நன்மை செய்வதில் வைராக்கியம் காட்டுங்கள்!
1 இந்த 2003-ம் ஆண்டின் நினைவு ஆசரிப்பு காலத்தில் அடியெடுத்து வைக்கையில் ‘நன்மை செய்வதில் வைராக்கியம்’ காட்ட நமக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. (1 பே. 3:13, பொ.மொ.) அவற்றில் இயேசு கிறிஸ்துவின் கிரயபலியே மிக முக்கியமானது. (மத். 20:28; யோவா. 3:16) இதைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு எழுதினார்: “வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்க[ள்].” (1 பே. 1:18, 19) இந்த ஈடிணையற்ற அன்பின் வெளிக்காட்டுக்கு நாம் காட்டும் நன்றி, ஊக்கத்துடன் நன்மை செய்யும்படி நம்மை தூண்டுகிறது; இயேசு “நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” என்பதை உணர்ந்து அவ்வாறு செய்ய வைக்கிறது.—தீத். 2:14; 2 கொ. 5:14, 15.
2 கடவுளுக்குப் பிரியமானதை நாம் செய்கையில் அவருடன் நாம் நல்லுறவை அனுபவிக்கிறோம், அவருடைய காக்கும் கரங்களில் தஞ்சம் புகுவோம். “ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காண வேண்டுமென்றிருக்கிறவன் . . . பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது” என்றும் பேதுரு சொன்னார். (1 பே. 3:10-12) இந்த ஆபத்தான காலத்தில், யெகோவா நம்மை தொடர்ந்து கவனிக்கிறார், நம்மை “தமது கண்மணியைப் போல காத்தரு”ளும்படி நம் சார்பாக செயல்பட தயாராக இருக்கிறார் என்பதை அறிவது ஆறுதலாய் இருக்கிறது.—உபா. 32:10; 2 நா. 16:9.
3 பேதுரு எழுதிய இக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அந்த ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் பற்பல சோதனைகளை எதிர்ப்பட்டார்கள்; எனினும் அவை அவர்களிடம் கனன்று கொண்டிருந்த ஆர்வக்கனலை அணைக்க முடியவில்லை. ஆகவே அவர்கள் நற்செய்தியை முடிந்தவரை எங்கும் பரப்பினார்கள். (1 பே. 1:6; 4:12) இன்று கடவுளுடைய ஜனங்களும் அதையே செய்கிறார்கள். “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்” வாழ்ந்தாலும், யெகோவாவின் நற்குணத்திற்கு நாம் காட்டும் போற்றுதல் அவருடைய சித்தத்தை வைராக்கியத்துடன் செய்யும்படி நம்மை ஊக்குவிக்கிறது. (2 தீ. 3:1, NW; சங். 145:7) இந்த நினைவு ஆசரிப்பு காலத்தில் நம்மை சுறுசுறுப்பாய் வைத்துக்கொள்வதற்கு என்னென்ன நன்மைகளை செய்யலாம் என பார்ப்போம்.
4 மற்றவர்களை நினைவு ஆசரிப்புக்கு அழையுங்கள்: கிரயபலி எனும் ஒப்பற்ற பரிசுக்கு நம் நன்றியைத் தெரிவிக்க ஒரு வழி, இயேசுவின் மரணத்தை நினைவுகூரும் வருடாந்தர ஆசரிப்பில் ஆஜராவதாகும். அந்த ஆசரிப்பு இந்த வருடம் புதன்கிழமை, ஏப்ரல் 16, சூரிய அஸ்தமனத்திற்குப் பின் நடைபெறும். (லூக். 22:19, 20) உலகெங்கிலும் கடந்த வருடம் மொத்தம் 1,55,97,746 பேர் இந்த ஆசரிப்புக்கு வந்திருந்ததாக 94,600 சபைகள் அறிக்கை செய்தன! அதற்கு முந்தின வருடம் வந்தவர்களுடன் ஒப்பிட 2,20,000 பேர் அதிகம்.
