ஊழியத்தில் முன்னேற உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்
1 சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை ஊழியத்தில் பயிற்றுவிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு, கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்பை அவர்கள் பல வழிகளில் நிறைவேற்றலாம். சில பிள்ளைகள், வாசிக்கக் கற்றுக்கொள்வதற்கு முன்பே பைபிள் வசனங்களை மனப்பாடமாகச் சொல்கிறார்கள். இது கேட்பவர்களின் மனதை மிகவும் கவரும். பிள்ளைகள் பெரியவர்களாக ஆகும்போது ஊழியத்தில் அவர்களால் இன்னும் அதிகத்தை செய்ய முடியும். பெற்றோர்களே, ஊழியத்தில் பங்குகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி பயிற்சியளிக்கலாம்? பின்வரும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவலாம்.
2 வீட்டுக்காரரிடம் வணக்கம் சொன்ன பிறகு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “என்னுடைய மகனுக்கு [பெயர்] ஒரு நல்ல பைபிள் வசனம் தெரியும், அதை உங்களிடம் சொல்ல விரும்புகிறான்.” உங்களுடைய மகன் இவ்வாறு சொல்லலாம்: “சங்கீதத்தில் இருக்கிற இந்த வசனத்திலிருந்து கடவுளுடைய பெயரை நான் தெரிந்து கொண்டேன். [சங்கீதம் 83:17-ஐ உங்கள் மகன் வாசிக்கலாம் அல்லது மனப்பாடமாகச் சொல்லலாம்.] எதிர்காலத்தில் யெகோவா தேவன் நமக்கு என்ன செய்யப் போகிறார் என்று இந்தப் பத்திரிகைகள் சொல்கின்றன. இதை நீங்கள் படித்துப் பார்க்கிறீர்களா?” பிறகு இந்த உலகளாவிய வேலை எப்படி ஆதரிக்கப்படுகிறது என்று சொல்லி நீங்கள் பேச்சை முடித்துக் கொள்ளலாம்.
3 அல்லது நீங்கள் இப்படியும் சொல்லலாம்:
◼ “வணக்கம், என் மகளுக்கு [பெயர்] ஜனங்கள் மீது எப்படி அக்கறை காட்டலாம் என்று நான் சொல்லிக் கொடுத்து வருகிறேன். அவள் உங்களிடம் பைபிளிலிருந்து ஒரு விஷயத்தை சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறாள்.” உங்கள் மகள் இவ்வாறு சொல்லலாம்: “நான் மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்; முக்கியமாக, நல்ல எதிர்காலம் வரப்போகிறது என்ற நம்பிக்கையான செய்தியை பைபிளிலிருந்து எடுத்துக் காட்டுகிறேன். [வெளிப்படுத்துதல் 21:4-ஐ உங்கள் மகள் வாசிக்கலாம் அல்லது மனப்பாடமாகச் சொல்லலாம்.] எதிர்காலத்தில் கடவுளுடைய ராஜ்யம் என்னவெல்லாம் செய்யப் போகிறது என்று இந்தப் பத்திரிகைகள் விளக்குகின்றன. இதை நீங்கள் படித்துப் பாருங்கள். உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.”
4 பிள்ளைகள் எளிய அணுகுமுறைகளையே திரும்பத் திரும்ப பயன்படுத்தும்போது பிரசங்க வேலையில் அவர்களுடைய தன்னம்பிக்கை வளரும். தெளிவாகவும் சப்தமாகவும் பேசுவதற்கு அடிக்கடி பயிற்சி அளிக்கும்போது, எந்தச் சந்தர்ப்பத்திலும் பேசுவதற்கு அவர்கள் தயாராவார்கள். அதோடு சின்னஞ்சிறுசுகளுடன் சேர்ந்து முன்கூட்டியே நன்கு தயாரிப்பதும், மனமார அவர்களைப் பாராட்டுவதும் விசுவாசத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு உதவும்.
5 இப்படிப்பட்ட உற்சாகத்தினால், அநேக பிள்ளைகள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆக தகுதி பெற்றிருக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகளும் கிறிஸ்தவ ஊழியத்தில் முன்னேறுவதைப் பார்ப்பது எல்லையில்லா ஆனந்தத்தை தரும் அல்லவா!—சங். 148:12, 13.