நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ள நற்செய்தி
1 கடவுளுடைய சுவிசேஷம் நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! (1 தெ. 2:4) சிலர் இந்த வலிமை மிக்க செய்தியை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர், ஆனால் நறுமணத்திடம் வசீகரிக்கப்படுவதுபோல நேர்மை மனமுள்ளவர்கள் இந்த நற்செய்தியிடம் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். (2 கொ. 2:14-16) இச்செய்தியை ஏற்றுக்கொண்டு அதற்கு கீழ்ப்படிபவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்கும். (ரோ. 1:16) அப்படியென்றால் நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ள இந்த நற்செய்தியை நாம் என்ன செய்ய வேண்டும்?
2 இயேசுவும் அப்போஸ்தலர்களும்: நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு இயேசு முதலிடம் கொடுத்தார். (லூக். 4:18, 43) அவருக்கு மக்கள் மீது அன்பும் நற்செய்தியின் மீது போற்றுதலும் இருந்தது; ஆகவேதான் களைப்பாகவும் பசியாகவும் இருந்த சந்தர்ப்பங்களிலும்கூட நற்செய்தியை மக்களோடு பகிர்ந்து கொண்டார். (மாற். 6:30-34) இவ்வாறு சொல்லிலும் செயலிலும் முன்மாதிரி வைப்பதன் மூலம் ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிப்பதன் முக்கியத்துவத்தை சீஷர்களின் மனதிலே அவர் பதிய வைத்தார்.—மத். 28:18-20; மாற். 13:10.
3 இயேசுவின் மாதிரியை பின்பற்றி அப்போஸ்தலர்களும் ராஜ்ய செய்தியை வைராக்கியமாக அறிவித்தார்கள். அவர்கள் அடிக்கப்பட்டு பிரசங்கிப்பதை நிறுத்தும்படி கட்டளையிடப்பட்ட போதும் ‘இடைவிடாமல் உபதேசம் பண்ணி, பிரசங்கித்தார்கள்.’ (அப். 5:40-42) அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வேலைக்காக அயராது உழைத்தார். (1 கொ. 15:9, 10; கொலோ. 1:29) நற்செய்தியை பிரசங்கிக்கும் இந்த சிலாக்கியத்தை சக மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரு கடன் என ஒப்பிட்டு பேசினார், அதோடு இந்த வேலையை நிறைவேற்ற தன்னுடைய சௌகரியங்களை விட்டுக்கொடுக்கவும் முன்வந்தார்.—அப். 20:24; ரோ. 1:14-16.
4 இன்று நம்முடைய சிலாக்கியம்: நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கும் பரிசுத்த சேவையிடம் நமக்கிருக்கும் போற்றுதல், பிரசங்க வேலையில் இன்னும் அதிகத்தைச் செய்ய வாய்ப்புகளை தேடும்படி நம்மை தூண்டும். (ரோ. 15:15, 16) உதாரணமாக, சக்கர நாற்காலியே கதி என்று இருந்த எட்வர்டு, ஒரு ஹோட்டல் வாசலில் அமர்ந்துகொண்டு அங்கு வருவோர் போவோரிடம் சாட்சி கொடுத்து வந்தார். இன்னும் அதிகத்தை செய்ய வேண்டும் என்ற ஆவலின் காரணமாக அவருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட பிக்கப் ட்ரக் ஒன்றில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பிரயாணப்பட்டு பயனியர் ஊழியத்தை பல வருடங்கள் செய்து வந்தார். இன்றும் எட்வர்டைப் போல அநேகர் நற்செய்தியை பரப்பும் வேலையில் அதிகளவு ஈடுபடுவதற்காக தங்களுடைய சூழ்நிலைகளை மாற்றி அமைத்திருக்கின்றனர்.
5 இயேசுவையும் அப்போஸ்தலர்களையும் போலவே இன்று நம்முடைய வாழ்க்கையில் பிரசங்க வேலைக்கு எப்பொழுதும் முதலிடம் கொடுப்போமாக. இவ்வாறு, ஜனங்கள் மீதுள்ள நம் அன்பையும் நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள நற்செய்திக்கான போற்றுதலையும் காட்டுவோம்.