5 இந்த வருடம் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள்? அது நம் கையில்தான் உள்ளது; அது, கலந்துகொள்ளும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்துவதில் எந்தளவுக்கு ஊக்கமாக முயற்சி செய்கிறோம் என்பதைப் பொறுத்தது. முதலில், யாரையெல்லாம் அழைக்கப் போகிறீர்கள் என்பதற்கு ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள். அந்தப் பட்டியலில் முதலிடம் உங்கள் குடும்பத்தாருக்கு. சத்தியத்தில் இல்லாத துணை இருந்தால், அவர் ஆசரிப்பில் கலந்துகொள்ள வேண்டுமென நீங்கள் எந்தளவுக்கு மனமார ஆசைப்படுகிறீர்கள் என்பதைத் தெரிவியுங்கள். வரவேண்டுமென தன் மனைவி ரொம்ப ஆசைப்பட்டதால் கடந்த வருட நினைவு ஆசரிப்பில் தான் கலந்துகொண்டதாக சத்தியத்தில் இல்லாத கணவர் ஒருவர் சொன்னார். அடுத்து உங்கள் பட்டியலில் இடம் பெற வேண்டியவர்கள்: உற்றார் உறவினர், அக்கம் பக்கத்தார், சக வேலையாட்கள், சக மாணவர்கள். உங்கள் பைபிள் மாணாக்கர்களை அழைக்க மறந்துவிடாதீர்கள்.
6 பட்டியலைத் தயாரித்த பிறகு, ஒவ்வொருவரையும் நேரில் போய் அழைப்பதற்கு நேரத்தை திட்டமிடுங்கள். அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களைக் கொடுங்கள். எப்போது, எங்கே நினைவு ஆசரிப்பு நடக்கும் என்பதை மக்கள் நினைவில் வைப்பதற்கு வசதியாக அது நடைபெறும் நேரத்தையும் இடத்தையும் அழைப்பிதழில் கீழே டைப் செய்யுங்கள் அல்லது தெளிவாக எழுதுங்கள். ஏப்ரல் 16-ம் தேதி நெருங்கி வர வர, உங்கள் பட்டியலில் உள்ளவர்களை நேரில் சந்தித்தோ அல்லது அவர்களுக்குப் போன் செய்தோ ஆசரிப்பின் நாளை நினைவூட்டுங்கள். பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு நாம் உதவுவோமாக.
7 நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்களுக்கு உதவுங்கள்: நினைவு ஆசரிப்பு நடைபெறும் மாலை நேரம் எப்போதும் பரபரப்பான நேரம். பொதுவாக நம் கூட்டங்களுக்கு வராத புதியவர்களை வரவேற்க நமக்கு வாய்ப்பு உள்ளது. சூழ்நிலை அனுமதிக்கும்வரை கூட்டத்திற்கு முன்னரும் பின்னரும் நேரம் செலவிடும்படி காரியங்களை ஒழுங்குபடுத்துங்கள். வந்திருக்கும் புதியவர்களிடம் நீங்களாகவே போய் பேசி பழகுங்கள். கனிவோடு பேசுங்கள், உபசரியுங்கள்.—ரோ. 12:13.
8 நினைவு ஆசரிப்பில் கலந்துகொண்ட சிலருக்கு பைபிள் படிப்பு நடத்துவதன் மூலம் ஆவிக்குரிய விதத்தில் அவர்கள் மேலும் முன்னேற நீங்கள் உதவ முடியுமா? வந்திருக்கும் புதியவர்களை இதுவரை யாரும் சந்திக்கவில்லை என்றால் அவர்களுடைய பெயர்களையும் விலாசங்களையும் பெற்றுக்கொண்டு அவர்களுக்குத் தொடர்ந்து உதவியளிக்க முயலுங்கள். அன்போடு உதவுகையில் அவர்களில் சிலர் அடுத்த வருட நினைவு ஆசரிப்புக்கு முன்பு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆகுமளவுக்கு முன்னேறலாம். நினைவு ஆசரிப்பில் கலந்துகொண்ட புதியவர்களைப் போய் சந்திக்கையில் ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற உள்ள விசேஷ பேச்சுக்கு வரும்படியும் அழைப்பு கொடுங்கள்.
9 இந்த கோடையில் உங்களால் துணைப் பயனியர் செய்ய முடியுமா? ஒவ்வொரு வருடமும் சில விசேஷ மாதங்களில் ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடும்படி யெகோவாவின் பேரில் நமக்கிருக்கும் வைராக்கியம் நம்மைத் தூண்டுகிறது. நினைவு ஆசரிப்பு காலத்தில் நற்செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கிப்பதற்கு சபையார் அனைவரும் ஐக்கியப்பட்டவர்களாக முயற்சி செய்கையில் நல்ல பலன்கள் கிடைக்கலாம்.
