யெகோவாவுக்காக ஆவலோடு காத்திருங்கள்
1 “யெகோவா நியாயத்தீர்ப்பின் கடவுள்” என்று சொன்ன ஏசாயா, ‘அவருக்காக ஆவலோடு காத்திருக்கிற அனைவரும் சந்தோஷமுள்ளவர்கள்’ என்றும் சொன்னார். (ஏசாயா 30:18ஆ, NW) அவர், தம்முடைய விரோதிகளை ஒழித்துக்கட்டி, தம்முடைய உண்மை ஊழியர்களை மீட்டது பற்றிய அநேக சம்பவங்கள் பைபிளில் பதிவாகியுள்ளன. இப்பதிவுகள் யெகோவாவின் வணக்கத்தாராகிய நமக்கு என்ன கற்பிக்கின்றன? ‘கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாளுக்கு’ எப்படி நம்மை நாமே தயாராக்கிக்கொள்ளலாம்? (யோவே. 2:31, 32) இந்தக் கேள்விகளைக் குறித்துச் சிந்திப்பதற்கும், சுயபரிசோதனை செய்வதற்கும் “மீட்பு விரைவில்!” என்ற பொருளில் நடைபெறவுள்ள மாவட்ட மாநாடு நம்மை உந்துவிக்கும். யெகோவாவுக்காக ஆவலோடு காத்திருக்க அந்த மாநாடு நமக்கு உதவும்.
2 மூன்று நாளுமே மாநாட்டில் கலந்துகொண்டு பயன்பெறுவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறீர்களா? உதாரணமாக, உங்கள் மேலதிகாரியிடம் லீவுக்குச் சொல்லி வைத்திருக்கிறீர்களா? ‘அதெல்லாம் கிடைத்துவிடும், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று மெத்தனமாக இருந்துவிடாதீர்கள். லீவு பற்றி முதலில் ஜெபம் செய்யுங்கள். பின்பு லீவு கேளுங்கள். (நெ. 2:4, 5) அவ்வாறே போக்குவரத்து, தங்கும் வசதி போன்ற அத்தியாவசியமான காரியங்களுக்காகவும் திட்டவட்டமாக ஏற்பாடு செய்யுங்கள், தள்ளிப்போடாதீர்கள். நன்கு திட்டமிடுவது, யெகோவாவின் ஆன்மீக போஷாக்குத் திட்டத்தை நாம் பெரிதும் மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. மாநாட்டுக்குச் செல்வது சம்பந்தமாக உதவி தேவைப்படுபவர்களுக்கு, முக்கியமாக சபையிலுள்ள முதியோருக்கு ஆவன செய்வதில் மூப்பர்கள் கவனமாக இருக்க வேண்டும்.—கலா. 6:10.
3 நல்நடத்தை கடவுளைக் கௌரவிக்கிறது: மாநாடுகளில் நிறைய பேரோடு நாம் கூடிவருகையில், நம்முடைய நல்நடத்தை அந்த இடத்தில் உள்ளவர்களுக்கு சாட்சியாக அமைகிறது. இதற்கு நாம் என்ன செய்யலாம்? மாநாடு நடக்கும் பகுதியிலுள்ள ஓட்டல்களுக்கு, ரெஸ்டாரன்ட்டுகளுக்கு, கடைத் தெருக்களுக்குச் செல்லும்போது, நம்மிடமுள்ள கிறிஸ்தவ குணங்கள், அதாவது நீடிய பொறுமை, சாந்தகுணம், சுயகட்டுப்பாடு, நியாயத்தன்மை ஆகிய குணங்கள் அங்குள்ளவர்களின் மனதைக் குளிர்விக்க வேண்டும். (கலா. 5:22, 23; பிலி. 4:5, NW) ‘அயோக்கியமானதைச் செய்யாத, தற்பொழிவை நாடாத, சினமடையாத’ அன்பை நாம் அனைவரும் வெளிக்காட்ட வேண்டும். கஷ்டங்கள், அசௌகரியங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று” நாம் செய்ய வேண்டும்.—1 கொ. 10:31; 13:5.
