக்கும் காற்று எங்கும் நிறைந்திருப்பதைப் போல் இந்த ‘உலகத்தின் ஆவியும்,’ அதாவது காற்றும் எங்கும் நிறைந்துள்ளது. (1 கொ. 2:12) உலகத்தின் ஆவிக்குப் பெருமளவு செல்வாக்கு உள்ளதால் அதற்கு ‘அதிகாரம்’ இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி, பொருள் சேர்க்கும் உலகின் போக்கைத் தவிர்ப்பதற்கும் மிக முக்கியமான காரியங்களிடம் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும் நமக்கு உதவும். அதோடு, நாம் சந்திக்கும் சோதனைகள், அழுத்தங்கள் மத்தியிலும் நம் ஊழியத்தைச் செய்வதற்கு யெகோவாவை சார்ந்திருக்க இந்நிகழ்ச்சி நமக்கு உதவும்.
இரண்டு நாட்களும் மாநாட்டில் தவறாமல் கலந்துகொண்டு, ‘மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனியுங்கள்.’ (எபி. 2:1) வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நீங்கள் கடைப்பிடிக்க விரும்புகிறவற்றை சுருக்கமாகக் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஆரம்பம்முதல் முடிவுவரை முழுமையாகக் கலந்துகொள்வதன் மூலம், ‘பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க’ ஊக்கத்தையும் பலத்தையும் பெறுவீர்கள்!