10 அறிக்கை செய்யப்பட்டபடி, 107 பிரஸ்தாபிகளும், 9 ஒழுங்கான பயனியர்களும் உள்ள ஒரு சபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் “தனிச்சிறப்புமிக்க மாதமாகும்.” அதற்குக் காரணம்? அந்த மாதத்தில் மூப்பர்கள், உதவி ஊழியர்கள் உட்பட 53 பேர் துணைப் பயனியர் ஊழியம் செய்தார்கள். அந்த மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்யும்படி சபையாரை மூப்பர்கள் எப்படி ஊக்குவித்தார்கள்? துணைப் பயனியர் செய்ய யாருக்கெல்லாம் முடியுமோ அவர்கள் எல்லாரும் பெயர் கொடுக்கும்படி பல மாதங்களுக்கு முன்பே அவர்கள் சபையாரை உற்சாகப்படுத்தினார்கள். சபையார் அனைவரின் வசதிக்கேற்ப ஒவ்வொரு நாளும் பல்வேறு சமயங்களில் வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் நடைபெற்றன. முக்கியமாக உடல் நலிந்தோர், டெலிபோனில் சாட்சி கொடுக்கும்படி விசேஷமாக வலியுறுத்தப்பட்டார்கள்.
11 உடல்நல உபாதையால் நடக்க முடியாத நிலையிலிருந்த 86 வயதான சகோதரி துணைப் பயனியர் செய்ய எழுதிக் கொடுத்தார். காலை வேளையில் சமையலறை டேபிள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு சில மணிநேரம் டெலிபோனில் சாட்சி கொடுப்பார்; கொஞ்ச நேரம் போய் ஓய்வெடுத்த பிறகு மீண்டும் வந்து அதே போல் உட்கார்ந்துகொண்டு டெலிபோனில் இன்னும் சிலருக்கு சாட்சி கொடுப்பார். அப்படி சாட்சி கொடுக்கையில் தன் கணவனையும் வாலிப வயதிலிருந்த தன் இரண்டு மகன்களையும் கடந்த இரண்டு வருடங்களில் மரணத்தில் பறிகொடுத்த ஒரு பெண்ணுக்கு அவர் சாட்சி கொடுத்தார். இத்தகைய துன்பத்தைக் கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என புரிந்துகொள்ள முடியாமல் அந்தப் பெண் தவித்தாள். அந்த சகோதரி அருமையாக சாட்சி கொடுத்தார், பைபிள் படிப்பையும் ஆரம்பித்தார்! அடுக்குமாடி கட்டடங்களில் அல்லது உள்ளே அனுமதிக்கப்படாத பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாலை நேரத்திலும் மற்ற சமயங்களிலும் டெலிபோனில் சாட்சி கொடுப்பது அவர்களுடன் தொடர்புகொள்ள அருமையான வழியாகும். இது, பகல் நேரத்தில் வீட்டில் இல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதற்கும் பிரஸ்தாபிகளுக்கு வாய்ப்பளிக்கிறது.
12 “ஊழியத்தை ரொம்பவே அனுபவித்து மகிழ்ந்தோம்; எங்கள் ஒவ்வொருவருக்கும் சிலாக்கியங்களையும் ஆசீர்வாதங்களையும் அருளிய யெகோவாவுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்” என்ற வார்த்தைகளுடன் அந்த மூப்பர்கள் தங்கள் அறிக்கையை நிறைவு செய்தார்கள். நடைமுறையான திட்டத்தால் உங்கள் சபையும் இத்தகைய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழலாம்.