4 ஒரு மாநாட்டின்போது, நம் இளைஞர்களின் தோற்றத்தையும் நடத்தையையும் கண்டு பெரிதும் கவரப்பட்ட ஓர் ஓட்டல் மானேஜர், “தன் ஓட்டலில் வந்து தங்குபவர்கள் எல்லாருமே யெகோவாவின் சாட்சிகளாய் இருந்தால்” நன்றாயிருக்குமென தெரிவித்திருக்கிறார். இது எவ்வளவாய் மகிழ்ச்சியூட்டுகிறது! பெற்றோராகிய நீங்கள் அளித்த பயிற்சிக்கும், உங்களுடைய கண்காணிப்புக்கும் இது பெருமை சேர்க்கிறது. மேற்பார்வை எதுவும் இல்லாமல் பிள்ளைகள் மட்டும் ஓட்டல் அறையில் தனித்திருக்கும்படி அனுமதிப்பது ஞானமல்ல. பிள்ளைகளை எப்போதுமே நம் மேற்பார்வையில் வைத்திருக்க வேண்டும். (நீதி. 29:15) அவர்களது நல்நடத்தை யெகோவாவுக்குப் புகழ்சேர்ப்பதாக! அவருடைய இருதயத்தை மகிழ்விப்பதாக!—நீதி. 27:11.
5 அடக்கமான உடையும் தோற்றமும்: மாநாட்டைக் குறித்து ஜனங்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட நாம் ஒவ்வொருவருமே நம் பங்கைச் செய்யலாம். எப்படி? உடையிலும் தோற்றத்திலும் மாறிக்கொண்டே இருக்கும் புதுப்புதுப் பாணிகளையும், மிதமிஞ்சிய பாணிகளையும், அடக்கமற்ற பாணிகளையும் தவிர்ப்பதன் மூலமாகும். மாநாட்டுக்குப் போய்வரும்போதும், மாநாட்டு வளாகத்தை ஆயத்தப்படுத்தும்போதும், மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும்போதும் அத்தகைய பாணிகளைத் தவிர்க்க வேண்டும். கடவுளின் ஊழியர்களான நாம், உடை மற்றும் தோற்றத்தில் நமது விருப்பத்திற்கும் சௌகரியத்திற்குமே முக்கியத்துவம் கொடுக்காமல், யெகோவாவின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தங்களுடைய குடும்பத்தார் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அடக்கமாக உடை உடுத்தி, நேர்த்தியாகக் காணப்படுகிறார்களா என்று குடும்பத் தலைவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.—1 தீ. 2:10.
6 ஓட்டல்களில், கடைகளில், ரெஸ்டாரன்ட்டுகளில் ஓய்வாகப் பொழுதைக் கழிக்கும்போதுகூட கண்ணியமான தோற்றத்துடன் காணப்படுவது மிக முக்கியம். நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் மாநாட்டு உடையிலேயே வெளியில் சென்று உணவு அருந்துவது தகுந்ததாகும். மாநாட்டு பேட்ஜ் கார்டை அணிந்திருப்பது, சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.—2 கொ. 6:3, 4.
7 ஏசாயா முன்னுரைத்ததாவது: ‘உங்களுக்கு இரங்குவதற்காக யெகோவா ஆவலோடு காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்.’ (ஏசாயா 30:18அ, NW) யெகோவா நம்மீது காட்டும் இரக்கத்திற்காகவும் தகுதியற்ற தயவிற்காகவும் நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்; மாநாட்டிற்காகக் கூடிவரும்போது நடத்தையின் மூலமாகவும் தோற்றத்தின் மூலமாகவும் அவரைக் கௌரவிக்க அந்த நன்றியுணர்வு நம்மைத் தூண்ட வேண்டும். “மீட்பு விரைவில்!” மாவட்ட மாநாடு, யெகோவாவுக்கு மகிமை சேர்த்து, அவருக்கு ஆவலோடு காத்திருக்க நமக்கு உதவுவதாக!
