முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 4: தயாரிக்க மாணாக்கருக்குப் பயிற்சியளித்தல்
1 பாடத்தை முன்கூட்டியே படித்து, பதில்களைக் குறித்துக்கொண்டு, சொந்த வார்த்தையில் எப்படிப் பதிலளிக்கலாம் என யோசிக்கும் மாணாக்கர் ஒருவர் மிக விரைவாக ஆவிக்குரிய ரீதியில் முன்னேறுகிறார். ஆகவே, ஒருவர் தொடர்ந்து பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டவுடனே, அந்த நபருடன் சேர்ந்து ஒரு பாடத்தைத் தயாரியுங்கள், இதன் மூலம் படிப்புக்குத் தயாரிக்க நீங்கள் அவருக்குக் கற்றுக்கொடுக்கலாம். பெரும்பாலும், ஒரு முழு அதிகாரத்தையோ அல்லது பாடத்தையோ சேர்ந்து தயாரிப்பது மாணாக்கருக்கு உதவியாக இருக்கும்.
2 கோடிடுவதும் குறிப்பு எழுதுவதும்: கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு நேரடியான பதிலை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்பதை விளக்குங்கள். முக்கிய சொற்களையும், சொற்றொடர்களையும் மட்டுமே நீங்கள் குறித்திருப்பதை உங்களுடைய புத்தகத்தில் இருந்து மாணாக்கருக்குக் காட்டுங்கள். நீங்கள் சேர்ந்து படிக்கும்போது பதிலை தன் நினைவுக்கு கொண்டுவர உதவுபவற்றை மட்டுமே குறித்துக் கொள்வதன் மூலம் உங்களுடைய மாதிரியை மாணாக்கரும் பின்பற்ற ஆரம்பிக்கலாம். (லூக். 6:40) பின்னர், சொந்த வார்த்தையில் பதிலளிக்க அவரை உற்சாகப்படுத்துங்கள். இதன் மூலம் அந்தத் தகவலை மாணாக்கர் எந்தளவிற்கு புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
3 மேற்கோள் காட்டப்படாத வசனங்களை கவனமாக ஆராய்வது மாணாக்கருடைய தயாரிப்பின் முக்கிய பாகமாக இருக்கிறது. (அப். 17:11) மேற்கோள் காட்டப்படாத ஒவ்வொரு வசனமும் பாராவில் உள்ள ஒரு குறிப்பை ஆதரிக்கிறது என்பதைக் காண அவருக்கு உதவுங்கள். சுருக்கமான குறிப்புகளை ஒரு ஓரத்தில் எவ்வாறு எழுதிக்கொள்ளலாம் என்பதைக் காண்பியுங்கள். அவர் கற்றுக்கொள்ளும் அனைத்திற்கும் பைபிளே அடிப்படை என்ற உண்மையை அவரிடம் வலியுறுத்துங்கள். படிப்பின்போது பதிலளிக்கையில் மேற்கோள் காட்டப்படாத வசனங்களைத் தாராளமாக உபயோகப்படுத்த அவரை உற்சாகப்படுத்துங்கள்.
4 சுருக்கமான ஆய்வும் மறுபார்வையும்: மாணாக்கர் பாடத்தை விவரமாக தயாரிப்பதற்கு முன்பாக, அந்தப் பொருளைக் குறித்து மேலோட்டமாக தெரிந்து கொள்வது உதவியாக இருக்கும். அதிகாரத்தின் தலைப்பு, உப தலைப்புகள், படங்கள் போன்றவற்றைக் கவனமாக ஆராய்வதன் மூலம் இதைச் செய்யலாம் என்பதை அவருக்கு காண்பியுங்கள். தயாரிப்பை முடிக்கும் முன்பாக, பாடத்தின் முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்வது ஞானமாக இருக்கும் என்பதை விளக்குங்கள். மறுபார்வை பெட்டி கொடுக்கப்பட்டிருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்யும்போது, கற்றுக்கொண்டவை மாணாக்கரின் மனதில் அப்படியே பதிந்துவிடும்.
5 படிப்பிற்காக தயாரிக்க மாணாக்கருக்குப் பயிற்சியளிப்பது, சபை கூட்டங்களில் அர்த்தமுள்ள விதத்தில் பதிலளிக்க அவருக்கு உதவும். இப்பயிற்சியின் மூலம் நல்ல படிப்பு பழக்கங்களையும்கூட அவரால் வளர்த்துக்கொள்ள முடியும். அவரோடு தனிப்பட்ட விதமாக பைபிள் படிப்பு முடிக்கப்பட்ட பிறகும்கூட, இவை அவருக்குப் பிரயோஜனமாயிருக்கும்.