13 ஊழியத்தில் 100 சதம் பங்கெடுக்க முயற்சி செய்யுங்கள்: கடவுளிடமும் அயலாரிடமும் உள்ள நம் அன்பு ஒவ்வொரு மாதமும் மற்றவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள நேரத்தை வாங்கும்படி நம்மை உந்துவிக்கிறது. (மத். 22:37-39) சபை புத்தகப் படிப்பு கண்காணிகளும் அவர்களுக்கு உதவுபவர்களும் தங்கள் தொகுதியில் உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்வதற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். இதற்கு சிறந்த வழி, தொகுதியிலுள்ள குறிப்பிட்ட நபர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்வதற்கு முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்வதாகும். இதை மாதக் கடைசியில் செய்யலாம் என காத்திருக்காமல் ஆரம்பத்திலேயே செய்யுங்கள். இது அன்பான உதவியளிக்க அநேக வாய்ப்புகளுக்கு வழிசெய்யும்.
14 ஊழியத்தில் பங்கெடுக்க முடியாதளவுக்கு கஷ்டப்படும் உடல் நலிந்த பிரஸ்தாபிகள் உங்கள் புத்தகப் படிப்பு தொகுதியில் இருக்கிறார்களா? சிலர் முதியோர் உடல்நல பராமரிப்பு இல்லங்களில் இருப்பவர்களா அல்லது வீட்டிலேயே அடைபட்டு கிடப்பவர்களா? அப்படியானால் அவர்களால் அதிகளவு ஊழியத்தில் ஈடுபட முடியாதென்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் தங்களால் முடிந்தளவு தங்கள் ஒளியைப் பிரகாசிக்க செய்வதற்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்கையில் அவர்களுடைய நற்செயல்களைக் கண்டு சத்தியத்திடம் உண்மையிலேயே வைராக்கியம் காட்ட மற்றவர்களை தூண்டலாம். (மத். 5:16) அத்தகையவர்கள், தங்கள் வெளி ஊழியத்தை பதினைந்து பதினைந்து நிமிடமாக கணக்கிட்டும் அறிக்கை செய்யலாம் என்பதை அறிந்திருக்கிறார்களா என்பதைப் புத்தகப் படிப்பு கண்காணிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஊழியத்தில் அவர்கள் செலவிட்ட நேரத்தை அறிக்கை செய்ய முடிவது அந்த உண்மையுள்ள பிரஸ்தாபிகளுக்கு உற்சாகத்தை அளிப்பதோடு, மகிழ்ச்சியையும் திருப்தியையும் அள்ளித் தருகிறது. கடவுளுடைய மக்களின் நடவடிக்கைகளைப் பற்றிய உலகளாவிய அறிக்கை திருத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் இது உதவுகிறது.
15 நன்மை செய்வதில் சுறுசுறுப்பாக செயல்படும் இளைஞர்கள்! கிறிஸ்தவ இளைஞர்கள் தங்கள் பலத்தையும் சக்தியையும் யெகோவாவின் சேவையில் செலவிடுவதைக் காண்பது எவ்வளவாய் புத்துணர்ச்சி அளிக்கிறது! (நீதி. 20:29) நீங்கள் இளைஞரா? அப்படியானால் இந்த விசேஷ மாதங்களில் யெகோவாவின் பேரில் உங்களுக்கிருக்கும் வைராக்கியத்தை நீங்கள் எப்படி செயலில் காட்டலாம்?
16 நீங்கள் இன்னும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியா? அப்படியானால் இந்த விசேஷ வாய்ப்பில் பங்கெடுப்பதற்கு தகுதி பெற முடியுமா? பின்வரும் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்: ‘பைபிள் சத்தியத்தின் அடிப்படை அறிவு எனக்கு இருக்கிறதா? ராஜ்ய ஊழியத்தில் கலந்துகொள்ள நான் விரும்புகிறேனா? நடத்தையில் முன்மாதிரி வைக்கிறேனா? நற்செய்தியைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதன் மூலம் என் விசுவாசத்தை தனிப்பட்ட விதத்தில் அறிவிக்க என்னால் முடிகிறதா? என் இருதயத் தூண்டுதலால் இதை செய்கிறேனா?’ இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் என்பதாக இருந்தால் பிரஸ்தாபி ஆவதற்கு நீங்கள் ஆசைப்படுவதை உங்கள் பெற்றோரிடம் தெரிவியுங்கள். இதை உங்கள் பெற்றோர் ஊழிய குழுவிலுள்ள மூப்பர்களில் ஒருவரிடம் தெரிவிக்கலாம்.