[கேள்விகள்]
1. மாநாட்டின் பொருள் என்ன? இது ஏன் பொருத்தமானது?
2. மாவட்ட மாநாட்டை நாம் பெரிதும் மதிப்பதை எப்படிக் காட்டலாம்?
3. மாநாட்டு நகரில் யெகோவாவின் ஜனங்களிடம் என்ன குணங்களை மற்றவர்கள் பார்க்க வேண்டும்?
4. யெகோவாவுக்குப் புகழ்சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்ள பிள்ளைகளுக்கு பெற்றோர் எவ்வாறு உதவலாம்?
5. நம் உடையிலும் தோற்றத்திலும் யெகோவாவை நாம் எப்படிக் கௌரவிக்கலாம்?
6. ஓய்வு நேரத்திலும் கண்ணியமான தோற்றத்துடன் இருப்பது ஏன் அவசியம்?
7. மாநாட்டில் ஒழுங்கைக் காப்பதற்காகவும், மகிழ்ச்சி அடைவதற்காகவும் நம் பங்கில் என்ன செய்யலாம்? (“மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” பகுதியைக் காண்க.)
[பக்கம் 5-ன் பெட்டி]
மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
◼ நிகழ்ச்சி நேரம்: மூன்று நாட்களும் காலை 9:30-க்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். காலை 8:00 மணிக்கு கதவுகள் திறக்கப்படும். நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்கள் முன்பு, ஆரம்ப ராஜ்ய இசை இசைக்கப்படும்போது சேர்மன் மேடையில் அமர்ந்திருப்பார். அந்தச் சமயத்தில், நாம் எல்லாரும் நம்முடைய இருக்கையில் அமர வேண்டும். அதுவே நிகழ்ச்சிக்கு கண்ணியம் சேர்க்கும். வெள்ளிக்கிழமை மாலை 5:15-க்கும், சனிக்கிழமை மாலை 5:05-க்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4:10-க்கும் நிகழ்ச்சிகள் முடிவடையும்.
◼ வாகனம் நிறுத்துமிடம்: வாகனம் நிறுத்துமிடமுள்ள எல்லா மாநாட்டு வளாகங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும். அப்படி நிறுத்துவதற்கு மாநாட்டு பேட்ஜ் கார்டுகள் அடையாள அட்டைகளாக பயன்படுத்தப்படும். பொதுவாக இதற்கு குறைவான இடமே ஒதுக்கப்படும் என்பதால் ஒரு காரில் ஒருவரோ இருவரோ வருவதற்குப் பதிலாக முடிந்தவரைக்கும் பலர் ஒன்றாகச் சேர்ந்து வர வேண்டும்.
◼ இருக்கைகளைப் பிடித்து வைப்பது: உங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே இருக்கைகளைப் பிடித்து வைக்கலாம்.
◼ மதிய உணவு: மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே செல்லாதபடிக்கு தயவுசெய்து எளிமையான மதிய உணவை கையோடு எடுத்து வாருங்கள். உங்கள் சீட்டிற்கு அடியில் வைக்க முடிந்த சிறிய பைகளையும் டிபன் கேரியர்களையும் எடுத்து வரலாம். ஆனால், நடைபாதையை அடைத்துக்கொள்ளும் பெரிய பொருள்களை, சாமான்கள் வைக்கும் அறையில் வைக்க வேண்டும்.
◼ நன்கொடைகள்: ஒரு மாவட்ட மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு ஏகப்பட்ட செலவாகிறது. எனவே, ராஜ்ய மன்றத்திலோ மாநாட்டு வளாகத்திலோ உலகளாவிய வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் அளிப்பதன் மூலம் நம் போற்றுதலைக் காட்டலாம். மாநாட்டில் செக்குகளை நன்கொடையாக அளிக்கும்போது அவற்றை “Watch tower” என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
◼ விபத்துகளும் அவசர நிலைகளும்: மாநாட்டு வளாகத்தில் மருத்துவ அவசர நிலை ஏற்படும்போது அருகிலுள்ள அட்டென்டண்டிடம் தயவுசெய்து சொல்லுங்கள்; அவர் உடனடியாக முதலுதவி இலாகாவிடம் சொல்லுவார்; அப்போதுதான் சூழ்நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையும், என்ன உதவி அளிக்க வேண்டும் என்பதையும் வளாகத்தில் முதலுதவி அளிக்க தகுதி பெற்றிருப்பவரால் தீர்மானிக்க முடியும்.
