பைபிள் படிப்புகளுக்கு மறுசந்திப்புகள் பாலமாக அமைகின்றன
1 பிரசங்கிக்கும் வேலையை மட்டுமல்ல, ‘கற்பித்து, சீஷராக்கும்’ வேலையையும் இயேசு தம்மை பின்பற்றுவோருக்குக் கொடுத்தார். (மத். 28:19, 20, NW) பிரசங்கிக்கும் ஒருவர் வெறுமனே அறிவிக்கிறார், ஆனால் கற்பிப்பவரோ அதைவிட அதிகத்தைச் செய்கிறார். அவர் அறிவுறுத்திக் கூறுகிறார், விளக்கிக் காட்டுகிறார், அத்தாட்சிகளை அளிக்கிறார். பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கும் இலக்குடன் ஆர்வம் காட்டுகிறவர்களை மீண்டும் மீண்டும் சந்திப்பதே மற்றவர்களுக்குக் கற்பிக்க ஒரு வழியாகும்.
2 யாரை மீண்டும் சந்திப்பீர்கள்? பிரசுரங்களை ஏற்றுக்கொள்கிற அனைவரையும், அல்லது நற்செய்தியில் ஒரு துளி ஆர்வம் காண்பித்தாலும் அவர்களையும் மீண்டும் சந்தியுங்கள். ஊழியத்தில் சாட்சிகொடுக்கும்போது ஆர்வமிக்க ஒருவரை சந்தித்தால், அந்த நபருடைய விலாசத்தை அல்லது தொலைபேசி எண்ணை வாங்க முயலுங்கள், அப்போதுதான் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை வளர்க்க முடியும். பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதைக் குறித்து நம்பிக்கையான மனநிலையுடன் இருங்கள். பைபிள் படிக்க விரும்புகிறவர்களைத் தொடர்ந்து தேடுங்கள், அப்பொழுது நீங்கள் அவர்களைக் கண்டுபிடிக்கலாம்.—மத்தேயு 10:11.
3 தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்: முதல் சந்திப்பிலேயே பலன்தரும் மறுசந்திப்புக்கு அஸ்திவாரம் போட வேண்டும். ஊழியத்தில் வெற்றி காணும் சுவிசேஷகர்கள், வீட்டுக்காரருக்கு எதில் அதிக ஆர்வம் என்பதை கவனித்து, பின்பு அதை அடிப்படையாக வைத்து பேசுகிறார்கள். அடுத்த சந்திப்புக்கு வீட்டுக்காரருடைய ஆர்வத்தைத் தூண்டுவதற்காக ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் ஒரு கேள்வியை கேட்பதை பயனுள்ளதாக சிலர் கண்டிருக்கிறார்கள். ஜனங்கள் மீது நமக்கு இருக்கும் உள்ளப்பூர்வமான அக்கறை, அவர்களை விட்டு வந்த பிறகும் அவர்களைப் பற்றி தொடர்ந்து சிந்திக்க வைக்கிறது, தாமதமின்றி மீண்டும் அவர்களை சந்திக்கவும் நம்மை உந்துவிக்கிறது. முடிந்தவரை, ஆர்வம் தணிந்துவிடும் முன்பே, ஒருவேளை ஓரிரு நாட்களிலேயே மறுபடியும் சந்தியுங்கள்.
4 மறுசந்திப்பு செய்யும்போது, நீங்கள் முன்பு பேசிய விஷயத்தின் பேரிலேயே கூடுதலாக பேசுங்கள். ஆவிக்குரிய விதத்தில் உந்துவிக்கும் ஒரு குறிப்பையாவது ஒவ்வொரு தடவையும் பகிர்ந்துகொள்வதை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள், அதோடு அவர்கள் பேசுவதையும் செவிகொடுத்துக் கேளுங்கள். வீட்டுக்காரரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள். அடுத்தடுத்த சந்திப்புகளில், அவருக்கு அக்கறையூட்டும் விஷயத்தோடு நேரடியாக தொடர்புடைய சத்தியங்களை கடவுளுடைய வார்த்தையிலிருந்து எடுத்துக்காட்டுங்கள்.
5 பைபிள் படிப்பு ஆரம்பிக்கும் சிந்தையோடிருங்கள்: ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் நோக்குடன் மறுசந்திப்புகள் செய்யுங்கள். இதை எப்படி செய்யலாம்? அக்கறைக்குரிய ஒரு குறிப்பை சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிடுங்கள், வீட்டுக்காரருக்கு அதிக ஆர்வமூட்டும் என நீங்கள் கருதும் ஒரு பத்தியை அறிவு புத்தகத்திலிருந்தோ தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்தோ திறந்து கொள்ளுங்கள். பிறகு அந்தப் பத்தியை வாசித்து, அதற்குரிய கேள்வியை ஆலோசியுங்கள். அதோடு, கொடுக்கப்பட்டுள்ள ஓரிரண்டு வசனங்களின் பேரிலும் கலந்துரையாடுங்கள். இதை ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் வீட்டுக்காரரிடம் பேசிவிட முடியும். அடுத்த கேள்வியை கேட்டுவிட்டு, மற்றொரு சந்தர்ப்பத்தில் உரையாடலை தொடர ஏற்பாடு செய்யுங்கள்.
6 நாம் சந்திக்கும் ஆட்களுடைய ஆர்வம் அனைத்தையும் வளர்ப்பதே நம்முடைய ஊழியத்தின் இன்றியமையாத அம்சம். ஆகவே, உங்களுடைய வாராந்தர அட்டவணையில் மறுசந்திப்புகள் செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள். இவ்வாறு செய்வது உங்களுடைய ஊழியத்தை அதிக பலன்தரும் ஒன்றாக்கலாம், இது உண்மையான சந்தோஷத்தையும் அள்ளி வழங்கும்.
[[கேள்விகள்]
1. மறுசந்திப்புகள் ஏன் மிக முக்கியம்?
2. யாரை மீண்டும் சந்திப்பீர்கள்?
3, 4. பலன்தரும் மறுசந்திப்புகள் செய்வதில் என்னென்ன விஷயங்கள் உட்பட்டுள்ளன?
5. பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க என்ன எளிமையான முறையை பயன்படுத்தலாம்?
6. மறுசந்திப்புகள் செய்வதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்கிறோம் என எப்படி காட்டலாம்?