17 நீங்கள் ஏற்கெனவே ஒரு பிரஸ்தாபியா? அப்படியானால், ஊழியத்தில் இன்னும் அதிகளவு பங்கெடுக்க பள்ளி விடுமுறை நாட்களை ஞானமாக பயன்படுத்திக் கொள்கிறீர்களா? நடைமுறையான அட்டவணை வைத்திருப்பதோடு, பெற்றோரின், மற்றோரின் உதவியும் கிடைக்கையில் முழுக்காட்டப்பட்ட அநேக இளைஞர்களால் துணைப் பயனியர் செய்ய முடிந்திருக்கிறது. அப்படி செய்ய முடியாதென்றால் ஊழியத்தில் அதிகளவு பங்கெடுக்க தீர்மானமாய் இருங்கள். உங்களுக்கென ஓர் இலக்கை வையுங்கள். இவ்வளவு மணிநேரம் ஊழியம் செய்ய வேண்டுமென்ற இலக்கோடுகூட உங்கள் ஊழியத்தின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கையும் வையுங்கள். ஒருவேளை ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பைபிள் வசனத்தை திறந்து காட்ட முயலுவது, மறுசந்திப்புகளின் தரத்தை முன்னேற்றுவிப்பது, பைபிள் படிப்பை ஆரம்பிப்பது, டெலிபோனில் சாட்சி கொடுப்பது அல்லது ஊழியத்தில் மற்றொரு அம்சத்தில் ஈடுபடுவது உட்பட உங்கள் ஊழியத்தை விரிவுபடுத்துவது என நீங்கள் முன்னேறலாம். இந்த வருடம் ஓர் அயலகத்தாரை, ஒரு சக மாணவரை, அல்லது ஓர் உறவினரை நினைவு ஆசரிப்புக்கு அழைத்துப் போவது என்ற இலக்கை ஏன் வைக்கக்கூடாது? இப்படிப்பட்ட காரியங்களில் முழுமையாக ஈடுபடுவது நிச்சயம் பலனளிக்கும், சபையிலுள்ள மற்றவர்களையும் உண்மையிலேயே உற்சாகப்படுத்தும்.—1 தெ. 5:11.
18 புதியவர்கள் முன்னேற உதவுங்கள்: கடந்த ஊழிய வருடத்தில் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் சராசரியாக 14,896 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன. காலப்போக்கில் இந்த மாணாக்கர்களில் அநேகர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு முன்னேறுவார்கள். எனினும் அவர்கள் அந்த இலக்கை எட்டுவதற்கு முன்பு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பிரஸ்தாபிகளாக தகுதி பெற நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக ஆகும்படி புதியவர்களுக்குப் போதிப்பதில் இது முக்கிய படி. (மத். 9:9; லூக். 6:40) இந்தப் படியை எடுக்க உங்கள் பைபிள் மாணாக்கரில் யாராவது தயாராக இருக்கிறார்களா?
19 உங்கள் மாணாக்கர் எந்தளவுக்கு முன்னேறுகிறார் என்பது தெரியவில்லை என்றால் உங்கள் புத்தகப் படிப்புக் கண்காணியிடம் அல்லது ஊழியக் கண்காணியிடம் உதவும்படி கேளுங்கள். ஒருவேளை அவரை உங்களுடன் படிப்புக்கு அழைத்துச் செல்லலாம். இந்த சகோதரர்கள் பெரும் அனுபவசாலிகளாக இருப்பதால் மாணாக்கரின் ஆவிக்குரிய முன்னேற்றத்தை அவர்களால் அளந்துவிட முடியலாம். மாணாக்கர் தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய உதவும் ஆலோசனைகளை அவர்கள் கொடுக்கலாம்.