◼ காது கேளாதோருக்கு: செகந்திராபாத்தில் நடைபெறவிருக்கும் ஆங்கில மாநாட்டில் நிகழ்ச்சிகளை சைகை மொழியில் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
◼ ரெக்கார்டிங்: வளாகத்திலுள்ள மின் அமைப்புடன் அல்லது ஒலி அமைப்புடன் எந்த ரெக்கார்டர்களையும் இணைக்கக் கூடாது; மற்றவர்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாத விதத்தில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
◼ ஃபோட்டோ எடுப்பது: நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஃபோட்டோ எடுக்க ஃபிளாஷைப் பயன்படுத்தக் கூடாது.
◼ பேஜர்களும் செல் ஃபோன்களும்: மற்றவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்பாதபடி இவற்றை “செட்” செய்திருக்க வேண்டும்.
◼ சென்ட்டுகளின் உபயோகம்: தற்போதைய மாநாடுகள் சில, நாலா பக்கமும் மூடியிருக்கும் அரங்கங்களில் நடைபெற இருக்கின்றன; அவற்றில் செயற்கை முறை காற்றுப்போக்கு வசதிகளே உள்ளன. அதனால், சுவாசக் கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாதபடி, மூக்கைத் துளைக்கும் சென்ட்டுகளைப் பயன்படுத்தாமல் இருப்பது தயவான செயலாகும்.—1 கொ. 10:24.
◼ மறுசந்திப்புப் படிவங்கள்: மாநாட்டு சமயத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் பலனாக ஆர்வமுள்ள எவரையாவது நாம் கண்டுபிடித்திருந்தால், ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43) படிவத்தில் குறிப்பிட வேண்டும். பிரஸ்தாபிகள் இந்தப் படிவங்களில் ஒன்றிரண்டை எடுத்துவர வேண்டும். இவை மாநாட்டிலுள்ள புத்தக இலாகாவிலும் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை உடனடியாக மாநாட்டு புத்தக இலாகாவிலோ, வீடு திரும்பிய பின் உங்கள் சபை செயலரிடமோ சமர்ப்பிக்கலாம்.—பிப்ரவரி 2005 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 6-ஐக் காண்க.
◼ ரெஸ்டாரன்ட்டுகள்: பல இடங்களில், சேவைக்கு ஏற்ப 15 முதல் 20 சதவீத டிப்ஸ் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.
◼ ஓட்டல்கள்: (1) தேவைக்கு அதிகமான அறைகளை புக் செய்யாதீர்கள், அனுமதிக்கப்படுவதற்கும் அதிகமான ஆட்களை உங்களுடன் தங்க வைக்காதீர்கள். (2) புக் செய்த அறையை ரத்து செய்ய வேண்டுமென்றால் உடனடியாக ஓட்டல் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள். (3) லக்கேஜை எடுத்துச் செல்ல உதவும் தள்ளுவண்டிகளை உடனடி உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள். (4) சமைக்க அனுமதிக்கப்படாத அறைகளில் சமைக்காதீர்கள். (5) ஒவ்வொரு நாளும் அறையை ஒழுங்குபடுத்த உதவும் ஹௌஸ்கீப்பருக்கு டிப்ஸ் கொடுங்கள். (6) ஓட்டலில் தங்கும் நபர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற காலை உணவு, காபி அல்லது ஐஸ் போன்றவற்றை கிறிஸ்தவர்களான நாம் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. (7) முக்கியமாக, அதிக பிஸியான செக்-இன், செக்-அவுட் சமயத்தில் ஓட்டல் பணியாளருடன் நடந்துகொள்ளும் விதத்தில் ஆவியின் கனியை வெளிக்காட்டுங்கள்.