20 முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆவதற்கு உங்கள் மாணாக்கர் விரும்பலாம்; அவர் அதற்குத் தகுதியானவர் என நீங்கள் நினைத்தால் அதைக் குறித்து நடத்தும் கண்காணியிடம் பேசுங்கள். உங்களுடனும் மாணாக்கருடனும் பேசுவதற்கு அவர் இரண்டு மூப்பர்களை ஏற்பாடு செய்வார்; அவர்கள் நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 98-9-லுள்ள தகவல்களை பயன்படுத்தி அதற்கு அவர் தகுதியானவரா என கண்டறிவார்கள். (காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1989, பக்கம் 20-ஐக் காண்க.) மாணாக்கர் பிரஸ்தாபியாகும்படி அங்கீகரிக்கப்பட்டால், உடனடியாக நீங்கள் அவருக்குப் பயிற்றுவிப்பைத் துவங்க வேண்டும். அவர் தன்னுடைய முதல் ஊழிய அறிக்கையை சமர்ப்பித்தவுடன் அந்த மாணாக்கர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகி இருப்பது சபையில் அறிவிக்கப்படும். இந்த விசேஷ மாதங்களில் சிறியோரும் பெரியோருமாக இருக்கும் ஆயிரக்கணக்கான பிரஸ்தாபிகள் இந்த முக்கிய மைல்கல்லை எட்டுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
21 பெருமளவு நன்மை செய்ய உதவும் திட்டமிடுதல்: இந்த நினைவு ஆசரிப்பு காலத்தில் நம் ஊழிய காரியங்களில் வெற்றி காண்பதில் முன்கூட்டியே திட்டமிடுதல் முக்கிய பங்கு வகிக்கிறது. (நீதி. 21:5, NW) மூப்பர்கள் கவனம் செலுத்த வேண்டிய அநேக காரியங்கள் உள்ளன.
22 சபையார் வெளி ஊழியத்தை சிறந்த முறையில் செய்வதற்கு உதவியாக, எல்லா வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் வெளி ஊழியத்திற்கான கூட்டங்களை நடத்துவதற்கு மூப்பர்கள் நடைமுறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த ஏற்பாடுகளை செய்வதில் ஊழிய கண்காணி முன்நிற்க வேண்டும். அதிகாலை வேளையில், வெயில் தணிந்த மதிய வேளையில் அல்லது மாலை வேளையில் என பல்வேறு சமயங்களில் வெளி ஊழியக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடியுமா? இந்த ஏற்பாடுகளைப் பற்றி சபையாருக்கு அறிவிக்க வேண்டும். முடிந்தால் இந்த அட்டவணையை அறிவிப்பு பலகையில் போடுவது உதவியாக இருக்கும்.
23 நினைவு ஆசரிப்புக்கான ஏற்பாடுகள் எல்லாம் ஏப்ரல் 16-ம் தேதிக்கு வெகு முன்பாக தயாராக இருப்பதை மூப்பர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே ராஜ்ய மன்றத்தை பல்வேறு சபைகள் பகிர்ந்துகொள்கையில் அன்று அதைப் பயன்படுத்துவதைக் குறித்து ஏற்பாடு செய்வது, ராஜ்ய மன்றத்தை சுத்தப்படுத்துவது, அட்டண்டன்ட்டுகளையும் பரிமாறுபவர்களையும் தெரிவு செய்வது, அடையாள சின்னங்களுக்கு ஏற்பாடு செய்வது ஆகியவை அதில் அடங்கும். நினைவு ஆசரிப்பு நேரத்தையும் அது நடைபெறும் இடத்தையும் சபையாருக்குத் தெரிவிப்பதோடு, அந்த வார ஊழிய அட்டவணையில் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இக்காரியங்களுக்குக் கருத்துடன் கவனம் செலுத்துவது ஆசரிப்பு “நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்பட” வழிசெய்யும்.—1 கொ. 14:40.
24 நினைவு ஆசரிப்பு காலத்தில் அதிகளவு செய்யப்படும் ஊழியத்தில் குடும்பமாக எப்படி கலந்துகொள்ளலாம் என்பதை குடும்பப் படிப்பு நேரத்தில் குடும்ப தலைவர்கள் கலந்தாலோசிக்க விரும்பலாம். நீங்கள் குடும்பமாக துணைப் பயனியர் செய்ய முடியுமா? அல்லது குடும்பத்தில் ஒருவரோ பலரோ துணைப் பயனியர் செய்ய மற்றவர்கள் உதவ முடியுமா? முடியாதென்றால், ஊழியத்தில் அதிக நேரம் செலவிட குடும்பமாக நீங்கள் திட்டவட்டமான இலக்குகளை வையுங்கள். குடும்பத்திலுள்ள பிள்ளைக்கு கொஞ்சம் உற்சாகத்தையும் உதவியையும் அளித்தால் அவனோ அவளோ முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக தகுதி பெற முடியுமா? இந்த வருடம் நினைவு ஆசரிப்புக்கு வரும்படி எத்தனை பேரை அழைக்க உங்கள் குடும்பம் திட்டமிட்டிருக்கிறது? சிறப்பான திட்டம், அநேக ஆசீர்வாதங்களையும் ஆனந்தத்தையும் உங்கள் குடும்பத்திற்கு அள்ளித்தரும்.
25 மீதமுள்ள காலத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்: முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு எழுதுகையில் காலத்தின் அவசரத்தன்மையைக் குறித்து அவர்களுக்கு நினைவூட்டினார்; ஏனெனில் யூத ஒழுங்குமுறையின் முடிவு சமீபித்திருந்தது. (1 பே. 4:7) இந்த உலகின் முடிவு சமீபித்திருக்கிறது என்பதை இன்றுள்ள எல்லா அத்தாட்சிகளும் சுட்டிக்காட்டுகின்றன. ஒவ்வொரு நாளும் நாம் வாழும் முறை அதை உறுதிப்படுத்துவதாய் இருக்க வேண்டும். யெகோவாவின் பேரில் பக்திவைராக்கியமுள்ள ஊழியர்களாக நம் கவனம் முழுவதும் நற்செய்தியை அறிவிக்கும் அந்த அவசரமான வேலையின் மீதே பதிந்திருக்க வேண்டும்.—தீத். 2:13, 14.
26 வைராக்கியம் காட்டுவதற்கும் செயல்படுவதற்கும் இதுவே நேரம்! உங்களுக்கு, உங்கள் குடும்பத்தாருக்கு, சபைக்கு யெகோவா செய்திருக்கும் அனைத்து காரியங்களையும் குறித்து ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள். யெகோவா பல வழிகளில் நமக்கு நன்மை செய்திருக்கிறார், அதற்கு ஒருபோதும் நம்மால் கைமாறு செய்ய முடியாது; எனினும் அவருக்கு நம்முடைய முழுமையான வணக்கத்தை செலுத்த முடியும். (சங். 116:12-14) நம்முடைய ஊக்கமான முயற்சிகளுக்கு அவர் பலன் தருவார், ஆசீர்வாதங்களையும் அருளுவார். (நீதி. 10:22) அதிகளவு ஊழியம் செய்யப்படும் இந்த விசேஷ காலத்தில் நாம் அனைவரும் ‘நன்மை செய்வதில் வைராக்கியம்’ காட்டி ‘எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படி’ செய்வோமாக.—1 பே. 3:13, பொ.மொ.; 4:11.
[பக்கம் 3-ன் பெட்டி]
உலகெங்கும் நினைவு ஆசரிப்பு எண்ணிக்கை 1999 1,40,88,751
2000 1,48,72,086
2001 1,53,74,986
2002 1,55,97,746
[பக்கம் 4-ன் பெட்டி]
நினைவு ஆசரிப்புக்கு வரும்படி யாரை அழைப்பீர்கள்?
□ குடும்பத்தாரும் உறவினர்களும்
□ அயலாரும் அறிமுகமானவர்களும்
□ சக வேலையாட்களும் சக மாணவர்களும்
□ மறுசந்திப்புகளும் பைபிள் மாணாக்கர்களும்
[பக்கம் 5-ன் பெட்டி]
நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்களுக்கு உதவுங்கள்
□ அன்போடு வரவேற்பு அளியுங்கள்
□ மறுசந்திப்புகள் செய்யுங்கள்
□ பைபிள் படிப்பு நடத்த முன்வாருங்கள்
□ விசேஷ பேச்சுக்கு வரும்படி அழைப்பு கொடுங்கள்
[பக்கம் 6-ன் பெட்டி]
நினைவு ஆசரிப்பு காலத்திற்கென என்ன இலக்குகள் வைத்திருக்கிறீர்கள்?
□ நீங்கள் அழைத்தவர் நினைவு ஆசரிப்புக்கு வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள்
□ பிரஸ்தாபியாவதற்கு தகுதி பெறுங்கள்
□ ஊழியத்தில் திட்டவட்டமான மணிநேரத்தை செலவிடுங்கள்
□ ஊழியத்தின் சில அம்சங்களில் முன்னேறுங்கள்
□ துணைப் பயனியர் ஊழியம் செய்யுங்கள்